08

08

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட 29 வாரங்களுக்கு முன்பே அதனை நான் கணித்திருந்தேன்.”- நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட 29 வாரங்களுக்கு முன்பே அதனை நான் கணித்திருந்தேன்.” என  நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

அன்சீர் ஆசாத் மௌலானா குறித்து சாணக்கியன் அறிந்துள்ள ஏனைய தகவல்களையும் அவர் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அறியப்படுத்த வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது குறித்து நீதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

 

“தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் இலங்கையின் நீதித்துறையையும் நீதியரசர்களையும் பாதிக்கும் வகையில் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். இலங்கை இராஜாங்க அமைச்சர் பிள்ளையானை விடுதலை செய்வதற்கு அமைச்சுக்குள் சதித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

 

இது தொடர்பில் நான் நாடாளுமன்றத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பிள்ளையானை விடுதலை செய்வது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளில் எந்தவொரு தவறான செயல்முறையுளும் பின்பற்றப்படவில்லை.

 

இந்த சம்பவம் தொடர்பில் சாணக்கியன் முன்வைத்த குற்றச்சாட்டு, நீதியரசர்களையும் அசௌகரியப்படுத்தியுள்ளது. பொறுப்பற்ற ரீதியில் சாணக்கியன் கருத்து வெளியிட்டுள்ளார்.

 

சனல்-4க்கு அன்சீர் ஆசாத் மௌலானா வழங்காத குரல்பதிவு சாணக்கியனிடம் உள்ளது. சனல்-4 குறித்த ஆவணப்பதிவை வெளியிடும் வரை சாணக்கியன் இருக்க தேவையில்லை. அவருக்கு பொறுப்பிருந்தால் அதனை முதலே குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைத்திருக்கலாம்.

 

இலங்கை ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்குமாறு முன்மொழிந்திருந்தார். எனினும், இது தொடர்பான எந்தவொரு சாதகமான பதிலும் அவருக்கு இதுவரை கிடைக்கப் பெறவில்லை.

இந்த நிலையில், தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய விசாரணை தன்மையை நாடாளுமன்றம் தீர்மானிக்க வேண்டும்.

இந்த நிலையில், தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய விசாரணை தன்மையை நாடாளுமன்றம் தீர்மானிக்க வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட 29 வாரங்களுக்கு முன்பு அதனை நான் கணித்திருந்தேன். இது தொடர்பில் அறிவிக்கப்பட்டதையடுத்து, எனது கட்சியின் உறுப்பினர்களாலேயே நான் புறக்கணிப்பட்டேன்.

இறுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து பலர் பாதிக்கப்பட்டனர்.”என்றார்.

 

 

கிளிநொச்சியில் திடீர் தீ விபத்தினால் தொழிற்சாலை எரிந்து நாசம் !

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகாவில் சக்திஅக்றோ தும்புத் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் தொழிற்சாலை எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (08) நண்பகல் வேளை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த தும்புத் தொழிற்சாலை  தீக்கிரையாகியுள்ளதுடன், தொழிற்சாலை வளாகத்திலுள்ள தென்னை மரங்களும், அருகிலுள்ள காணிகளில் உள்ள தென்னை மரங்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினர், இராணுவத்தினர், கிராம சேவகர், கிராம மக்கள் ஆகியோரின் துணையுடன் தற்காலிகமாக குறித்த தீ அனர்த்தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மேலும், தீ கிராம குடியிருப்புகளுக்கு பரவாத வகையில் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனினும்,   தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இராணுவத்திடம் சரணடைந்த நம் பிள்ளைகளின் சடலங்களே கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் – துரைராசா ரவிகரன்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் சரணடைந்த பிள்ளைகளையே புதைத்திருக்கிறார்கள் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

 

இரண்டாம் நாளான நேற்றைய தினம் (07.09.2023) அகழ்வு பணி நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வானது நேற்று முந்தினம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றும் தொடர்ந்து நடைபெற்றிருந்தது.

