July

July

களனி பாலத்தின் 28 கோடி ரூபாய் பெறுமதியான ஆணிகள் திருடப்பட்டசம்பவம் – தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணைகள் !

புதிய களனி பாலத்தில், பொருத்தப்பட்டிருந்த 28 கோடி ரூபாய் பெறுமதியான ஆணிகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ச்சியாக கருத்து வெளியிட்ட அவர், தெமட்டகொட மற்றும் ரத்மலானை புகையிரத நிலையங்கள், ரயில் பாலங்கள் உள்ளிட்ட பல இடங்களில் திருட்டுச் சம்பங்கள் தொடர்ச்சியாக அறங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன.

இவற்றை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது. இதனை புகையிர நிலையங்களின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கோ பொலிஸாருக்கோ மட்டும் கட்டுப்படுத்த முடியாது என்பதால், விசேட அதிரடிப் படையினரின் உதவியையும் பெற்றுக் கொள்ள வேண்டியேற்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இவ்வாறான குற்றச்செயல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்தான் உள்ளன.

புகையிர கடவைகளில் காணப்படும், சிறிய இரும்பு கூட திருடப்படுகிறது. இதனால், புகையிரதங்கள் விபத்துக்குள்ளாகும் ஆபத்தும் காணப்படுகிறது.

இந்த நிலைமையை கட்டுப்படுத்த விசேட செயற்பாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டிய நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.

அதேநேரம், களனி பாலம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் கணக்கெடுப்பு சரியானதா என்பதை என்னால் உறுதியாக கூறமுடியாது.

எங்கிருந்து இந்த புள்ளிவிபரங்களை எடுத்தார் என்பது எனக்குத் தெரியாது.

எமது அமைச்சு இதுதொடர்பாக கூறவில்லை. இந்த நிலையில், பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளை வைத்தே இவர் இந்த புள்ளிவிபரங்களை தயாரித்துள்ளார்.

எவ்வாறாயினும், களனி பால விவகாரம் தொடர்பாக விசாரணைகள் தற்போது இடம்பெற்றுள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள நஷ்டம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை பாதுகாக்க விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் நாம் தீர்மானித்துள்ளோம்.

இதுதொடர்பான சரியான புள்ளிவிபரங்களை நான் விரைவிலேயே நாடாளுமன்றில் சமர்ப்பிக்கிறேன். என்றார்.

 

“நான் கற்பித்ததை மாணவி கிரகிக்காததால் எஸ் லோன் பைப்பினால் தாக்கினேன்.” – தீவக பகுதி அதிபரை விடுவித்தது நீதிமன்றம் !

நிதானமிழந்து 9 வயது மாணவியை தாறுமாறாக தாக்கிவிட்டேன் என, தீவக கல்வி வலயத்திற்குட்பட்ட மண்கும்பான் பகுதியிலுள்ள பாடசாலை அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

9 வயது மாணவியை தாறுமாறாக அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை முற்படுத்தப்பட்ட போது, இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எஸ் லோன் பைப்பினால் மாணவியை 20 தடவைகள் தாக்கியதாக அதிபருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலனுக்காக மேலதிக வகுப்பு நடத்தியாகவும், அப்போது ஒரே விடயத்தை 3 தடவைக் சொல்லியும் தவறிழைத்ததால், நிதானமிழந்து மாணவியை தாக்கியதாக நீதிமன்றத்தில் அதிபர் தெரிவித்துள்ளார்.

நிதானமிழப்பதும் ஒரு வகை நோயே, இதற்கு உளவள சிகிச்சை பெற வேண்டுமென அறிவுறுத்திய நீதவான், 5 இலட்சம் ரூபா பெறுமதியான ஆள் பிணையில் அதிபரை விடுவித்து, வழக்கை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

இதேவேளை, இந்த பாடசாலையில் கல்வி கற்கும் ஏனைய 9 மாணவிகளுக்கும் அதிபர் அடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பணம் – பக்தி – பாலியல்: ஓம் சரவணபவ! பல மில்லியன் பவுண்கள் என்ன ஆகும்? சமூக வலைத்தளங்களில் முறைப்பாடு செய்யப்பட்டு நீக்கப்பட்ட செய்தியின் எழுத்துரு!

‘ஓம் சரவணபவ’ என்ற லண்டன் மதக்குழுமத்தைப் பற்றிய தேசம்திரை வெளியிட்ட காணொலியை ஓம் சரவணபவவும் அவர்களுக்கு துணைபோகும் வர்த்தக நிறுவனமும் (நிறுவனங்களும்) சேர்ந்து முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு இரு தடவைகள் காணொலியை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கி உள்ளனர். அக்காணொலியின் எழுத்து வடிவவே இது. சில ஆண்டுகளுக்கு முன் இதே பாணயில் லண்டனில் வெளியான தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சார ஊடகமான ‘ஒரு பேப்பர்’ லைக்கா நிறுவனரை விமர்சித்ததற்காக அதன் பிரதிகள் கடைகளில் இருந்து எடுக்கப்பட்டு எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது ‘ஆதவன் தொலைக்காட்சி’ நடாத்தி வரும் லைக்கா நிறுவனமும் அதன் ஸ்தாபகரும் ஊடகங்களுக்கு எதிராகந் நடந்துகொண்டதோடு ஓரு பேப்பர் ஊடகவியலாளரையும் மிரட்டி இருந்தனர். தற்போது ஓம் சரவணகவ பற்றிய செய்திகளை தேசம்திரை வெளியிட்டதையடுத்து அச்செய்தியை வெளியிடாமல் தடுப்பதில் மக்கள் விரோத பாலியல் குற்றங்களுக்கு துணைபோவோர் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உண்மைகள் உறங்குவதில்லை என்ற தாரக மந்திரத்தோடு இயங்கும் தேசம்நெற் இவ்வாறான பூச்சாண்டிகளுக்கு அஞ்சப் போவதில்லை எனத் தெரிவிக்கின்றது. உண்மையே நிலைக்கும் என்று அவர்கள் ஆணித்தரமாக நம்புகின்றனர்.

