பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்பட வேண்டும். 7 வருட கால கடூழிய சிறைத்தண்டனைக்குரிய குற்றத்தை புரிந்துள்ளார். அவரை நாங்கள் நன்கு அறிவோம். உண்மைகளை ஒருபோதும் பகிரங்கப்படுத்தமாட்டார் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தகவல் தெரிந்தும் அதனை மறைத்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்பட வேண்டும் என நாங்கள் குறிப்பிட்டது அடிப்படையற்றது,நடைமுறைக்கு சாத்தியமற்றது என பொலிஸ்மா அதிபர் குறிப்பிடுகிறார்.சட்டத்தின் பிரகாரம் அவ்வாறு முடியாது.மைத்திரிபால சிறிசேனவிடம் விசாரணைகளை முன்னெடுத்தததன் பின்னர் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்று குறிப்பிடுவது தவறு,
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைனகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதா என்பது சந்தேகத்துக்கிடமானதாக காணப்படுகிறது.குண்டுத்தாக்குதலை யார் நடத்தியது என்பதை தான் நன்கு அறிவதாக மைத்திரிபால சிறிசேன மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தால் அந்த தகவலை இரகசியமான அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரு குற்றம் தொடர்பிலோ அல்லது குற்றத்துடன் தொடர்புடைய தகவல் தெரிந்தால் அதனை பொலிஸுக்கு அறிவிக்க வேண்டுமே தவிர நீதிமன்றத்திடம் குறிப்பிட முடியாது.நீதிமன்றத்துக்கு முன்னிலைப்படுத்தும் சந்தேகநபர் குற்றவாளியா இல்லையா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும்.பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் தகவல் தெரிந்தும் அதனை மறைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
1979 பயங்கரவாத தடைச்சட்டத்தின் 5 ஆவது உறுப்புரையில் ‘ பயங்கரவாத செயற்பாடு தொடர்பான தகவல் அல்லது அது தொடர்பான தகவல்களை அறிந்த நபர் அதனை பொலிஸிற்கு அறிவிக்காமல் இருப்பது 7 வருடகால கடூழிய சிறை தண்டனைக்குரிய குற்றமாகும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தகவல்களை அறிந்திருந்தும் அதனை மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு தரப்புக்கு அறிவிக்கவில்லை.ஆகவே இவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் பிரகாரம் ஏழு ஆண்டுகால கடூழிய சிறைதண்டனைக்குரிய குற்றத்தை புரிந்துள்ளார். ஆகவே சட்டம் தெளிவாக உள்ளது. மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்பட வேண்டும்.
மைத்திரிபால சிறிசேனவை நாங்கள் நன்கு அறிவோம். ஆகவே அவர் ஒருபோதும் உண்மையை குறிப்பிட மாட்டார்.அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சரை கைது செய்து பொலிஸ் தனது சுயாதீனத்தை உறுதிப்படுத்தியுள்ளது.அதே போல் முன்னாள் ஜனாதிபதியையும் கைது செய்து தனது சுயாதீனத்தை பொலிஸ் உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம்.
குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை கொண்டு பலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும், தகவல்கள் தெரிந்தால் அதனை பாதுகாப்பு தரப்புக்கு அறிவிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிடுகிறார். குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார் ஆகவே மக்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம் என்றார்.