31

31

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதான நீர் தாங்கி தொட்டி சுத்தமாக்கும் பட்டு 20 வருடங்களுக்கு மேலாகின்றதாம்..!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதான நீர் தாங்கி கோபுரம் மற்றும் ஏனைய நீர் சேமிப்புத் தொட்டிகள் கடந்த 20 வருடங்களாக சுத்தப்படுத்தப்படவில்லை என தேசிய வைத்தியசாலையின் கொழும்பு (NHC) பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.

 

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், வைத்தியசாலையில் தற்போது பிரதான நீர் தாங்கி கோபுரம் உட்பட சுமார் 161 நீர் சேமிப்பு தொட்டிகள் உள்ளதாக தெரிவித்தார். ஆச்சரியப்படும் விதமாக, இந்த தொட்டிகளை சுத்தம் செய்யும் அட்டவணை அல்லது நிறுவல் தேதிகளை ஆவணப்படுத்தும் பதிவுகள் எதுவும் இல்லை, நிலையான நெறிமுறைகளின்படி, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தண்ணீர் சேமிப்பு தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும் . ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக இந்த தொட்டிகள் சுத்தம் செய்யப்படாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

 

மருத்துவமனையின் சுகாதாரப் பரிசோதகர்கள் தண்ணீர் சுத்தத்தில் கவனம் செலுத்தாதது குறித்து அவர் கவலை தெரிவித்தார். பாக்டீரியா அளவுகளை சரிபார்க்க ஆண்டுதோறும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (எம்ஆர்ஐ) வழக்கமான நீர் மாதிரிகள் அனுப்பப்பட்டாலும் இது மட்டும் நீரின் தூய்மைக்கு உத்தரவாதம் அளிக்காது என்று அவர் கூறினார். தண்ணீரில் தீங்கு விளைவிக்கும் அசுத்தங்கள் இருக்கக்கூடும், இது நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஒரே மாதிரியாக ஆபத்தை ஏற்படுத்துகிறது, என்றார்.

 

பிரச்சினையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த டாக்டர். பெல்லான, இந்த நீரானது நோயாளிகள் மற்றும் அறுவை சிகிச்சை நிலையங்கள் மற்றும் ஆய்வகங்களில் உணர்திறன் வாய்ந்த உபகரணங்களால் பயன்படுத்தப்படுகிறது, இது உபகரணங்கள் சேதத்திற்கு வழிவகுக்கும் என்று சுட்டிக்காட்டினார்.

 

மேலும், சுத்திகரிக்கப்படாத சேமிப்பு தொட்டிகளில் இருந்து நீரைப் பயன்படுத்துவது பொது சுகாதார அபாயங்கள் மற்றும் உணர்திறன் வாய்ந்த உபகரணங்களுக்கு அச்சுறுத்தல் ஆகிய இரண்டையும் ஏற்படுத்துகிறது என்று டாக்டர் பெல்லானா கூறினார், நிலைமையைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

வெடுக்குநாறி உள்ளிட்ட சம்பவங்களால் நல்லிணக்க முயற்சிகள் பாதிக்கப்படுகின்றது – சிறந்த இலங்கைக்கான மன்றம்

வெடுக்குநாறி உள்ளிட்ட சம்பவங்களால் நல்லிணக்க முயற்சிகள் பாதிக்கப்படுவதாக சிறந்த இலங்கைக்கான மன்றம் மற்றும் உலகத் தமிழர் பேரவை ஆகியவை கவலை வெளியிட்டுள்ளன.

 

இது தொடர்பில் இந்த அமைப்புக்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

 

இலங்கையின் வடக்கே உள்ள வெடுக்குநாறி ஆதிசிவன் கோவிலில் நடைபெற்ற மஹா சிவராத்திரி நிகழ்வின்போது நடந்த அசம்பாவித சம்பவங்களால் சிறந்த இலங்கைக்கான சங்கமும் மற்றும் உலகத் தமிழர் பேரவையும் கவலை அடைந்துள்ளன.

 

மஹா சிவராத்திரி தினத்தில் பாதுகாப்புப் படைகள் பக்தர்களின் உணவு, தண்ணீர் மற்றும் பிற அடிப்படைத் தேவைகளை பறித்ததோடு, பலவந்தமான அவமானப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. குறிப்பாக ஆலயத்தின் பூசகர் உள்ளிட்ட பக்கதர்கள் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டும் உள்ளனர்.

 

பல நூற்றாண்டுகள் பழமையான கலாசார மரபுகளை அழித்து பெரும்பான்மை இனத்தின் மதச் சின்னங்கள், நடைமுறைகளை திணிக்கும் அரசாங்கத்தின் பரந்த நிகழ்ச்சி நிரல் குறித்து சிறுபான்மை சமூகத்தினரிடையே சந்தேகங்களும் அச்சங்களும் காணப்படுகின்றன. இதன் காரணமாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு இழப்புகள் ஏற்பட்டமையும் வரலாறாக உள்ளது.