சமூக வலைத்தளத்திலிருந்து மக்கள் விரோத பாலியல் குற்றங்களுக்கு துணைபோகும் வியாபார நிறுவனம் அல்லது நிறுவனங்களால் நீக்கப்பட்ட ஓம் சரவணபவ பற்றிய செய்தியின் எழுத்து வடிவம்:

இன்றைய பொருளாதாரக் கொள்கைகளை இரு நுறு ஆண்டுகளுக்கு முன் விமர்சித்து, அதற்குத் துணைபோகின்ற ‘மதம் ஒரு அபின்’ என்றவர் அரசியல் பொருளாதாரச் சிந்தனையாளர் கார்ள் மார்க்ஸ். வறுமை – பக்தி – பட்டினியில் கிடந்தால் யேசுவைச் சந்திக்கலாம் என்று போதித்த கென்ய மதக் குழுத் தலைவர் போல் மக்கன்சி ன்தன்கே பல நூறு ஏழைகளை பட்டினி இருந்து சாவதற்குக் காரணமானார். இவ்வாண்டு ஏப்ரல் மாதம் பிற்பகுதியில் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது பிணை மறுக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார். பொருளாதார வளர்ச்சியற்ற கல்வியில் வறுமைப்பட்ட சமூகத்தில் இவ்வாறான சம்பவங்கள் எதிர்பார்க்கக் கூடியதே.

ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக, பணம் – பக்தி – படுக்கையில் கடவுளை (தன்னை)ச் சந்திக்கச் சொன்னார் லோக்கல் (local) முருகக் கடவுள் ஓம் சரவணபவ என்று அறியப்பட்ட முரளிகிருஸ்ணன் புலிக்கள் (புலிக்கள் தெற்கு ஆசியாவில் பொதுவான ஒரு குடும்பப் பெயர்). இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றது லண்டனில் செழிப்பான செல்வந்தர்கள் மிக்க மேற்கு லண்டன் உள்ளாட்சிப் பிரிவுகளில். பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட ஓம் சரவணபவ, பிணை மறுக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 5இல் ஆரம்பிக்கப்படும் வழக்கின் முடிவு வரை தடுத்து சிறை வைக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த ஓம் சரவணபவ?

இந்திய கேரள மாநிலத்தின் பாலக்காட்டைச் சேர்ந்த முரளிகிருஸ்ணன் புலிக்கள் என்பவர் லண்டனில் ஓம் சரவணபவ என்றொரு மதக்குழுமத்தை உருவாக்கி உள்ளார். 1979 மே மாதம் பிறந்த, தற்போது 45 வயதுடைய முரளிகிருஸ்ணன் புலிக்கள் 2009இல் லண்டன் வந்து தன்னுடைய மதக்குழுமத்தை லண்டனிலும் ஸ்தாபித்துள்ளார். அதற்கு முன்னரேயே தென்னிந்தியாவில் இவர் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் சம்பந்தப்பட்டு துரத்தப்பட்டவர். இவர் லண்டனில் இருந்து கொண்டு இந்தியாவில் கடவுச்சீட்டு தொடர்பில் போட்ட விண்ணப்பத்திற்கு எதிராக கேரளா நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. அதற்குக் காரணம் கேரளா பொலிஸ் பிரிவில் முடிவடையாத கிரிமினல் வழக்கு ஒன்று இவருக்கு உள்ளது. இந்தப் பின்னணியில் தற்போது ‘விஸிற்றர் விசாவில் – visitor visa’ லண்டனில் வாழும் முரளிகிருஸ்ணனுக்கு பிரித்தானிய உள்துறை அமைச்சும் விசா மறுத்து இருந்தது. ஆனால் லண்டனில் அவரைச் சுற்றியிருந்த செல்வந்தர்களின் அணைவால் அவர் விசாவைப் புதுப்பித்துக் கொண்டு இருந்தார்.

யார் இவரை லண்டனில் காலூன்றச் செய்தது?

பாலியல் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு துரத்தப்பட்ட ‘ஜீலேபிசாமி ‘ என்று அறியப்பட்ட முரளிகிருஸ்ணனுக்கு அடைக்கலம் வாழங்கியவர் பிற்காலங்களில் தேவா அம்மா ஆகிய தெய்வதீஸ்வரி செல்வேந்திரன். தெய்வதீஸ்வரியின் முன்னாள் கணவர் கிழக்கு லண்டனில் பெற்றோல் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர். பணவசதி உள்ளவர். ஹரோவில் ஒரு ப்ரன்சைஸியாக தபாலகம் ஒன்றையும் நடத்தி வருபவர். பணவசதி படைத்த தெய்வதீஸ்வரி ஜீலேபி சாமியுடைய பக்தையாகி கேரளா சென்று தரிசனம் பெற்று வருபவர். தெய்வதீஸ்வரி தற்போது விவாகரத்து ஆன போதும் இன்றும் முன்னாள் கணவர் செல்வேந்திரனின் பெயரையே பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தேவா அம்மா முரளிகிருஸ்ணனுடைய பக்தி மார்க்கத்தில் தன்னுடைய மகள் கௌசல்யாவையும் இணைத்துக்கொண்டுள்ளார். மகளின் கணவரும் இந்த மதக்குழுமத்தில் இணைந்துகொண்டார்.

