16

16

“இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாக 13 ஆவது திருத்தத்தை இந்தியா திணிக்க கூடாது.” – சிவாஜிலிங்கம்

இந்திய அரசாங்கம் இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாக 13 ஆவது திருத்தத்தை பரிந்துரைக்கவோ அல்லது அதனை திணிக்கவோ கூடாது என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தை முன்னிட்டு, இந்திய பிரதமர் அவரிடம் வலியுறுத்த வேண்டிய விடயங்களை சுட்டிக்காட்டி அவர் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணயத்தை இந்தியா அங்கீகரித்துள்ள நிலையில் நிரந்தர அரசியல் தீர்வை காண ஐ.நா.வின் கண்காணிப்புடன் பொது வாக்கெடுப்பு அவசியம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்க, அவுஸ்ரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து இலங்கையில் பொது வாக்கெடுப்பை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கடந்தகாலங்களில் இடமபெற்ற வன்முறைகள் மீண்டும் நிகழாமல் இருக்கும் வகையில் உத்தரவாதம் வழங்கக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வு அவசியம் என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட ஐந்து இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடையை நீக்க அரசாங்கம் தீர்மானம் !

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தடை செய்யப்பட்ட ஐந்து இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடையை நிபந்தனைகளுடன் நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஒருவருடகால விசாரணையின் பின்னர் விசாரணை மற்றும் புலனாய்வு அமைப்புகளின் நிபுணர்கள் குழுவொன்று வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் அரசாங்கம் இந்த தடையை நீக்கவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏப்பிரல் 2021ம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஐந்து இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்தார்.பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஆறுபேருக்கு எதிராகவும் தடைகளை அறிவித்தார்.

புலனாய்வு அமைப்புகளுடனான பேச்சுவார்த்தைகளின் போது இந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்கள் உறுப்பினர்களின் நடவடிக்கைகளிற்கு தாங்கள் பொறுப்பு என்ற வாக்குறுதியை வழங்கியுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தடைகள் நீக்கப்பட்ட பின்னரும் இந்த அமைப்புகளை உன்னிப்பாக கண்காணிக்கவேண்டும் என நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது குறிப்பாக அவர்களிற்கான நிதி மற்றும் அவர்களின் கற்பித்தல் நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கவேண்டும் எனவும் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

இந்த அமைப்புகள் ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தடைகளை மீண்டும் விதிக்கவேண்டும் எனவும் நிபுணர்குழுபரிந்துரைத்துள்ளது.

9 வயதான மாணவியை தாக்கிய யாழ் – தீவக வலய பாடசாலை அதிபர் கைது !

யாழ் – தீவக வலய பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும், 9 வயதான மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அதிபரை ஊர்காவல்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாடசாலையில் வைத்து அதிபர் மாணவியை கடுமையாக தாக்கியதில் மாணவியின் உடலில் தழும்புகள் ஏற்பட்டுள்ளன.

யாழில் பாடசாலையில் வைத்து மாணவிக்கு நடந்த கொடுமை - அதிபர் கைது | Principal Assaulted Student In The School Jaffna

குறித்த சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பத்துள்ள நிலையில், ஊர்காவல்துறை காவல்துறையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அதிபரை நாளை திங்கட்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

 

தீவக பாடசாலையில் மாணவி மீது தாக்குதல்: அதிபர் இன்று கைதாவார்! - Pagetamil

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நாளை முன்னெடுக்கவுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.

தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்த யாழ்ப்பாண பல்கலைகழக மாணவன் !

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒருவர் ‘மொபைல் வீடியோ கேம்’க்கு அடிமையாகி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணையை சேர்ந்த 22 வயதுடைய பல்கலைக்கழக மாணவர்  ஒருவரே மொபைல் வீடியோ கேம் விளையாட்டில் ஆர்வமாக இருந்துவந்த நிலையில், நேற்று சனிக்கிழமை (15) தனது வீட்டில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புஷ்பராஜா எழில்நாத் (22) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பெற்றோருக்கு ஒரே மகனான இவர், வீட்டில் யாரும் இல்லாது தனிமையில் இருந்தபோது இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளமை தெரிய வருகிறது.

இந்த மாணவர் மொபைல் வீடியோ கேம் விளையாட்டுக்கு அடிமையான நிலையில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு,  திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்காக உத்தரவிட்டார்.

அதன் பின்னர் குறித்த இளைஞரின் சடலம் குடும்பத்தாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு வெவ்வேறு பல்கலைகழக மாணவர்கள் கடந்த மாதம் தற்கொலை செய்திருந்த நிலையில் இன்று யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். அண்மையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக தவறான முடிவுகளை எடுத்து தங்கள் உயிரினை மாய்த்க்கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு செல்கின்றது.

