20

20

ஒத்திவைக்கப்பட்டது மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை வழக்கு !

மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருமாறு ஜனாதிபதியை வலியுறுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பான வழக்கு எதிர்வரும் மே  மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

மட்டக்களப்பு – ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில், நீதவான் தர்சினி அண்ணாத்துரை முன்னிலையில் இந்த வழக்கு இன்று(20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டது.

 

பிரதிவாதிகள் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் உள்ளிட்டோர் மன்றில் இன்று ஆஜராகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

 

கடந்த வருடம் ஒக்டோபர் 8ஆம் திகதி மட்டக்களப்பு – செங்கலடிக்கு ஜனாதிபதி வருகை தந்த சந்தர்ப்பத்தில், மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 37 பேருக்கு எதிராக வழங்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நடவடிக்கைகளுக்கு பணம் சேர்க்க 200 மதுபான அனுமதிபத்திரங்கள் – நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாச !

எப்.எல். உரிமம் 4 இன் கீழ் 200 மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 15 பேருக்கு ஏற்கனவே இந்த அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு விட்டதாகவும், இதற்காக 2 கோடி ரூபா கப்பமாக அறவிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(19) பாராளுமன்றத்தில் வெளிக்கொணர்ந்தார்.

 

தற்போது 6 மதுபான உற்பத்திசாலை அனுமதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளது. இதனை கருத்திற்கொண்டே மது வரி ஆணையாளராக குணசிறி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தலை இலக்காக் கொண்டு பணம் சேகரிப்பதான செயற்பாடா இது என்ற சந்தேகம் எழுவதால் இதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 

நாட்டின் 41 இலட்சம் பாடசாலை மாணவர்களின் நலனை கருதியே இது சம்பந்தமாக கேள்வி எழுப்புகிறேன். வரப்பிரசாதங்களுக்குட்பட்டு தான் பொய்யான விடயங்களை முன்வைக்கவில்லை. சொல்வதை பொறுப்புடன் சொல்கிறேன்.

 

இந்த சட்டவிரோத உரிமப் பத்திரங்கள் அனைத்தும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் திரும்பப் பெறப்படும். இது தொடர்பான விரிவான விசாரணை தேவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் பிற்போடப்பட்படைக்கு எம்.ஏ.சுமந்திரனே காரணம்- நாடாளுமன்றத்தில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ!

மாகாண சபைத் தேர்தல் முறைமை திருத்த விவகாரத்தில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எம்.ஏ.சுமந்திரன் கடும் அழுத்தம் பிரயோகித்தார்.மாகாண சபை தேர்தல் பிற்போடப்பட்டு மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளமைக்கு எம்.ஏ.சுமந்திரன் பொறுப்புக் கூற வேண்டும் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் உரையாற்றியதாவது,

 

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் உரையாற்றுகிறாரா அல்லது பிரதேச சபையில் உரையாற்றுகிறாரா ? என்பதை அறியவில்லை.உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சுட்டிக்காட்டி உரையாற்றினார்.அவரது உரையில் விரக்தி மாத்திரமே எதிரொலித்தன.

 

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் இவர் சபையில் உரையாற்றுகையில் ‘உயர்நீதிமன்றம் வீட்டுக்கு செல்ல வேண்டும் ‘ என்று இவர் குறிப்பிட்டார்.இவர்களுக்கு சார்பான தீர்ப்பு கிடைக்கும் போது சபைக்கு வந்து உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அப்பாற்பட்டு செல்ல கூடாது என்று குறிப்பிடுகிறார்.ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு.

 

இதன்போது எழுந்து ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ‘உயர்நீதிமன்றத்தின் குறை நிறைகளைச் சுட்டிக்காட்டும் உரிமை எமக்கு உண்டு.அன்று குறிப்பிட்ட விடயத்துக்கும்,இன்று குறிப்பிடும் விடயத்துக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் உண்டு.நான் அன்று குறிப்பிட்ட கருத்தில் எவ்வித மாறுப்பாடும் கிடையாது என்றார்.

 

தொடர்ந்து உரையாற்றிய நீதியமைச்சர், மாகாண சபைத் தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை.சிறந்த சட்ட வரைபை நாங்கள் தயார் செய்து முன்வைத்தோம்.உயர்நீதிமன்றத்தின் திருத்தங்கள் சட்டத்தில் உள்வாங்கப்படவில்லை.நல்லாட்சி அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளுக்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.

 

மாகாண சபைத் தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் பிரயோகித்தார்.இதனால் மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டு மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது.இதற்கு எம்.ஏ.சுமந்திரன் பொறுப்புக் கூற வேண்டும்.ஆகவே நீங்கள் தான் ( சுமந்திரனை நோக்கி) நீங்கள் தான் அப்போதைய பிரதமருக்கு கடும் அழுத்தம் பிரயோகித்தீர்கள்.

 

இதன்போது மீண்டும் குறுக்கிட்டு உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன் .நான் எதிர்க்கட்சி உறுப்பினர் நீங்கள் தான் அமைச்சரவை உறுப்பினர் ஆகவே நீங்களே பொறுப்புக் கூற வேண்டும் ‘ என்றார்.

 

நான் அமைச்சரவையில் இருந்தேன். சிறந்த சட்ட மூலத்தையே பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பித்தோம்.சட்டமூலம் குழுநிலை வேளையில் திருத்தம் செய்யப்பட்ட போது உயர்நீதிமன்றத்தின் தீர்மானங்கள் கவனத்திற் கொள்ளவில்லை.இவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதால் மாகாண சபைத் தேர்தல்  காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது.சிக்கலை நீங்களே (சுமந்திரனை நோக்கி) ஏற்படுத்தினீர்கள் என்றார்.