இவர்களால் உருவாக்கப்பட்டது தான் ஓம் சரவணபவ சேவா ரஸ்ட். இது பிரித்தானிய பொது அமைப்புகளின் ஆணைக்குழவின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் நான்கு ரஸ்டிகள் உள்ளனர் அவர்கள்: முரளிகிருஸ்ணன் புலிக்கள் (ஓம் சரவணபவ), தெய்வதீஸ்வரி செல்வேந்திரன் (தேவா அம்மா), கௌசிகா செல்வேந்திரன் (தேவா அம்;மாவின் மகள்), பேராசிரியர் ராம்நாத் நாராணயசாமி (தேவா அம்மாவின் மருமகன்)

கோவிட் பெருநோய் காலத்தில் ஆலயங்கள் பூட்டப்பட்டு ஆலயங்களின் வருமானம் வீழ்ச்சியடையை ஓம் சரவணபவ சேவா ரஸ்டின் வருமானம் எகிறி 2021இல் ஒரு மில்லியனைத் தாண்டியது. இது உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட கணக்கு அறிக்கை. இந்த ரஸ்டின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் கணக்காளர் ஒருவர் இது பற்றிக் குறிப்பிடுகையில் இதற்குள் வராத பணம் இதனைக் காட்டிலும் பத்து மடங்கு இருக்கும் எனத் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அதாவது பத்து மில்லியன் பவுண்கள் இந்தக் குழுமத்திடம் இருப்பதாகக் கணிப்பிட்டார்.

ஏன் ஓம் சரவணபவனிடம் செல்கின்றனர்?

ஆரம்பத்தில் யாருக்கும் ஓம் சரவணபவனுடைய பின்னணி தெரிந்திருக்கவில்லை. ஓம் சரவணபவனிடம் மற்றவர்களைக் கவருகின்ற ஒரு ஆளுமை இருப்பதாகக் குறிப்பிடுகின்றார், தனியனாக தன்னுடைய இரு விசேட தேவைகளுடைய பிள்ளைகளையும் வளர்த்து வரும் ஆன்மீக ஈடுபாடுடைய ஒருவர், அவர் மேலும் குறிப்பிடுகையில் அவர் பேச்சாற்றலுடையவராகவும் மற்றையவர்களோடு பேசுகின்ற போதே அவர்களை மதிப்பீடு செய்து பேசக்கூடியவராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். இவற்றுக்கும் மேலாக எவ்வாறோ மற்றையவர்களின் மனப்பதிவுகளை வாசிக்கவும் செய்கின்றார் என்கிறார், ஓம்சரவணபவ தன்னுடைய கடந்த காலம் பற்றிக் மிகத்துல்லியமாகக் குறிப்பிட்டதாக தேசம்நெற் இடம் அவர் தெரிவித்தார். இது போன்ற காரணங்களாலும் பெரும்பாலானவர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதாலும் இழுத்தங்களுடன் வாழ்வதாலும் அவர் மீது ஈர்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார். தான் ஈர்க்கப்பட்டதற்கு தன்னுடைய நெருக்கடிகளும் தனக்கிருந்த அழுத்தங்களும் கூடக் காரணம் என்றவர் அவரிடம் இருந்த சில திறமைகளை அவர் மிகச் சாதுரியமாகப் பயன்படுத்துவதாகத் தெரிவித்தார். பல பெண்கள் அவரிடம் செல்வதற்கு அவர்கள் முகம் கொடுக்கும் குடும்ப நெருக்கடிகளும் மன அழுத்தங்களுமே காரணம் என்கிறார் அவர்.

ஏன் செல்வந்தர்கள் விட்டில் பூச்சிகளாக ஓம் சரவணபவனிடம் வீழ்ந்தனர்?

பணம், அது இல்லாதவர்களுக்கு, பணம் குறைவாக உள்ளவர்களுக்கு அதனை அடைவது அவசியமானது. அது உந்துதலைக் கொடுக்கும். அதனை அடைவது ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தும். ஆனால் பணம் படைத்தவர்களுக்கு பணம் பெருக்குவது கிளர்ச்சியையோ மகிழ்ச்சியையோ குறிப்பிடத்தக்க அளவில் ஏற்படுத்துவதில்லை. அதனால் அவர்கள் அந்தக் கிளர்ச்சியையும் மகிழ்ச்சியையும் வெளியே தேடுவார்கள். போதைப்பொருள் (drugs), கம்பிளிங் (gambling), சொப்பிங் (shopping), பார்டியிங் (partying) என்று அதில் ஆன்மீகமும் ஒன்று. ஆனால் இவர்கள் தங்களுக்குள்ள பண அந்தஸ்தை பயன்படுத்தியே அக்கிளர்ச்சியைத் தேடுவார்கள். அதன் மூலம் ஒரு சமூக அங்கிகாரத்தையும் அந்தஸ்தையும் விரும்புவார்கள். இந்தச் செல்வந்தர்களின் இந்தப் பலவீனத்தை ‘ஓம் சரவணபவ’ முதலீடாக்கியது. ‘ஓம் சரவணபவ’ மட்டுமல்ல சுவாமி பிரேமானந்தா, நித்தியானந்தா, மேல்மருவத்தூர் அம்மா சாமி, சற்குரு ஜக்கி முதல் ஆலயங்களில் உள்ள ஐயர்கள் வரை எல்லோரும் இந்தச் செல்வந்தர்களில் அல்லது செல்வந்தர்களாக தங்களை பாவனை செய்ய விரும்புபவர்களை இந்த ரெக்னிக்கை வைத்துத் தான் வீழ்த்துகிறார்கள்.

