September

September

இன்று முதல் நீக்கப்படுகிறது எரிபொருளுக்கான QR முறை !

கியூ ஆர் அடிப்படையிலான எரிபொருளை செலுத்தும் முறை இன்று(01) முதல் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சனா விஜேசேகர அறிவித்துள்ளார்.

மக்கள் இன்று முதல் கியூ ஆர் குறியீட்டை உருவாக்காமல் எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளால் எரிபொருளுக்கான தட்டுப்பாடுகள் அதிகம் நிலவியிருந்தது.

 

இதற்கு தீர்வு காணும் வகையிலேயே இந்த கியூ ஆர் முறைமை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“பாடசாலை மாணவர்களுக்கு மத்திய வங்கி அறிக்கை தொடர்பான தெளிவூட்டல் வழங்கப்படவேண்டும்.” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

எதிர்கால சந்ததியினர் நவீன தொழிநுட்பம் மற்றும் நிதி அறிவாற்றலினால் வலுவூட்டப்படுவார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

 

புதிய பொருளாதார முறைகளுடன் 2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை நோக்கிய பயணத்தில் இது அத்தியாவசியமானது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

 

அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் மத்திய வங்கி அறிக்கை தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும், அதற்காக ஆசிரியர்கள் மற்றும் மாணவத் தலைவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை இலங்கை மத்திய வங்கி நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 

தெரிவு செய்யப்பட்ட 100 பாடசாலைகளில் ‘மூலதனச் சந்தை பற்றிய சங்கங்களை நிறுவும் திட்டத்தின் முதலாவது நிகழ்வு கண்டி நுகவெல மத்திய கல்லூரியில் நேற்று (31) முற்பகல் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

 

பங்குச் சந்தை மற்றும் நிதி அறிவாற்றல் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்குடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு, இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் கொழும்பு பங்குச் சந்தை என்பன இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன.

 

கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எம். ரணசிங்க,இலங்கை பிணையங்கள் மற்றும் பங்குப் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சிந்தக மெண்டிஸ் மற்றும் கொழும்பு பங்குச் சந்தையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ பண்டாரநாயக்க ஆகியோர் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

 

நுகவெல மத்திய கல்லூரியில் மூலதனச் சந்தை பற்றிய சங்கத்தை ஸ்தாபிப்பதற்கான பட்டயச் சான்றிதழ் மற்றும் ஒரு இலட்சம் ரூபா நிதி என்பவற்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாடசாலை அதிபர் தம்மிக்க பண்டாரவிடம் வழங்கி வைத்தார்.

 

அத்துடன், மூலதனச் சந்தை பற்றிய அறிவைப்பெறக் கூடிய நூல்களின் தொகுப்பு ஜனாதிபதியின் கரங்களினால் பாடத்திற்குப் பொறுப்பான ஆசிரியை அச்சினி கனிடுவெவவிடம் கையளிக்கப்பட்டது.

 

கல்லூரியின் சித்திரப்பாட ஆசிரியை நயனா விஜேகோனினால் வரையப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உருவப்படமும் இதன் போது ஜனாதிபதியிடம் வழங்கி வைக்கப்பட்டது.

 

இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க:

 

“நாம் ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டு நின்றால் உலகம் நம்மைக் கடந்து செல்லும்” என்ற பாடலை மேற்கோள் காட்டி கல்வி அமைச்சர் உரையாற்றினார். அதை மனதில் வைத்துத் தான் இன்று இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

 

20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கைத்தொழில்துறை யுகத்தின் அணுகுமுறைகளுடன் நாங்கள் நீண்ட காலமாக பணியாற்றினோம். அந்தf; கொள்கை அடிப்படையிலான அரசியலில் ஈடுபட்டோம். அதன் முடிவுகளை பற்றி இங்கு குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். அந்த  கொள்கை அடிப்படையிலான அரசியலில் ஈடுபட்டோம். அதன் முடிவுகளை பற்றி இங்கு குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.

 

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில், பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் கோவிட் தொற்றுநோய் காரணமாக நாம் வங்குரோத்தடைந்த நாடாக மாறினோம். ஆனால் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றும் திட்டத்தை இப்போது ஆரம்பித்துள்ளேன். அதனை எமது அரசாங்கம் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது.

