09

09

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி பிள்ளையான்..? – ஹிருணிக்கா பிரேமச்சந்திர

பிள்ளையான் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு சூத்திரதாரியாக இருக்கலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர ஊகம் வெளியிட்டுள்ளார்.

பணத்துக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைக் காட்டிக் கொடுத்துவிட்டு, தனியாகப் பிரிந்து கட்சி வளர்த்த பிள்ளையான் ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கு சூத்திரதாரியாக இருக்க மாட்டாரா..? என ஹிருணிக்கா பிரேமச்சந்திர கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஈஸ்டர் குண்டு தாக்குதலில் இலங்கையர்கள் மட்டுமல்லாமல் இலங்கையின் அழகை ரசிக்க வந்த சுற்றுலா பயணிகளும் இந்த குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் எமது நாட்டுசுற்றுலா துறையை ஊக்குவிக்க முயன்றவர்களை கொலை செய்தது ராஜபக்ச அரசாங்கம் என்பது தெட்டத் தெளிவாக விளங்குகின்றது.

அரச புலனாய்வுத் துறையில் ஒரு முஸ்லிம் பிரதானியை வைத்துக்கொண்டு சகல விடயங்களையும் செய்துவிட்டு இன்று ஏதும் தெரியாத போல் நடிப்பது வேடிக்கையாக இருக்கின்றது.

உயிரிழந்த மக்களுக்கான நீதி கிடைக்க வேண்டும் யாராக இருந்தாலும் தண்டனை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாயில் த.வி.புலிகளின் பெண் போராளிகளின் எச்சங்கள்..? – தகவலை மறைக்கும் ஆய்வுக்குழு..?

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து இன்றைய நான்காவது நாள் அகழ்வின் போது சில முக்கிய தடையப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இருப்பினும் இது தொடர்பாக அதிகார பூர்வமாக கருத்து தெரிவிப்பதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்டம்பர் (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

நான்காம் நாள் அகழ்வாய்வுகள் இன்று முல்லைத்தீவு நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் மற்றும், தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம், யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி ஆகியோரால், சட்டத்தரணி எஸ்.துஸ்யந்தி ஆகியோரின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த மனிதப் புதைகுழி இரண்டாம் நாள் அகழ்வாய்வின் போது துப்பாக்கி சன்னங்கள் என சந்தேகிக்கப்படும் உலோக துண்டுகள், துப்பாக்கி சன்னங்கள் துளைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஆடைகள் தடையப்பொருட்களாக மீட்கப்பட்டிருந்தன.

மூன்றாம் நாள் அகழ்வில் தமிழீழ விடுதலை புலிகளின் பெண் போராளிகள் உடையது என சந்தேகிக்கப்படும் உடல் எச்சங்கள் இரண்டு முழுமையாக மீட்கப்பட்டதுடன் குறித்த உடல்களுடன் காணப்பட்ட ஆடைகளில் சில இலக்கங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இன்றையதினம் நான்காவது நாள் அகழ்வின் போது சில முக்கிய தடையப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், இது தொடர்பாக அதிகார பூர்வமாக கருத்து தெரிவிப்பதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாள இலக்கத் தகடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

 

இருந்த போதிலும் இது தொடர்பில் அதிகார பூர்வமாக தகவல் வெளியிட இன்று பொறுப்பாக இருந்த யாழ் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அகழ்விற்கு பிரதானமாக செயற்படுகின்ற சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவா இன்று விடுமுறையில் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.