இதனையே ஓம் சரவணபவ மிகக் கச்சிதமாக பயன்படுத்தினார். உங்களுக்கு என்ன தெரியும் என்பது முக்கியமல்ல உங்களுக்கு யாரைத் தெரியும் என்பது தான் முக்கியம். லண்டனில் கும்பிடுவதற்கு சாமியில்லாமல் கேரளாவரை சென்று தரிசனம் பெற்ற தெய்வதீஸ்வரியை கணக்குப் பண்ணி வளைத்துப் போட்டார் ஓம் சரவணபவ. ஒரு வர்த்தகப் பிரமுகரின் மனைவியாக இருந்தவரின் நட்புவட்டம் குசெலினிகளாக இருக்க வாய்ப்பில்லை. தெய்வதீஸ்வரி ‘நான் பெற்ற இன்பம் பெறுக செல்வந்தர்காள்! என்று லண்டனில் உள்ள தமிழ் வர்த்தகப் புள்ளிகளுக்கு ஓம் சரவணபவாவை அறிமுகப்படுத்தினார். சாமியை வீட்டுக்கு அழைத்து புஜை நடத்துவது செல்வந்தக் குடும்பங்களின் மத்தியில் அவர்களின் அந்தஸ்தை உயர்த்தியது.

கிளேஹோலில் (Clayhall) நடந்த இவ்வாறான பூஜையில் ஒரு குடும்பத்தினரைக் கொண்டு இறக்கிவிட்ட ரக்ஸி றைவர் (taxi driver) தேசம்நெற் க்கு தெரிவிக்கையில் ஓம் சரவணபவவை வீட்டுக்கு அழைத்த குடும்பத்தினர் அவருக்கு 2,500 பவுண்கள் வழங்கியவையாம். அந்தப் பூஜைக்கு வந்திருந்த குடும்பங்கள் 500, 1000 பவுண்கள் என்ற வழங்கியவையாம் என்றார். அன்றைய இரு மணிநேரத்தில் ஓம் சரவணபவவின் கலெக்சன் 10,000 பவுண்கள் என்றும் தெரிவித்தார். ‘சுவாமியின்’ காலைக் கழுவிக் குடித்ததற்கு கட்டணம் 10,000 பவுண்கள்.

லண்டனின் பெரும் வர்த்தகப் புள்ளிகள் சாமியின் வலையில் வீழ்ந்தனர். லைக்கா மோபைல் நிறுவனத்தின் முக்கியஸ்தர் பிரேம், சம்பல் நிறுவனத்தின் உரிமையாளர் சுரேன், மற்றும் வர்த்தக உரிமையாளர்கள், கணக்காளர்கள், மருத்துவர்கள் என்று பணத்தை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த பலர் ஓம் சரணவபவ வுக்கு ‘ஓ’ போட்டனர். அவர்களுடைய துணைவியரும் அவர்களோடு சேர்ந்து ‘ஓ’ போட்டனர். அவருடைய காலைக்கழவிக் குடித்தனர். தாங்கள் குடித்தது காணாது என்று அவரை புங்குடு தீவு, நயினா தீவு என்று இலங்கைக்கு கூட்டிச் சென்று அங்குள்ளவர்களுக்கும் குடித்துக் காட்டி அவர்களையும் அந்தக் கால் கழுவிய தண்ணியைக் குடிக்க வைத்தனர்.

எவ்வாறு ஓம் சரவணபவ நிர்வாணமானார்?

ஓம் சரவணபவ ஹரோவில் உள்ள பிரிஸ்டன் ரோட்டில் கடை விரித்தார். ஆச்சிரமம், கோயில் கட்டினார். படுக்கையும் விரித்தார்.

பக்தைகள் ஆச்சிரமத்தில் கூடிய நேரம் செலவழித்தனர். கணவன்மாருக் கதைப்பதற்கு நேரமும் பொறுமையும் இல்லை. சாமிக்கு வேலையா வெட்டியா காலை நீட்டிக்கொண்டு நல்லா கதை கேட்டார். அவர்களுக்கு கதை விட்டார். முருகப்பெருமானோடு ஐக்கியமாக்கினார் ஓம் சரவணபவ! யாமிருக்கப் பயமேன்!! சில குடும்ங்களையும் பிரித்து மேய்ந்தார் என்று தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

“களவு செய்துவிட்டு அதனைவிட்டுவிட்டால் பிடிபடுவது கஸ்டம் என்பது வர்த்கர்கள் நன்கு அறிந்த தொழில் ரகசியம். ஓம் சரவணபவவிற்கு ஓவர் கொன்பிடன். அல்லது அவரும் செல்வம் – செல்வாக்கு – செக்ஸ் என்ற போதைகளுக்கு அடிமையானார். இப்போது சாமிவேசம் குறைந்து சுயரூபம் வெளிவரத் தொடங்கியது. அவருடைய நடவடிக்கைகள் எல்லை மீறியது” என்கிறார் எட்ச்வெயரைச் சேர்ந்த ரரின் சொக்கலிங்கம்.
“மிகக் கீழானவர்களை விமர்சிக்க தமிழர்கள் ஒரு மோசமான சொல்லாடல் வைத்துள்ளனர். ‘சாப்பிட்ட கோப்பையிலேயே பேழ்கிறான்’. அது தான் ஓம் சரவணபவ மாட்டக் காரணம். பெரும்புள்ளிகளின் குடும்பங்களிலேயே, அக்குடும்பப் பெண்களிலேயே, அவர்களின் பிள்ளைகளிலேயே கை வைத்தார் ஓம் சரவணபவ. அப்போது தான் அவருக்கு ஏழரைச் சனி ஆரம்பித்தது. மற்றவர்களுக்கு நடக்கும் போது கண்டும் காணாமல் இருந்தவர்கள் தங்கள் குடும்பங்களில் என்றதும் பதறினர். அதே சமயம் தங்கள் குடும்ப உறுப்பினர்களது பெயர் வெளிவராமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தனர்” என்றும் அவர் தெரிவித்தார்.

