June

June

“ குருந்தூர் மலை விவகாரத்தில் நாம் பலவந்தமாக செயற்பட வேண்டிய நிலையை உருவாக்காதீர்கள்.” – சரத்வீரசேகர எச்சரிக்கை !

“ குருந்தூர் மலை விவகாரத்தில் நாம் பலவந்தமாக செயற்பட வேண்டிய நிலையை உருவாக்காதீர்கள்.”  என நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

மஹகர பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதால் நாடு முழுவதும் பௌத்த சின்னங்கள் மற்றும் மரபுரிமைகள் காணப்படுகின்றன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் தொல்பொருள் மரபுரிமைகளை அடிப்படையாக கொண்டு எவ்வித முரண்பாடுகளும் தோற்றம் பெறவில்லை.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளை அந்த மாகாணங்களின் அரசியல்வாதிகள் தமது அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அரசியல்வாதிகளின் அனுசரணையுடன் தொல்பொருள் மரபுரிமைகள் அழிக்கப்படுகின்றன.

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் தலைமையில் கடந்த எட்டாம் திகதி இடம்பெற்ற சந்திப்பின் போது அதிபர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குறிப்பிட்ட விடயம் பொய் என்பதை தொல்பொருள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க தெளிவுபடுத்தவில்லை.

குருந்தூர் மலையில் தமிழர்கள் விவசாயம் செய்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் குறிப்பிட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. குருந்தூர் மலையில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகள்,அடையாளப்படுத்தப்பட்ட நடுகை தூண்களை அகற்ற எவருக்கும் உரிமை இல்லை.

குருந்தூர் மலை விவகாரத்தில் தோற்றம் பெற்றுள்ள முரண்பாடுகளுக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண தயாராக உள்ளோம். அதனை விடுத்து பலவந்தமான முறையில் செயற்பட்டால் நாங்களும் அந்த வழியில் செல்ல நேரிடும் என தெரிவித்தார்.

இலங்கையில் தனிநபர் மாதாந்த அப்படைத்தேவைக்கு எவ்வளவு தேவை..? – மத்தியவங்கி வெளியிட்டுள்ள தகவல் !

இலங்கையில் நபர் ஒருவரின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் 13,777 ரூபாய் போதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள (2022/2023) ஆண்டறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வருமானத்தை ஈட்ட முடியாதவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் உணவுப் பொருட்கள், ஆடைகள் போன்றவற்றின் விலைகளின் அதிகரிப்பு மற்றும் நாட்டில் பணவீக்க நிலைமைகளின் வளர்ச்சி பாரிய அதிகரிப்பை காட்டியது.

இதனால் நாட்டின் மொத்த சனத்தொகையில் 14.3 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

“நல்லிணக்க ஆணைக்குழு குறித்த இறுதி நகல்வடிவம் கூட்டமைப்பிடம் சமர்ப்பிக்கப்படும்.” – நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குறித்த இறுதி நகல்வடிவை அரசாங்கம் தமிழ்தேசிய கூட்டமைப்பிடமும் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடமும் சமர்ப்பித்த பின்னர் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும்.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளதுடன் நகல்வடிவு அடுத்தமாத இறுதிக்குள் தயாராகிவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் அனுமதியளித்ததும் ஆணைக்குழு டிசம்பர் மாதம் முதல் செயற்பட ஆரம்பிக்கும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 53 வது அமர்வு நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த நடவடிக்கைகள் துரிதமாக்கப்பட்டுள்ளன,.

“பிரபாகரன் போன்றே வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல்வாதிகள், அம்மக்களை மீண்டும் தவறான பாதைக்கு கொண்டு செல்கின்றனர்.” – மேதானந்த தேரர் விசனம் !

விடுதலிப் புலிகளின் தலைவர் பிரபாகரன் போன்றே வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல்வாதிகள், அம்மக்களை மீண்டும் தவறான பாதைக்கு கொண்டு செல்கின்றனர் என தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி எல்லாவல மேதானந்த தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.

