29

29

யாழ்ப்பாணத்தில் 125 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது !

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் 125 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலர் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

காரைநகர் கடற்பகுதியில் நேற்று முன்தினம் இரவு சந்தேகத்திற்கு இடமான படகொன்றினை கடற்படையினர் சோதனையிட முயன்ற போது , படகில் இருந்த நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.

 

தப்பி சென்றவர்களில் ஒருவரை கடற்படையினர் மடக்கி பிடித்தனர். பிடிபட்ட நபரை படகின் அருகில் அழைத்து சென்று படகினை சோதனையிட்ட போது படகில் மூன்று உரைப்பைகளில் கஞ்சா பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

 

மீட்கப்பட்ட கஞ்சாவின் தொகை சுமார் 125 கிலோ கிராம் , எனவும் தம்மால் கைது செய்யப்பட்ட நபரையும் , மீட்கப்பட்ட கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

அரசாங்கத்தினால் தமிழர் பிரதேசங்களில் நடாத்தப்படும் மனித உரிமை மீறல் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அவதானித்து வருகின்றது. !

பின்லாந்து மனித உரிமைகளிற்கான சிறப்புத் தூதுவர் Tiina jortikka க்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்துக் கொண்டதன் பின்னரே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்க பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

அரசாங்கத்தினால் தமிழர் பிரதேசங்களில் நடாத்தப்படும், திட்டமிட்ட மனிதவுரிமை மீறல்கள், சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் தமிழர் தாயகத்தில் இடம்பெறும் மனிதவுரிமை மீறல்களை , ஐரோப்பிய ஒன்றியமும் பின்லாந்தும் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், தமிழ் மக்கள் அமைதியான பாதுகாப்பான வாழ்க்கை வாழ்வதையே தாமும் விரும்புவதாகவும் Tiina jortikka தெரிவித்துள்ளார்.

பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கு அனுசரணையாக, நீதிபதி சரவணராஜா வளைந்து கொடுக்க மறுத்ததினால்தான் தான் அவருக்கு இந்த கதி !

குருந்தூர் மலை ஆலய விவகாரம் தொடர்பான வழக்கினை கையாண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி, தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியதற்கான முழுப் பொறுப்பும் அரசாங்கத்தையே சார்ந்தது என்பதை தயக்கம் எதுவும் இன்றி கூறிவைக்க விரும்புவதாக தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ந.ஶ்ரீகாந்தா தெரிவித்தார்.

 

இது தொடர்பில் தமிழ் தேசிய கட்சியின் தலைவர் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில்,

நாடாளுமன்றத்துக்கு உள்ளே எழுப்பப்பட்ட இனவெறிக் கூச்சல்களுக்கு அப்பால், அதிகாரத் தரப்பினால், நேரடியாகவும் மறைமுகமாகவும் நீதிபதி மீது பிரயோகிக்கப்பட்ட உளவியல் ரீதியான அழுத்தங்களே, அவரை இந்த முடிவுக்கு தள்ளியிருக்கின்றன என்பது தெட்டத் தெளிவானது.

பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கு அனுசரணையாக, நீதிபதி சரவணராஜா வளைந்து கொடுக்க மறுத்திருந்த காரணத்தினால் தான், அவருக்கு இந்தக் கதி ஏற்பட்டிருக்கின்றது.

தமது கடமையை நேர்மையுடன் செய்ய விரும்பும் சகல நீதிபதிகளுக்கும் இது ஓர் சிவப்பு எச்சரிக்கை என்பதை, தமிழ், முஸ்லீம் மக்கள் மட்டுமல்லாமல், சிங்கள மக்களும் புரிந்து கொள்ள வேண்டிய நிலைமைக்குள் முழு நாடும் இப்போது தள்ளப்பட்டிருக்கின்றது.

 

நீண்ட பல வருடங்களாக நிலவி வரும் அரச பயங்கரவாதம் என்பது, இப்பொழுது புதிய களம் ஒன்றை திறந்திருக்கின்ற நிலைமையில், சட்டத்தின் ஆட்சி தொடர்பில் எஞ்சியிருந்த நம்பிக்கைகளும் சிதறத் தொடங்கியுள்ளன.

எமது மக்களைப் பொறுத்தமட்டில், குருந்தூர் மலை விவகாரத்தில் சிலுவையில் அறையப்பட்டிருக்கும் நேர்மையான நீதிபதிக்கு ஆதரவாகவும், அதற்கும் மேலாக, நீதித் துறையின் சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்டிருக்கும் பாரிய சவாலுக்கு எதிராகவும், எமது ஒன்றுபட்ட எதிர்ப்பை நாம் வெளிப்படுத்தியே ஆக வேண்டும். உலக அரங்கின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அது நிச்சயமாக வெளிப்படுத்தப்படும்.

