16

16

விளைச்சலுக்கு அச்சுறுத்தலாகும் குரங்குகள் – கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடும் விவசாய அமைச்சு !

இலங்கையின் பல பகுதிகளிலும் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கும் – அவர்களின் விளைச்சலுக்கும் பாரிய சேதங்கள் ஏற்பட்டவண்ணமுள்ளன. இந்த நிலையில் விவசாயத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் குரங்குகளை சுட்டுக்கொல்ல விவசாயிகளுக்கு முடியும் என அறிவித்திருந்த விவசாய அமைச்சு அண்மையில் ஒருலட்சம் குரங்குகளை சீனாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்திருந்ததது.

இந்தநிலையில் குரங்குகளைப் பிடிப்பதற்காக தூரத்திலிருந்து இயக்கக்கூடிய சிறப்பு வகை கூடுகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த கூடுகளைப் பயன்படுத்தி குரங்குகளை பிடிப்பதற்காக விசேட பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயிர்களை சேதப்படுத்தும் குரங்குகளை அகற்றும் பணிகளுக்கு அனைத்து விவசாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு கூறியுள்ளது.

வன விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில், அவற்றுக்கு உணவளிப்பதற்கு ஏதுவாக அனைத்து பயிர் நிலங்களிலும் அரை ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என விலங்கு நல அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

சீனாவிலுள்ள உயிரியல் பூங்காக்களுக்கு ஒரு இலட்சம் குரங்குகளை வழங்குமாறு விடுக்கப்பட்ட யோசனை தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம், தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்களம், விவசாய அமைச்சு மற்றும் விவசாய திணைக்களம் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைது !

20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த படகிலிருந்து 23 பொதிகளில் பொதியிடப்பட்ட நிலையில் 62 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

அவற்றின் பெறுமதி சுமார் 20 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியா செட்டிகுளம் முகத்தான்குளம் கால்வாய் அமைப்பதற்கு 404 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு !

வவுனியா செட்டிகுளம் முகத்தான்குளம் கால்வாய் அமைப்பதற்கு 404 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவித்தார்.

“வவுனியா செட்டிகுளம் முகத்தான் குளத்தின் வயல் நிலங்களுக்கு சீரான தண்ணீர் வரத்து இல்லாமையினால் பல ஏக்கர் காணிகள் விதைக்கப் படாமல் இருந்து வருகின்றன.

சமீபத்தில் வவுனியாவில், நீர் பாசன அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்பினை சரியாகப் பயன்படுத்தியதால் 404 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இக்கால்வாய் 8 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட உள்ளது. இதனால், 950 ஏக்கர் நிலம் பயன்படும் என்று கமக்கார அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நீர்ப்பாசன திணைக்கள வவுனியா மாவட்ட பொறியியலாளர் மற்றும் உத்தியோ கத்தர்களுடன் நேரில் சென்று கமக்கார அமைப்பினரை சந்தித்து திட்டம் தொடர்பாக தெரிவித்தோம்.

மேலும் 10 குளங்களை புனரமைப்பதற்கான அனுமதி பெற்றுக் கொண்டோம். அதற்கான நிதியும் விரைவில் கிடைக்கப் பெறும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் அதிகரிக்கும் தற்கொலைச்சாவுகள் – 90 நாட்களுக்குள் 38 தற்கொலைகள் !

மட்டக்களப்பு மாவட்டத்தில் சனிக்கிழமை 6 மணி தொடக்கம் இன்று காலை 6 மணி வரையிலான 12 மணித்தியாலயத்தில் 3 பேர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மாச் 31 ம் திகதி வரையான 3 மாதத்தில் 17 வயது சிறுவர் தொடக்கம் 76 வயது வரையிலான ஆண் பெண் உட்பட 38 பேர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள அமிர்தகழி பிரதேசத்தில் 27 வயதுடைய நற்குணராசா கிரிதர்ஷன் என்ற இளைஞன் சம்பவதினமான நேற்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வீட்டின் அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரை அங்கிருந்து காப்பாறி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் இடைநடுவில் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிவேம்பு பிரதேசத்தில் மகளுடன் வாழ்ந்துவரும் 76 வயதுடைய தந்தையார் மகளுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக நேற்று இரவு வீட்டை விட்டு வெளியேறி களுவங்கேணி மயானத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

அவ்வாறே அதே பொலிஸ் பிரிவிலுள்ள செங்கலடி எல்லை வீதியில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுவரும் தனியார் கம்பனியில் கடமையாற்றிவரும் அம்பகஸ்கவ பிரதேசத்தைச் சோந்த 43 வயதுடைய வீரசிங்க என்பவர் சம்பவதினமான நேற்று இரவு தொலைபேசியில் மனைவியுடன் சண்டை பிடித்துவிட்டு அறையில் நித்திரைக்கு சென்றவர் அங்கு கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு கடந்த 12 மணித்தியாலயத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் கடந்த ஜனவரி தொடக்கம் 38 பேர் தற்கொலை செய்துள்ளதாகவும் அண்மை காலமாக மாவட்டத்தில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் வைக்கப்பட்ட நயினாதீவு  நாகபூசணி  அம்மன் சிலை – அகற்றப்படும் என பொலிஸார் எச்சரிக்கை !