இன்றும் குறித்த மனிதப் புதைகுழி வளாகத்தை பார்வையிடுவதற்கென யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் குழு ஒன்று வருகை தந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ராஜபக்ஷர்கள் குறிப்பிடுவது சிறுபிள்ளைத்தனமானது.” – பாட்டலி சம்பிக்க ரணவக்க 

“இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ராஜபக்ஷர்கள் குறிப்பிடுவது சிறுபிள்ளைத்தனமானது.”  என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க  தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் முன்னணியின் காரியாலயத்தில் சனிக்கிழமை (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ராஜபக்ஷர்கள் குறிப்பிடுவது சிறுபிள்ளைத்தனமானது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கெடம்பே ரஜமஹா விகாரைக்கு ஒருமுறை சென்று ‘தாங்கள்  அடிப்படைவாதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே அந்த அடிப்படைவாத என்ன? அதன் உறுப்பினர்கள் யார் என்பதை தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சலே,கபில ஹெந்த விதாரண,முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டபய ராஜபக்ஷ,மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் நாட்டு மக்களுக்கு குறிப்பிட வேண்டும். தேசிய தௌஹீத் ஜமாதே அமைப்பு யாருடையது,தேர்தல் காலத்தில் தௌஹீத் அமைப்பு ராஜபக்ஷர்களுக்கு செயற்படவில்லையா, 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷர்களுக்கு வாக்களிக்குமாறு தௌஹீத் அமைப்பு குறிப்பிடவில்லையா,பௌத்தர்கள் மத்தியில் அடிப்படைவாதம்,கருத்தடை தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்தி விட்டு மறுபுறம் தௌஹீத் அமைப்பை தமது அரசியல் நோக்கத்துக்காக பயன்டுபடுத்திக் கொள்ளவில்லையா என்பதை ராஜபக்ஷர்கள் நாட்டு மக்களுக்கு குறிப்பிட வேண்டும்.

இராணுவ புலனாய்வு பிரிவு,தேசிய புலனாய்வு பிரிவு என்பனவற்றின் கவனத்துக்கு அப்பாற்பட்ட வகையில் சஹ்ரான் செயற்பட்டுள்ளான்.சர்வதேச மட்டத்தில் இந்தியா,பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகள் தீவிரமடைந்த பின்னணியில் 2010 முதல் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தௌஹீத் அமைப்பு அரசியல் நோக்கத்துக்காக அரச அனுசரனையுடன் பாதுகாக்கப்பட்டது.

உலகில் எந்த நாட்டு புலனாய்வு பிரிவும் குண்டுதாரியின் வீட்டுக்கு செல்லாது.தாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டுத்தாக்குதலை நடத்த சென்ற ஜமீலை புலனாய்வு அதிகாரி ஒருவர் சந்தித்துள்ளார். அத்துடன் புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவர் மாத்தளைக்கு சென்று பிறிதொரு அடிப்படைவாதியிடம் இந்த தாக்குதலை இதனை ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதல் என்று ஏற்றுக்கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளார்.உலகில் எந்த நாட்டிலும் இவ்வாறான புலனாய்வு பிரிவு கிடையாது.ஆகவே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்கூட்டியதாகவே பலவிடயங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளது.ஆகவே தற்போது எவரும் தப்பிக்க முடியாது.

குண்டுத்தாக்குதல் தொடர்பில் பல விடயங்களை வெளிக்கொண்டு வர முயற்சித்த சானி அபேசேகரவை ராஜபக்ஷர்கள் கொல்லாமல் கொன்றார்கள்.மனசாட்சியில்லாமல் அவரை நெருக்கடிக்குள்ளாக்கினார்கள்.ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலும் தேசிய புலனாய்வு பிரிவு தற்போது அபகீர்த்திக்குள்ளாக்கப்பட்டுள்ளது.ராஜபக்ஷ குடும்பம் தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள செய்த விடயங்கள் சர்வதேச மட்டத்தில் பேசப்படுகிறது.இதனால் தேசிய புலனாய்வு பிரிவு சர்வதேச மட்டத்தில் மலினப்படுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையை திருத்திக் கொள்ளாவிட்டால் ஒட்டுமொத்த மக்களும் நெருக்கடிக்குள்ளாக்கப்படுவார்கள் என்றார்.

உலகக் கிண்ண லீக் சுற்றுக்கான தலைசிறந்த நடுவர் பட்டியலில் குமார தர்மசேனா !

