April

April

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளின் பாவனைக்கென நூலகம் !

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளின் பாவனைக்கென நூலகமொன்று அமைக்கப்பட்டு, அந்நூலகம் இன்று சனிக்கிழமை (8) காலை 9.30 மணியளவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜாவால் இந்நூலகத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நடந்தேறியது.

யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் நூலகர் ஸ்ரீகாந்தலக்ஷ்மி அருளானந்தம் சிவநேசன் குடும்பத்தினரால் சம்பிரதாயபூர்வமாக  யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகரிடம் நூல்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் சிறைச்சாலை அத்தியட்சகர் கே.பி.ஏ.உதயகுமார, பிரதான ஜெயிலர் எச்.எம்.டி.ஹேரத், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சா.சுதர்சன் உள்ளிட்ட சிறை அதிகாரிகள் மற்றும் சிறைக்கைதிகள் கலந்துகொண்டனர்.

யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் நூலகர் ஸ்ரீகாந்தலக்ஷ்மி அருளானந்தம் சிவநேசன் குடும்பம் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தினர் இச்சிறைச்சாலை நூலகத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்நூலகம் தொடர்ச்சியாக இயங்குவதற்கான முழுமையான பங்களிப்பையும், பராமரிப்பு ஆலோசனைகளையும் யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் வழங்கி வரும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

சிறுவர் இல்லத்து சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய 80 வயது நபர் – யாழில் சம்பவம் !

இருபாலையிலுள்ள கானான் ஜெப ஆலயத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிய மாணவர் விடுதியில் தங்கியிருந்த சில சிறுமிகள் அங்குள்ள தலைமைப் போதகரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தலைமைப்போதகரை கைது செய்வதற்கு கோப்பாய் காவல்துறையினர் முயற்சிகள் மேற்கொண்டபோதும் அவர் தப்பித்துச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி மாணவர் விடுதியிலிருந்து சிறுமிகள் தப்பியோடியதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் கீழ் மாணவர் விடுதியாகப் பதிவு செய்து சட்டவிரோதமாக இயங்கியமை கண்டறியப்பட்டது.

அதனையடுத்து இல்லத்திலிருந்த சிறுமிகள் மீட்கப்பட்டு வேறு இல்லங்களுக்கு மாற்றப்பட்டனர். இது தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், மண் நிரப்பிய பைப்பால் அடித்து தண்டனை வழங்கப்படுவதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

அங்கு தங்கியுள்ள 80 வயது தலைமைப் போதகர் சிறுமிகளை தனியே அழைத்து அவர்களுடன் தகாதமுறையில் நடந்துகொண்டுள்ளமையும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

விடுதியில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பில் தாம் கற்கும் பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்களிடம் தெரியப்படுத்தினால் அவர்கள் விடுதி நிர்வாகத்தினருக்குத் தெரியப்படுத்துவதால், தாம் தண்டனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிறுமிகள் தமது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஜெப ஆலயத்தின் மதபோதகர் ஒருவர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலைமைப்போதகரைக் கைது செய்வதற்கு காவல்துறையினர் நடவடிக்கைகள் எடுத்தபோதும் அவர் தப்பிச்சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் வாழும் இந்துக்களுக்கு நீதி கோரி டெல்லியில் இந்துக்கள் அமைப்பினரால் போராட்டம் !

இலங்கையில் வாழும் இந்துக்களுக்கு நீதி கோரி டெல்லியில் இந்துக்கள் அமைப்பினரால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள கோவில்களை இடிப்பதற்கும், இந்துக்களுக்கு தீங்கு விளைவிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பழமையான வரலாற்று மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த இந்து கோவில்களை இடித்து, இந்து தமிழ் சமூகத்தின் கலாசார இனப்படுகொலையை இலங்கை அரசாங்கம் செய்து வருவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர்.

இதுபோன்ற செயற்பாடுகள் இந்துக்களுக்கும், இந்தியாவுக்கும் எதிரான தீங்கிழைக்கும் செயல் என இந்து இயக்கத்தின் சர்வதேச தலைவர் ஸ்ரீ அருண் உபாத்யாய் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இந்த பிரச்சினையை இந்திய அரசு உணர்ந்து, இந்தியா வரும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டை முன்னேற்றவே பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டம் – ராஜபக்ஷ தரப்பு விளக்கம் !

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சட்டமூலம் பயங்கரவாதத்திற்கு எதிரானதே தவிர, ஜனநாயகத்திற்கு எதிரானதல்ல என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டம் உருவாக்கப்படவுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

“குறுகிய அரசியல் நோக்கத்திற்காக தொழிற்சங்கத்தினர் பொருளாதாரத்தை பாதிப்பிற்குள்ளாக்கும் வகையில் தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.