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நயினாதீவு  நாகபூசணி  அம்மனை குறிக்கும் நாகபூசணி அம்மனின் திருவுருவச் சிலையை அகற்றுவதற்கு காவல்துறையினர்  தீவிரம் காட்டியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

May be an image of ticket stub

நயினாதீவு விகாராதிபதியின் தலையீட்டினாலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்தன.

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தை பிரதிபலிக்கும் வகையில் யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நாகபூசணிஅம்மன் திருவுருவச் சிலைக்கு தமிழ் புதுவருடப் பிறப்பில்  செய்யப்பட்டது.

இந்த நிலையில் உருத்திர சேனா அமைப்பின் பிரதிநிதிகள் இன்று யாழ்ப்பாணம் காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு 3 மணிநேரம் தீவிர விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர். உருவச் சிலையை அமைத்தவர்கள் தொடர்பில் தமக்கு தகவல் தெரியாது என்றும் தாம் பால் அபிசேகம் செய்ததாகவும் உருத்திர சேனா அமைப்பினர் காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் எந்தவொரு அனுமதியுமின்றி வைக்கப்பட்ட நாகபூசணி அம்மனின் சிலையை அகற்ற யாழ்ப்பாணம் காவல்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழர்களின் நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பை தடைசெய்ய வெளிநாட்டு தொல்லியல் ஆய்வாளர்கள் வரவழைக்கப்பட வேண்டும் !

தமிழர்களின் நிலங்களை பெரும்பான்மையினர் ஆக்கிரமிப்பு செய்வதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள் வரவழைக்கப்பட வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் முன்னெடுத்து வரும் போராட்டம் இரண்டாயிரத்து 246 நாட்களை கடந்தும் தொடர்கின்றது. அதன் செயலாளர் கோ.ராஜ்குமார் விடுத்துள்ள அறிக்கையில்,

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் அழிக்கப்பட்டதாக அல்லது ஆக்கிரமிக்கபட்டதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. வரலாற்று மற்றும் இனம் சாராத தொல்பொருள் ஆராய்ச்சியுடன் மட்டுமே நாம் செல்ல முடியும். அமெரிக்காவில் மட்டுமே மேம்பட்ட தடயவியல் ஆராய்ச்சி சாதனம் மற்றும் உபகரணங்கள் உள்ளன. இந்த தீவு யாருக்கு சொந்தமானது என்பதைக் கண்டறிய, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களைக் அழைத்து வர வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

சீனா இல்லாமல் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்த இலங்கை –

கடன் மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பில் இலங்கையுடன் நெருங்கிய தொடர்பாடல்களை பேணி வருவதாக சீனா தெரிவித்துள்ளது.

செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளா வாங்வென்பின் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அதிகளவு கடன்களை வழங்கிய சீனா இல்லாமல், இலங்கையும், அதற்கு கடன் வழங்கிய முக்கிய நாடுகளும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன. இது மூன்றாம் உலக நாடுகளின் கடன் குறித்த சீனாவின்  அணுகுமுறை மீது ஏற்பட்ட விரக்தியை வெளிப்படுத்துவது போலுள்ளது.

சீனா இல்லாமல் பேச்சுவார்த்தைகள் முன்னோக்கி நகர்வது குறித்த சீனாவின் நிலைப்பாடு என்னவென செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள வாங்வென்பின் இலங்கையின் கடன் நிவாரணம் குறித்த சீனாவின் நிலைப்பாட்டை நாங்கள் பல தடவை பகிர்ந்துகொண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

நியாயமான சுமை பகிர்வு என்ற கொள்கையின் கீழ் வர்த்தக இருதரப்பு கடன் வழங்குநர்களை இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் கலந்துகொள்ளுமாறு நாங்கள் மீண்டும் வேண்டுகோள் விடுக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இலங்கையுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கின்றோம் கடன் மறுசீரமைப்பு விவகாரங்கள் தொடர்பில் சீனாவின் நிறுவனங்கள் இலங்கையுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்வதை நாங்கள் ஆதரிக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டமை தொடர்பில் பேக்கரி உரிமையாளர் கைது !

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஓரினச் சேர்க்கை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பேக்கரி உரிமையாளர் ஒருவரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று சனிக்கிழமை (15) உத்தரவிட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய பேக்கரி உரிமையாளர், தனது பேக்கரி வேலைகளுக்காக திருகோணமலை பிரதேசத்தில் இருந்து 20 வயது இளைஞர் ஒருவரை அழைத்துவந்து, தனது விடுதியில் தங்கவைத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு அப்பகுதி மக்கள் பேக்கரி உரிமையாளரின் நடத்தையை அவதானித்துவிட்டு, பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அவ்விடுதியை சுற்றிவளைத்த பொலிஸார் பேக்கரி உரிமையாளரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்ததுடன், குறித்த இளைஞரை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

இதேவேளை கைதானவர் நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.