February

February

புகையிரத கடவை அமைக்குமாறு கோரி மக்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற புகையிரத விபத்தைக் கண்டித்து  அப்பகுதி மக்களால் நேற்றைய தினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

நேற்று மாலை இடம்பெற்ற இவ் விபத்தில் இணுவில் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய சயந்தன் மற்றும் அவரது மகளான 6 மாத குழந்தை அப்சரா ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், குறித்த புகையிரத விபத்து இடம்பெற்ற இடத்தில் புகையிரதக் கடவை இல்லை என தெரிவித்தும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவ்விடத்தில் தமது கடமையை செய்யவில்லை என்றும் குற்றஞ்சாட்டி அப்பிரதேச மக்களால் நேற்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது அவ்விடத்தில் ஒன்று கூடிய பொதுமக்கள், புகையிரதம் வந்தபோது அதனை மறித்து பதாதைகளைத் தாங்கியவாறு கோஷம் எழுப்பி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

குறித்த போராட்டத்தில்  சிவில் சமூக உறுப்பினர்கள், பொது மக்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் விரைவில்  குறித்த பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கும் என அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டதையடுத்து, குறித்த போராட்டம் கைவிடப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

நிகழ்நிலை சட்டமூலத்தில் இருந்து யாரும் தப்ப முடியாது – எச்சரிக்கிறார் பிரசன்ன ரணதுங்க !

நாட்டில் சமூக ஊடகங்கள் ஊடாக திட்டமிட்டு பொய்யான செய்திகளை பரப்புகின்ற அனைவரும், இணையவழி பாதுகாப்பு சட்டத்தில் இருந்து தப்பமுடியாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரித்துள்ளார்.

இன்று பதுளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இணையவழி பாதுகாப்புச் சட்டம் இந்த நாட்டிற்கு அத்தியாவசியமானது. சட்டவிரோதச் செயல்களை செய்து வெறுப்பை விதைப்பவர்கள் அதிலிருந்து தப்ப முடியாது.

இந்த சட்டம் நாட்டில் இல்லாவிட்டால் சமூக ஊடகங்கள் மூலமாக மக்களைச் சிரமத்திற்கு உள்ளாக்குவார்கள்.

இந்த சட்டம் இல்லாவிட்டால் நம்பமுடியாத பொய்யான செய்திகளை நாட்டிற்கு தெரிவிப்பார்கள். ஆபாச விடயங்களை தடையின்றி வெளிப்படுத்துவார்கள்.

இவ்வாறான செயல்களினால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றை நாங்கள் தனிப்பட்ட முறையிலும் அனுபவித்திருக்கிறோம்.

பாடசாலை அதிபர்கள் சந்திப்புக்களின் போது இந்த சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குமாறு அதிபர்கள் எங்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த இழையவழி பாதுகாப்பு சட்டம் நாட்டின் மீது பொறுப்புள்ள எவரையும் பாதிக்காது. அவர்களால் இன்னும் சிறப்பாகவும் வலுவாகவும் செயற்படமுடியும்.

அரசியல்வாதி தவறு செய்தால் அதை அச்சமின்றி கூறலாம், நீதிமன்றத்திற்கு கூட செல்லலாம்,
அரசியல்வாதி மீது நடவடிக்கை எடுக்கலாம். எனவே இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

ஆனால் ஆபாச வீடியோ பதிவேற்றுபவர்கள் கூடாத விடயங்களை எழுதுபவர்கள், பொய்களை பேசி மக்கள் மீது வெறுப்பை விதைப்பவர்கள் இந்த சட்டத்தில் இருந்து தப்பமுடியாது” என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை ஆட்சேபித்து சுமந்திரன் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் !

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ளதை ஆட்சேபித்து பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை முழுமையாக பின்பற்றாமலேயே இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் பரிந்துரைத்த திருத்தங்கள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டிருந்தால் மாத்திரமே சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டதன் மூலம் தாம் உள்ளிட்ட பிரஜைகளின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைதிகள் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நடவடிக்கை !

சில நாடுகளுடன் இணைந்து கைதிகள் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நடவடிக்கையை விரைவுபடுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த உடன்படிக்கையின் ஊடாக வௌிநாடுகளில் கைது செய்யப்படும், நாட்டில் தேடப்படும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான இயலுமை ஏற்படுமென பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து  தென்னகோன் தெரிவித்துள்ளார்.

தற்போது சில நாடுகளுடன் இணைந்து அத்தகைய உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் மேலும் சில நாடுகளுடன் இணைந்து விரைவில் கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கைகளில் கைச்சாத்திட திட்டமிடப்பட்டுள்ளது. வௌிவிவகார அமைச்சினால் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.