இந்தியாவில் நடைபெறும் ஆடவர் உலகக் கிண்ண லீக் சுற்றுக்கான நடுவர்களை சர்வதேச கிரிக்கெட் சபை ( ஐ.சி.சி) அறிவித்துள்ள அதேவேளை இலங்கையரான அனுபவம் மிக்க ஒருவர் பட்டியலுக்குள் இடம்பித்துள்ளார்.

ஐசிசி நடுவர்களின் எமிரேட்ஸ் எலைட் குழுவின் அனைத்து 12 பேர் மற்றும் ஐசிசி வளர்ந்து வரும் நடுவர் குழுவின் நான்கு உறுப்பினர்கள் உட்பட 16 பேர் நடுவர்களாக இருப்பார்கள்.

லோட்ஸ் மைதானத்தில் 2019 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு நியமிக்கப்பட்ட நான்கு நடுவர்களில் குமார தர்மசேனா, எராஸ்மஸ் , டக்கர் ஆகிய மூன்று பேர் அனுபவம் வாய்ந்த பட்டியலில் உள்ளனர் – இந்த ஆண்டு மார்ச் மாதம் எலைட் பேனலில் இருந்து விலகிய அலீம் தார் மட்டும் இல்லை.

கிறிஸ் பிரவுன், குமார் தர்மசேனா, மரைஸ் எராஸ்மஸ், கிறிஸ் கஃபனே, மைக்கேல் கோஃப், அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ரிச்சர்ட் கெட்டில்பரோ, நிதின் மேனன், அஹ்சன் ராசா, பால் ரீஃபெல், ஷர்ஃபுத்தூலா இப்னே ஷெய்ட், ராட் டக்கர், அலெக்ஸ் வில்சன், ஜோல் வில்சன், ஜோல் வால்சன் மற்றும் ஜோயல் வார்ஃப்,ஜெஃப் குரோவ், ஆண்டி பைக்ராஃப்ட், ரிச்சி ரிச்சர்ட்சன் ,ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் நடுவர்களாக மட்டும் நடுவர்களாக பணியாற்றுவார்கள்.

“நடந்தாய் வாழி வழுக்கை ஆறு” – நீர்வள பாதுகாப்பு தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நடைபயணம் !

“நடந்தாய் வாழி வழுக்கை ஆறு” எனும் தொனிப்பொருளில் வழுக்கியாற்றின் வழிதோறும் உள்ள குளங்களை காணும் ஒரு நடைபயணம் இன்று சனிக்கிழமை (09) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இன்று காலை 8 மணிக்கு யாழ். தெல்லிப்பழையில் இருந்து ஆரம்பமான இந்த பயணம் அராலி நோக்கி சென்றது.

இந்த பயணத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமார், சுவீடன் விவசாய பல்கலைக்கழக தகைநிலை பேராசிரியர் ஸ்ரீஸ்கந்தராசா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“இலங்கையில் அரச சார்பற்ற வைத்திய பீடத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம்.” – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

“இலங்கையில் அரச சார்பற்ற வைத்திய பீடத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம்.” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதற்காக அதிகளவில் வைத்தியர்களை உருவாக்குவதற்கு வைத்திய பீடங்களையும் பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வேண்டியது அவசியம் என்றும் அரசாங்கத்தினால் நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் வைத்திய காப்புறுதி பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜோசப் பிரேசர் வைத்தியசாலையில் நேற்று (08) நடைபெற்ற நூற்றாண்டு விழாவிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் பேசிய அவர்,

“ஜோசப் பிரேசர் வைத்தியசாலை என்பதை விட நூற்றாண்டை கடந்துள்ள நிறுவனம் என்று கூற முடியும்.  பிரேசர்கள் ஸ்கொட்லாந்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற தலைமுறையை சேர்ந்தவர்கள்.  அங்கிருந்துதான் ஜோசப் பிரேசரும் இலங்கை வந்தார்.