தங்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக மக்களையும், அரசாங்கத்தையும் இவர்கள் நெருக்கடிக்குள்ளாக்குகிறார்கள்.

நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் ஒழுக்கத்தை அடிப்படையாக கொண்டு செயற்பட வேண்டும் அதற்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்தால் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது.“ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வெளியேறும் வைத்தியர்கள் – திணறும் வைத்தியசாலைகள் !

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையிலிருந்து ஒன்பது வைத்தியர்கள் வெளியேறியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், ஆறு மருத்துவர்கள் இரண்டு ஆண்டுகள் மற்றும் ஐந்தாண்டுகள் விடுமுறை எடுத்துள்ளனர் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நான்கு சிறுவர் வைத்திய நிபுணர்கள் வெளியேறியமையினால், சிகிச்சைப் பிரிவை அண்மையில் மூடிவிட்டு, சிகிச்சை பெற்ற சிறுவர் நோயாளர்கள் வேறு பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் பிரிவுக்கு சொந்தமான சிறுவர் பிரிவு மூடப்பட்டமையால் மருத்துவ மாணவர்கள் மருத்துவப் பயிற்சி பெறும் வாய்ப்பையும் இழந்துள்ளனர்.

இது தொடர்பில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் துலான் சமரவீரவிடம் கேட்டபோது, ​​விசேட வைத்தியர்கள் வெளியேறியுள்ளதாகவும், மற்றுமொரு குழு வைத்தியர்கள் சென்றுள்ளதாகவும், எனினும் எத்தனை பேர் என கூற முடியாது எனவும் தெரிவித்தார்.

கணவன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சிறையில் – விபச்சாரத்துக்கு வராத 22 வயது மனைவி மீது தாக்குதல் !

விபசாரத்தில் ஈடுபட வராத காரணத்தினால் இளம் பெண் மீது தாக்குதல் நடத்தி அவரது கையடக்கத் தொலைபேசியைக் பறித்துச் சென்ற விபசார விடுதியின் உரிமையாளரும் மற்றுமொரு பெண்ணும் கைது செய்யப்பட்டதாக வந்துரம்ப காவல்துறையினர் தெரிவித்தனர்.

அம்பலாங்கொட, ரன்டம்பே மற்றும் உரகஹா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பலாங்கொடை ரன்டம்பே பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த விபசார விடுதி பராமரிக்கப்பட்டு வருகிறது.

விபசார விடுதியை நடத்தி வந்த பெண் 52 வயதுடையவர் எனவும் தாக்குதலுக்கு இலக்கான பெண் 22 வயதுடையவர் எனவும் அவர் இந்த விபசார விடுதியில் சுமார் ஒரு மாத காலமாக பணிபுரிந்து வந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

தாக்குதலுக்கு உள்ளான பெண் காவல்துறையில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். வந்துரம்பா காவல் நிலைய ஆய்வாளர் ஐ.டி. சி. கிரிஷாந்த, யூ.ஓ.பி. என்.ஏ அமரதுங்க, கே.பி.ஓ.எஸ். 5313 துஷாரி மற்றும் பி.ஓ. 28869 திலகரட்ன ஆகியோரால் குறித்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் கணவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சிறையில் உள்ளதால் அவரை பார்க்க சென்ற போது விபசார விடுதியின் உரிமையாளர் அவருடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். பின்னர் விபசார விடுதியின் உரிமையாளர் அவருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி அந்த பெண்ணை அழைத்துச் சென்று விபசாரத்தில் அமர்த்தியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாது – அரசாங்கம்

பொருளாதார மேம்பாட்டுக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் தடையான போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பேருவளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் எடுத்த கடுமையான தீர்மானங்களின் பயனை நாட்டு மக்கள் தற்போது பெற்றுக்கொண்டுள்ளார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

பொருளாதார முன்னேற்றத்தின் பயனை மக்களுக்கு நிச்சயம் வழங்குவோம் எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சிகள் மாத்திரம் வலியுறுத்துகின்றன.

நாட்டு மக்கள் தேர்தலை கோரவில்லை மாறாக பொருளாதார நெருக்கடிக்கு தீர்வினை கோருகிறார்கள்.

பொருளாதாரம் ஸ்தீரமடைந்த பின்னர் எந்த தேர்தலையும் நடத்தலாம், எவரும் போட்டியிடலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக போராட்டங்களுக்கு எதிரான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

ஜனநாயகம் என்ற ரீதியில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் உண்மையில் ஜனநாயக போராட்டமா? என்பதை மக்கள் ஆராய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களாணையுடன் ஆட்சிக்கு வர முடியாத தரப்பினர் போராட்டங்கள் ஊடாக ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற முயற்சித்தார்கள்.