நாட்டில் பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய பிரபல வர்த்தகர்கள் 42 பேர் தற்போது வௌிநாடுகளில் தலைமறைவாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் துபாயில் வசித்து வருகின்றனர். ஏனையோர் இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தலைமறைவாகியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

இவர்களை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் ஊடாக சிவப்பு அறிவித்தல் பிற்பிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக புலனாய்வுத் தகவல்கள் பெறப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இளம் குடும்பம் ரெயில்வே கடவையில் மரணம்! தலைவர் சிறிதரன் தவறணையில் புட்டும் கருவாட்டுப் பொரியலுடனும் தூள் கிளப்புகிறார்!

வடக்கில் புகையிரதக் கடவைகளிலும் வீதிகளிலும் தமிழர்கள் மரணத்தைத் தழுவிக் கொண்டிருக்கின்றனர். யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் வானொன்று மோதி விபத்துக்குள்ளானதில் வானில் பயணித்த மூவரில் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஜனவரி 14 மாலை இடம்பெற்ற இவ் விபத்தில் இணுவில் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய சயந்தன் மற்றும் அவரது மகளான 6 மாத குழந்தை அப்சரா ஆகியோரே உயிரிழந்துள்ளனர். இறந்தவரின் மனைவியும் குழந்தையின் தாயாருமான படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து இடம்பெற்ற இடத்தில் புகையிரத கடவை காப்பாளர் இல்லாதமையே இவ்விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு கிழக்கிலும் விபத்துக்கள் பெருமளவு நடைபெறுகின்ற போதும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது பற்றி எவ்வித அக்கறையின்றியே செயற்படுகின்றனர்.

இது தொடர்பான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

“நினைவுகளே எங்கள் கேடயம்” – N.செல்வராஜாவின் கனவு மெய்ப்பட வேண்டும்!

1981இல் யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்டது, இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில் மிக முக்கியமான மற்றுமொரு நிகழ்வு. ஆனால் அந்நூலகம் எரிக்கப்பட்டு நாற்பது ஆண்டுகளில் அந்நூலகம் எப்போது எரிக்கப்பட்டது, அதனுடன் சம்பந்தப்பட்ட அரசியல் தலைமகளின் செயற்பாடுகள் பற்றிய பல உண்மைகள் மறைக்கப்பட்டு விட்டது. அதனை மீண்டும் ஆதாரங்களுடன் தேடிப் பதிவிட்டு அந்நூலகம் எரிக்கப்பட்டதற்குப் பின்னாளிருந்த அரசியல் தலைவர்களை ஆதாரமான பதிவுகளோடு நிறுத்தி இரு ஆவணங்கள் வெளியானது. “யாழ்ப்பாணப் பொதுநூலகம்: ஒரு வரலாற்றுத் தொகுப்பு” என்ற நூலிலும் அதனைத் தொடர்ந்து “Raising from the ashes“ என்ற தேசம் வெளியீடாக வந்த நூலிலும் இப்பதிவுகள் இடம்பெற்றது.

இவ்வாறு நூற்றுக்கு மேற்பட்ட தொகுப்புகளையும், நூல்களையும் வெளியிட்டதுடன் ஆயிரக்கணக்கான நூல்களையும் ஆவணங்களையும் தன் சேகரிப்பில் வைத்துள்ளவர் தேசம் சஞ்சிகையால் ‘நூலகவியலாளர்’ என்று கௌரவிக்கப்பட்ட என் செல்வராஜா. ஈழத்தமிழர்கள் மத்தியில் இந்த கௌரவத்துக்கு உரியவர் இவர் மட்டுமே. வேறுயாராவது அவ்வாறு அதனைப் பயன்படுத்துவார்களானால் அது அவர்களுடைய அறியாமையே.

இது தொடர்பான முழுமையான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

 

யாழ்ப்பாணத்தில் சர்ச்சையை கிளப்பிய இசை நிகழ்ச்சி: பணத்தை மீள கையளிப்பதாக ஏற்பாட்டாளர் இந்திரன் ஊடக அறிக்கை!

