அம்மான் படையணி எனும் புதிய அமைப்பினூடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள முன்னாள் போராளிகளின் நலன் பேணவுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று(29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்த செயற்பாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழும் மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, கணவனை இழந்த குடும்பத் தலைவிகளும், விடுதலைப் புலிகள் மாத்திரமல்லாது அனைத்து இயக்கங்களையும் சேர்ந்த போராளிகளும் வாழ்வாதாரமற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அவர்களுக்காக புது வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அம்மான் படையணி அமைப்பு போராளிகளின் நலம் பேணுவதற்காக உருவாக்கப்பட்டு, பெரும்பாலும் வட மாகாணத்திலேயே தற்போது செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், கிழக்கு மாகாணத்திலும் அதன் செயற்பாடுகளை விரிவாக்க திட்டமிட்டுள்ளதாகக் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.