12

12

லஞ்சம் வாங்கி கைதான பொலிஸ் அதிகாரியை கூரிய ஆயுதத்தால் வெட்டிய கைதி!

கொழும்பு குற்றப்பிரிவில் (CCD) பணிபுரிந்த போது இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவரை அறையில் இருந்த மற்றுமொரு கைதி கூரிய ஆயுதத்தால் வாயில் வெட்டியுள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரியின் காயங்களுக்கு சுமார் 8 தையல்கள் போடப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

இலங்கையில் ஒரே ஆண்டில் 2300 வீதி விபத்து மரணங்கள்!

கடந்த ஆண்டில் மாத்திரம் வீதி விபத்துக்களால் 2321 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  போக்குவரத்துத் துறையில் செயல்திறனை உருவாக்க பல திட்டங்களைத் தொடங்கியுள்ளோம். கடவத்தை பேருந்து நிலையம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்தப் பேருந்து நிலையங்களில் நவீன போக்குவரத்து முகாமைத்துவ முறைகளும், நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 2023 இல் 2214 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. அந்த வீதி விபத்துகளில் 2321 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த ஆண்டின் ஜுன் 30 ஆம் திகதி  வரையிலான காலப்பகுதியில்  1103 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. அந்த வீதி விபத்துகளால் 1154 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, இந்நிலைமையைக் குறைக்க எமது அமைச்சு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.

வேகக் கட்டுப்பாட்டுக்கு தேவையான உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு 50 மில்லியன் ரூபாயை இலங்கை பொலிஸாருக்கு வழங்க வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தீர்மானித்துள்ளது.

அத்துடன், போக்குவரத்து அமைச்சின் தலையீட்டுடன், வீதி வேகக் கட்டுப்பாடு தொடர்பில் தேவையான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படவுள்ளது.

மேலும், பாடசாலை மட்டத்தில் வீதிப் பாதுகாப்புக் கழகங்களை நிறுவுவதற்கு தேவையான கையேடுகளை ஆசிரியர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இது ஒரு இணைச்செயற்பாடாக பாடசாலைக் கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் அதற்கு இணையாக பதக்கம் வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது” இவ்வாறு லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

ஜனவரி 10 ஆம் திகதியை மலையக மக்களின் தியாகிகள் தினமாக பிரகடனப்படுத்துமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை !

முல்லோயா கோவிந்தன் மரணமடைந்த நாளான ஜனவரி 10 ஆம் திகதியை மலையக மக்களின் தியாகிகள் தினமாக பிரகடனப்படுத்துமாறு கோரி இன்று நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்று கொண்டு வரப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமாரினால் இன்று கொண்டுவரப்பட்டிருந்த பிரேரனையினை நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் வழி மொழிந்திருந்தார்.

மலையக மக்களின் உரிமையகளை வென்றெடுப்பதற்கு முல்லோயா கோவிந்தன் ஆரம்பித்த உரிமைப்போராட்டத்தில் அவர் வீரமரணம் அடைந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகளில் தற்கொலை செய்வோர் பட்டியலில் இலங்கை முன்னிலை!

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, ​​தற்கொலை செய்து கொள்ளும் பட்டியலில் இலங்கை இன்னும் முன்னணியில் இருப்பதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

கொழும்பு விடுதி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

 

அதன்படி 1996-1997 ஆம் ஆண்டுகளில் உலகில் அதிகளவான தற்கொலைகள் இடம்பெற்ற நாடாக இலங்கை இருந்ததாகவும், தற்போது நிலைமை மேம்பட்டுள்ள போதிலும், நாடு இன்னமும் திருப்திகரமான நிலையில் இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

குறிப்பாக தற்கொலையை துண்டும் காரணிகள் பல இருப்பதாகவும், அந்த சூழ்நிலைகளை கண்டறிந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

 

மேலும் ஏனைய துறைகளின் ஒத்துழைப்புடன் இந்த நிலைமையை மேம்படுத்த சுகாதார அமைச்சு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி – ஏழு மனித எச்சங்கள் அடையாளம் !

முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 7ஆவது நாளான நேற்று மூன்று மனித எச்சங்கள் முழுமையாக வெளியே அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் போராளிகளுக்கு வழங்கப்படுகின்ற இலக்கத் தகடு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் போது ஏழு மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மூன்று உடலங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்ட குழுவினர், மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிஸார் உள்ளிட்ட தரப்பினரின் பங்குபற்றுதல்களுடன் இந்த ஏழாம் நாள் அகழ்வுப் பணி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.