ஓம் சரவணபவாவுடன் லைக்காவுக்கு என்ன சம்பந்தம்?

ஓம் சரவணபவா பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாதவர்களின் ஆன்மீக குரு. அந்த வலையில் லைக்கா சுபாஸ்கரனின் வலது கரமான பிரேம் மற்றைய செல்வந்தர்கள் போல் வீழ்ந்தார். தன்னுடைய வீட்டுக்கும் ஓம் சரவணபவவை அழைத்து காலைக் கழுவிக்கு குடித்தார். மற்றைய செல்வந்தர்கள் போல் தன்னுடைய வங்கிக் கணக்கும் இரட்டிப்பாகும் புண்ணியம் கூரையை பிய்த்துகொண்டு வளரும் செய்த பாவம் செய்கின்ற பாவம் செய்யப் போகும் பாவம் எல்லாவற்றிலும் இருந்தும் விடுதலை கிடைக்கும் என்று மற்றவர்களைப் போல் தானும் நம்பினார். அது மட்டுமல்லா சுபாஸ்கரனும் ஓம் சரவணபவ சுவாமியை தன் வீட்டுக்கும் அழைத்து அதையே செய்தார். விஸ்கி அடித்த கூட்டம் சரவணபவனின் கால் கழுவிய தண்ணி அடித்தது.

இப்போது இந்த வழக்கு விடயத்தில் லைக்கா தொடர்ந்தும் மௌனமாகவே உள்ளது. இது பற்றி பேராசிரியர் பெக்கோ என்ற புனைப்பெயரில் எழுதிவருபவர் நகைச்சுவையாக வருமாறு குறிப்பிட்டார்: “ஓம் சரவணபவ சுவாமியின் வழக்கை சுபாஸ்கரன் சுவாமியும் பிரேம் சுவாமியும் நடத்துவதாக முன்னாள் போட்டியாளரான லெப்ரா பாஸ்கரன் சுவாமி ஐபிசி ஊடாக கசியவிடுவதாக ஒரு தகவல். லைக்காவின் அபிமானி கண்ணன் சுவமி அதிர்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதகமாக லைக்காவைக் காப்பாற்ற நாலுவரி போட ஹரோ ஜெ சுவாமி பொங்கி எழ லண்டனில் சுவாமிகளின் மோதல் உக்கிரமடைந்துவிட்டது. இதுக்குள் தேவா அம்மா இடையாள சைக்கிளோடி ஆட்டையைப் போட்டுவிட்டா என்று ஜெவாலு சாமி பீலிங்கில தண்ணி அடிக்கிறார். சுவாமியின் கால் கழுவின தண்ணியல்ல.”

அடுத்தது என்ன?

ஓம் சரவணபவனினால் பாதிக்கப்பட்ட பெண்கள் குறைந்தது மூவர் முரளிகிருஸ்ணன் புலிக்கள்க்கு எதிராக குற்றம்சுமத்தியுள்ளனர். பாலியல் வல்லுறவு, பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் முரளிகிருஸ்ணன் புலிக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. இவர்களின் அடையாளங்கள் வெளிப்படுத்தப்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டும் உள்ளது.
யூன் 12ம் திகதி ஈலிங் மஜிஸ்ரேட் நீதி மன்றத்தில் முரளிகிருஸ்ணன் புலிக்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. அவருக்கு பிணையும் மறுக்கப்பட்டது.

அதற்கு ஒரு மாதத்திற்குப் பின் யூலை 10 ஹரோ கிறவுண் கோர்ட்டில் முரளிகிருஸ்ணன் புலிக்களின் பிணை மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அவருக்கு பிணை மறுக்கப்பட்டது. முரளிகிருஸ்ணன் புலிக்கள் அரச தரப்பின் சாட்சியங்களை தொந்தரவு செய்வார் என்ற அச்சத்தின் அடிப்படையிலும் பிணை மறுக்கப்பட்டிருக்கலாம் என ஓம் சரவணபவ வின் முன்னாள் பக்தர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

முரளிகிருஸ்ணன் புலிக்களின் வழக்கு டிசம்பர் 5 முதல் ஆறு நாட்கள் நடைபெறுவதற்கு திகதியிடப்பட்டுள்ளது. இவ்வழக்கில் முரளிகிருஸ்ணன் புலிக்கள் விடுதலையாவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாகவும் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டால் தண்டனைக்காலம் முடிவடைந்ததும் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்படுவார் என்றும் சட்டவல்லுனர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