புராதன பௌத்த விகாரைகளுக்குச் சொந்தமான காணிகளில் மக்களை குடியேற்றுவதற்காக அவர்கள் தவறான நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிலையில் அதற்கு இணக்கம் வெளியிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெரும் பாவத்தை செய்யக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், குருந்தூர், திரியாய ஆகிய விகாரைகளுக்குச் சொந்தமான காணிகளில் பௌத்தர்கள் அல்லாதவர்களை குடியேற்றுவதற்கு இடமளிக்க முடியாது என்றும் தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி எல்லாவல மேதானந்த தேரர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலை மற்றும் திரியாய ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை தொல்பொருளியல் திணைக்களம் கையகப்படுத்தி வைத்திருப்பதை தவிர்த்து அதற்கு உரித்துடைய தமிழ் மக்களிடத்தில் கையளிக்க வேண்டும் என ஜனாதிபதி கடந்த 8ஆம் உத்தரவிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளர் பேராசிரியர் அனுர மனதுங்க, பதவி விலகியுள்ள நிலையில், எல்லாவல மேதானந்த தேரர் குறித்த விகாரைகளுக்குச் சொந்தமான காணிகளை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டாம் என்று வலியுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் குறித்த காணிகளை வழங்கப்போவதில்லை என்றும் காணிகள் பற்றிய விடயத்தினை முழுமையாக ஆராய்வதற்கு குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மறுக்கடிதம் அனுப்பியியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை – கிராமவாசிகள் போராட்டத்தில் !

திருகோணமலையில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனைக்கு எதிராக அக்கிராம வாசிகளால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று பட்டனமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட வரோதய நகர் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

சட்டவிரோத மது பான தயாரிப்புக்கள் அதிகரித்தமையால் இரவு நேரங்களில் அவற்றினை கொள்வனவு செய்ய வருபவர்களது அச்சுருத்தல் அதிகரித்துள்ளதாகவும் குறித்த பகுதி பாடசாலை மாணவர்கள் மற்றும் கிராமத்தினை சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் சந்தர்ப்பங்களில் பலர் போதைப்பொருள்களை உபயோகித்து விட்டு தகாத வார்த்தைகளால் அச்சுருத்துவதுடன் குறித்த பகுதி கிராமத்தினை சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் இதன்போது அவர்கள் தெரிவித்தனர்.

குற்றவாளிகளை பொலிஸார் கைது செய்கின்ற போதிலும் அவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கப்படுவதால் குற்றவாளிகள் தொடர்ந்தும் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் எனவே இவர்களுக்கு எதிதாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் இதயம் தொடர்பான பிரச்சினைகளுடன் பிறக்கும் 3000 குழந்தைகள் !

எமது நாட்டில் வருடம் ஒன்றிற்கு 3000 குழந்தைகள் இதயம் தொடர்பான பிரச்சினைகளுடன் பிறக்கின்றன. இவர்களில் 1500 குழந்தைகளுக்கு மட்டுமே ஒரு வருடத்திற்குள் சிகிச்சை அளிக்க எம்மால் முடிகிறது.

எஞ்சிய 1500 குழந்தைகளுக்கான சிகிச்சைக்காக அவர்கள் காத்திருக்க வேண்டிய நிலை தொடர்கின்றது என கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை இருதய நோய் நிபுணரும் ஆலோசகருமான வைத்தியர் துமிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு லங்கா வைத்தியசாலையின் டொக்டர் பிரதாப் சி ரெட்டி அரங்கில் நேற்றைய தினம் குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சை திட்டத்தில் ‘Don’t Skip A Beat’ என்ற வாசகத்துடன் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே வைத்தியர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இந்த ஊடக சந்திப்பினை கொழும்பு மேற்கு ரோட்டரி கழகம் 3220 மற்றும் ரோட்டரி கழகம் ஒஃப் கொழும்பு மெட்ரோபொலிட்டன் ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே கலந்துகொண்டிருந்தார்.

இச்சந்திப்பில் வைத்தியர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பிறவியிலேயே இதய பிரச்சினைகளைக் கொண்ட பிள்ளைகளின் உயிர் காக்கும் பணியில் ரோட்டரி கழகமும் இந்தியாவும் பெரும் உதவிகளை வழங்கியுள்ளன.

