04

04

இலங்கையின் தேசிய பாதுகாப்பை பாரிய அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் அமெரிக்கா – உதய கம்மன்பில

இலங்கைக்கு கிடைக்கப் பெறும் சகல புலனாய்வு தகவல்களையும், அமெரிக்காவுடன் பகிர்ந்துக் கொள்ளும் வகையில் ‘புலனாய்வு தகவல் பரிமாற்றல் மத்திய நிலையம்’ ஒன்றை ஸ்தாபிக்க அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவிததுள்ளார்.

கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் கூட்டணி காரியாலயத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை வந்த அமெரிக்காவின் சி.ஐ.ஏ.பிரதானி வில்லியம் பேர்ன் உள்ளிட்ட 22 பேர் அடங்கிய குழுவினர் இலங்கையின் தேசிய பாதுகாப்பை பாரிய அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் நான்கு பிரதான நிபந்தனைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக அவர் கூறினார்.

அதில், இலங்கைக்கு கிடைக்கப் பெறும் சகல புலனாய்வு தகவல்களையும், அமெரிக்காவுடன் பகிர்ந்துக் கொள்ளும் வகையில் ‘புலனாய்வு தகவல் பரிமாற்றல் மத்திய நிலையம் ‘ஒன்றை ஸ்தாபித்தல், இரண்டாவது விஞ்ஞான பூர்வ குடியகழ்வு கட்டுப்பாட்டு முறைமையை இலங்கை விமான நிலையங்களில் ஸ்தாபித்தல், மூன்றாவது இலங்கையுடன் தொடர்புகளை மேற்கொள்ளும் வெளிநாட்டு தொலைபேசி வலையமைப்பு தொடர்பான தகவல்களை அமெரிக்காவுடன் பகிர்ந்துகொள்ளல் மற்றும் சோபா ஒப்பந்தத்தை விரைவாக கைச்சாத்திடல் உள்ளிட்ட நான்கு பிரதான நிபந்தனைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக கம்மன்பில தெரிவித்தார்.

முன்வைக்கப்பட்ட இந்த நிபந்தனைகளை மீள்பரிசீலனை செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரச தலைவர்களுக்கு வழங்காத உயர்பட்ச பாதுகாப்புடன் கடந்த மாதம் 14ஆம் திகதி, அமெரிக்காவின் 22 முதனிலை பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சிறுவர்கள் மத்தியில் போதைப்பொருள் பரவுவதை தடுக்க அதிக கவனம் செலுத்துங்கள் – எஸ்.பி. திஸாநாயக்க

சிறுவர்கள் மத்தியில் போதைப்பொருள் பரவுவதை தடுப்பது மற்றும் பெருந்தோட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை தடுப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி. திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இவ்வாறான செயல்களில் ஈடுபடும் நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு வேண்டிய நடவடிக்கையினை எடுக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (3) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டபோதே, அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

சிறுவர்களை இலக்கு வைத்து சந்தையில் ஒரு வகையான பாக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அது போதைப்பொருள் என குறிப்பிடப்படாவிட்டாலும், சிறுவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கக்கூடியது என பொலிஸ் அதிகாரியொருவர் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றியும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை இதுவரை 43 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

“பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் வகையிலேயே வரித்திருத்தம் அமைய வேண்டும்.” – சர்வதேச நாணய நிதியம்

பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் வகையிலேயே வரித்திருத்தம் அமைய வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கிளையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் வகையிலேயே வரித்திருத்தம் அமையப்பெற வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக் கிளையின் சிரேஷ்ட பிரதானி Peter Breuer, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை கிளையின் தலைமை அதிகாரி Masahiro Nozaki ஆகியோர் ஒன்றிணைந்த அறிக்கையொன்றை விடுத்துள்ளனர்.

அரசாங்கத்தின் செலவுகளை ஈடு செய்வதற்கு புதிய வருமான வரி உதவி செய்யும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நியமங்களுக்கு அமையவே புதிய வருமான வரி அமைந்துள்ளதாக, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக் கிளை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வரி சீர்திருத்தம் தற்போதுள்ள நிலைமையை சீர் செய்ய உதவும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“நீண்டகாலமாக இடம்பெற்று வரும் இழுவை மடி படகுகளின் பிரச்சினை ” – இலங்கை – இந்திய மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை!