 

குறிப்பாக, ஆக்கிரமிப்பு நிகழ்ச்சி நிரலுக்கு தொல்லியல்துறை ஒரு கருவியாக காணப்படுகிறது. அதேநேரம் நீதிமன்றங்களும் அழுத்தங்களுக்கு உள்ளாகின்றன.

 

தற்போதைய நிலையில் வெடுக்குநாறியில் இரவு நேரத்தில் பூசை வழிபாடுகளுக்கு அனுமதிக்கப்பட்டதா, இல்லையா என்பது குறித்து முரண்பட்ட விளக்கங்கள் உள்ளன. எவ்வாறாயினும் வெடுக்குநாறியில் பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்படும் மதப் பழக்கவழக்கங்களுக்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 

அதேநேரம், பொலிஸார் வெடுக்குநாறி தொல்பொருள் பகுதி என்பதால் அங்கு சேதங்கள் ஏற்படுத்தப்பட்டதாக கூறுகின்றபோதும் அந்த இடத்தில் சேதம் ஏற்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் அவர்களால் முன்வைக்க முடியவில்லை. இதனால் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதோடு வழிபாட்டுக்கான அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளமையானது நிம்மதி அளிப்பதாக உள்ளது.

 

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், கடந்த அமர்வில் முன்வைத்த வாய்மொழி மூலமான அறிக்கையில், இலங்கையில் தொடர்ச்சியாக கடத்தல்கள், சட்டவிரோதமாகத் தடுத்துவைத்தல், தடுத்து வைத்து சித்திரவதை செய்யப்படுதல் உள்ளிட்ட விடயங்கள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டியுள்ள நிலையில் வெடுக்குநாறிச் சம்பவம் அவருடைய கூற்றை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

 

இதேநேரம், இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஒரு புதிய அலுவலகத்தை அமைப்பது உட்பட ஊக்குவிப்பு நிகழ்வுகள் சிலவற்றையும் ஆரம்பித்துள்ளன. அதேபோன்று இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களுக்கிடையில் சமய நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் மேம்படுத்துவதற்காக எமது அமைப்புக்களாலும் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு இவ்வாறான சம்பவங்கள் எதிர்மறையான பிரதிபலிப்புக்களை ஏற்படுத்துகின்றன.

ஆகவே இவ்விதமான சம்பவங்கள் மீளவும் இடம்பெறாமையை அரச தரப்புக்கள் உறுதி செய்ய வேண்டும் என்றுள்ளது.

இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் தலைமையில் கிளி. பாரதிபுரம் செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் விவசாயம், மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யக்கூடிய வீதிகள் மற்றும் கிராமிய பாலங்கள் செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப் பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது கிளி. பாரதிபுரம் செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைப்பு பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

அதற்கமைய 15.3 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி மாவட்ட பாரதிபுரம் செபஸ்ரியார் வீதி பாலப் புனரமைப்புற்கான பணிகள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

 

பாரதிபுரத்திற்கு செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள இப் பாலமானது சுமார் நான்கு வருடங்களுக்கு மேலாக உடைந்த நிலையில் காணப்படுவதனால் போக்குவரத்து தடைப்பட்டு பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், அரச சேவைகளுக்கு செல்லும் அதிகாரிகள் என பலரும் பல சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில் இப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஏற்க முடியாது தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கையை விரும்புகிறார்கள்- இரா.சம்பந்தன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கும் முன்மொழிவை நான் ஆதரிக்கவில்லை. அந்த முன்மொழிவுக்கு தமிழ் மக்களிடத்தில் பரவலான கருத்தாதரவு கிடையாது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும்ரூபவ் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

 

தற்போதைய நிலையில் ஜனாதிபதி தேர்தலில் யார்யார் போட்டியிடப்போகின்றார்கள் என்பது சம்பந்தமாக உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் வெளியாகவில்லை.

 

அந்த அறிவிப்புக்கள் உறுதியாக வெளியானதன் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவது தொடர்பிலான உரையாடல்கள் ஆரம்பமாகியுள்ள நிலையிலும் ஜனாதிபதி தேர்தலுக்கான முன்னாயத்தங்களை தேசிய கட்சிகள் முன்னெடுத்து வருகின்றமை நிலையிலும் ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிடும்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்க வேண்டும் என்ற முன்மொழிவுக்கு தமிழ் மக்களிடத்தில் பரலவலான ஆதரவு கிடையாது.

 

அத்துடன் குறித்த முயற்சியானது தமிழ் மக்களுக்கான சதகமான நிலைமைகளை உருவாக்கும் என்றும் நான் கருதவில்லை. தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் வாழுவதற்காக ஆணையை வழங்கி வந்துள்ளார்கள்.

அவ்விதமான நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை தமிழர்கள் சார்பில் களமிறக்கும் விடயத்தினை நான் ஆதரிக்கவில்லை.