பிரித்தானியர்கள் இலங்கைக்கு தேயிலை தொழிலை அறிமுகப்படுத்திய காலத்தில் அவர் ஒரு தோட்ட உரிமையாளராக இருந்தார். இலங்கைத் தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியில் பிடகந்த தோட்டத்தை மையமாகக் கொண்டு தோட்டத் தொழிலை நடத்திச் சென்றார். இறுதியாக அவர் இலங்கையிலேயே உயிர் நீத்தார்.  ஏனைய தோட்ட உரிமையாளர்களுக்கு மாறாக அவரும் அவரது மனைவியாரும் இலங்கையில் ஓர் அடையாளத்தை பதித்துவிட்டு சென்றனர்.

இந்நாட்டுக்கு அவர் சேவையாற்றியுள்ள அதேநேரம் நாட்டை கட்டியெழுப்பவும் பங்களிப்புச் செய்துள்ளார். பெருந்தோட்டத் தொழிலில் இலாபம் ஈட்டிய ஏனைய நூற்றுக்கணக்கான தோட்ட உரிமையாளர்களுக்கு மத்தியில் அவரும் அவரது குடும்பத்தினரும் இந்த நாட்டிற்காக ஜோசப் பிரேசர் வைத்தியச்சாலையை விட்டுச் சென்றுள்ளனர்.

உண்மையில், இந்த மருத்துவமனை நிறுவப்பட்டபோது, இந்த பகுதி வளர்ச்சியடைந்திருக்கவில்லை. வீடுகளும் அதிகளவில் இருக்கவில்லை என்பதால் அரச ஊழியர்கள் அனைவரையும் இவ்விடத்தில் தங்க வைப்பதற்கான முயற்சிகளும் காணப்பட்டன.

அதேபோல் பொலிஸ் நிலையமொன்றை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. இறுதியாக ஜோசப் பிரேசர் வைத்தியச்சாலை ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் வேறு முயற்சிகள் காணப்படவில்லை.

எனது பாட்டனார் பாட்டிக்கு சிரிபா வீதியில் காணியொன்றை வாங்கிக் கொடுத்திருந்தார்.  அங்கு எனது அம்மா அடிக்கடிச் சென்று வருவதை கண்டிருக்கிறேன். 1950 களில் அது வெற்று இடமாக காணப்பட்டது. இந்த வீதியில் இரண்டு அல்லது மூன்று வீடுகளை மாத்திரமே காணக்கூடியதாக இருக்கும்.

இவ்வாறானதொரு வைத்தியசாலை இல்லாததையிட்டு ஆண்கள் பொறாமை கொள்வர். ஆண்களுக்கு இவ்வாறானதொரு வைத்தியசாலை இதுவரையில் கிடைக்கவில்லை. மறுமுனையில் அது பெண்களுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு என்பதோடு, நானும் நோயாளர்களை பார்க்க பல தடவைகள் இந்த வைத்தியசாலைக்குச் சென்றுள்ளேன். எவ்வாறாயினும் இவ்வாறானதொரு வைத்தியசாலை எமக்கு கிடைத்திருப்பதையிட்டு நாம் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டும்.

இந்த நிறுவனம் நன்றாக பராமரிக்கப்பட வேண்டும். இதை ஏற்றுக்கொள்வதற்கு வைத்தியசாலையின் தலைவர் சுமலை விட பொருத்தமான எவரும் இருக்க முடியாது.  ஜோசப் பிரேசர் வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரையில் சிறந்த முறையில் பராமரித்து வருகிறார். நம்மிடம் உள்ள வளங்களை கொண்டு என்ன செய்ய முடியும் என்பதற்கு அவர் சிறந்த உதாரணமாவார்.