இலங்கை இந்திய மீனவர்களிடையே நீண்டகாலமாக இடம்பெற்று வரும் இழுவை மடி படகுகளின் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று மாலை மூன்று மணியளவில் கச்சைதீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

இதனைதொடர்ந்து இந்திய மீனவ பிரதிநிதிகள் தரப்பில் இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகினை விடுத்து பிறதொழில்களுக்கு தம்மை அனுமதிக்க வேண்டும் எனவும் தமது படகுகள் விடுவிக்கப்பட வேண்டும் மற்றும் மீனவர்களை மனித உரிமைசார் அடிப்படையில் கூலிக்காக வரும் அவர்களை கைது செய்யாது விடுவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து கருத்து தெரிவித்த இலங்கை மீனவர்கள் 20வருடங்களாக உங்களுடன் பேசி வருகின்றோம் எந்தவித பிரியோசனமும் இல்லை எங்கள் நிலைமைகளை புரிந்து கொள்ளுங்கள். ஆக இலங்கை மீனவர்களாக இந்திய மீனவர்களை எக்காரணம் கொண்டும் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய விடமாட்டோம் என தெரிவித்தனர்.

இதே நிலையில் ஒரு மீனவர் எமக்குரிய தீர்வு ஒரு கிழமைக்குள் வழங்கபடாவிடில் அமைச்சரதும் துணைத்தூதுவரதும் காரியாலயத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்வோம் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதனையடுத்து கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிரவரும் செவ்வாய்க்கிழமை இங்கு கலந்துரையாடபட்ட விடயங்கள் தொடரபாக அமைச்சரவையில் கலந்துரையாடுவதாக தெரிவித்து கலந்துரையாடலை நிறைவுறுத்தினார்.

இதன் பொழுது இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,மன்னார் ,கிளிநொச்சி,யாழ் மாவட்ட நீரியல் வள திணைக்கள உதவி பணிப்பாளர்கள், வடமாகாண கடற்படை தளபதி அனுர தென்னகோன்,பா.ஜ.க தமிழக மீனவ தலைவர் எம்.சி முனுசாமி உட்பட்ட மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

‘வடபகுதி கடல் வளத்தை இந்தியாவிற்கு விற்காதே ! – யாழில் போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினரால் யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக நேற்றைறைய தினம் (வெள்ளிக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய பேருந்து நிலையம் முன்பாக காலை 10. 30 மணியளவில் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின் கட்டண உயர்வை உடன் நிறுத்து, பொருட்களின் விலையை குறை, உள்ளூராட்சி தேர்தலை உடன் நிறுத்து, வடபகுதி கடல் வளத்தை இந்தியாவிற்கு விற்காதே, உழைக்கும் மக்களை சுரண்டாதே என பல்வேறு கோசங்களை போராட்டத்தின் போது எழுப்பினர்.

நாடு பிளவுபட்டால் அது நாட்டின் ஒற்றையாட்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

“நாடு என்ற வகையில் நாம் ஒரு தனியாக எழுந்து நிற்க வேண்டுமாயின், இந்த நாட்டில் உள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம், பர்கர் போன்று, அனைத்து மதத்தினரும் இலங்கையர்களாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலை விமானப்படை தளத்தில், இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விமானப்படைக்கு தெரிவான கெடட் உத்தியோகத்தர்கள் பயிற்சி பெற்று வெளியேறும் அணிவகுப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,

“இன்று நீங்கள் அதிகாரிகளாகும்போது, அரசியலமைப்பை நிலைநிறுத்துவதாக சத்தியப்பிரமாணம் செய்தீர்கள்.

விமானப் படையின் பதவிப் பிரமாணமும் செய்து கொண்டீர்கள். இந்த இரண்டு பிரமாணங்களிலும் குறிப்பிடப்பட்டிருப்பது உங்களின் முதன்மையான கடமை மற்றும் பொறுப்புமாகும்.

அரசியலமைப்பைப் பாதுகாப்பதும், நாட்டைப் பாதுகாப்பதும் உங்கள் பொறுப்பாகும். ஏனெனில் நாடு இல்லாமல் அரசியலமைப்பு இல்லை. ஒரு நாடு இல்லாமல், அரசியலமைப்பு வெறும் காகிதத் துண்டாகவே இருக்கும்.

ஒரு நாடு இருப்பதாலேயே அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. நீங்கள் அளித்த சத்தியப் பிரமாணத்தின்படி, இந்நாட்டு அரசியலமைப்புக்கும், சட்டத்திற்கு உட்பட்டு செயல்படவும், குடியரசிற்கு விசுவாசமாகச் செயல்படவும் உறுதியளித்துள்ளீர்கள்.

நமது நாட்டின் அரசியலமைப்பின் முதல் சரத்து “இது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால், அரசியலமைப்பு இருப்பது குடியரசுக்காகத்தான். நாட்டின் ஒற்றையாட்சி பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அத்தியாயம், மக்கள் இறையாண்மையை செயல்படுத்தும் நிறுவனங்கள், தேசியக் கொடி மற்றும் நமது தேசிய கீதம் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. மற்ற அனைத்து அத்தியாயங்களும் இவற்றைப் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்லவே உள்ளன.