 

அதேநேரம் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்களை இன்னமும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை. அவர்கள் அவ்வாறு அறிவிக்கின்றபோது நாம் இறுதியான தீர்மானத்தினை எடுப்போம்.

 

எம்மைப்பொறுத்தவரையில் தமிழ் மக்கள் நீண்டகாலமாக ஐக்கிய இலங்கைக்குள் அதியுச்ச அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று கோரிவருகின்றார்கள்.

 

அத்துடன் இந்திய, இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் அவர்களின் வரலாற்று ரீதியான வாழிடங்களான வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றார்கள்.

 

அந்த வகையில் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள் தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான கோரிக்கைகளை ஆதரிப்பவர்கள் பற்றியே நாம் கருத்தில் கொள்ள முடியும் என்றார்.

பைப்லைன் மூலமாக சட்டவிரோத கசிப்பு உற்பத்தி – முல்லைத்தீவில் குடும்பஸ்தர் கைது !

முல்லைத்தீவு முள்ளியவளையில் வீட்டு காணி ஒன்றில் பைப்லைன் மூலமாக சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்து விநியோகத்தில் ஈடுபட்ட குடும்பஸ்தர் நேற்று பொலிஸாரால் கைது செய்யட்டுள்ளார்.

 

குறித்த பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடம்பெற்று வருவதாக முள்ளியவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

 

இதன்போது வீட்டின் உரிமையாளர் ஒருவர், அவரது காணிக்குள் நீர் பொருத்தும் பைப்லைன் செய்வது போல், கசிப்பு உற்பத்தி செய்து சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

 

இதன்போது இரு பரல் கோடா மீட்கப்பட்டுள்ளதுடன் வீட்டின் உரிமையாளரை கைது செய்த முள்ளியவளை பொலிஸார், மீட்கப்பட்ட சான்று பொருட்களையும் சந்தேக நபரையும் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

 

குறித்த நபர் ஏற்கனவே வீட்டிற்குள் சுரங்கம் வெட்டி கசிப்பு காச்சிய நிலையில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

தினசரி வீடுகளில் வீணாகும் 63 கோடி தொன் உணவு விரயம் – 100 கோடி மக்களின் பசியை தீர்க்க முடியும் என்கிறது ஐ.நா சுற்றுச்சூழல் பிரிவு !

உலகளாவிய உணவு விரயம் தொடர்பான அறிக்கையை ஐநா வெளியிட்டுள்ளது. 2022-ம் ஆண்டில் 5-ல் 1 பங்கு அளவில் உணவு விரயமானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வீடுகளில் 63 கோடி தொன், உணவகங்களில் 29 கோடி தொன், சில்லறை கடைகளில் 13 கோடி தொன் என உலக அளவில் 105 கோடி தொன் உணவு விரயம் செய்யப்படுகிறது.

 

உலக அளவில் வீடுகளில் ஒரு நாள் வீணாகும் உணவைக் கொண்டு 100 கோடி மக்களின் பசியைத் தீர்க்க முடியும். குறிப்பாக, அதிக வெப்ப நிலை நிலவும் நாடுகளில் உள்ள வீடுகளில் தனிநபர் உணவு விரயம் அதிகமாக உள்ளது. அதிக வெப்ப நிலையால், உணவை சேமித்து வைப்பது அங்கு சவாலாக உள்ளதால் விரயம் அதிகம் நிகழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இது குறித்து ஐநாவின் சுற்றுச்சூழல் திட்டப் பிரிவின் செயல் இயக்குநர் ஆண்டர்சன் கூறுகையில், “உணவுவிரயம் என்பது உலக அளவில் நிகழ்ந்து வரும் துயரமான விஷயம்.இலட்சக்கணக்கான மக்கள் உணவின்றிபசியில் வாடும் சூழலில், உணவுகள் எந்தக் கணக்குமின்றி வீணாக்கப்படுகின்றன.

 

சுற்றுச்சூழல் சார்ந்தும் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதில் ஆறுதலான விஷயம், நாடுகள் நினைத்தால் உணவு விரயத்தை கட்டுப்படுத்த முடியும். எனவே, உலக நாடுகள் உணவு விரயத்தை கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயித்து செயல்பட வேண்டியது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.

பாடசாலை விளையாட்டு போட்டியில் கார்த்திகை பூ – ஆசிரியர்கள் மாணவர்களை விசாரணைக்கு அழைத்து பொலிசார்!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் உள்ள கல்லூரியில் நேற்று (30) இடம்பெற்ற இல்ல மெய்வல்லுநர் போட்டியில் இல்ல அலங்காரம் தொடர்பில் விசாரணைக்கு வருமாறு தெல்லிப்பழை பொலிஸார் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

 

அதன்படி, இன்று ஞாயிற்றுக்கிழமை (31) காலை 9 மணிக்கு பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு ஆசிரியர்களும் மாணவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

 

கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் போட்டி தளத்தில் கார்த்திகைப்பூ அலங்காரம் செய்யப்பட்டிருந்ததன் அடிப்படையிலேயே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.