March

March

எதிர்வரும் நான்கு வருடங்களில் 330 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் !

எதிர்வரும் நான்கு வருடங்களில் 330 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தேசிய மின் உற்பத்திக்கு 2300 மெகாவோட் மின்சாரத்தை சேர்க்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிசக்தி எரிசக்தி அமைச்சில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அரச நிறுவனங்களால் அனுமதிக்கப்படும் திட்டங்களை விரைவுபடுத்தவும், அங்கீகாரம் பெற முடியாத திட்டங்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக உரிமங்களை இரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கிரேக்கத்தில் இரு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 26 பேர் பலி !

கிரேக்கத்தில் இரு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி இதுவரை 26 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவத்தில் சுமார் 100 பேர்கள் வரையில் காயமடைந்துள்ளதாகவும், பலர் உயிருக்கு போராடுவதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், தடம் புரண்ட பெட்டிகளில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்ட நிலையில், பயந்துபோன பயணிகள் அதில் சிக்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஏதென்ஸுக்கு வடக்கே சுமார் 235 மைல் தொலைவில் உள்ள டெம்பே என்ற பகுதியிலேயே  நள்ளிரவில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் சரக்கு தொடருந்து மற்றும் பயணிகள் தொடருந்து என்பன மோதியதில் மூன்று பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறார்கள் உட்பட மொத்தம் 85 பயணிகள் காயங்களுடன் தப்பியுள்ளதாக இதுவரை வெளியான தகவலில் தெரிய வந்துள்ளது.

குறித்த விபத்தில் சுமார் 25 பேர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறுகின்றனர். பயணிகள் தொடருந்தில் 350 பயணிகளுக்கும் மேல் சம்பவத்தின் போது பயணித்துள்ளனர்.

தொடருந்துகள் இரண்டும் பலமாக மோதியுள்ளது என்றே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், மோதலின் தீவிரம் காரணமாக முதல் இரண்டு பெட்டிகள் சிதைந்து போயுள்ளது.

தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் களமிறக்கப்பட்டு தீவிர நடவடிக்கையில் உள்ளனர். அதுமட்டுமின்றி, இராணுவத்தினரையும் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 30 நோயாளர் காவு வண்டிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள. மோசமான இந்த விபத்துக்கான காரணம் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையிலிருந்து ஜனாதிபதி ரணில் விடுதலை – மைத்திரிபாலவின் மனு நிராகரிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்கல் செய்த வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை கொழும்பு மாவட்ட நீதிபதி மகேஷ டி சில்வா அறிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததால், தங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் முன்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​ரணில் விக்கிரமசிங்க சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் பூர்வாங்க ஆட்சேபனையை முன்வைத்ததுடன், தமது கட்சிக்காரர் தற்போது ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதால், அரசியலமைப்பின் கீழ் அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என சுட்டிக்காட்டினர்.

அதன் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தற்போது வழக்குத் தொடர முடியாது என மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்து, பின்னர் இந்த உத்தரவை பிறப்பித்தது.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை 21,000 ரூபா கட்டணத்திற்கு உட்படுத்தப்பட்டு மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சஞ்சீவ மொரேஸ் மற்றும் பிராங் குணவர்தன ஆகிய  இருவரடங்கிய நீதிபதிகள்  குழு முன்னிலையில் புதன்கிழமை (1) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஒரே ஆண்டில் வேலையை இழந்த 5 இலட்சம் இலங்கையர்கள் !

2022 ஆம் ஆண்டில் இலங்கையில் குறைந்தது 5 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது

அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்றும், கைத்தொழில் மற்றும் சேவைத் துறைகளைச் சேர்ந்தவர்கள் எனவும் உலக வங்கி கூறுகிறது.

இலங்கையில் ஏற்கனவே வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்கள் என வகைப்படுத்தப்பட்டவர்களின் வாழ்க்கைச் செலவில் 65% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக வங்கிக் குழுமத்தின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான பிரதித் தலைவர் மார்டின் ரைஸர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வறுமை கோட்டு வரம்புக்கு அப்பாற்பட்டவர்களின் வாழ்க்கைச் செலவில் 57 சதவீதம் அதிகரித்துள்ளது. இது அனைத்து இலங்கையர்களுக்கும் குறிப்பிடத்தக்க நலன் இழப்பை எடுத்துக்காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்

நாட்டின் நெருக்கடி நிலை பற்றிய ஒரு கட்டுரையில், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு பல ஆண்டுகளாக தவறான பொருளாதார நிர்வாகம், பலவீனமான நிர்வாகம், மோசமான கொள்கை தேர்வுகள் மற்றும் கொவிட் 19 தொற்றுநோய் மற்றும் ரஷ்யாவின் யுக்ரைன் ஆக்கிரமிப்பு போன்ற வெளிப்புற நிகழ்வுகளின் தாக்கங்கள் காரணமாக இருப்பதாக ரைஸர் கூறினார்.

நெருக்கடியின் ஆழம் இலங்கைக்கு புதிய அபிவிருத்தி மாதிரி தேவை என்பதை தெளிவுபடுத்தியுள்ளதாக ரைஸர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், மீட்புக்கான பாதை சவாலானது என்றும், தேவையான நிதி சீரமைப்பு நடவடிக்கைகள் வலிமிகுந்ததாக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இலங்கையின் கடன்கொடுநர்களிடமிருந்து கடன் நிவாரணம் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் புதிய நிதியுதவி ஆகியவை, மக்கள் பொறுமையை இழக்காமல் இருப்பதையும் மாற்றத்திற்கான வாய்ப்பை இழக்காமல் இருப்பதையும் உறுதிப்படுத்துவது அவசரமானது என்றும் தெரிவித்துள்ளார்.