யாழ்ப்பாணத்தில் பத்மநாதன் இந்திரன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள Northern uni எனும் பல்கலைக்கழகத்துக்கான விளம்பரப்படுத்தலுக்காக யாழ்ப்பாணம் முற்றவெளி பகுதியில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. குறித்த இசை நிகழ்வில் ஏற்பாட்டு முகாமைத்துவம் முறையாக இல்லாமையால் மிகப்பெரிய களேபரம் வெடித்ததுடன்- சமூக வலைத்தளங்களில் காரசாரமான விவாதங்களையும் இது கிளப்பிவிட்டிருந்தது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் இந்திரன் குறித்த நிகழ்வு தொடர்பில் ஓர் ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளார். குறித்த ஊடக அறிக்கை வருமாறு…:

 

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலட்சக்கணக்கான இரசிகப் பெருமக்களைத் தாண்டி வெகுவிமரிசையாக NORTHERNUNI இன் ஒருங்கமைப்பில் அரங்கேறிய ஹரிஹரன் இசை நிகழ்ச்சி மற்றும் நட்சத்திரக் கொண்டாட்டம்:

இந்திரகுமார் பத்மநாதன் ஆகிய நான் எனது பெரும்பாலான காலப்பகுதியை கனடாவிலே கழித்தது அனைவரும் அறிவீர்கள் . எனினும் எனது தாய் மண்ணிற்கும் என் அருமை மக்களுக்கும் எவ்விதத்திலாவது நன்மை புரிய வேண்டும் என்பது எனது நெடுங்காலக் கனவு . நிதி உதவியோ, பொருள் உதவியோ என்பது சிறிது காலத்திற்கே பயனளிக்கக்கூடியது . என்றுமே அழியாத செல்வம் கல்விச் செல்வம் என்பதை நான் நன்கு அறிவேன் . ஏனெனில் அதுவே என் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்தது . எமது மக்களுக்கு குறிப்பாக எம் இளைய தலைமுறையினருக்கு சிறந்த உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்கும் நோக்கிலே அமைக்கப்பட்டது NORTHERNUNI ஆகும். எவ்வித சுயலாபத்திற்காகவும் அமைக்கப்பட்டது அல்ல. மற்றும் பட்டப்படிப்பின் பின்னரான தொழில்வாய்ப்புகளுக்காகவும் எம் சமூக இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்காகவும் அமைக்கப்பட்டதே MAGICK TECH நிறுவனம் ஆகும்.

அத்துடன் நின்றுவிடாது பொழுதுபோக்கிலும் அவர்களை மகிழ்விக்க எண்ணி ஏற்பாடு செய்யப்பட்டதே ஹரிஹரன் இசை நிகழ்ச்சி மற்றும் நட்சத்திரக் கொண்டாட்டம்.  முன்னதாக முழுவதுமே இலவச நுழைவு என அறிவிக்கப்பட்டது.  இந்நிகழ்விற்கான ஆசன பகுதியில் தமக்கும் இடம் வேண்டும் என வெளிநாடு முதல் உள்நாடு வரை பலரும் எம்மை தொடர்பு கொண்டதுடன் பணம் செலுத்தி டிக்கட்டினைப் பெறுவதற்கும் தயாராக இருந்தனர்.  இதனை நோக்குகையில் இலவச டிக்கட்டுக்களைப் பெற்று பலர் நின்று பார்க்கும் போது சிலர் மட்டும் இலவச டிக்கட்டுக்களைப் பெற்று ஆசனங்களைப் பெறுவதைத் தவிரக்கும் முகமாக ஆசனங்களை பகுதி பகுதியாக பிரித்து குறிப்பிட்ட தொகைகளுக்கு கேட்பவர்களுக்கு வழங்குவதற்கு தீரமானித்திருத்தாலும் டிக்கட் நுகரவினை கட்டுப்படுத்தும் நோக்குடனே விலைகள் நிரணயிக்கப்பட்டது.  எனினும் 90 வீதமான ஆசனங்கள் இலவசமாக எமது கல்வி சார் உத்தியோகத்தர்கள், எமது மாணவர்கள் அவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் எமக்கு உறுதுணையாக இருக்கும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இவ் டிக்கட்டுக்கள் விற்பனை மூலம் கிடைக்கப்பெறும் நிதியை யாழ் கல்வி மேம்பாட்டு நிதியத்திற்கு ( YES – Yarl Education Support Fund ) வழங்குவதற்கு தீரமானித்தோம். இவ் நிதியத்தின் ஊடாக வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தமது உயர் கல்வியை தடையின்றி பெற்றுக்கொள்ள உறுதுணையாக இருக்கும்.