என்று குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நிகழ்நிலை காப்பு ஆகிய சட்டமூலங்கள் எதிர்வரும் 3ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு !

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நிகழ்நிலை காப்பு ஆகிய சட்டமூலங்கள் எதிர்வரும் 3ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளன.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ்வினால் குறித்த சட்டமூலங்கள் முதலாம் வாசிப்புக்காக சபைக்கு சமர்ப்பிக்கப்படும் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

அதேநேரம் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் முதலாம் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

 

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் முன்னதாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது குறித்த சட்டமூலத்திலுள்ள விடயங்கள் அரசியலமைப்புக்கு முரணானது என பல்வேறு தரப்பினர்களினாலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இதன் பின்னணியிலேயே அனைத்து தரப்பினரதும் ஆலாசேனைகளை பெற்று குறித்த சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷச தெரிவித்துள்ளார்.

 

எவ்வாறாயினும் பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரம் ஆகியவற்றை தடுத்து நிறுத்தும் வகையிலேயே குறித்த சட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

 

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நீதித் துறையை பாதுகாக்கின்ற போது நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் செய்வதை நாங்கள் கண்டிக்க வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

இன்றைக்கு நீதித்துறை விசேடமாக ஒரு சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதை குறித்து நாங்கள் கவனம் எடுக்க வேண்டிய ஒரு நிலையிலே இருக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை சூரிய கல்வி நிறுவகத்தின் அனுசரணையில் இரண்டாம் மொழியான சிங்கள கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் – சுதுமலையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில், இந்த கற்கை நெறியின் வடக்கு மாகாண இணைப்பாளர் தே.பிரேமராஜா அவர்களது தலைமையில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
முதன்முதலாக எங்களது நாட்டின் சரித்திரத்திலே நீதிபதி ஒருவர் தன்னுடைய உயிர் பாதுகாப்புக்காக, அதிலும் தான் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் எழுந்திருக்கின்ற அச்சுறுத்தலின் காரணமாக வெளியேறியுள்ளதாக இன்றைய பத்திரிகை செய்திகள் சொல்கின்றன.

இது நீதித் துறைக்கு ஏற்பட்டுள்ள ஒரு அச்சுறுத்தல். நாட்டில் உள்ள சுயாதீன நிறுவனங்களை பாதுகாக்கின்ற கடப்பாடு எங்கள் அனைவருக்கும் இருக்கிறது. அப்படியான மிகவும் முக்கியமான சுயாதீனமான நிறுவனமாக நீதித்துறையானது இருக்கிறது.

நீதித் துறையை பாதுகாக்கின்ற போது நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் செய்வதை நாங்கள் கண்டிக்க வேண்டும், தடுக்க வேண்டும். அதே வேளையிலே நீதித் துறைக்கு உள்ளேயே தவறுகள் இருந்தால் அதனை திருத்துகின்ற வகையிலே நாங்கள் செயற்பட்டுக் கொள்ள வேண்டும்.

நீதித் துறைக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்ற போது மூன்று விதங்களிலே ஒரு விதமாக அவர்கள் செயற்படலாம். ஒன்று அந்த அச்சுறுத்தலை கணக்கெடுக்காது தாங்கள் செய்ய வேண்டியதை செய்து விடலாம்.

இரண்டாவது அப்படியான அச்சுறுத்தல் வந்தால் அவர்கள் ராஜினாமா செய்து அதில் இருந்து விலகி விடுவார்கள்.

மூன்றாவதாக, நீதிபதிகள் அந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, அதற்கு அடங்கி தங்களுடைய நடத்தையை அல்லது தீர்ப்பை மாற்றி மற்றவர்களுடைய கைப் பொம்மைகளாக மாறி இயங்குவது இவை அனைத்தும் தடுக்கப்பட வேண்டும்.

நீதித்துறையை பாதுகாப்பது என்பது அவர்கள் எது செய்தாலும் பாதுகாப்பது என்பது அல்ல. நீதிபதிகள் சுயாதீனமானதாக செயற்படுவதை நாங்கள் பாதுகாப்பது ஆகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

வவுனியாவில் பொதுமக்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பாக தெளிவூட்டல் !

சர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் (28) வவுனியாவில் பொதுமக்களுக்கு VisAbility அமைப்பினரால் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

ஆட்சிபுரம் ,சமனங்குளம், எல்லப்பர், மருதங்குளம் ஆகிய பிரதேசங்களிலேயே குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இதன்போது பொதுமக்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பாக அறிவூட்டப்பட்டது.