“இலங்கையின் வைத்தியத்துறை கொள்ளை மற்றும் ஊழலில் ஈடுபடும் மாபியாவாக மாறியுள்ளது.” -ஜே.வி.பி குற்றச்சாட்டு !

“இலங்கையின் வைத்தியத்துறை கொள்ளை மற்றும் ஊழலில் ஈடுபடும் மாபியாவாக மாறியுள்ளது.” என தேசிய மக்கள் சக்தியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

திவுலப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஆசியாவின் சிறந்த சுகாதார வசதிகள் உள்ள நாடே இலங்கை என அந்த நாட்களில் பெரிதாக பேசிக்கொண்டோம்.ஆனால் இன்று வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு பயமாகவுள்ளது. மருந்து வில்லைகளை பாவிப்பதற்கு கெனூலா ஏற்றிக்கொள்வதற்கு பயமாகவுள்ளது. ஏன் ஏன்றால் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது தான் இன்றைய நாட்டின் நிலைமையாகும். சுகாதார அமைச்சு என்பது கொள்ளை மற்றும் ஊழலில் ஈடுபடும் மாபியா என்பது அறிந்த ஒன்றாகும்.

வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் மருந்துகளில் மாபியா உள்ளது. இலங்கைக்கு மருந்துகளை கொண்டு வரும் மாபியாக்கள் மில்லியன் பில்லியன் கணக்கில் சம்பாதிக்கின்றன. அதற்காகவே இன்று இவ்வளவு சண்டை போடுகிறார்கள் என்றார்.

“மலையக தமிழர்கள் “இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள்” என்ற இன அடையாளத்தை விட்டுக்கொடுக்கக்கூடாது.” –

“மலையக தமிழர்கள் “இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள்” என்ற இன அடையாளத்தை விட்டுக்கொடுக்கக்கூடாது.” என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

சிறுவர்களின் நலன் கருதி பொகவந்தலாவ டின்சின் தோட்டப் பகுதியில் நவீன தொழில்நுட்பம் கொண்ட சிறுவர் அபிவிருத்தி நிலையம் நேற்று சனிக்கிழமை (15 ) திறந்து வைக்கப்பட்டது.

உலக வங்கியின் அனுசரணையுடனும், பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் நெறிப்படுத்தலின் கீழ் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின்  மேற்பார்வையில், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் ஊடாக நிறுவப்பட்ட நவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த சிறுவர் அபிவிருத்தி நிலையம் அமைச்சர் தலைமையில் மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இவ்வருடம் சனத்தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. இறுதியாக நடத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின்போது மலையக தமிழர்கள் பலர், இலங்கை தமிழர்கள் என்பதற்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இதனால் மலையக தமிழர்களின் எண்ணிக்கை குறைவடைந்துவிட்டது. சுமார் 8 இலட்சத்து 50 ஆயிரம் பேரே பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல கணக்கெடுப்புக்கு வரும் சில அதிகாரிகளும், தோட்டத்தில் வாழ்பவர்கள்தான் இந்திய தமிழர்கள், நகரத்தில் வாழ்பவர்கள் இலங்கை தமிழர்கள் என எண்ணிக்கொண்டு கணக்கெடுப்பு நடத்துகின்றனர். மேலும் சிலர் தமிழில் பேசினால் அவர்கள் இலங்கை தமிழர்கள் என நினைத்துக்கொண்டிருக்கின்றனர். இம்முறை இவ்வாறான தவறுகளுக்கு இடமளிக்க கூடாது. எனவே, மலையக தமிழர்கள் தம்மை மலையக தமிழர்களாகவே கணக்கெடுப்புக்குள் உள்ளடக்க வேண்டும். அப்போதுதான் எமது இனத்தின் இருப்பு பாதுகாக்கப்படும்.

மக்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வை இளைஞர்கள் ஏற்படுத்த வேண்டும். இது காங்கிரஸுக்கான கணக்கெடுப்பு அல்ல, மக்களுக்கானது. எனவே, இந்த விடயத்திலும் எவரும் அரசியல் நடத்தக்கூடாது.

அதேவேளை, மலையக அரசியலில் மாற்றம் வரவேண்டும் என்றால் அதற்கான நடவடிக்கை அவசியம். மக்களுக்கு சேவை செய்யவே நாம் வந்துள்ளோம். அதற்காகவே மக்கள் வாக்களிக்கின்றனர். சேவை வழங்க வேண்டியது எமது பொறுப்பாகும். எனவே, அரசியல்வாதிகளை கடவுளாக பார்க்கும் நிலை மாற வேண்டும். சமூக நீதி கோட்பாடு முக்கியம் என்றார்.

இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளருமான எம்.ராமேஷ்வரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் பிரிவின் தேசிய அமைப்பாளர் ஏ.பி.சக்திவேல், பிரதி தலைவர் கணபதி கனகராஜ், உப தலைவர் பிலிப்குமார், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, உயர் அதிகாரிகள், இளைஞர்கள், யுவதிகள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இணையவழி கடவுச்சீட்டு முறை – ஒரு மாதத்தில் 29,578 விண்ணப்பங்கள் !