அது பாரதூரமான விளைவை ஏற்படுத்தியது. மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான போராட்டங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொலிஸ் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

நீர் மற்றும் மின்சார கட்டண அதிகரிப்புக்கு எதிராக அம்பாறை கொனகொல்ல சந்தியில் தேசிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு பணி இடைநிறுத்தப்பட்டவர் அம்பாறை வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 26ஆம் திகதி கொனகொல்ல சந்தியில் அரசாங்கத்துக்கு  எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிவில் உடை அணிந்து விடுமுறை அறிவித்தலின்றி கலந்து கொண்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் 5 ஆம் திகதி புதன்கிழமை முதல் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுலா வந்த போலந்து பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம் – 73 வயது முதியவர் கைது !

பொலன்னறுவையில் உள்ள தொல்பொருள் இடங்களைப் பார்வையிடச் சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பெண் பயணி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இடம்பெற்று சில மணித்தியாலங்களின் பின்னர் அதே தொல்பொருள் பிரதேசத்திலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலன்னறுவை சுற்றுலா பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் சுற்றுலாப் பயணிகளுக்கு பொருட்களை விற்பனை செய்பவர் என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.  பொலன்னறுவை ஹத்தமுனாபாறை பிரதேசத்தில் வசிக்கும் 72 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

போலந்து பிரஜையான 43 வயதுடைய இந்தப் பெண், பொலன்னறுவை பூஜை செய்யும் ஒன்றில்  வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக  பொலிஸில் செய்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் – மீள்பரிசீலனை செய்யுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசுக்கு அறிவுறுத்தல் !

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் பிரிவு 3 (1) இல் குறிப்பிடப்பட்டுள்ள பயங்கரவாதத்தின் வரையறையை மறுபரிசீலனை செய்யுமாறும், வரையறைக்குள் வரும் செயல்களை தெளிவுபடுத்துவதற்கும் சுருக்குவதற்கும் குறிப்பிட்ட திருத்தங்களை பரிந்துரைக்குமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று ஒரு அறிக்கையில், பயங்கரவாதத்தின் வரையறை நீண்ட காலமாக ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக உள்ளது என்றும், வரையறையின் பரந்த நோக்கம் இந்த விடயத்தை சிக்கலாக்குகிறது என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சட்டப்பூர்வ கருத்து வேறுபாடுகள் மற்றும் உண்மையான பயங்கரவாதச் செயல்களை வேறுபடுத்திப் பார்ப்பதை இந்த சட்டமூலத்தில் உள்ள வரையறை கடினமாக்கும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்ப்பாளர்களையும் செயற்பாட்டாளர்களையும் குறிவைத்து மௌனமாக்குவதற்கு பயங்கரவாதத்தின் பரந்த வரையறையை அரசாங்கம் பயன்படுத்த முடியும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

“இது அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமையை மட்டுமல்ல, அரசியல் சாசனத்தில் உள்ள பறிக்க முடியாத உரிமையான பேச்சுரிமையையும் மீறுகிறது” என இலங்கை மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

“பயங்கரவாதம் என்பது ஒரு வன்முறைச் செயலாகும், இது வற்புறுத்துவதற்கும், பயமுறுத்துவதற்கும் அல்லது பயத்தை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது, மேலும் இது ஒரு கருத்தியல் நோக்கத்தை அடைவதற்கான ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், சட்டமூலத்தில் கருதப்படும் வரையறையின் பரந்த நோக்கம் அதன் பயன்பாட்டிற்கு வழிவகுக்கும். அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளில் தலையிடும் வழிகள், பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை கட்டுப்படுத்தும் வகையில்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பிரிவு 3(2) (f) இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அத்தியாவசிய சேவைகள் அல்லது பொருட்களில் தலையிடும் எவரும் பயங்கரவாதச் செயலாகக் கருதப்படுவார்கள். போராட்டம் அல்லது பேரணியில் பங்கேற்கும் எவரும், அது அமைதியானதாக இருந்தாலும், ஒரு பயங்கரவாதச் செயலாகக் கருதப்படலாம். இது மக்களின் எதிர்ப்பைக் குரல் கொடுக்கும் உரிமையை நசுக்க வழிவகுக்கும்,” என்று அது மேலும் குறிப்பிட்டுள்ளது.

இந்த வரையறை பேச்சு சுதந்திரம் மற்றும் இயக்க சுதந்திரத்தின் மீது ஒரு குளிர்ச்சியான விளைவைக் கொண்டிருப்பதைக் குறிப்பிடுகிறது.

“பயங்கரவாதி என அழைக்கப்படுவார்கள் என்ற பயத்தில், பொது நலன் சார்ந்த விடயங்களில் பேசவோ அல்லது தங்கள் கருத்தை வெளிப்படுத்தவோ பலர் பயப்படுவார்கள். இது ஒரு பயத்தின் சூழலை ஏற்படுத்தும், இது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல” என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.