முரளிகிருஸ்ணன் புலிக்கள் பிணை மறுக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பது அவருடைய வழக்கில் பல்வேறு நெருக்கடிகளையும் ஏற்படுத்தி இருக்கும் ஏனெனில் பொது அமைப்புகளின் ஆணைக்குழுவுக்கு வழங்கிய கணக்கறிக்கையில் அவர்களுடைய பெரும்பாலான சொத்துக்கள் பணம் அல்லது இலகுவில் பணமாக்கக் கூடியதாகவே உள்ளது. மேலும் கணக்கறிக்கைக்கு புறம்பான பெருமளவு நிதியும் வெளியே உள்ளது. இவற்றில் பெருமளவு பங்கை தேவா அம்மா என்ற தெய்வதீஸ்வரியே கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இந்த வழக்குக்கான செலவை யார் செலவு செய்கின்றார்கள் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. ஓம் சரவணபவ சேவா ரஸ்ட் செலவழிக்கின்றதா அல்லது லைக்கா போன்ற பக்தர்கள் செலவு செய்கின்றார்களா? ஓம் சரவணபவவின் கணக்குக்கு உட்பட்ட உட்படாத பல மில்லியன் அசையும் அசையா சொத்துக்களுக்கு என்ன நடக்கும்? இவ்வாண்டு முடிவுக்குள் பல முடிச்சுகள் அவிழும். பல முடிச்சவிக்கிகளும் வெளித் தெரிவார்கள்.

லண்டனில் தமிழர்கள் மத்தியில் இவ்வாண்டு நீதிமன்றம் வந்த பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் லண்டனின் செல்வச் செழிப்பு மிக்க பகுதிகளான ஹரோ பார்னற் பகுதியில் இருந்தே வந்துள்ளது. தற்போது ஓம் சரவணபவ சுவாமியும் அவ்விடத்திலேயே கோயில் ஆச்சிரமம் வைத்து வாழ்பவர். பிரேமகுமார் ஆனந்தராஜா, சுப்பிரமணியம் சதானந்தன் ஆகியோர் ஏற்கனவே பாலியல் குற்றங்களுக்கு தண்டனை பெற்றவர்கள். யாழ் இந்ததுக்கல்லூரி பழைய மாணவர்கள் பள்ளி நண்பர்கள். அப்பிரதேசத்திலேயே வாழ்ந்தவர்கள். பிரேமகுமார் ஆனந்தராஜா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பின்பும் அவருக்கு நற்சான்றிதழ் வழங்கிய ஆன்மீக கனவான்களும் கனவாட்டிகளும் இந்தப் பிரதேசத்திலேயே வாழ்கின்றனர்.

இப்பகுதியில் இன்னும் சில ஆன்மீக வாதிகள், கலைஞர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் வைத்தால் தங்களையே தூற்றுவார்கள் என்பதால் பல இளம்பெண்கள் தங்கள் மௌனத்தை கலைக்கத் தயங்குவதாகவும் தேசம்நெற்க்கு தெரியவருகின்றது.

பாலியல் குற்றவாளி பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கு 42 பேர் நற்சான்றிதழ் வழங்கியமை ஏற்கனவே தேசம்நெற் இல் அம்பலப்படுத்தப்பட்டது. தற்போது முரளிகிருஸ்ணன் புலிக்கள்க்கும் ஆதரவாக பலர் செயற்பட்டு வருகின்றனர். தங்களுடைய தேவைகளை லாபங்களைக் கருதாமல் அனைத்து வகையான பாலியல் சுரண்டல்கள், பாலியல் துஸ்பிரயோகங்களுக்கும் எதிரான எண்ணம் அனைவரிடமும் ஏற்பட வேண்டும்.

இலங்கை பெண்ணுக்கு குண்டு ஊசிகளை உடம்பு முழுவதிலும் குத்தி கொடூர தண்டனை கொடுத்த வீட்டு உரிமையாளர் – சவுதியில் சம்பவம் !

லிந்துலை – கிளனிகல்ஸ் தோட்டத்தில் ஒரு பிள்ளையின் தாயான வீரன் சிவரஞ்சனி (வயது 30) என்ற பெண், குடும்ப கஸ்டம் காரணமாகவும், வீடு ஒன்றினை அமைத்துக் கொள்ளும் நோக்குடனும், கடந்த ஜூன் மாதம் 17ஆம் திகதி கொழும்பில் உள்ள முகவர் மூலம் சவுதி நாட்டிக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றார்.

இருப்பின் குறித்த பெண்ணுக்கு அந்த நாட்டு மொழி தெரியாத காரணத்தால் வீட்டு உரிமையாளர் மூலம் கடுமையாக தாக்கி சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்.

சித்திரவதைக்கு உள்ளாகிய தாய் அது தொடர்பான தகவல்களை தனது கணவனுக்கு தொலைபேசி ஊடாக வழங்கியுள்ளார்.

வீட்டு உரிமையாளரின் மனைவி தன்னை கடுமையாக தாக்கி குண்டு ஊசிகளை உடம்பு முழுவதிலும் பலவந்தமாக குத்தி உள்ளதாகவும் தான் பெரும் சிரமப்படுவதாகவும். உடனடியாக இலங்கைக்கு எடுக்குமாறு சிவரஞ்சனி தனது கணவனுக்கு குரல் பதிவு ஊடாக அனுப்பிவைத்தார்.

கணவன் மற்றும் அவரின் உறவினர்கள் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த முகவர் மற்றும் உபமுகவர் இருவரிடமும் இச்சம்பவம் தொடர்பாக பல முறை கதைத்தபோதிலும் உபதரகர் அச்சுறுத்தல் கொடுத்ததாக கூறுகின்றார்..