என் அன்பு மக்களுக்கு நான் எப்பொழுதும் நன்றி கூறுவதற்கு கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில் பலதரப்பட்ட போலி பரப்புரைகள் மற்றும் விமரசனங்கள் வந்த போதிலும் அலைகடலென ஒரு இலட்சத்து இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட இரசிகர்கள் , எனது மக்கள் எமக்கும் கலைஞர்களுக்கும் பெரு ஆதரவு அளித்தீர்கள். நல்லதொன்று இருப்பின் என்றும் கெட்டதொன்று இருப்பது வழமையே. ஆரம்பத்திலே விமானநிலையத்தில் நான் அளித்த பேட்டியொன்றில் கலைஞர்களுக்கு யாழ்ப்பாணத்திற்கு வருவதில் உடன்பாடு இல்லை. நாங்கள் தான் அவர்களை அழைத்து வருகின்றோம் என கூறியது பெரிதும் விமரசனத்துக்கு உள்ளாகியிருந்ததும் நான் அறிவேன். அக்கூற்று யாரையேனும் புண்படுத்தும் நோக்கில் கூறப்பட்டது அல்ல. அதற்கான உண்மையான காரணங்கள் பல இருந்தன. ஆனால் இந்திய கலைஞர்கள் யாழ் வருவது விருப்பமல்ல என்பது அதன் பொருளல்ல. இவ்வாறாக நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னரே சில வேண்டத்தகாதவர்களால் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ பல தடைகள் மற்றும் போலி விமரசனங்கள் ஏற்படுத்தப்பட்டன. எனினும் அவை எதையும் பொருட்படுத்தாமல் நிகழ்வானது நாம் எதிர்பார்த்தவாறு மாலை 6 மணிக்கு எமது உள்நாட்டு கலைஞர்களின் வரவேற்பு நடனத்துடன் இனிதே ஆரம்பமானது, 6:25 மணிக்கு , தமிழா தமிழா நாளை நம் நாடே எனும் பாடலைப் பாடி ஹரிஹரன் மக்களின் மகிழ்ச்சியை உச்சத்திற்கு எடுத்துச் சென்றார் . 9:10 மணிவரை மிகச் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் குழப்பங்கள் மற்றும் தடங்கல்களை வேண்டுமென ஏற்படுத்தி நிகழ்வினை இடைநிறுத்தும் நோக்கில் உள்நுழைந்த விசமிகளால் சுமார் 15 நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டது.  எனினும் காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் நிலைமையானது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு மீண்டும் ஆரம்பித்து நாம் திட்டமிட்டவாறு அனைத்து நிகழ்வுகளும் நடாத்தப்பட்டு 12 மணியளவில் நிகழ்வானது நிறைவுபெற்றது . இதன்படி 4 மணித்தியாலங்கள் திட்டமிடப்பட்ட நிகழ்வு இறுதியில் 5 மணித்தியாலங்களுக்கு மேலாக நடைபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நிகழ்விற்கு 46,055 மக்கள் பதிவுசெய்திருந்த போதிலும் , பல எதிர்ப்புக்கள் மற்றும் சதித்திட்டங்கள் இருந்தபோதிலும் மக்களின் தீர்ப்பே மகோனின் தீர்ப்பு என்பதற்கிணங்க நிகழ்வின் அன்று இலட்சக்கணக்கான மக்கள் வருகை தந்திருந்திருந்ததே எமக்கும் வருகை தந்த கலைஞர்களுக்கும் பெரு மகிழ்ச்சியாகும் . NORTHERNUNI ஆனது இவ்வாறானதொரு நிகழ்வினை திட்டமிட்ட வேளையில் அந்நிகழ்வினை நடாத்துவதற்கான தேர்ச்சி பெற்ற வல்லுனர்கள் எம்மிடம் இல்லாத காரணத்தினால் இதனை முறையாக அரங்கேற்றுவதற்கு 3 ம் நபர் நிகழ்ச்சி முகாமைத்துவ நிறுவனம் ஒன்றை அணுகி அனைத்து பொறுப்புக்களையும் கொடுத்திருந்தோம் . இதில் மேடை , ஒலி , ஒளி ஒழுங்கமைப்பு மற்றும் பாதுகாப்பும் உள்ளடங்கலாகும் . சில விசமிகளால் இந்நிகழ்ச்சியின் போது பொதுமக்களுக்கு சில அசௌகரியங்கள் ஏற்பட்டதற்கு மிகவும் மனம் வருந்துகின்றோம் . எனினும் பெருமளவு பாதிப்பு ஏற்படாது அனைவரையும் பாதுகாத்து இந்நிகழ்வு நிறைவடைந்ததற்கு எமது மக்களுக்கும் இறைவனுக்கும் நானும் எனது குடும்பத்தினரும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்நிகழ்வில் ஏற்பட்ட சிறு தடங்கல் மற்றும் அசௌகரியம் காரணமாக , கிடைக்கப்பெற்ற வருவாய் முழுவதையும் மீளளிப்பதற்கு முடிவு செய்துள்ளேன்.  தங்களால் செலுத்தப்பட்ட பணம் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மாணவர்களின் கல்விச் செயற்பாட்டுக்கு பயன்படுத்த எண்ணுவோர் அவ்வாறே விட்டு விட பணத்தினை மீளப் பெற விரும்புபவர்கள் தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தை (0777315262) தொடர்பு கொள்ளுங்கள்.