அந்த வகையில் இதய பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கு எம்மால் சிகிச்சை அளிக்கவும் அவர்களுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் முடியுமானதாக உள்ளது என தெரிவித்தார்.

கொழும்பு லங்கா வைத்தியசாலை உள்ளிட்ட இலங்கையின் முன்னணி சுகாதார சேவை வழங்குனர்களுடன் இணைந்து கொழும்பு மேற்கு ரோட்டரி கழகம் 3220 மற்றும் ரோட்டரி கழகம் ஒஃப் கொழும்பு மெட்ரோபொலிட்டன் வறிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு 80 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு உதவியுள்ளன.

இது தவிர லங்கா வைத்தியசாலை, உள்நாட்டு வைத்திய நிபுணர்கள் மற்றும் கொழும்பு மேற்கு ரோட்டரி கழகம் 3220 மற்றும் ரோட்டரி கழகம் ஒஃப் கொழும்பு மெட்ரோபொலிட்டன் ஆகியன இணைந்து பிறவியிலேயே இதய பிரச்சினை கொண்ட 50 சிறார்களுக்கான இதயம் தொடர்பான மருத்துவ சிகிச்சைகளுக்காக இவ்வாண்டில் உதவியுள்ளன.

அத்துடன் 65 சிக்கலான இதய அறுவை சிகிச்சைகள் இந்தியாவின் கொச்சின் அம்ரிதா வைத்தியசாலையில் மேற்கொள்ள அனுமதித்துள்ளதுடன் 5 உள்நாட்டு வைத்தியர்களுக்கும் 30 தாதியர்களுக்கும் சிக்கலான இதய அறுவை சிகிச்சைகள் பற்றிய பயிற்சிகளையும் வழங்குகின்றது.

தனிச்சிங்கள சட்டத்தால் நாடு பெரும்பாதிப்பை எதிர்கொண்டது – ஏற்றுக்கொள்கிறார் பண்டாரநாயக்கவின் மகள் சுனேத்திரா !

தனது தந்தை கொண்டுவந்த தனிச்சிங்கள சட்டத்தினால் நாடு பெரும்பாதிப்பை எதிர்கொண்டது என்பதை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் பிரதமர்  எஸ்.டபியு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் மகள் சுனேத்திரா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியல் கருத்துப்பரிமாறல் நிகழ்வில் கலந்துகொண்டவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உங்களது தந்தை தனிச்சிங்கள சட்டத்தை கொண்டுவந்திருக்காவிட்டால் நாடு தற்போது மிகவும் முன்னேற்றகரமான நிலையில் இருந்திருக்கும். இதனை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?  என நேயர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் சுனேத்திரா பண்டாரநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

ஆம், நான் இதற்கு பதிலளிக்க விரும்புகின்றேன். அவர் எனது தந்தை, ஆனால் இந்த நேயர் அல்லது நபர் ஒருவர் தெரிவித்ததை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றேன் என எஸ்டபில்யூஆர்டி பண்டாரநாயக்கவின் மூத்த புதல்வியான சுனேத்திரா தெரிவித்துள்ளார்.

நான் இதனை எப்போதும் தெரிவித்திருக்கின்றேன். உண்மையை சொல்லியாகவேண்டும்.

ஆம், ஏன் அவர் தனிச்சிங்கள சட்டத்தை  கொண்டுவந்தார்? அரசியல் சந்தர்ப்பவாதம் அரசியல் ரீதியில் பிரபலமாவது –  உண்மையில் எனக்கு தெரியாது.

ஆனால் இந்த நபர் தெரிவிப்பது உண்மை. அது எனக்கு ஆழ்ந்த கவலையை அளிக்கின்றது என சுனேத்திரா தெரிவித்துள்ளார்.

இதற்கு சமூக ஊடகங்களில் பராட்டுக்கள் வெளியாகியுள்ளன.

2023இல் அதிகரித்த சைபர் குற்றங்கள் – 75 பேர் கைது !

