நேற்று (22) பாராளுமன்றத்தில் விவசாயம் சம்பந்தப்பட்ட பிரேரணையின் போது, சுதந்திரமே இல்லாத நாட்டில் சுதந்திர தினத்துக்கும் அமைச்சர்களின் சுக போகத்துக்கும் செலவழிக்கும் பணத்தை அரசு விவசாயத்திறகு செலவு செய்தால் விவசாயிகளினதும் நாட்டு மக்களினதும் வாழ்க்கைத்தரம் உயர்வடையும் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நெல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் விவசாயம் சம்பந்தமான பிரச்சனைகளான சந்தைப்படுத்தல், பரிந்துக்கப்பட்ட நெல்வகை தொடர்பான பிரச்சனைகள், உர விநியோகம், யானைத் தாக்கம், மானியம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படும் நஷ்டத்துக்கான இழப்பு.
விவசாயிகளுடன் தொடர்புடைய ஒரு முக்கிய பிரேரணை இன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில் வடக்கு கிழக்கில் வாழும் எமது மக்கள் விவசாயம், கால்நடை, மீன்பிடியினை நம்பி தமது வாழ்வாதாரத்தினை நடத்திச் செல்கின்றனர்.
கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தினை உதாரணமாக வைத்து நான் சில விடயங்களை கூறுகின்றேன். இது வடக்கு கிழக்கில் காணப்படுகின்ற அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும் ஒரு பிரச்சனை ஆகும். அந்த வகையில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு என்பன ஒன்றாக பயணிக்கும் துறைகளாக காணப்படுகின்றன. ஆகவே விவசாயிகளுக்கு கடந்த போகத்திலே மிக முக்கிய பிரச்சனையாக காணப்பட்டது மேய்ச்சல் தரை நிலப் பிரச்சனை. மயிலத்தமடுவிலிருந்து 150 நாட்களுக்கும் மேலதிகமாக போராட்டங்கள் நடை பெறுகின்றன.
ஆனால் அரசாங்கத்தினுடைய இனவாத செயற்பாட்டின் காரணமாக எங்களது மேய்ச்சல் தரையை வர்த்தமானி ஊடாக அறிவிக்காமல் பெரும்பான்மை இனத்தினை குடியேற்றி விவசாயம் மேற்கொள்ள முன்வந்தமையினால் இன்று கால்நடை வைத்திருக்கும் எமது தமிழ் மக்கள் கால்நடைகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்; விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோர் விவசாயத்தை ஆரம்பிக்க முடியாத நிலையில் உள்ளனர்.
இது மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்லாது வெருகல், திருகோணமலை, அம்பாறை ஆகிய இடங்களிலும் இப் பிரச்சனைகள் நிலவுகின்றன. ஆகவே இப் பிரச்சனைகளுக்கு விவசாய அமைச்சரும் சரியான தீர்மானத்தை பெற்றுத் தர வேண்டும்.
“2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அத்துமீறிய குடியேற்றங்களை அமைப்போர் மகாவலி கங்கை B வலயத்தினுள் உள்ளடக்கப்படமாட்டார்கள்” எனக் கூறியும் அத்துமீறிய குடியேற்றங்களை அமைத்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். இதற்கான தீர்வினை ஜனாதிபதி, விவசாய அமைச்சர், மாகவலிக்குரிய அமைச்சர் ஆகியோர் இணைந்து கலந்துரையாடி பெற்றுத் தர வேண்டும்.
நெற்பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் முதலாவது போகத்தினை முதலில் ஆரம்பிப்பது கிழக்கு மாகாணத்தில் ஆகும். கிழக்கில் விவசாயிகள் தமது நிலத்தை தயார்படுத்தி; விதைப்பை ஆரம்பிக்கும் போது பொலன்நறுவை, அனுராதபுரம், அம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் ஆரம்பிக்க மாட்டார்கள். விவசாய ஆரம்ப திகதியை கிழக்கு மாகாணத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் எனக் கூறி நான் அமைச்சராகிய 4 வருடங்களாக கோரிக்கை முன்வைத்துள்ளேன்.