 

ஒரு நாடு என்ற வகையில் மீண்டும் படுகுழியில் விழாமல் எப்படி முன்னேறுவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். 20ஆம் நூற்றாண்டின் மத்தியில் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகளைத் தொடர்வதா அல்லது புதிதாகச் சிந்தித்துப் புதிய பாதையில் செல்வதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். பழைய முறையின் கீழ் சென்றால், ஒரே இடத்தில் சுற்றுவதற்குக் கூட நாடொன்று எஞ்சாது. ஏனென்றால் இன்று நாம் இருக்கும் இடத்தில் ஒரு பாரிய இடைவெளி இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.

 

இந்த நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கக் காத்திருக்கும் தலைமுறைக்கு இவ்வாறானதொரு நிலை ஏற்பட இடமளிக்க மாட்டோம் என்பதையும் கூற வேண்டும். எனவே தொழில்நுட்பத்துடன் புதிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும். 21ஆம் நூற்றாண்டின் தொழில் நுட்ப வளர்ச்சியை பற்றி நான் சொல்லத் தேவையில்லை.

 

நாங்கள் பாடசாலையில் கற்கும் போது கிராமங்களில் ஒரு தொலைபேசி கூட இருக்கவில்லை. ஆனால் இன்று அனைவரிடமும் கைபேசி உள்ளது. சிலரிடம் இரண்டு கைபேசிகள் இருக்கின்றன. அதுதான் நிகழ்ந்துள்ள மாற்றமாகும்.

 

இந்த மாற்றத்துடன் நாம் முன்னேறும்போது, நவீன தொழில்நுட்பத்தை நாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அதற்காக பல பாரிய பணிகளை செய்து வருகிறோம். மேலும், கல்வி அமைச்சு மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் அந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும் புதிய தொழில்நுட்ப முறைகளை முடிவு செய்ய வேண்டும். பிளாக்செயின் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு,ஜெனொம் விஞ்ஞானம் என இவை அனைத்தையும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

 

மேலும் இந்த தொழில்நுட்பத்தை கிராமத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். ஏனென்றால், புதிய தொழில்நுட்பத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் வகையில் விவசாயத்தை நவீனமயமாக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறோம். நவீன தொழில்நுட்பத்துடன் நாம் முன்னேறும் போது இன்னொரு விடயத்தையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். தொழில்நுட்பம் மட்டும் போதுமானதல்ல. இந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் பணம் தேவைப்படுகிறது. நாம் அனைத்து விடயங்களுக்கும் பணத்தை பயன்படுத்தும் சமூகம். இன்று அந்தப் பணம் மிகவும் திறந்த சந்தையில் பயன்படுத்தப்படுகிறது. பணப் பயன்பாட்டை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாது. அமெரிக்க அரசாங்கமோ அல்லது சர்வதேச நாணய நிதியமோ அதைச் செய்ய முடியாது.

 

அன்று டிஜிட்டல் தொழில்நுட்பம் இருக்கவில்லை. இலங்கைக்கு இணையத்தைப் பெற 1993 ஆம் ஆண்டில் நான் கையெழுத்திட்டேன். அதுவரை இந்த வசதிகள் எங்களிடம் இல்லை. இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் நாம் மிகக் குறுகிய காலத்தில் உலகத்துடன் இணைந்துள்ளோம்.

மேலும், போட்டித்தன்மையான பொருளாதாரத்தில், எல்லைகளைப் பற்றி கவலைப்படாத நிதி முறைமையே உள்ளது. இது நல்லதோ கெட்டதோ அதை மாற்ற முடியாது. இந்த எல்லையில் இருந்து நாம் செயற்பட வேண்டும். உலகிற்குத் தேவையான பணம் இறுதியாக சந்தையில் இருந்து பெறப்படுகிறது. வங்கிகள் தங்களுக்குத் தேவையான பணத்தை வங்கிகளிடமிருந்து பெறுகின்றன. நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான பணத்தை பங்குச் சந்தையில் இருந்து பெறுகின்றன. அதற்கேற்ப பணம் பயன்படுத்தப்படுகிறது.

