04

04

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களிடையே முரண்பாடு – 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இரண்டாம் வருட மாணவர்கள் 16 பேருக்கும், மூன்றாம் வருட மாணவர்கள் 15 பேருக்கும் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும், விடுதி உட்பட பல்கலைக் கழகத்தின் எந்தவொரு பகுதியினுள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்களின் “மாகோஸ்” வார நிகழ்வுகள் கடந்த 31 ஆம் திகதி புதன்கிழமை முதல் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் – கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரண்டாம் வருட மாணவர்களுக்கும், மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இடையில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறி மோதலில் முடிந்தது.

இதனால் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பிலான பூர்வாங்க விசாரணைகள் இன்று (04) இடம்பெற்றது. விசாரணைகளின் முடிவில் சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இரண்டாம் வருட மாணவர்கள் 16 பேருக்கும், மூன்றாம் வருட மாணவர்கள் 15 பேருக்கும் முறையான விசாரணைகள் முடிவுறும் வரை உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக் கழக மாணவர் வதிவிடம் மற்றும் ஒழுக்கம் தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விதிமுறைகளுக்கமைவாக இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்ட மாணவர்கள் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும், விடுதி உட்பட பல்கலைக்கழகத்தின் எந்தவொரு பகுதியினுள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடாதிபதி பேராசிரியர் பா. நிமலதாசன் அறிவித்துள்ளார்.

இதேநேரம், மோதல் சம்பவத்தையடுத்து முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்களின் “மாகோஸ்” வார நிகழ்வுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இளம் பெண்ணுடன் இருந்த 55 வயது அருட் தந்தையை மடக்கிப்பிடித்த மக்கள் – யாழ்ப்பாணத்தில் சம்பவம் !

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் கத்தோலிக்க மதகுரு ஒருவரும், இளம்பெண்ணும் மதுபான போத்தல்களுடன் தனியான வீடொன்றில் தங்கி இருந்த பொழுது பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள தேவாலயமொன்றின் உதவி அருட்தந்தையான 55 வயதான கத்தோலிக்க மதகுரு ஒருவரும், மன்னாரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணும் இவ்வாறு பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவில் நேற்று (03) இந்த சம்பவம் இடம்பெற்றது.

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆசிரியை ஒருவர் தங்குவதாக கூறி வீடு ஒன்று வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. எனினும் அங்கு தங்கி இருந்தவர் ஆசிரியை அல்ல என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அவரது நடத்தையில் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியில் செல்லும் நேரங்களில் கத்தோலிக்க மதகுரு ஒருவர் அந்த வீட்டுக்கு வருவதையும், அவர் வரும் சமயங்களில் பல இளம் பெண்கள் அங்கு வந்து செல்வதையும் அருகிலுள்ள மக்கள் அவதானித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியமும் இளம்பெண் ஒருவருடன் கத்தோலிக்க மதகுரு அங்கு வந்துள்ளார்.

அவர்கள் வீட்டுக்குள் சென்றதும் அந்தப் பகுதி பொதுமக்கள் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர். வீட்டுக்குள் மக்கள் சென்று பார்த்த போது அங்கு மதுபான போத்தல்கள் காணப்பட்டுள்ளன.. அத்துடன் கத்தோலிக்க மத குருவின் வெள்ளை மேலங்கியும் அங்குள்ள கதிரை ஒன்றில் காணப்பட்டுள்ளது.

மதகுருவையும் அவருடன் தங்கி இருந்து யுவதியையும் பிடித்த பொதுமக்கள் தெல்லிப்பழை பொலிசாரிடம் ஒப்படைத்த நிலையில் பொலிசார் அவர்களிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர், எச்சரிக்கை செய்து விடுவித்துள்ளனர்.

“தந்தையின் குடிப்பழக்கமே என் சாவுக்கு காரணம்.” – சிறுமி தற்கொலை !

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை அடுத்த சின்னராஜாகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. கூலித்தொழிலாளியான இவருக்கு குடிப் பழக்கம் இருந்துள்ளது. இவரது மகள் விஷ்ணு பிரியா (16) குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பள்ளியில் 10ம் வகுப்பு படித்து, பொதுத்தேர்வில் 410 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

 

இந்நிலையில் அடிக்கடி மது அருந்திவிட்டு வரும் தந்தையால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக அவரது மகள் விஷ்ணு பிரியா மன நிம்மதியின்றி இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் விஷ்ணு பிரியா நேற்று மாலை கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அக்கடிதத்தில், “எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனது தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தி விட வேண்டும். எனது குடும்பம் எப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றதோ அப்போது தான் எனது ஆத்மா சாந்தி அடையும்” என உருக்கமாக எழுதி வைத்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த குடியாத்தம் தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை – கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை !

நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தி ஒழிப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் உண்மைகளைக் கண்டறியவும் அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கவும் நாடாளுமன்ற விசேட குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அண்மையில் கூடிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இதன்படி தெரிவுக்குழுவை நியமிக்கும் பிரேரணை எதிர்வரும் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.