அப்படியானால், நாம் அதன்படி செயல்பட வேண்டும். முதலில் நாட்டை பாதுகாக்க வேண்டும். அதற்கு நாம் ஒரு இறையாண்மை, சுயாதீனமான சுதந்திர நாடாக இருக்க வேண்டும்.

இறையாண்மை, சுயாதீனமான சுதந்திர நாட்டை அச்சுறுத்தும் வகையில் எதுவும் நடக்க இடமளிக்கக்கூடாது. அது நமது முக்கிய கடமை. அங்கு நாட்டின் ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும். ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க, இந்த நாட்டின் பிரதேச ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும்.

நாட்டின் பிரதேச ஒருமைப்பாடு 1980 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை அச்சுறுத்தலுக்கு உள்ளானது. அச்சந்தர்ப்பத்தில் முப்படையினரும் பொலிஸாரும் உயிர்த் தியாகம் செய்து அதனைப் பாதுகாத்தனர்.

ஒற்றையாட்சியைப் பாதுகாக்க வேண்டுமானால் நாட்டு மக்களின் ஐக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும்.

நாடு என்ற வகையில் நாம் ஒரு தனியாக எழுந்து நிற்க வேண்டுமாயின், இந்த நாட்டில் உள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம், பர்கர் போன்று, அனைத்து மதத்தினரும் இலங்கையர்களாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

நாம் அனைவரும் நமது கலாசாரத்தையும் மதத்தையும் பாதுகாக்க வேண்டும். அவ்வாறில்லாமல் நாடு பிளவுபட்டால் அது நாட்டின் ஒற்றையாட்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்.

அதேபோன்று, நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை, நீதித்துறை என்ற நிறுவனங்களினால் இலங்கையின் சட்டபூர்வ தன்மை  நிறுவப்பட்டுள்ளது. சட்டத்துறை இயற்றும் சட்டங்களை நடைமுறைப்படுத்த நீதித்துறை செயல்படுகிறது.

இந்த அனைத்து நிறுவனங்களாலும் இலங்கையின் அரசியலமைப்பைப் பாதுகாப்பது தொடர்பான விடயங்கள் நடைபெறுகின்றன. எனவே, இந்த நிறுவனங்களைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும்.

ஒரு அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறது அல்லது மாற்றப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் இல்லாமல் ஆட்சி மாற்றம் சாத்தியமில்லை. வீதிகள் என்பது நாடாளுமன்றத்திற்கான மாற்றுவழியல்ல.

கடந்த ஜூன் மாதம் நாடாளுமன்றத்தைப் பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

நாடாளுமன்றம் இல்லாத நாடுகள் அராஜக நாடுகளாக மாறலாம். ஏனெனில் நாடாளுமன்றம் இல்லையென்றால் சட்டங்களை இயற்றும் அதிகாரம் இல்லாமல் போய்விடும்.

அதேபோன்று, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நாடுகளும் அராஜகமாகின்றன. எனவே, ஒரு நாட்டின் அரசியலமைப்பையும் பொருளாதாரத்தையும் பாதுகாக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.

கடந்த சில நாட்களாக, இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்ல செய்திகளை கொண்டு வருவதற்காக, வெளிநாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பல அமைப்புகளுடன் கலந்துரையாடினோம்.

நாடும் நீங்களும் விரைவில் அதன் பிரதிபலன்களைப் பெறுவீர்கள். பொருளாதாரத்தை இழந்தால் நாம் நாட்டை இழப்போம். நாட்டின் அரசியலமைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட அடிப்படை நிறுவனங்கள் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டும் பாதுகாக்கப்பட வேண்டும்.

இது உங்களின் பொறுப்பு ஆகும். இவை அனைத்தும் பாதுகாக்கப்பட்டால், உங்களுக்கு ஒரு நாடு இருக்கும். மேலும், அரசியலமைப்பு வழங்கிய ஜனநாயகமும் பாதுகாக்கப்பட வேண்டும்.

அரசியலமைப்பும், நாடும் ஒன்றாகவே முன்னோக்கிச் செல்கின்றன. அதனைப் பிரிக்க முடியாது.“ எனத் தெரிவித்துள்ளார்.

13 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது !

அநுராதபுரம், பூஜா நகருக்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயதுடைய சிறுமியை வன்புணர்வு செய்த 19 வயது இளைஞன் ஒருவர் நேற்று (02) கைது செய்யப்பட்டதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

அனுராதபுரம் தன்னாயம்குளம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது வீட்டிற்கு அருகிலுள்ள அத்தையின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது, ​​மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் தன்னை யாருமற்ற வீட்டிற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

குறித்த சிறுமி அனுராதபுரம் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் மார்ச் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.