 

இங்கே மிக முக்கியமான விடயம் பணம். தனியார் துறையைப் போலவே, அரசாங்கமும் பணச் சந்தையைத் தான் தேர்ந்தெடுக்கிறது. திறைசேரி முறிகளை பெறுகிறோம். இன்று இந்த முறையைப் பற்றி உங்களை அறிவூட்ட அதன் ஒரு பகுதியைத்தான் இன்று ஆரம்பித்துள்ளோம்.

 

அதேபோல் அடுத்த வருடத்திலிருந்து மத்திய வங்கி அறிக்கைகளை பாடசாலைகளில் ஆராய்வதற்கு எதிர்பார்க்கிறேன். அது தொடர்பில் நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். அதற்காக ஆசிரியர்கள் மற்றும் மாணவத் தலைவர்களை பயிற்றுவிப்பதோடு, வங்கி அதிகாரிகளின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ளவும் எதிர்பார்க்கிறோம். அதனால் புதிய முறைமைகள் தொடர்பில் நாம் அறிந்திருக்க வேண்டும். அறிவை பெற்றுக்கொடுப்பதற்கு மாத்திரமன்றி நிதிப் பயன்பாடு, பிணையங்கள் உள்ளிட்ட அனைத்தையும் கிராமங்கள் வரையில் கொண்டுச் செல்ல வேண்டும். கிராமங்களில் திறமையானவர்கள் உள்ளனர். அவர்களுக்கு அவசியமான அறிவை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

 

இன்று முழு உலகமும் ஒரே சந்தையாக இயங்குகிறது. அதனுடன் நாமும் இணைந்துகொள்ள வேண்டும். அதற்காக பல சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களையும் கைசாத்திட வேண்டும். சிங்கப்பூர், இந்தியா, பங்களாதேஷ், தாய்லாந்து, இந்தோனேசியா, சீனா, மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். ஜப்பான், கிழக்காசியா, தென்கிழக்காசியா,அவுஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுடன் புதிய சந்தைக்குள் பிரவேசிக்க எதிர்பார்த்துள்ளோம்.

 

அதேபோல் அவசியமான வசதிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் நாம் ஐரோப்பிய சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இன்னும் இரு வாரங்களில் அமெரிக்க குழுவொன்று எம்முடன் பேச்சுவார்தைக்காக இலங்கை வரவுள்ளது. அதனால் உலக சந்தை மற்றும் அதற்கான ஒப்பந்தங்கள் தொடர்பில் நாம் அறிந்திருக்க வேண்டும்.

 

நாம் புதிய பசுமை பொருளாதாரத்தை கட்டியெழுப்ப போகிறோம். அதேபோல் டிஜிட்டல் பொருளாதாரத்தையும் கட்டமைப்போம். பசுமைப் பொருளாதாரத்திலும் பங்குப் பரிவர்த்தனை இருக்கும். அதற்குள் புதிய முறைமைகள் காணப்படும். அதேபோல் கடல்வழிப் பொருளாதாரம் ஒன்றை உருவாக்கவும் எதிர்பார்த்துள்ளோம். அது தொடர்பில் லண்டனிலுள்ள விசேட சட்டத்தரணிகள் சங்கத்தினருடன் கலந்துரையாடி சட்டங்களை உருவாக்கி வருகிறோம். நாம் புதிய பொருளாதார முறையுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டுமா முடங்கிக் கிடக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

 

இன்னும் 10-15 வருடங்களாகின்ற போது, இங்குள்ள பலரும் 25-35 வயதை அடைந்திருப்பீர்கள். அதனால் உங்களுடைய எதிர்காலம் தொடர்பில் இன்றிலிருந்தே தீர்மானிக்க வேண்டும். அதற்கு அவசியமான அறிவை நாம் பெற்றுத்தருவோம். அதற்கான வேலைத்திட்டத்தினையே இப்போது ஆரம்பித்திருக்கிறோம்.

தற்போது 100 பாடசாலைகள் மாத்திரமே இந்த வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் அந்த எண்ணிகையில் அதிகரிப்புச் செய்யப்படும். பங்குச் சந்தை, பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவிற்கு இயலுமை இருக்குமாயின் இந்த செயற்பாடுகளுடன் தொடர்ந்து கைகோர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒன்று அல்லது இரண்டு சங்கங்களை பொறுப்பேற்றுக்கொண்டு அவர்களுக்கு உதவிகளை வழங்குங்கள்.

