கிளிநொச்சி பளை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த 2011 ஆண்டு யூன் மாதம் 30ம் திகதி மற்றும் 2012ம் ஆண்டு யூலை ஆகிய காலப்பகுதிகளில் பதினாறு வயதிற்கும் குறைவான தனது பெறாமகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை தொடர்பில் அவரது சிறிய தந்தையான முதியவர் விசாரணைகள் மூலம் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு செவ்வாய்க்கிழமை (12) கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் பன்னிரெண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது..
குறித்த வழக்கானது செவ்வாய்க்கிழமை (12) பகல் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.எம் சகாப்தீன் அவர்கள் முன்னிலையில் தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது
இதன்போது குறித்த எதிரிக்கு 12 ஆண்டுக் கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் பத்தாயிரம் தண்டப்பணம் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் 12 மாத கால சிறைத்தண்டனையும்
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபா நஷ்டஈடு செலுத்துமாறும் தவறும் சந்தர்ப்பத்தில் 24 மாத கால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் பற்றித் தெரியவருவதாவது கிளிநொச்சி பளைப் பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு யூன் மாதம் 30 ம் திகதி மற்றும் 2012ம் ஆண்டு யூலை 16ம் திகதி ஆகிய நாட்களில் குறித்த சிறுமியின் தாயாரை மறு மணம் செய்து கொண்ட குறித்த குற்றவாளி தனது 16 வயதிற்குக் குறைந்த தனது பெறாமகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை சிறுமியின் வாக்கு மூலத்தின் மூலமும் சாட்சியங்கள் மூலமும் சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு சிறுமி சார்பாகச் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு மூலம் மன்று குறித்த முதியவரை குற்றவாளியாக அடையாளம் கண்டு மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது.
எதிரி சார்பாக முன்னிலையான சட்டத்தரணி குறித்த குற்றவாளியானவர் நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மாதாந்த சிகிச்சைகளைப் பெற்று வருவதாகவும் மன்றுக்கு விண்ணப்பம் செய்திருந்தார் இதனை கவனத்தில் எடுத்த மன்று குறித்த குற்றவாளிக்கு சிறைச்சாலையில் வைத்திய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது-