17

17

பௌத்தமயமாக்கப்படும் நெடுந்தீவு – பின்னணியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா..?

இலங்கை தொல்பொருள் திணைக்களம், யாழ்ப்பாணம் நெடுந்தீவிலுள்ள வெடியரசன் கோட்டையை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகளுக்கு, இலங்கை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மறைமுகமாக ஆதரவு வழங்குகின்றதா..?  என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது அனுமதியின்றி சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட பதாதை ஒன்று வைக்கப்பட்டுள்ளது அதனை உடனடியாக அகற்றுமாறு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரை அகற்றப்படாமையே இருக்கின்றது.

ஆகவே தொல்பொருள் திணைக்களத்தின் இந்த செயற்பாடுகளுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த பௌத்த மயமாக்கல் கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கயான் விக்ரமசூரியவை தொடர்பு கொண்டு வினவிய போது,  இந்த அறிவித்தல் பலகை தொல்பொருளியல் திணைக்களத்தின் அறிவுறுத்தலின் பேரிலேயே இலங்கை கடற்படையினரால் வைக்கப்பட்டது என உறுதிப்படுத்தியுள்ளார்.

“போதைப்பொருள் தொடர்பாக சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.” – நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ

போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் தொடர்புடையவர்களைத் தண்டிப்பது தொடர்பான சட்டங்களில் சில சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுமக்களால் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

‘போதைப்பொருள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் பழிவாங்கும் காரணங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே இது தொடர்பில் கடுமையான கண்காணிப்பு நடைமுறைப்படுத்தப்படும். போதைப்பொருள் தொடர்பான சில மாதிரிகள் எப்போதாவது தவறாக இருக்கலாம்.

ஆனால், சில நேரங்களில், பொலிஸ்துறை அனுப்பிய கிட்டத்தட்ட 20 முதல் 30 சதவீதமான மாதிரிகள் தவறானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. போதைப்பொருள் அல்லாத பொருட்கள்கூட போதைப்பொருள் மாதிரியாக எடுக்க அனுப்பப்படுகின்றன.

எனினும் இந்த பொருட்களுடன் சந்தேகத்துக்குரியவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுகின்றபோது அவர் விளக்கமறியலுக்கு அனுப்பப்படுகிறார்.

சில மாதங்களுக்கு பின்னரே அவர் வைத்திருந்தது போதைப்பொருளல்ல என்ற சோதனை முடிவு கிடைக்கிறது. இதிலிருந்து சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவது தெளிவாகத் தெரிகிறது. எனவே இந்த சட்டத்தில் சில சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்’ என கூறினார்.

11ஆம் வகுப்பு மாணவிக்கு நிர்வாண படங்களை அனுப்பிய பாடசாலை பிரதிஅதிபர் கைது !

அத்தனகல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் 11 ஆம் வருட மாணவி ஒருவருக்கு தனது நிர்வாண புகைப்படங்களை வட்ஸ்அப் ஊடாக அனுப்பியதாக கூறப்படும் பாடசாலையின் பிரதி அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.

47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாட்ஸ்அப் செயலி மூலம் மாணவியிடம் தனது நிர்வாணத்தை காட்டுவது மட்டுமின்றி, பாடசாலை நாட்களில் குறித்த மாணவியை அலுவலகத்துக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியமையும் விசாரணக்களில் தெரிய வந்துள்ளதாக  பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக அரிசி வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை !

மலையக பகுதிகளில் உள்ள ஆரம்பக் கல்வி பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக அரிசி வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (17.03.2023) கைச்சாத்திடப்பட்டது.

அரச சார்பற்ற நிறுவனமான ´Good Neighbors International’ இத்திட்டத்துக்கான பங்களிப்பை வழங்குகின்றது.

இதன்படி மலையகத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஆரம்ப பிரிவு பாடசாலைகளுக்கு ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி வழங்கப்படவுள்ளது.

புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். இரு தரப்புக்கும் இடையிலான உடன்படிக்கையே இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் தலைமையின் கீழ் அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, மாணவர்களின் இடைவிலகளை தடுப்பதற்காகவும், அவர்களை ஊக்குவிக்கும் நோக்குடனே இத்திட்டம் ஆரம்பமாகின்றது.

அதேவேளை, மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்களில், இலவச சத்துணவு வேலைத்திட்டமும் சிறார்களுக்காக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கான வேலைத்திட்டத்தையும் உலக வங்கி உதவியுடன் ஜீவன் தொண்டமான் முன்னெடுத்தார் என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அமைச்சர் ஜீவன் தொண்டமான், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், அமைச்சரின் அதிகாரிகள், புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனத்தின் ‘Good Neighbors International’ முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணத்தில் 1800க்கும் அதிகமான கர்ப்பிணிகள் வறுமை நிலையில் !

யாழ். மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமை நிலையில் உள்ளதாக யாழ்.மாவட்ட செயலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா இடர் காலத்துக்குப் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நிலைமை காரணமாக பல கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 370 கர்ப்பிணிகள் உள்ளனர். பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் 226 கர்ப்பிணிப் பெண்களும், தெல்லிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் 139 கர்ப்பிணிகளும், யாழ்ப்பாண பிரதேச செயலகப் பிரிவில் 138 கர்ப்பிணிகளும்,கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவில் 128 கர்ப்பிணிகளும் சாவகச்சேரி பிரதேச செயலகப் பிரிவில் 118 கர்ப்பிணிகளும் உள்ளனர்.

அதேபோன்று உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் 117 கர்ப்பிணிகளும், மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவில் 98 கர்ப்பிணிகளும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 97 கர்ப்பிணிகளும், நல்லூர் பிரதேச செயலகப் பிரிவில் 91 கர்பிணிகளும் , காரைநகர் பிரதேச செயலகப் பிரிவில் 40 கர்ப்பிணிகளும் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர்.

மேலும் வேலணை பிரதேச செயலகப் பிரிவில் 49 கர்ப்பிணிகளும் ஊர்காவற்றுறை பிரதேச செயலகப் பிரிவில் 25 கர்ப்பிணிகளும் ,நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் 21 கர்ப்பிணிகளும் ஆக 1814 பேர் வறுமை நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதே நேரம் அரசாங்கத்தினால் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் 2ஆயிரம் ரூபா கொடுப்பனவு 8 மாதங்களுக்கு மேலாக வழங்கப்படாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் மந்தபோசனை காரணமாக பிறந்து 50 நாட்களே யான் கைக்குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவமும் பதிவாகியுள்ளது.