குறித்த இடத்திற்குள் செல்ல முடியாது. இருந்தாலும் ஒரு தடவை அருகிலே நின்று பார்க்க சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. நாங்கள் அவதானித்த வகையில் பெண்ணினுடைய சடலங்கள் உறுதிபடுத்த கூடியதாக தென்படுகின்றது.

அதே நேரம் சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ கூறியது போல் துப்பாக்கி குண்டு உடையில் துளைத்திருப்பதனை காணக்கூடியதாக இருந்தது. ரொபி கடதாசி ஒன்றும் அதில் பகுப்பாய்விற்கு எடுத்து வைக்கப்பட்டிருந்தது.

 

இதனை விட நாங்கள் அவதானித்த வகையில் கண்ணுக்கு கட்டும் துணி கூட எடுத்ததை காணமுடிந்தது.

இதிலிருந்து யோசிக்க கூடியதாக உள்ளது என்னவெனில் பல சடலங்கள் இதில் தென்படலாம் என்பது இதில் இருக்கும் அனைவருக்குமே தெரியும்.

ஏற்கனவே நான் கூறியது போல் 2009 ஆம் ஆண்டு இறுதி பகுதியில் சரணடைந்த விடுதலை புலிகளை கொண்டுவந்து கண்ணை கட்டி துப்பாக்கியால் சுட்டு அல்லது சித்திரவதை செய்து இவ்வாறு புதைத்திருக்கிறார்கள் என்பது நான் அறிந்த வகையில் காணக்கூடியதாக உள்ளது என மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் சுகாதாரத்துறையை இயல்புநிலைக்கு கொண்டுவர 500பில்லியன் ரூபா தேவை !

நாட்டின் சுகாதாரத்துறையை இயல்புநிலைக்கு கொண்டுவர 500பில்லியன் ரூபா தேவைப்படுகிறது. அந்த பணத்தை தேடிக்கொள்வதாக இருந்தால் இலங்கையை வங்குராத்து பட்டியலில் இருந்து மீட்டிக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) இரண்டாவது நாளாக இடம்பெற்ற சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

 

உண்ணாட்டரசிறை திருத்தச் சட்டமூலத்தை விரைவாக நிறைவேற்றிக் கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பது, நாட்டை வங்குரோத்து பட்டியலில் இருந்து விரைவாக கழற்றிக் கொள்வதற்காகவே யாகும்.

 

சுகாதாரத் துறையில் பல்வேறு குறைபாடுகள் நிலவுகின்றன அந்த வகையில் சுகாதார சேவையை முழுமையாக இயல்பு நிலைக்கு கொண்டு வருவதானால் 500 பில்லியன் ரூபா தேவைப்படுகிறது.

 

அந்தளவு தொகையை தேடிக்கொள்வதென்றால் இலங்கை வங்குரோத்து பட்டியலில் இருந்து விடுவித்துக்கொள்ள வேண்டும்.

 

அத்துடன் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு ஒரு சிலர் மட்டும் காரணமல்ல பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் அதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள். அதிகாரிகளும் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.

 

அந்த வகையில் நான் சரி. அவர் தவறு என ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டு சுகாதாரத்தை அரசியலாக்கிக் கொள்வதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை. அனைவரும் தவறு செய்துள்ளவர்கள். அந்த வகையில் அனைவருமே ஒன்றிணைந்து அதனை நிவர்த்திக்க வேண்டும்.

 

மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். அதனையடுத்து எதிர்வரும் 25 ஆம் திகதியளவில் நாட்டை வங்குரோத்து பட்டியலில் இருந்து அகற்றிக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கிறது என்றார்.

தொலைபேசி திருடிய குற்றச்சாட்டு – யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது !

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வீதியில் செல்வோரிடம் அலைபேசிகளை களவெடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருளுக்கு அடிமையாகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று வீதியில் செல்வோரிடம் அலைபேசிகளை அபகரித்து விற்பனை செய்து வந்துள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இன்று யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறையினர் கூறினர்.

 

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில்

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெ.மேனன் தலைமையிலான குழு இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தது.

 

சந்தேக நபர்கள் இருவரும் நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.