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் சைபர் குற்றங்கள் தொடர்பான 1,187 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.

அதன்படி, இதுபோன்ற புகார்கள் தொடர்பாக 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவற்றில் 108 புகார்கள் சமூக ஊடகங்கள் மற்றும் பிற ஒன்லைன் ஊடகங்கள் மூலம் செய்யப்பட்ட நிதிக் குற்றங்கள் தொடர்பானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே, சலுகைகள் மற்றும் விளம்பரப் பொருட்கள் தொடர்பான சமூக ஊடகங்கள் மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் செய்திகளை கவனத்தில் கொள்ளுமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் தெரியாத நபர்களுக்கு தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறும் பொலிஸார் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், கொவிட்-19 நெருக்கடி காலத்தில் சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் அதிகரித்தன. 2021 ஆம் ஆண்டில், பொலிஸார் 2021 ஆம் ஆண்டில் 4,688 புகார்களைப் பெற்றுள்ளது, கடந்தாண்டு 3,168 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடுமையான பொருளாதார நெருக்கடி  – வங்கிகளை கொள்ளையடிக்கும் மக்கள் !

லெபனானில் கடுமையான பொருளாதார நெருக்கடி  நிலவிவருகின்றது.

குறிப்பாக கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து லெபனான் அரசு கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு  முகம் கொடுத்து வருகின்றது. இதனை கட்டுக்குள் கொண்டுவர அந்நாட்டு அரசாங்கமும், மத்திய வங்கியும் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

இதனால் பொதுமக்களின் வங்கி சேமிப்புகளை எடுக்க முடியாத சூழல் அங்கு நிலவுகின்றது. இந்நிலையில்  வங்கிகளின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் பாரிய போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்போது  ”பலரின் வாழ்வாதார சேமிப்புகள் அழிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டும் போராட்டக்காரர்கள், தங்கள் பணத்தை திரும்ப கேட்டும், இந்த நெருக்கடிக்கு மத்திய வங்கி ஆளுநர் ரியாத் சலாமே உட்பட ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் அனைவரும் பொறுப்பெற்க வேண்டும் ”என  வலியுறுத்தியும் வருகின்றனர்.

இந்நிலையில்  அங்குள்ள வங்கிக் கட்டிடங்கள் பலவற்றையும் போராட்டக்காரர்கள் சூறையாடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளை மீள உருவாக்க போதைப்பொருள் கடத்தியதாக பத்து இலங்கையர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு !

விடுதலைப்புலிகளை மீள உருவாக்குவதற்காக ஆயுதங்கள் – போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட பத்து இலங்கையர்கள் உட்பட 13 பேருக்கு எதிராக இந்திய தேசிய புலனாய்வு முகவர் அமைப்பு குற்றச்சாட்டுகளை பதிவுசெய்துள்ளது.

இலங்கை மற்றும் இந்தியாவில் விடுதலைப்புலிகளிற்கு புத்துயுர் அளிப்பதற்காக ஆயுதங்களை சேகரித்தல், பதுக்கிவைத்தல் போன்றவற்றிற்காக இவர்கள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டனர் என இந்தியாவின் என்.ஐ.ஏ குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

இலங்கையை சேர்ந்த குணா என அழைக்கப்படும் குணசேகரன் பூக்குட்டி கண்ணா என அழைக்கப்படும் புஸ்பராஜாவும் பாகிஸ்தானை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் ஹாஜிசலீம் என்பவருடன் இணைந்துசெயற்பட்டனர் எனவும் இந்திய புலனாய்வு அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

அவர்கள் கடந்தவருடம் திருச்சி விசேட முகாமில் கைதுசெய்யப்பட்டனர் குற்றச்செயல்கள் மூலம் கிடைக்கும் பணத்தை பயன்படுத்தி அவர்கள் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்துள்ளனர் எனவும் இந்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டத்தோடு பெருமளவு பணமும் தங்கப்பாளங்களும் கைப்பற்றப்பட்டன என இந்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலமே பணமும் தங்கமும் கிடைத்துள்ளது, இந்த பணத்தை இவர்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பரிமாறியுள்ளனர் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.