March

March

யாழில். மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்பனை – பெண் ஒருவர் கைது !

யாழில். மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

அச்சுவேலி மற்றும் வல்லை பகுதிகளில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பாக்கு விற்பனையில் பெண்ணொருவர் ஈடுபட்டுள்ளார் என அச்சுவேலி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலையே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

பெண்ணை கைது செய்யும் போது , அவரது உடைமையில் இருந்து ஒன்றரை லீட்டர் கசிப்பு மற்றும் கஞ்சா கலந்த மாவா பாக்கு ஒரு தொகை என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலுக்கு அமைய வட – கிழக்கு மாகாணங்களில் தமிழ் பொலிஸ் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் !

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காக 107 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் அகியோரின் தலைமையில் இந்த துரித இலக்கம் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

24 மணித்தியாலங்களும் செயற்பாட்டில் இருக்கும் 107 என்ற துரித இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடுகளை செய்ய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை முற்றிலும் தமிழ் மொழியில் செயற்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலுக்கு அமைவாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

போரினால் நேரடியாக பாதிக்கப்பட்ட தரப்பினருடனான முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட சந்திப்புக்கள் இம்மாத இறுதியில் !

வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாக போரினால் நேரடியாக பாதிக்கப்பட்ட தரப்பினருடனான முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட சந்திப்புக்கள் இம்மாத இறுதியிலிருந்து ஆரம்பமாகும் என உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகத்தின் கொள்கைப் பிரிவுத் தலைவர் யுவி தங்கராஜா தெரிவித்துள்ளார்.

 

நாட்டில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் பணிகள் அரசாங்கத்தினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் விதமாக கலாநிதி அசங்க குணவன்ச தலைமையில் இயங்கிவரும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகம் அண்மையில் வட, கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை நிகழ்த்தியிருந்தது.

 

இருப்பினும், இச்சந்திப்புக்களில் வடக்கு, கிழக்கிலுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், போர் விதவைகள், முன்னாள் போராளிகள் உள்ளடங்கலாக போரினால் நேரடியாக பாதிக்கப்பட்ட எந்தவொரு தரப்பினரும் உள்வாங்கப்படவில்லை என்ற விமர்சனம் பாதிக்கப்பட்ட தரப்பினரால் முன்வைக்கப்பட்டிருந்தது.

 

எனவே, பாதிக்கப்பட்ட தரப்பினருக்குரிய தீர்வினை வழங்கும் நோக்கில் இயங்குவதாகக் கூறும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகம் பாதிக்கப்பட்ட தரப்பினரை சந்திக்காதது ஏன் எனவும், செயலகத்தின் சந்திப்புக்களில் பங்கேற்றவர்கள் எந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டார்கள் எனவும் வினவியபோதே யுவி தங்கராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அண்மையில் தமது செயலக அதிகாரிகள் வட, கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்டபோது மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், பல்கலைக்கழக சமூகம், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் போன்ற வரையறுக்கப்பட்ட சில தரப்பினருடன் மாத்திரமே சந்திப்புக்களில் ஈடுபட்டதாகவும், பாதிக்கப்பட்ட தரப்பினருடனான பரந்துபட்ட சந்திப்புக்களில் இன்னமும் ஈடுபடவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

அதேவேளை, ‘உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் அதில் முன்னிலையாகும் தரப்பினர் கையாளப்படவேண்டிய முறை உள்ளிட்ட ஒழுங்குவிதிகளை நாம் இப்போது தயாரித்து வருகின்றோம். அதேபோன்று வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாக நாம் சந்திக்கவேண்டிய பாதிக்கப்பட்ட தரப்பினர் குறித்த தகவல்களைத் திரட்டி வருகின்றோம். அத்தகவல்களை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், அரச சார்பற்ற அமைப்புக்களின் செயலகம், மக்கள் பேரவை போன்ற கட்டமைப்புக்களின் ஊடாக சேகரிக்கின்றோம்’ என்றும் யுவி தங்கராஜா குறிப்பிட்டார்.

