14

14

வடக்கிலுள்ள அரசியல் தலைவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால் மீனவர்கள் பிரச்சினைகளை தீர்க்கலாம் – நிஷாந்த டி சில்வா

கச்சதீவு உரிமையை அடிப்படையாகக் கொண்டு மீனவர்களின் பிரச்சினைகள் உதாசீனப்படுத்தப்படவில்லை. வடக்கிலுள்ள அரசியல் தலைவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டால் மீனவர் பிரச்சினைக்கு குறுகிய காலத்துக்குள் தீர்வு காண முடியும் என்று மீன்பிடித்துறை இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.

 

ஜனாதிபதி ஊடக மையத்தில் புதன்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், ‘கச்சதீவை மீண்டும் இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என்று தமிழகத்தில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அதன் உரிமையை தக்க வைத்துக் கொள்வதற்காகவே இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாமலுள்ளது.’ என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக கேள்வி எழுப்பிய போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

தமிழக மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் நீண்டகாலமாக காணப்படும் பிரச்சனையாகும். உண்மையில் இது எமது கடல் வளத்தை கொள்ளையடிக்கும் செயற்பாடாகும்.

 

சிலர் தமது அரசியலுக்காக இந்த பிரச்சினையை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர். இப்பிரச்சினைக்கு இராஜதந்திர மட்டத்தில் தீர்வு காண வேண்டும் என்பதற்காக அமைச்சு கடின முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

 

இந்தியாவை விட கடுமையாக இலங்கையில் சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. எவ்வாறிருப்பினும் எம்மால் முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளும் போதுமானவையல்ல என்பதை நாமும் தெளிவாக அறிவோம். எவ்வாறிருப்பினும் இது கடற்றொழில் அமைச்சருடைய பொறுப்பு மாத்திரமல்ல. வடக்கு மீனவ மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரச தலைவர்களினதும் பொறுப்பாகும்.

 

அரசியல் பேதங்களை துறந்து வடக்கு அரசியல் தலைவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றி தமது ஒத்துழைப்புக்களை வழங்கினால் இந்த பிரச்சினைக்கு குறுகிய காலத்துக்குள் தீர்வு காண முடியும். அதனை விடுத்து தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பிரச்சினைகளை ஏற்படுத்திவிட்டு, அவற்றுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கு முன்வராமலிருப்பது ஒழுக்கமான செயற்பாடல்ல.

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்லது கடற்றொழில் அமைச்சர் மாத்திரம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவில்லை.

 

ஜே.வி.பி. உட்பட பலரும் இந்தியா செல்கின்றனர். அங்கு சென்று பால் உற்பத்தி நிலையங்களுக்கு செல்பவர்கள் மீனவர்களின் பிரச்சினை குறித்து ஏன் பேசவில்லை? ஆனால் மீனவர் மீது போலியான அக்கறை கொண்டு முதலைக் கண்ணீர் வடித்துக் கொண்டு உலகில் இடம்பெறும் சகல மீனவர் மாநாடுகளிலும் பங்கேற்கின்றனர். இது கவலைக்குரிய விடயமாகும் என்றார்.