இந்த வேலைத்திட்டத்தினை ஆரம்பிப்பதற்காக 10 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் ஒவ்வொரு பாடசாலைக்கும் ஒரு இலட்சம் என்ற அடிப்படையில் கிடைக்கும். அதனை தவிர்ந்த எந்தவொரு தொகையினையும் இந்த திட்டத்திற்காக செலவிட வேண்டாம். இதனை ஒரு இலட்சத்திற்கு மட்டுப்படுத்துங்கள். வருட இறுதியில் எந்த பாடசாலை சிறப்பாக செயற்பட்டுள்ளது என்பதை தேடியறிவோம். வேலைத்திட்டத்தினை சரியான முறையில் நிறைவு செய்யும் பாடசாலையின் 10 மாணவர்களுக்கும் விடயம் சார்ந்த ஆசிரியருக்கும் சிங்கப்பூர் பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் தொடர்பில் அறிந்துகொள்வதற்கான சுற்றுப்பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படவுள்ளது.

அதனாலேயே அந்த தொகையை ஒரு இலட்சத்திற்கு மட்டுப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டது. வறுமையான பகுதியாக இருந்தாலும் வளர்ச்சியடைந்த பகுதியாக இருந்தாலும் செலவு 1 இலட்சம் ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டது. அதேபோல் இரண்டாம் மூன்றாம் இடங்களுக்கும் அந்த வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கிறோம். அதனூடாக புதிய பொருளாதார பாதைக்குள் பிரவேசிக்க முடியும். அதேபோல் 2048 இல் அபிவிருத்தி அடைந்த நாட்டை உருவாக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த பொறுப்புக்களை உங்களிடத்தில் கையளிக்கிறேன். இதற்கு பங்களிப்பு வழங்கி ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி.

நுகவெல கல்லூரிக்குள் நுழைந்த போது எனக்கு மற்றுமொரு விடயம் நினைவில் வந்தது. முன்னாள் கல்வி அமைச்சர் சீ.டபிள்யூ.டபிள்யூ. கண்ணங்கர அவர்களே மத்திய கல்லூரிகள் தொடர்பிலான யோசனையை அரச மந்திரிகள் சபையில் சமர்பித்து நிறைவேற்றினார். அதன் பலனாக பாராளுமன்ற தேர்தலில் ஹொரனை மக்கள் அவருக்கு தோல்வியை பரிசளித்தனர்.

அதுவே கல்வி அமைச்சர்கள் முகம்கொடுக்க வேண்டிய நிலைமையாகும். அதற்காக அடுத்த அரசாங்கத்தில் டீ.எஸ் சேனநாயக்க தெரிவுசெய்யப்பட்டார். ஏ.டி நுகவெல கல்வி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டார். அவர் 50 மத்திய கல்லூரிகளை நிறுவ உதவினார். நுகவெல மத்திய கல்லூரிக்கு மேலதிகமாக மேலும் 49 மத்திய கல்லூரிகளை உருவாக்கியமைக்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவர் உருவாக்கிய பாடசாலையொன்றில் புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதும் மகிழ்ச்சிகுரியதாகும். என்றார்.

யாழ்ப்பாணத்தில் கைத்தொழில் கண்காட்சி ஆரம்பம் !

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் கைத்தொழில் கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது.

 

கைத்தொழில் அமைச்சும், கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து இன்று முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரையில் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளன.

குறித்த கண்காட்சி கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ்பத்திரனவின் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் கலாசார மையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது, முதலீடு, வர்த்தக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தல்களும் வழங்கப்படவுள்ளதாக, கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பொறியியல்துறை பணிப்பாளர் நிஷாந்த வீரதுங்க தெரிவித்தார்.

வட மாகாணம் பாரிய நிலப்பரப்பை கொண்டுள்ள போதிலும், மொத்த தேசிய உற்பத்தியில் சிறிய பங்களிப்பையே வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே, அதனை அதிகரிப்பதற்கான தெளிவுப்படுத்தல்களை இந்த கண்காட்சியின் ஊடாக வழங்குவதற்கு தாம் எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.ள

பாடசாலை மாணவிகளின் மாத விடாய் தொடர்பில் மாணவ தலைவியிடம் தகவல் கோரிய அதிபர் தொடர்பில் விசாரணை !