இலங்கையில் உள்ள இவ்வாறான வைத்தியசாலைகள் எதிர்காலத்தில் இலங்கையர்களுக்கு மட்டுமன்றி வெளிநாட்டினருக்கும் தேவையான சேவைகளை வழங்க முடியும். இதன் வடிவமைப்பைப் பார்க்கும் போது, இது ஹோட்டலா, வைத்தியசாலையா என்று கேள்வி எழும். நீங்கள் இங்கு வந்து பார்க்கும் போது நோயாளர்களை பார்க்க வந்திருக்கிறோமா, வார இறுதி விடுமுறையை கழிக்க வந்திருக்கிறோமா என்ற கேள்வி ஏற்படும். வைத்தியசாலையில் சேவைகள் இவ்வகையிலேயே உயர் தரத்தில் காணப்பட வேண்டும்.

இந்நாட்டுக்கு வெளிநாட்டு நோயாளர்களை மருத்துவ தேவைக்காக வரவழைப்பதற்கு மருத்துவ சுற்றுலாத்துறை மற்றும் சுகாதார சேவைகள் என்பன உயர் தரத்தில் காணப்பட வேண்டும். அவ்வாறான சேவைக்கு இந்த வைத்தியசாலையே உதாரணமாகும். எமது சுகாதார கொள்கை தொடர்பில் நாம் மீளச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்நாட்டி வைத்தியசாலை கட்டமைப்பு அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகள் என பிளவுபட்டு காணப்படுகின்றன.   பெருமளவான வைத்தியர்கள் நாட்டை விட்டுச் செல்கிறார்கள்.

அதனால் நாட்டிற்குள் அதிகளவில் வைத்தியர்களை உருவாக்க வேண்டியுள்ளது.  அதற்கமைய முதலாவது அரச சார்பற்ற வைத்திய பீடத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம்.

தெற்காசியாவின் தொழில்நுட்ப நிறுவனமான (SAITM) இனை மொறட்டுவ வைத்தியசாலைக்கு கையளித்துள்ளோம். அதேபோல் இன்னும் பல மருத்துவ பல்கலைக்கழகங்களை நாட்டில் ஆரம்பிக்க முடியும் என நம்புகிறோம். வைத்தியர்களை அதிகளவில் உருவாக்குவதற்கு அதனை தவிர மாற்று வழிகள் எவையும் இல்லை.

இலங்கை வைத்தியர்கள் இல்லாமல் ஐக்கிய இராச்சியம் தனது வைத்தியசாலைகளை நடத்திச் செல்வதில் நெருக்கடியை எதிர்கொள்கிறது. அதனால் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இந்தியாவுடன் சேர்ந்து, நாங்கள்  ஐக்கிய இராச்சியத்தின் வைத்தியசாலை கட்டமைப்பை நாமும் நடத்திச் செல்கிறோம் என்று கூறினால் தவறாகாது.

உதவி பெறும் நாடாக மட்டுமன்றி, உதவி வழங்கும் நாடாகவும் இலங்கை மாற வேண்டும். மேலும், அரச மற்றும் தனியார் துறைகள் இணைந்து செயற்படுவதற்கான செயற்றிட்டங்களை நாம் தயாரித்துள்ளோம்.

அரசாங்கத்தினால் நாட்டு பிரஜைகளுக்கு மருத்துவக் காப்புறுதி பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.  அப்போது சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலைக்குச் செல்வதா அரச வைத்தியசாலையை நாடுவதா என்பதை மக்கள் தீர்மானிப்பர்.

இந்த நாட்களில் நானும் ஒரு வைத்தியரை போலவே செயற்படுகிறேன். மரணத்தின் இறுதி தருவாயிலிருக்கும் நோயாளியை சுமந்துச் செல்லும் அதேநேரம் அவருக்கு சிகிச்சையளித்து காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன்.

திறந்த பொருளாதார கட்டமைப்பின் கீழ் நாடு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதனால் தனியார் நிறுவனங்களும் அபிவிருத்தி அடையலாம். அவ்வாறு இல்லாவிட்டால் நாட்டுக்கு முன்னேற்றம் கிட்டாது.