இருப்பினும் வீரன் சிவரஞ்சனி சவுதி நாட்டில் உள்ள வெளிநாட்டு பணியகத்திற்கு தெரிந்தவர் ஒருவரின் உதவியுடன் வந்துள்ளார். பணியகத்தில் இருந்த அதிகாரி சிவரஞ்சனிக்கு உதவி வழங்கியதோடு கழுத்தில் இருந்த குண்டு ஊசி ஒன்றினை அகற்றிய பின்பு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

14 அன்று இலங்கைக்கு காலை 6 மணிக்கு வந்துள்ளார். கடும் வருத்தத்துடன் வந்ததால் உறவினர்களால் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

வைத்தியர்கள் பரிசோதனை செய்தபோது உடம்பில் அதிகமான குன்டூசிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. உடம்பில் இருந்து இதுவரை 4 குண்டூசிகள் அகற்றப்பட்டுள்ளதுடன் இன்னும் நான்கு ஊசிகள் உடம்பில் இருப்பதுடன் இதனை அகற்ற வைத்தியர்களால் திகதியும் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் அவரின் கணவர் 15 அன்று புகார் செய்துள்ளார்.

தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரித்து புதிதாக 71 விகாரைகள் – கனேடிய உயர்ஸ்தானிகரிடம் சிறீதரன் முறைப்பாடு !

2009க்குப் பின்னர் வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் பூர்வீக நிலங்களை அடாத்தாக அபகரித்து, அவ்விடங்களில் புதிதாக  71 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விவரண அறிக்கை பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனால், கனேடிய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸூக்கும், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று திங்கட்கிழமை (17) பாராளுமன்ற உறுப்பினரின் யாழ்ப்பாண இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பின் ஆரம்பத்தில், ஈழத்தமிழர்கள் நலன்சார் செயற்பாடுகளிலும், இன அழிப்புக்கான நீதிகோரல் செயன்முறையிலும் கனடா அரசாங்கம் தொடர்ச்சியாக குரல்கொடுத்து வருவதற்கு தனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

மேலும் ஈழத்தமிழரகளின் அரசியல் உரித்துகளை நிலைநாட்டுதல், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வொன்றின் காலத் தேவை, 13வது திருத்தச் சட்டத்துக்கும் சமஸ்டி முறைமைக்கும் இடையிலான நடைமுறை வேறுபாடுகள், 13வது திருத்தச் சட்டத்தை புறந்தள்ளி சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டியதன் நியாயப்பாடுகள், கனடா, அமெரிக்கா, பெல்ஜியம் போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் சமஸ்டி முறைமையை அடிப்படையாகக் கொண்டு அதிலும் குறிப்பாக பல்லின சமூகங்கள் வாழும் கனேடிய நாட்டைப் பின்பற்றி இலங்கையில் சமஸ்டியை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ள யதார்த்தப் புறநிலைகள், 13வது திருத்தச் சட்டம் நடைமுறையில் இருக்கத்தக்கதாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண அரசுக்கு வழங்கப்பட்டிருந்தும் கூட, வடக்கு கிழக்கின் 80வீதமான நிலங்கள் வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், கடலோர காவல் திணைக்களம், கனியவளத் திணைக்களம், தொல்பொருளியல் திணைக்களம் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை என்பவற்றால் தொடர்ச்சியாக பறிக்கப்படுகின்றமை, இன, மத, மொழி ரீதியான வலிந்த ஆக்கிரமிப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இவைதவிர இலங்கையில், அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் பெண்களின் அரசியல் வகிபாகம் மிகக்குறைந்தளவில் காணப்படுவதன் காரணம் குறித்தும், அதன் யதார்த்தநிலைப் பின்னணிகள், குடும்ப மற்றும் சமூகச் சூழல் என்வை குறித்தும் கனேடிய உயர்ஸ்தானிகர், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம் கேட்டறிந்து கொண்டார்.

அதேவேளை, போருக்குப் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள 4374.8ஏக்கர் காணிகள் தொடர்பான விவரமும், 2009க்குப் பின்னர் வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் பூர்வீக நிலங்களை அடாத்தாக அபகரித்து, அவ்விடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 71 விகாரைகள் குறித்த விவரண அறிக்கையும், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனால், கனேடிய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்டது.

இதேவேளை இலங்கையில் நடைபெற்றது இன அழிப்புத்தான் என்பதையும் அதற்குரிய நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனபதையும் வலியுறுத்தி கனேடிய பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக, அப்பிரேரணைக்கு வலுச்சேர்க்கும் வகையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக்கிளையினால்  நடாத்தப்பட்ட நிகழ்வையும் கனேடிய உயர்ஸ்தானிகர் நினைவுகூர்ந்திருந்தார்.

குருந்தூர்மலையில் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமை தொடர்பில் மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு !

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் கடந்த 14.07.2023 அன்று சைவவழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமை மற்றும், ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் மனிதஉரிமை ஆணைக்குழுவில் திங்கட்கிழமை 17.07.2023 முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடானது முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூகசெயற்பாட்டாளர்களான அன்ரனிஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், இரத்தினம் ஜெகதீசன், ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணன் ஆகியோரால் வவுனியாவில் அமைந்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்தியக் காரியாலயத்தில் மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக குருந்தூர்மலையில் கடந்த 14ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று, பிரதோச தினத்தில் சைவத் தமிழ் மக்கள் சிலர் விசேட பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளச் சென்றபோது பெரும்பாண்மை இனத்தவர்களாலும் மற்றும், பௌத்த துறவிகளாலும் குழப்பம் விளைவிக்கப்பட்டதுடன், பொங்கலுக்காக அங்கு தீமூட்டப்பட்டபோது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவராலும், பெரும்பாண்மை இனத்தவர் ஒருவராலும் சப்பாத்துக்கால்களால் மிதிக்கப்பட்டு அணைக்கப்பட்டது.