பாடசாலை மாணவிகளின் மாத விடாய் தொடர்பில் மாணவ தலைவியிடம் தகவல் கோரிய அதிபர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி கோட்ட பாடசாலை ஒன்றின் அதிபரே இவ்வாறு மாணவ தலைவியிடம் அடிக்கடி விடுமுறை எடுக்கின்ற பாடசாலை மாணவிகளின் மாத விடாய் தொடர்பில் தகவல் கோரியதாக கல்முனை பிராந்திய மனித உரிமை காரியாலயத்தில் 23.08.2023 முறையிடப்பட்டுள்ளது.

 

குறித்த முறைப்பாட்டினை மாணவ தலைவி உள்ளிட்ட பெற்றோர்கள் மேற்கொண்டுள்ளதுடன் பாடசாலை அதிபருக்கு இவ்விடயம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக அழைப்பாணை வழங்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

இதற்கமைய குறித்த விசாரணையில் பாடசாலை அதிபர் குறித்த மாணவ தலைவியை தனது அறைக்குள் அழைத்து மாணவிகளின் வரவு வீதம் குறைவாக உள்ளதாகவும் இதற்கு காரணம் மாதவிடாய் என தான் அறிவதாகவும் எனவே ஒரு கொப்பியில் தினமும் மாதவிடாய் எந்த மாணவர்களுக்கு ஏற்படுகின்றது எத்தனை நாட்களின் பின்னர் மாதவிடாய் நிறைவடைகின்றது மாதவிடாய் காரணமாக தான் மாணவர்கள் பாடசாலைக்கு இடைநடுவில் செல்கின்றார்களா? அல்லது பாடசாலைக்கு ஏன் சமூகமளிக்க வில்லை? என வினவி உரிய மாணவர்களின் தகவலுடன் தன்னை தினமும் சந்தித்து கூற வேண்டும் என அதிபர் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

அத்துடன் குறித்த விடயம் தொடர்பாக அப்பாடசாலையில் உள்ள சில மாணவர்கள் ஆசிரியர்கள் எதிர்வரும் சில தினங்களளில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

போதைப்பொருள் கடத்தலுக்காக விசேடமாக தயார் செய்யப்பட்டிருந்த கெப் வாகனத்துடன் ஐந்து சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் கைது !

போதைப்பொருட்களை சூட்சுமமான முறையில் மறைத்து கொண்டு செல்வதற்காக விசேடமாக தயார் செய்யப்பட்டிருந்த கெப் வாகனத்துடன் ஐந்து சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக கடற்படையினர், பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

 

இவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் 15 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையில் தனது வர்த்தக நடவடிக்கைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது சீனாவின் சினொபெக் !

சீனாவை தளமாகக் கொண்ட முன்னணி சர்வதேச பெட்ரோலிய நிறுவனமான சினோபெக், இலங்கையில் தனது வர்த்தக நடவடிக்கைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.

கொழும்பில் மத்தேகொடவில் நிறுவப்பட்ட அதன் முதல் நிலையத்தில் எரிபொருள் விநியோகம் ஆரமபமாகியுள்ளது.

 

சீன பெட்ரோலிய நிறுவனங்களின் உள்ளூர் துணை நிறுவனமான சினோபெக் லங்கா இன்று (புதன்கிழமை) சந்தை ஊக்குவிப்பு பிரச்சாரத்துடன் தனது நடவடிக்கைகளைத் தொடங்கியது.

 

அதன்படி பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 3 ரூபாய் விலைக் கழிவோடு எரிபொருள் நிரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

2023 மார்ச் சீனாவின் சினோபெக், அவுஸ்ரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்எம் பார்க்ஸ், ஷெல் பிஎல்சியுடன் இணைந்து இலங்கையில் எரிபொருள் சந்தையில் நுழைவதற்கான உரிமங்களை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியது.

 

ஒரு நிலையான மற்றும் தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் மே மாதம், இலங்கை மற்றும் சினோபெக் பிரதிநிதிகளுக்கு இடையே ஒப்பந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஒரு வருட காலத்தில் ஓமானில் பணிபுரிந்த 400 புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் இலங்கைக்கு !