 

மேலும், பாதிக்கப்பட்ட தரப்பினருடன் தனிப்பட்ட ரீதியில் தொடர்புகளை பேணி வந்திருந்தாலும், முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பு ரீதியிலான சந்திப்புக்கள் இம்மாத இறுதியில் அல்லது எதிர்வரும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் ஆரம்பமாகும் எனவும் அவர் உத்தரவாதம் அளித்தார்.

வட்டுக்கோட்டையில் இளைஞன் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் – விசாரணைகளை ஆரம்பித்தது மனித உரிமைகள் ஆணைக்குழு!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளம் குடும்பஸ்தர் கொலை தொடர்பில் கடற்படையினரின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் தனது விசாரணைகளை  வெள்ளிக்கிழமை (15) ஆரம்பித்துள்ளது.

வட்டுக்கோட்டை – மாவடி பகுதியைச் சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் (வயது 23) என்ற குடும்பஸ்தர் குழு ஒன்றினால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

குறித்த சம்பவத்துடன் கடற்டையினரின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் ஊடகங்களில் வெளியாகிய செய்திகள் மற்றும் காணொளிகளின் அடிப்படையில் தனது சொந்தப் பிரேரணையாக எடுத்து குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தரும் அவரது மனைவியும் காரைநகரில் இருந்து வட்டுக்கோட்டை – மாவடியில் உள்ள வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தவேளை பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில் இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் நின்ற சிலர் அவர்களை வழி மறித்தனர்.

இதன்போது இருவரும் தப்பித்து கடற்படை முகாமுக்குள் உள்நுழைந்தனர். இந்நிலையில் கடற்படையினர் அவர்களை வெளியே விரட்டினர். இதனால் அவர்கள் வெளியே வந்தவேளை, ஒரு காரில் மனைவியையும், அடுத்த காரில் குறித்த நபரையும் ஏற்றிக்கொண்டு குறித்த குழு அங்கிருந்து சென்றது.

பின்னர் மனைவியை சித்தங்கேணி சந்தியில் இறக்கி விட்டனர். அதன்பின்னர் மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்வதற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபரை கடத்திச் சென்றவர்கள் அவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட பின்னர் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையினுள் காரில் சென்று, வைத்தியசாலையில் உள்ள மாமரத்துக்கு கீழே அவரை தூக்கி வீசிவிட்டு சென்றனர்.

இந்நிலையில் வைத்தியசாலையில் இருந்த சுகாதார பணியாளர்கள் இது குறித்து வைத்தியருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தினர்.

அவ்விடத்திற்கு வந்த வைத்தியர் நோயாளர் காவுவண்டி மூலம் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை சில நிமிடங்களில் அவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த குடும்பஸ்தரின் மரணம் சித்திரவதை செய்யப்பட்டு கூரிய ஆயுதங்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி கொலை செய்வதற்கு கடற்படையினரும் ஒரு வகையில் காரணம் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம் சாட்டியுள்ள நிலையில், இளைஞனை கடத்துவதற்கு கடற்படையினர் உதவும் வீடியோ காட்சிகளும் வெளியாகியது.

குறித்த  காணொளியில், இளைஞனும் மனைவியும் தஞ்சம் கோரி முகாமுக்கு ஓடி வருவதும், அங்கு கடற்படையினர் அவர்களை தாக்குவதும், வன்முறை கும்பல் கடற்படையின் கண் முன்னே முகாம் பகுதியில் வைத்தே கணவன் மனைவியை கடத்தி செல்வதும் பதிவாகியுள்ளது.

கடற்படையினர் துப்பாக்கிகளுடன் கடத்தல் காரர்களுக்கு உதவி செய்வது காணொளியில் தெளிவாக பதிவாகியுள்ள நிலையில் கடத்தலுக்கு கடற்படையினர் உதவினார்கள் என்ற குற்றச்சாட்டை உயிரிழந்தவரின் மனைவி முன் வைத்துள்ள நிலையில் அது தொடர்பில் ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை குறித்த கடற்படை முகாமுக்கு சென்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய உத்தியோத்தர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த விடயம்  தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ், ஊடகங்களில் வெளியாகிய செய்திகள் மற்றும் காணொளிகளின் அடிப்படையில் கடற்கரையினரின் செயற்பாடுகள் தொடர்பில் அறிக்கை கேட்டுள்ளோம்.