கடந்த போகத்திலும் அறுவடையின் பின்னரே விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டது. இதற்கான காரணம் பொலன்நறுவை, அனுராதபுரம், அம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் நெற்பயிர்ச்செய்கை ஆரம்பிக்கும் திகதியிலேயே திறைசேரியில் இருந்து நிதி ஒதுக்கப்படுகின்றது. விவசாயிகள் வட்டிக்கு பணம் வாங்கியே விவசாயம் மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது.
இந்தப் போகத்திலாவது உரிய நேரத்தில் மானியங்கள் வழங்காவிட்டால் எமது விவசாயிகள் கடனாளிகளாகவே மாறக்கூடிய சந்தர்ப்பம் காணப்படும். இதற்குரிய தீர்வினை விவசாய அமைச்சர் பெற்றுத் தராவிட்டால் அமைச்சராக இருந்தும் தீர்வுகளை பெற்றுத்தரவில்லை என என்றும் பழி சுமத்துவோம்.
எமது மக்கள் கஷ்டத்தின் மத்தியில் தமது தங்க நகைகளை அடகு வைத்து உரத்தினை கொள்வனவு செய்தாலும் விவசாயிகள் அறுவடை செய்யும் காலப்பகுதி காணப்படுகின்ற போது யானைகளின் தொல்லை காணப்படுகின்றது. உயிரிழப்பும் காணப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கௌரவ அதாவுல்லா அவர்களும் இருக்கும் போது இவ் யானைப் பிரச்சனைகளைப் பற்றி கூறினேன். யானை வேலிகளை அமைப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது வரை 10 Km யானை வேலியை கூட அமைக்கவில்லை. இராப்பகலாக கண்விழித்து யானைகளிலிருந்து நிலத்தினைப் பாதுகாத்தால் இயற்கை அனர்த்தங்களின் பிரச்சனை காணப்படுகின்றது.
இதற்கு மக்களும், அரசாங்கமும் எதுவும் செய்ய முடியாது. கடந்த போகத்தில் பெருமளவான விவசாய நிலங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்து இப் பிரச்சனை தொடர்பில் தரவுகளை மேற்கொள்ள வந்த Insurance Co-operation ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை பார்த்துவிட்டு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் எனக் கூறி சென்றுவிட்டனர்.
2 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் வயல் நிலங்கள் காணப்படும் மாவட்டத்தில் ஒரு நாளினுள் எவ்வாறு மதிப்பீடு செய்ய முடியும்? மட்டக்களப்பில் வெல்லாவெளி, போரதீவுப்பற்றினை நோக்கினால் அங்குள்ள ஒரு சில நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்று வரை எமது பாதிக்கப்பட்ட மக்களுக்கு Insurance Co-operation நஷ்டஈடு வழங்கவில்லை.
இது விவசாயிகளை தொடர்ந்து கடனாளிகளாக்கும் செயன்முறையாகும். இவ்வாறு கஷ்டத்துக்கு மத்தியிலும் எமது விவசாயிகள் நெல்லைப் பெற்றாலும் அதனை உரிய விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு இந்த அரசாங்கம் ஒரு வக்கில்லாத அரசாங்கமாக உள்ளது. அரசாங்கம் கொள்வனவு செய்ய வேண்டிய நெல்லை எமது மக்களுக்கு நீங்கள் தெரிவித்தால் அந்த இன நெல்லை எமது மக்கள் உற்பத்தி செய்வர்.
நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கத்திடம் பணமில்லை என்றால் இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கியுள்ள ஆடம்பர செலவுகளை குறைத்தால் நெல்லினை கொள்வனவு செய்ய வேண்டிய பகுதியளவு பணத்தினை பெற முடியும்.
சுதந்திரமற்ற இலங்கையில் சுதந்திர தினம் கொண்டாட செலவழிக்கப்பட்ட பணத்தினை வைத்து நெல் கொள்வனவு செய்வதற்காக ஒதுக்க முடியும். அம்பாந்தோட்டை பிரதேசத்தில் நெல் கொள்வனவிற்காக சில உத்திகள் கையாளப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் எமது மாவட்டத்தில் எவ்வித திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படவில்லை என தெரிவித்தார்