ஓமானில் பணிபுரிந்துவந்த 32 இலங்கையர்கள் ஓமானில் உள்ள இலங்கைத்தூதரகத்தின் ஊடாகக் கடந்த வாரம் வெற்றிகரமாக நாட்டுக்குத் திருப்பியழைத்துவரப்பட்டிருக்கின்றார்கள்.

 

ஓமான் வெளிவிவகார அமைச்சு மற்றும் ஓமான் குடியகல்வுத் திணைக்களம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.

 

இவ்வாறு அழைத்துவரப்பட்ட இலங்கைப்பணியாளர்கள் வேலைவாய்ப்புக்காக நுழைவு வீசா அல்லது சுற்றுலா வீசாவின் மூலம் ஓமானுக்குச் சென்றவர்களாவர். இருப்பினும் அவர்களது வீசா உரியகாலத்தில் புதுப்பிக்கப்படவில்லை.

 

இந்நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தற்போதுவரை சுமார் 400 க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் ஓமானிலுள்ள இலங்கைத்தூதரகத்தின் ஊடாக நாட்டுக்குத் திருப்பியழைத்துவரப்பட்டிருக்கின்றார்கள்.

 

அதன்படி, சட்டவிரோதமாக ஓமானில் தங்கியிருந்த 32 இலங்கையர்கள் அந்நாட்டிலுள்ள இலங்கைத்தூதரகத்தினால் அடையாளங்காணப்பட்டதுடன் அவர்களது பின்னணி மற்றும் அவர்கள் முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலை என்பன தெளிவாக ஆராயப்பட்டன. அதனைத்தொடர்ந்து ஓமான் அரசாங்கத்துடன் இணைந்து அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

 

அதுமாத்திரமன்றி அவர்கள் மீண்டும் இலங்கைக்குத் திருப்பியழைத்துவரப்படும் வரையான காலப்பகுதியில் அவர்களுக்கு அவசியமான மனிதாபிமான உதவிகள், மருத்துவ உதவிகள், தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுக்குமான ஏற்பாடுகள் ஓமானில் உள்ள இலங்கைத்தூதரகத்தினால் மேற்கொள்ளப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் பங்குகொள்ளும் சட்டத்தரணிகளுக்கு புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல் !

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய்மத்தி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் பங்குகொள்ளும் சட்டத்தரணிகளுக்கு புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது

 

இன்று(31) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற நிலையிலேயே இந்த விடயம் நீதிமன்றத்தின் கவனத்துக்கு சட்டத்தரணிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக இந்த வழக்கு விசாரணைகளுடன் தொடர்புபட்ட சட்டத்தரணிகள் கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி உள்ள பகுதிக்கு கடந்த 10.08.2023 ம் திகதி கள விஜயம் மேற்கொண்டிருந்த போது அங்கு விஜயம் செய்த சட்டத்தரணிகள் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் பல்வேறு தரப்பினரிடமும் விசாரித்ததோடு குறித்த பகுதி கிராம அலுவலரிடமும் அங்கு சென்ற சட்டத்தரணிகளின் பெயர் என்ன எங்கிருந்து வந்தார்கள் என்பது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்திருந்ததாகவும் அவர்கள் வருகை தந்த வாகன இலக்கங்கள் உள்ளிட்ட தகவல்களை வழங்கி தங்களது விவரங்களை திரட்டி இவ்வாறு புலனாய்வு பிரிவினர் தமக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாக சட்டத்தரணிகளால் மன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

குறித்த சட்டத்தரணிகள் தொடர்பாக கிராம அலுவலரிடமும் புலனாய்வு பிரிவினர் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்ததாக கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலரும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையில் சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்திரன், புலனாய்வு பிரிவினர் என்பவர்கள் இரகசியமாக தகவல்களை பெற்றுக் கொள்பவர்கள் இவர்கள் வெளிப்படையாக வந்து விசாரணைகள் செய்வது என்பது அச்சுறுத்தல் என்பதை மன்றின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

இது தொடர்பாக கொக்குளாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி குறித்த விடயமாக சட்டத்தரணிகளை முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யுமாறும் தாங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்

 

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கையிடப்பட்டு இருப்பதன் அடிப்படையில் அதனை வைத்துக்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிபதி கொக்குளாய் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.