இவ்வாறான முதலீடுகள் மற்றும் நம் மண்ணின் முன்னேற்றத்திற்கான செயற்பாடுகளை ஊக்குவிக்காது அதனை தடுக்கும் முகமாக எமது மக்களுக்கோ மண்ணுக்கோ ஒரு செயலேனும் செய்யாத பகுத்தறிவற்ற சிலர் – விசமிகளை ஏவி விடுதல் , அவதூறாக விமர்சித்தல் மற்றும் போலிப் பரப்புரைகளை பரப்புதல் பெரும் மனக்கஷ்டத்தை ஏற்படுத்துகின்றது . எனினும் எம்மவர்களில் பலர் எமது மண்ணின் முன்னேற்றத்திற்காக பல செயற்பாடுகளை செய்த வண்ணம் உள்ளனர் . அவர்களுடன் இணைந்து எவ்வாறான தடைகள் ஏற்படினும் நானும் எனது நிறுவனமும் எப்பொழுதும் எனது மக்களின் நலனுக்காகவும் மண்ணின் முன்னேற்றத்திற்காகவும் பணிபுரிவோம் என உறுதியளிக்கின்றேன்.

நன்றி இந்திரகுமார் பத்மநாதன் ‘ Chairman – Northern Uni

தமிழரசுக் கட்சியின் 17 ஆவது தேசிய மாநாட்டை நடத்த யாழ். மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு !

எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கை தமிழரசுக் கட்சியின் 17 ஆவது தேசிய மாநாட்டை நடத்த தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரம், தேசிய மாநாட்டை நடத்த நீதிமன்றத்தால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுவை சேர்ந்த பீட்டர் இளஞ்செழியன் சார்பில் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் இது தொடர்பான மனுவை தாக்கல் செய்திருந்தார்.

தேசிய மாநாடு நடத்துவதாயின், 21 நாட்களுக்கு முன்னர் அறிவிக்க வேண்டும் என்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் யாப்பின் பிரகாரம், எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள மாநாடு 21 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்படாததால், குறித்த மாநாட்டுக்கு தடை கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனு மீதான அடுத்த கட்ட விசாரணைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளன.

இதேவேளை, திருகோணமலையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை தமிழரசு கட்சியின் மாநாட்டுக்கும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று முன்னெடுக்கப்பட்டது.

விசாரணைகளை தொடர்ந்து திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மா. கணேசராஜா இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளார்.

05 பேர் கொண்ட நிர்வாக சபையின் தெரிவுகள், யாப்பின் படி இடம்பெறவில்லை என்பதால், மாநாட்டை நடத்த இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரரால் கோரப்பட்டிருந்தது.

குறுகிய கால இடைவெளியில் சுமார் விவாகரத்து வழக்குகள்!

சுமார் 50,000 விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை 48,391 விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

காதலர் தினத்தன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே நீதியமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த காலப்பகுதியில் மனைவி அல்லது குழந்தைகளுக்கான ஜீவனாம்சம் தொடர்பான 37, 514 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டிற்கு இது ஒரு பெரிய தொகையாக கருதப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறுஞ்செய்திக்கு பதிலளிக்காத பாடசாலை மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது !

ஹட்டன் பிராந்திய கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட  பிரதேச   பாடசாலை ஒன்றில் பாடசாலை மாணவிகள் மூவருக்கு  தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில்  அதே பாடசாலையின்  ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் பாடசாலையில் பத்தாம் வகுப்பு கற்கும்  மூன்று மாணவிகள் மீது தொல்லைகளைப் பிரயோகிக் முயற்சித்ததாகவும் அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அசௌகரியம் ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரின் குறுஞ்செய்திகளுக்கு பதில் அளிக்காததால், வகுப்பறையில் அமர்ந்திருந்த அந்த  மாணவிகள் மீது தேவையற்ற அழுத்தங்கள் பிரயோகித்தால் சம்பந்தப்பட்ட மாணவிகள் வட்டவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன்படி, வட்டவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் சந்தன கமகேவின் உத்தரவில்  சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.