அத்தோடு வழிபாடுகளை மேற்காள்ள வருகைதந்த சைவத்தமிழ் மக்களும், மக்கள் பிரதிநிதிகள் சிலரும், சமூகசெயற்பாட்டாளர்களும் பொலீசாரால் தாக்கப்பட்டுமிருந்தனர்.

இந் நிலையில் குறித்த இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் அங்கு சைவழிபாட்டுரிமையினைத் தடுக்கும் வகையில் செயற்பட்ட பௌத்த தேரர்களுக்கும், பெரும்பாண்மை இனத்தவர்களுக்கும் ஆதரவாகச் செயற்பட்டிருந்ததுடன், சைவ வழிபாட்டுரிமைகளைத் தடுக்கின்ற செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

அத்தோடு குறித்த நாளில் குருந்தூர்மலையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணன் பொலிசாரால் தள்ளிவிடப்பட்டு அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்தார்.

குறிப்பாக சைவ வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமை மற்றும், ஊடக அடக்குமுறை என்பவற்றில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும், பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு எதிராகவே இவ்வாறு மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிந்த மாணவர்களுக்கு பாடசாலைகளில் தொழில் கல்வி !

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்காக பாடசாலைகளில் தொழிற்பயிற்சி பாடநெறிகளை அறிமுகப்படுத்துவதற்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்மொழிந்துள்ளார்.

ஜேர்மன் தொழிநுட்ப பயிற்சி நிறுவனத்தில் தொழிற்பயிற்சி நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்கும் முன் மூன்று மாத காலப்பகுதியை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றார்.

ஒரு மாணவர் A/L வகுப்பை பயில வேண்டாம் என முடிவு செய்தாலும், O/L பரீட்சைக்குப் பின்னர் ஒரு தொழிற்பயிற்சி நெறியை முடிப்பதன் மூலம் எதிர்கால வாய்ப்புகள் பற்றி சிறந்த புரிதலை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் வனவள திணைக்களத்திடம் உள்ள 29,000 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி செயலகம் அறிவித்தல் !

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவள திணைக்களத்தினால் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட 29,000 ஏக்கர் காணிகளை விடுவித்து மக்களிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி செயலகம் அனைத்து தரப்பினருக்கும் அறிவித்தல் விடுத்துள்ளது.

முல்லைத்தீவு மாகாண காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வனத்துறை, மகாவெலிய மற்றும் தொல்லியல் திணைக்களம் முல்லைத்தீவு மக்களுக்குச் சொந்தமான சுமார் 100,000 ஏக்கர் காணிகளை எல்லைகளை பயன்படுத்தி ஆக்கிரமித்துள்ளதாக மாகாண கிராம அதிகாரிகள் மற்றும் மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பான அறிக்கையை ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைத்த தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் அந்த காணிகளை விடுவிப்பதற்கான உத்தரவு கிடைத்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரடியன்பற்று, புதுக்குடியிருப்பு,ஒட்டுச்சுட்டான், துணுக்காய், மாந்தை கிழக்கு மற்றும் வெலிஓயா ஆகிய மாகாணங்களின் காணிகளே இவ்வாறு விடுவிக்கப்பட உள்ளன.

விடுவிக்கப்படவுள்ள 29,000 ஏக்கர் காணிக்கு மேலதிகமாக மேலும் 17,000 ஏக்கர் காணியில் விவசாயம் செய்வதற்கு வன பாதுகாப்பு அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மக்கள் ஜனாதிபதியின் செயலாளர் தலைமையிலான தேசிய கொள்கை வகுக்கும் குழுவிடம் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளனர்.

தங்கத்தாத்தாவை போற்றி வழிபடும் முகமாக விசேட நிகழ்வு யாழ்ப்பாணத்தில் !

ஆடிப்பிறப்பு நாளில் நாவாலியூர் சோமசுந்தரப் புலவரைப் போற்றி வழிபடும் முகமாக விசேட நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

தங்கத் தாத்தா பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவுள்ள நாவாலியூர் சோமசுந்தரப் புலவரின் சிலையடியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது நாவாலியூர் சோமசுந்தரப் புலவரின் சிலைக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து பூக்கள் தூவப்பட்டன.அத்துடன் ஆடிப்பிறப்பின்  விசேட உணவான ஆடிக்கூழ் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் ஆடிப்பிறப்பு நாளில் நாவாலியூர் சோமசுந்தரப் புலவரை போற்றும் வகையில் நிகழ்வை மேற்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும் என தங்கத் தாத்தா பேரவையின்ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.சிவஞானராஜா அழைப்பு விடுத்தார்.

“சர்வதேச சமூகத்தை கையாளும் அறிவும் திறமையும் ஜே.வி.பி க்கு இல்லை.” – மஹிந்தானந்த அளுத்கமகே

மக்கள் விடுதலை முன்னணி நாட்டிற்குத் தேவையான மாற்று அணி அல்ல என்பதை மக்கள் தற்போது உணர்ந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை சர்வதேச சமூகத்தை கையாளும் அறிவும் திறமையும் மக்கள் விடுதலை முன்னணிக்கு இல்லை எனவும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

சந்திரிகாவின் அரசாங்கத்தில் அனுரகுமாரவிற்கு ஐந்தாண்டுகளுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என்றும் ஆனால், அவர்கள் அதனை பாதியிலேயே கைவிட்டனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அனுரகுமார பேஸ்புக்கிற்கு மட்டுமே ஜனாதிபதி என்றும் ஒரு டீக்கடை கூட நடத்தாத ஜே.வி.பி எப்படி நாட்டை ஆள முடியும் என்றும் மஹிந்தானந்த அளுத்கமகே கேள்வியெழுப்பினார்.