இணையவழி கடவுச்சீட்டு முறைமை மூலம் கடந்த ஒரு மாதத்தில் 29,578 பேர் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 24 ஆயிரத்து 285 பேர் சாதாரண முறைமையின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒரு நாள் சேவையின் மூலம் 5 ஆயிரத்து 294 பேர் கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார். பிரதேச செயலகங்கள் மூலம் இணையத்தளத்தின் ஊடாக கடவுச்சீட்டு வழங்கும் வேலைத்திட்டம் கடந்த ஜூன் மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த முறைமையினால் பத்தரமுல்லையிலுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திலும் நீண்ட வரிசைகள் இல்லாமல் போயுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

முகநூல் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்வதற்காக இலங்கையில் விசேட எண் அறிமுகம் !

முகநூல் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான தொலைபேசி இலக்கமொன்றினை கணினி அவசர பிரிவு அறிமுகம் செய்துள்ளது.

101 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என இலங்கை கணினி அவசர பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.

போலி முகநூல் கணக்குகள், ஒன்லைன் மூலம் குழந்தைகளை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்குதல், ஹேக்கிங் மற்றும் பிற தவறான செயற்பாடுகளில் ஈடுப்படுதல் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியும்.

இதற்கமைய, முகநூல் சார்ந்து மாதத்திறகு ஆயிரத்துக்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அவற்றை எழுத்து மூலமாக மின்னஞ்சலில் அனுப்பலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மேற்படி கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளில் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“மொழி பிரச்சினைகள் தொடர்பாக மக்களிடம் இருந்து வரும் புகார்கள் மிகக்குறைவு.” – அரச மொழி உரிமை ஆணைக்குழு

ஆட்சிமொழிக் கொள்கையின்படி, மொழியியல் பிரச்சினைகள் தொடர்பாக மக்களிடம் இருந்து வரும் புகார்கள் மிகக்குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது . அரச மொழி உரிமை தொடர்பில் மக்கள் அறியாமையே இதற்குக் காரணம் என ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி டி. கலன்சூரிய தெரிவித்துள்ளார் .

 

மொழிக் கொள்கை 1956 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. மேலும் மொழிப் பிரச்சினைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். 1956 என்ற தொலைபேசி எண்ணிலும் புகார் செய்ய முடியும். 1956 ஆம் ஆண்டில், மொழிகள் தொடர்பான எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க மொழி அழைப்பு மையம் நிறுவப்பட்டது.

இந்த நிலையத்தின் சேவைகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வழங்கப்படுகின்றன. மேலும் ஒரு குடிமகன் அரசாங்க சேவையைப் பெறும்போது அல்லது வேறு ஏதேனும் சந்தர்ப்பத்தில் ஏதேனும் மொழிப் பிரச்சினை இருந்தால் அல்லது அரச மொழிக் கொள்கையை மீறினால், அவர் 1956ஐத் தொடர்புகொண்டு, பிரச்சினைகள், புகார்கள் மற்றும் ஆலோசனைகளைச் சமர்ப்பிக்க முடியும் .

பில் செலுத்தும் போதும், கடன் வாங்கும் போதும் மூன்று மொழிகளிலும் உண்மைகளை அறிய மக்களுக்கு உரிமை உண்டு என்றும் அவர் கூறினார்.

இலங்கையில் யானை – மனித மோதலினால் 800 யானைகள் கடந்த இரண்டு வருடங்களில் பலி !

நாட்டில் யானை – மனித மோதலினால் ஏற்படும் இறப்பு விகிதம் ஒவ்வொரு ஆண்டும் பாரிய அளவில் அதிகரித்து வருகிறது. கடந்த வருடம்  யானைகளினால் 146 கிராம மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இதனை, அநுராதபுரத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, 2021 ஆம் ஆண்டில் குறைந்தது 375  யானைகளும், 2022 இல் 439  யானைகளும் கொல்லப்பட்டுள்ளன. மின்சார பொறிகள், பட்டாசுகள் வெடிக்கும் கருவி, கூரான பலகைகள் மற்றும் விஷம் வைத்தல் ஆகியவற்றினால் காட்டு யானைகள் கொல்லப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பல யானைகள் புகையிரதத்தில் சிக்கியும், பாதுகாப்பற்ற கிணறுகளில் வீழ்ந்தும் உயிரிழப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

2016க்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான செலவு மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக  அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அதேவேளை, மின்சார வேலிகள் அமைத்தல்,  யானைகளை விரட்டும் வகையில் அதிரடி சோதனை நடத்துதல், பட்டாசுகளை வழங்குதல் போன்றவற்றுக்கு வருடத்துக்கு அரசாங்கத்தினால்  சுமார்  200 மில்லியன் பணம் செலவழிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.