29

29

தைரியத்துடன் தனது கிராமத்தில் நடைபெற்ற சட்டவிரோத கசிப்பு உற்பத்தியை நிறுத்திய யாழ்மாவட்டத்து பெண் கிராமசேவையாளர் !

யாழ் மருதங்கேணி, வத்திராயன் பெண் கிராமசேவையாளர் கசிப்பு காய்ச்சும் இடத்திற்கு காவல்துறையினருடன் நேரடியாக சென்று கசிப்பு உற்பத்தியை தடை செய்துள்ளமையால் அப்பகுதி மக்கள் குறித்த கிராம சேவையாளரை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

வத்திராயன் கிராம உத்தியோகத்தர் பொதுமக்களுக்கும் தன் சக கிராம அலுவலர்களுக்கும் நேர்மையாகவும் தற்துணிவாகவும் செயலாற்ற வேண்டும் என்பதை எடுத்துக்காட்டியுள்ளார்.

 

அவரது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் கிராமப்பகுதியில் இத்தகைய சட்டவிரோத செயல்கள் நிகழ்வதைத் தடுக்க வேண்டும் என்று, வத்திராயன் கிராம அலுவலர் காவல்துறையினருடன் சென்று கசிப்பு நிலையத்தை முற்றுகையிட்டதன் ஊடாக அதனை நிரூபித்துள்ளார்.

 

“ஏனைய கிராம அலுவலர்களும் வத்திராயன் கிராம சேவையாளர் போன்று தற்துணிவுடன் பக்கச்சார்பின்றி சேவை செய்ய வேண்டும், என்பதற்கு இந்த கிராம சேவையாளர் முன்னுதாரணமாக செயற்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.” என் சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

கிராம சேவையாளர்கள் என்றாலே கள்ள மண்ணுக்கு ஆதரவளித்தல், பக்கச்சார்புடன் செயற்படுதல், சட்டவிரோத நடவடிக்கைகளைத் தட்டிக்கேட்க தயங்குதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் என்று மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயம் தான் இருந்து வந்தது.

வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பும் தொழிலாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஆரம்பம் !

வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பும் தொழிலாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

அண்மையில் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.

ஒவ்வொரு நிலையத்திலும் 50 வீதத்திற்கும் அதிகமான பாடநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் தொழில் வழிகாட்டல் மற்றும் ஊக்குவிப்பு பணிப்பாளர் சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் 4000 பேரை தொழிலில் அமர்த்த வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 206 தொழிற்பயிற்சி நிலையங்களில் 107 பயிற்சி நிலையங்கள் இதற்காக பயன்படுத்தப்படுகின்றன.

பயிற்சிப் பாடநெறிகள் மாலை வேளையிலும் வார இறுதி நாட்களிலும் நடைபெறுவதால், தொழிலுக்கு செல்வோர் கூட இதில் பங்கேற்க முடியும். இது தொடர்பான மேலதிக தகவல்களை 0117 277 888 மற்றும் 0117 270 270 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் அவசர விபத்துகள் பிரிவில் அனுமதி !

கைது செய்யப்பட்ட இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் தரிந்து உடுவரகெதர கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்துகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

சட்டவிரோத கூட்டமொன்றின் அங்கத்தவராக செயற்பட்டமை, அரச ஊழியருக்கு குற்றவியல் அழுத்தம் விடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் நேற்று (28) அவர் கைது செய்யப்பட்டார்.

 

தரிந்து உடுவரகெதர கைது செய்யப்படுகின்ற சந்தர்ப்பத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

 

தேசிய கடன் மறுசீரமைப்பு என்ற போர்வையில் ஊழியர் சேமலாப நிதியத்தை கொள்ளையிடுதல் அரச ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்க்காமை ஓய்வூதியத்தில் கை வைத்தல் மற்றும் அநீதியான தொழில் சட்ட மறுசீரமைப்பிற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

எனினும், அங்கு வருகை தந்த பொலிஸார் நீதிமன்ற உத்தரவை வாசித்து ஆர்ப்பாட்டத்திற்கு வரையறைகள் உள்ளதாக சுட்டிக்காட்டினர். இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பொரளை சந்திக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தையிட்டி விகாரை தொடர்பில் விரைவில் சாதகமான பதில் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக சாதகமான முடிவு எட்டப்பட்டிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 

தையிட்டி விகாரையின் விகாரதிபதி ஜின்தோட்ட நந்தாராம அவர்களுடன் இன்று (29) நடைபெற்ற சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்களுக்கு சொந்தமான காணிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவது குறித்தும் ஏற்கனவே ஜனாதிபதியுடன் கலந்துரையாடி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அதன் தொடர்ச்சியாக இன்று விகாராதிபதியை சந்தித்து கலந்துரையாடியதாகவும் அப்பகுதியில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பது குறித்து சாதகமான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியதாகவும் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

 

அதனை தொடர்ந்து மாவட்ட கட்டளைத் தளபதி, பிரதேச செயலாளர் மற்றும் நில அளவையாளர் ஆகியோருடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. என்றும் தெரிவித்தார்.

 

அண்மையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள், தமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு பரிகாரம் காணப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“13 ஆவது திருத்தம் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை.” -உதய கம்மன்பில

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தினால் தற்போதுள்ள தேசிய நல்லிணக்கமும் இல்லாமல் போகும் என நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

13 ஆவது திருத்தம் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என்றும் அதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் என என்றும் குறிப்பிட்டார்.

 

தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

 

ஆனால் பொலிஸ் அதிகாரம் மற்றும் காணி அதிகாரம் ஆகியவற்றை மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என உதய கம்மன்பில தெரிவித்தார்.

 

வடக்கு, கிழக்கில் காணி தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அதற்கான விசேட பொறிமுறை ஒன்று வகுக்கலாமே தவிர காணி அதிகாரங்களை வழங்க கூடாது என்றும் கூறினார்.

 

இதேவேளை மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி பொறுப்புக்கூற வேண்டும் என்றும் உதய கம்மன்பில தெரிவித்தார்.