அதுமட்டுமல்லாது குறித்த இளைஞனின் கொலை தொடர்பில் பொலிசாரால்  மேற்கொள்ளப்படும்  விசாரணைகள் தொடர்பிலும் விரிவான அறிக்கை கேட்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்!

வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கோரி இன்று சனிக்கிழமை (16) ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

 

இதன்போது வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டததுடன், அங்கிருந்து பேரணியாக வவுனியா மணிக்கூட்டு கோபுர வீதியூடாக வவுனியா நகரை அடைந்து அங்கிருந்து இலுப்பையடியினை சென்றடைந்திருந்தது.

 

இதன்போது தொல்பொருள் திணைக்களத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் அங்கிருந்து பேரணியாக வவுனியா சிறைச்சாலையின் முன்பாக சென்று நிறைவடைந்திருந்தது.

 

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘ பொலிஸ் அராஜகம் ஒழிக, வெடுக்குநாறி எங்கள் சொத்து, கைது செய்யப்பட்டவர்களை வசிடுதலை செய், வழிபாட்டு உரிமையை தடுக்காதே, சிவ வழிபாட்டை தடை செய்யாதே, வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம், பொய் வழக்கு போடாதே, பௌத்தமயமாக்கலை உடனே நிறுத்து” என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.

 

குறித்த ஆர்ப்பாட்டமானது கைது செய்யப்பட்ட உறவினர்களின் அழைப்பின் பேரில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.

இலங்கையின் அரசியல் குறித்து எனக்கு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது – சந்திரிகா குமாரதுங்க

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அரசியல் வெறுத்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

 

நிகழ்வொன்றில் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கருத்து தெரிவிக்குமாறு கேள்வி எழுப்ப்பட்டவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

அரசியல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டவேளை எனக்கு அரசியல் குறித்து வெறுப்புஏற்பட்டுவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து செயற்படுவார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

இலங்கையை அதிகார போட்டிக்குள் நுழைத்து இன்னுமொரு உக்ரைனாக மாற்ற நாம் தயாரில்லை – இந்தியாவிடம் ஜே.வி.பி !

இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான பூகோள அரசியல் போட்டிக்கு மத்தியில் மற்றுமொரு உக்ரைனாக மாறுவதற்கு இலங்கை தயாரில்லை என்ற விடயத்தை இந்தியாவிடம் நாம் தெரிவித்துள்ளோம் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

 

இராஜதந்திர தொடர்பு என்பது மெஜிக் கிடையாது.அது எமக்கு நன்கு தெரியும். வடகொரியா, கியூபா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் மட்டும்தான் எமது தொடர்பு இருக்கும் என சிலர் கூறுகின்றனர்.

இலங்கையை வடகொரியாவாக்குவதற்கு முற்படுகின்றனர் எனவும் பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது. இது தவறு. உலகம் இன்று மாறியுள்ளது.

 

உலக பூகோள அரசியலும் மாறியுள்ளது. நாம் இந்தியா, சீனா, அமெரிக்கா, ரஷ்யா , ஜப்பான் உட்பட உலகில் உள்ள அனைத்து நாடுகளுடனும் கொடுக்கல் – வாங்கல்களிலும் ஈடுபடுவோம். அதற்கான உறவு கட்டியெழுப்பட்டுள்ளது.

 

இலங்கை சீனாவிடம் அதிகமாக கடன் வாங்கியுள்ளது, அதற்கு அடுத்தப்படியாக இந்தியாவிடம் கடன் வாங்கப்பட்டுள்ளது. தற்போது சர்வதேச நாணய நிதியத்தை நாடியுள்ளனர்.

ஐஎம்எவ் என்பது அமெரிக்காதான். இவ்வாறு கடன்வாங்கியுள்ளதால்தான் நாடு இறுதியுள்ளது. அமெரிக்கா, இந்தியா, சீனா என்பன உலக அதிகார அரசியலில் ஈடுபடுகின்றன.