அதன்படி இலங்கையில் தேயிலை செய்கைக்கு அப்பால் சென்ற ஒருவராக ஜோசப் பிரேசரை கூறலாம். இலங்கையில் கோப்பிக்கான கேள்வி குறைந்து, தேயிலை செய்கை அதிகரித்த காலத்தில் அவரும் முன்னேறி நாட்டிற்கும் ஒரு வைத்தியசாலையை விட்டுச் சென்றுள்ளார். தற்காலத்தில் சுமல் பெரேரா போன்றவர்களுடன் இணைந்து இந்தத் துறையை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சனல்-4 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியிட்ட ஆவணப்பதிவு – இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன..?

பிரித்தானியா ஊடகமான சனல்-4 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியிட்டுள்ள ஆவணப்பதிவு குறித்து கருத்து வெளியிடாதிருக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரித்தானியா ஊடகமான சனல்-4 வெளியிட்ட ஆவணப்பதிவு குறித்த விசாரணைகள் தற்போது வேவ்வேறு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், விசாரணை அறிக்கைகள் கிடைக்கப் பெறும் வரை அமைதி காக்க இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

 

இந்த தனியார் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட ஆவணப்பதிவின் மூலம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உறுதிபடுத்தப்பட்டால், அதற்குரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தேவையேற்படின் மாத்திரம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இது குறித்த விளக்கமளிக்கப்படுமெனவும் மேலும் கூறப்பட்டுள்ளது.

“தெற்காசியாவின் கல்வியின் கேந்திர நிலையமாக இலங்கை மாற்றப்பட்டுள்ளது” – இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்

தெற்காசியாவின் கல்வியின் கேந்திர நிலையமாக இலங்கையை நிறுவுவதற்கான முயற்சிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் உறுதிப்படுத்தியுள்ளார்.

‘நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை’ எனும் தொனிப்பொருளில் நேற்று ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மைக் காலத்தில் இரண்டு முக்கிய தலைப்புகளில் உரையாற்றினார். அவற்றில் ஒன்று பொருளாதார சீர்திருத்தம், மற்றொன்று கல்வி சீர்திருத்தம். வலுவான கல்வி அடித்தளம் இல்லாமல் பொருளாதார வளர்ச்சி அடைய முடியாது என்பதை அவர் அங்கீகரிக்கிறார். உலகப் பொருளாதாரத்தின் போட்டித்தன்மையைக் கருத்திற்க் கொண்டு, முன்னேற்றமானது அறிவார்ந்த மற்றும் நன்கு தயாரிக்கப்பட்ட பணியாளர்களை சார்ந்துள்ளது.

கடந்த நான்கு வருடங்களில் இலங்கையில் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை 63% அதிகரித்துள்ளது. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல், கொவிட் தொற்றுநோய் மற்றும் பல்வேறு சவால்கள் போன்ற நிகழ்வுகளின் விளைவான பின்னடைவுகள் இருந்தபோதிலும், உயர்கல்வி இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த மாணவர்களின் வருகைக்கு இடமளிப்பதற்கான பௌதீக வளங்களின் பற்றாக்குறையை நாம் தற்போது எதிர்கொண்டுள்ளோம்.

உலகளாவிய தரத்தின்படி, ஒரு கல்லூரியில் பதினைந்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, நமது அரச பல்கலைக்கழகங்களில், முப்பது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே இருக்கிறார். உயர்கல்வியின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கு பௌதீக வளங்களை மேம்படுத்துவது போன்று மனித வளங்களின் வளர்ச்சியும் இன்றியமையாதது என்பதை வலியுறுத்துவது மிகவும் முக்கியமானது மற்றும் இந்த சமநிலையை அடைவதற்கு நாம் தீவிரமாக செயற்பட்டு வருகிறோம் என தெரிவித்தார்.

