03

03

பொருளாதார மீட்சி என்று குறிப்பிட்டுக் கொண்டு இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் – விமல் வீரவன்ச

பொருளாதார மீட்சி என்று குறிப்பிட்டுக் கொண்டு இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கிறது.எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இலங்கையில் இந்தியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை பிரஜைகள் சொந்த நாட்டுக்குள் இரண்டாம் தரப்பினராக அடையாளப்படுத்தப்படுவார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

 

பாதுக்க வேரகல பகுதியில் சனிக்கிழமை (02) மாலை இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் தெரிவித்ததாவது,

 

நாட்டுக்கு என்ன நேர்ந்துள்ளது.மக்கள் சொல்லனா துயரங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.வாழும் சூழல் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.பொருளாதார மற்றும் சமூக பாதிப்பை அரசாங்கம் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது.இந்தியாவின் செல்வந்தரான அதானிக்கு இலங்கையின் பெரும்பாலான வளங்களை வழங்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

 

மன்னார் காற்றாலை மின் உற்பத்தியின் பங்குகளை அதானி நிறுவனத்துக்கு வழங்குவதால் நடுத்தர மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்காது. நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் டெலிகொம் நிறுவனத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதேபோல் இலங்கை மின்சாரத்தை பல கூறுகளாக பிரித்து அதனையும் இந்தியாவுக்கு வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

இலங்கையின் பொருளாதார கேந்திர மையங்களை இந்திய நிறுவனங்களுக்கு வழங்கும் செயற்பாடுகளினால் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படும். இவ்வாறான நிலையில் இந்தியாவுடன் எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

 

எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இந்தியர்கள் இலங்கையில் சுதந்திரமாக தமது வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் சொந்த நாட்டுக்குள் இரண்டாம் தர பிரஜைகளாக கருதப்படுவார்கள். இலங்கை இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக மாற்றமடையும்.

 

நாடடின் தேசிய வளங்களை இந்தியாவுக்கு வழங்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் குறித்து எதிர்க்கட்சிகள் ஏதும் பேசுவதில்லை.அனைவரும் இந்தியாவுக்கு துதி பாடிக் கொண்டிருக்கிறார்கள்.பொருளாதார பாதிப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு நாட்டின் சுயாதீனத்தை இந்தியாவிடம் விட்டுக் கொடுக்கும் செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றன.

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவருக்கு ஆதரவாக செயற்படும் ராஜபக்ஷர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதற்காக மக்களை தெளிவுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். இந்தியாவின் ஆக்கிரமிப்புக்கு இடமளித்துக் கொண்டு இருக்க முடியாது.

தமிழர் பகுதிகளுக்கு விஜயம் செய்கிறார் அனுரகுமார திஸ்ஸநாயக்க !

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

 

இந்த நிலையில் எதிர்வரும் 16ஆம் திகதி கிளிநொச்சிக்கு விஜயம் செய்யும் அவர் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் மக்கள் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளதோடு, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.

 

அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் பிற்பகல் வேளை வவுனியாவில் நடைபெறும் மக்கள் சந்திப்பில் பங்கேற்கவுள்ளதுடன் அங்கும் பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை மேற்கொள்வுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள அவர், இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருப்பதோடு பொதுமக்கள் சந்திப்பில் பங்கேற்று, தொடர்ந்து தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறிப்பாக, இலங்கை தமிழ் அரசு கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திப்பதற்கு தற்போது ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

 

முன்னதாக, கடந்த மாதத்தின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த அக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகளான தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறீகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்து உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வு தொடர்பான புதிய வேலைத்திட்டம் !

போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வு தொடர்பான புதிய வேலைத்திட்டம் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மேலும், யுக்திய நடவடிக்கையில் போதைபொருள் கடத்தல்காரர்கள் முற்றாக ஒடுக்கப்படவில்லை எனவும், அவர்கள் அனைவரையும் மிகக் குறுகிய காலத்தில் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை , போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள அழுத்தம் காரணமாக போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், சில குழுக்களுக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள் உருவாகியுள்ளதாகவும் இதனால் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பாடத்துடன் செயற்கை நுண்ணறிவு (AI) கற்பதற்கான வாய்ப்பு !

தரம் 8 மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் தகவல் தொழில்நுட்ப பாடத்துடன் செயற்கை நுண்ணறிவு (AI) கற்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும், இந்த முன்னோடி திட்டம் மார்ச் 19 முதல் 20 பள்ளிகளில் தொடங்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்

.

இந்த பணிக்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், வரும் ஆண்டில் இது நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எதிர்காலத்தில், நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் திறன்கள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப அவர்களின் எதிர்கால இலக்குகளை அடைவதற்குத் தேவையான பின்னணி வழங்கப்படும், என்றார்.