அந்த போட்டியில் எமது நாடு சிக்ககூடாது. நாம் இந்தியா சென்றிருந்தவேளை, நாம் மற்றுமொரு உக்ரைனாக மாறுவதற்கு தயாரில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்தோம்.

 

பிராந்திய பாதுகாப்பு சார்ந்த விடயத்தின்போது சரியான இடத்தில் நாம் நிற்போம். அவர் அதனை ஏற்றுக்கொண்டார் என்றார்.

யாழ் – நவகிரியில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி அட்டகாசத்தில் ஈடுபட்ட வாள்வெட்டு குழு!

யாழ்ப்பாணம் நவக்கிரி பகுதியில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

 

குறித்த சம்பவமானது இன்று(15) அதிகாலை 1:30 மணியளவில் நடைபெற்றுள்ளது.

 

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை பெற்றோல் குண்டு வீசி தீயிட்டு எரித்து வீட்டில் ஜன்னல்கள் கதவுகள் என்பவற்றையும் கூரிய ஆயுதங்களால் உடைத்து சேதமாக்கியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக அச்சுவேலி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையின் பாராளுமன்றம் முதியோர் இல்லமாக மாறி வருகிறது – கப்பிட்டியகொட சிறிவிமல தேரர் விசனம் !

நாடாளுமன்றத்தில் தற்போது உறுப்பினர்களாக உள்ள சில அரசியல்வாதிகள் விரைவில் பதவி விலக வேண்டுமென ராமஞ்ஞ பீடத்தின் கப்பிட்டியகொட சிறிவிமல தேரர் வலியுறுத்தியுள்ளார்.

 

இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படாவிட்டால், விரைவில் நாடாளுமன்றம் முதியோர் இல்லமாக மாறி விடுமென அவர் கேளிக்கையாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் 60 வயதில் ஓய்வு பெற வேண்டுமென சட்டம் உள்ளதாக ராமஞ்ஞ பீடத்தின் கப்பிட்டியகொட சிறிவிமல தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், 60 வயதுக்கும் மேற்பட்ட பலர் தற்போதைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் தற்போதைய நாடாளுமன்றில் உள்ள வயோதிபர்கள் பதவி விலக வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்துக்கமைய நாடாளுமன்றில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அரசியல்வாதிகள் பதவி விலகாவிட்டால், அவர்களுக்கு எதிராக புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்காக பணியாற்றுவதில்லை எனவும் நாட்டின் வளங்களை வெளிநாட்டவருக்கு விற்பனை செய்வதை நோக்கமாக கொண்டு செயல்படுவதாக கப்பிட்டியகொட சிறிவிமல தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் உள்ள சாதாரண பிரஜை ஒருவர் 50 ரூபாய் திருடினால் அவருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில், நாடாளுமன்றத்துக்குள் இருந்தவாறு பில்லியன் கணக்கில் திருடுபவர்களுக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

 

சாதாரண பிரஜைக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்படும் சட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எதிராக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண நகரில் கூரிய ஆயுதங்களுடன் இளைஞர்கள் வாள்வெட்டு குழு கைது !

யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை (15) அதிகாலை முச்சக்கர வண்டியில் பயணித்த வாள்வெட்டுக் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.

 

யாழ்ப்பாண நகருக்கு அண்மையாக வெள்ளிக்கிழமை (15) அதிகாலை 2 மணியளவில் முச்சக்கர வண்டியில் பயணித்த 5 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

யாழ்ப்பாணம் மத்யூஸ் வீதியை சேர்ந்த 25 வயதான முச்சக்கர வண்டி சாரதி, கொக்குவிலை சேர்ந்த 25 வயதான இளைஞன், யாழ்ப்பாண நகரத்தை சேர்ந்த 20 வயதான இளைஞன், குருநகரை சேர்ந்த 26 வயதான இளைஞன், வண்ணார்பண்ணையை சேர்ந்த 19 வயதான இளைஞன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 

அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டிக்குள் இருந்து வாள், இரும்பு கம்பி, இரும்பு குழாய் என்பன மீட்கப்பட்டன.