இன்னுமொரு குறிப்பிடத்தக்க கவலை என்னவென்றால், உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பெரும்பாலான மாணவர்கள் கலைப் பாடத்தையே தெரிவு செய்கிறார்கள். நாட்டில் உயர்தரம் வரை கல்வியை வழங்கும் 3,000 பாடசாலைகளில் 2,100 பாடசாலைகள் மட்டுமே கலைப் படிப்பை வழங்குவதே இந்தப் போக்குக்குக் காரணம். இதன் விளைவாக, புதிய கல்விச் சீர்திருத்தங்களின் மையமானது, கலைப் படிப்பை படிக்கும் மாணவர்கள் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெறுவதற்கு உதவும் அமைப்பை உருவாக்குவதாகும்.

இலங்கையில் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​நாட்டில் குறைந்த சனத்தொகையே இருந்தது, நான்கு இலட்சம் குழந்தைகளே இருந்தனர். எனினும், இலங்கையின் சனத்தொகை தற்போது 22 மில்லியனாக அதிகரித்துள்ளதுடன், குழந்தைகளின் எண்ணிக்கை 4.3 மில்லியனாக அதிகரித்துள்ளது.

இந்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, புதிய கல்வி சீர்திருத்தங்களில் உடல் மற்றும் மனித வளங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தேவையான ஆய்வகங்கள், விடுதிகள், பௌதீக உள்கட்டமைப்பு மற்றும் மனித வளங்களை வழங்க 2 டிரில்லியன் ரூபா தேவைப்படும்.

இலங்கையின் மிகப் பெரிய நிதியான வருங்கால வைப்பு நிதியானது தற்போது ரூ.4 டிரில்லியனாக உள்ளது, தோராயமாக 50% கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, உயர்கல்வித் துறை சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, தற்போதுள்ள பல்கலைக்கழகங்களுடன் வளாகங்களைச் சேர்ப்பது இந்த முன்மொழிவை உள்ளடக்கியது.

17 அரச பல்கலைக்கழகங்களில் தலா இரண்டு வளாகங்கள் அமைப்பதன் மூலம், மாணவர் சேர்க்கை நெரிசலைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், தனியார் பல்கலைக்கழகங்கள் வளர்ச்சியடைய ஊக்குவிக்க வேண்டும். தற்போது, ​​இலங்கையில் 24 தனியார் பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன, மேலும் 20க்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பல்கலைக்கழக அமைப்பு மூலம் உலகளாவிய குடிமக்களை உருவாக்க, தனியார் மற்றும் அரசு பல்கலைக்கழகங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்கு உதவித்தொகை கிடைக்கச் செய்ய வேண்டும். மாற்றாக, பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறும் போது தேர்ந்தெடுக்கப்பட்ட பாடப் பிரிவுகளின் அடிப்படையில் பணம் திரும்பப் பெற அனுமதிக்கும் கடன் முறையை செயற்படுத்தலாம். இந்த அணுகுமுறை வேலை சார்ந்த படிப்புகளைத் தொடர மாணவர்களின் ஆர்வத்தை வளர்க்கிறது.

உலகளவில் பல அபிவிருத்தியடைந்த நாடுகளின் வளர்ச்சிக்கு பல்கலைக்கழகத் துறையில் உள்ள ஆராய்ச்சி கருவியாக உள்ளது. எவ்வாறாயினும், இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழகங்களுக்கிடையில் உள்ள புவியியல் தூரம் காரணமாக, சமூகப் பிரச்சினைகளுக்கு ஆய்வுகள் மூலம் போதுமான தீர்வு காணப்படவில்லை. எனவே, பல்கலைக்கழகங்களுக்கும் சமூகத்திற்கும் இடையே அதிக ஒருங்கிணைப்பு தேவை. விவசாயக் கல்லூரிகளுக்குள் அறிவுசார் சுதந்திரம் ஊக்குவிக்கப்பட வேண்டும் மற்றும் பொதுப் பல்கலைக்கழகங்களால் சர்வதேச மயமாக்கப்பட வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.