28

28

“பலாலியைச் சுற்றியுள்ள காணிகளை மக்களுக்கு கொடுப்பது அபாயகரமானது.” – சரத் வீரசேகர

யாழ்ப்பாணம் பலாலியைச் சுற்றியுள்ள காணிகளை விடுவிக்க முன் ஆலோசனை பெறவேண்டும் என சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

பலாலியைச் சூழவுள்ள காணிகளை பொது மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு முன்னர் பாதுகாப்புப் படைத் தலைவர்களிடம் ஆலோசனை பெறுமாறு கோரியுள்ளார்.

அவ்வாறு ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளாமல் குறித்த பகுதிகளில் உள்ள காணிகளை பகிர்ந்தளிப்பது அபாயகரமானது எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

 

“முட்டை பிரச்சினைக்கு தீர்வு தராவிட்டால் சுதந்திர தினத்தில் கோழிகளின் சத்தமே கேட்கும்.” – அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம்

75ஆவது சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதிக்குள் தற்போதைய முட்டை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், இல்லையெனில் கோழிகள் மற்றும் சேவல்களின் சத்தம் மக்களுக்கு கேட்கும் என அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த அரசாங்கத்தால் பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டால், கோழி மற்றும் முட்டைகளுடன் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு அணிவகுத்துச் செல்வோம் என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“நாட்டின் முட்டைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக பொது நிறுவனங்களுக்கான குழு (கோப்) அதன் வரலாற்றில் முதல் முறையாக நுகர்வோர் விவகார ஆணையத்தை சந்திக்க வேண்டியிருந்தது என்பதைக் கேட்பது வெட்கக்கேடானது,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முட்டை பிரச்சினையை தீர்க்காமல் நாட்டை கட்டியெழுப்புவதில் இந்த அரசியல்வாதிகள் எவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்பது கேள்வியாக உள்ளது.

“அவர்கள் அரசியலமைப்புகள் மற்றும் பல பெரிய தலைப்புகளைப் பற்றி பேசுகிறார்கள், ஆனால் முட்டை பிரச்சினையை தீர்க்க முடியாது.”

எவ்வாறாயினும், பெப்ரவரி 4 ஆம் திகதிக்குள் இந்த முட்டைப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், துப்பாக்கி வேட்டுக்களின் மத்தியில் கோழிகள் மற்றும் சேவல்களின் சத்தையும் மக்கள் கேட்கக்கூடும் என்றும் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் எம்.எம்.மொஹமட்டுக்கு பதவியை இராஜினாமா செய்யுமாறு நேற்று (27) இரவு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக கொலை மிரட்டல் வந்த எஸ்.பி. திவரத்னவுக்கு மீண்டும் ஒருமுறை குறுஞ்செய்தி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட உறுப்பினர்களான பத்திரன மற்றும் திவரத்ன ஆகியோருக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு கொலை மிரட்டல் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்.இளவாலையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் – ஒருவர் பலி – 17 வயது சிறுவன் கைது !

யாழ். இளவாலையில் ஒரே கிராமத்தை சோ்ந்த இரு தரப்புக்கிடையே நடந்த தனிப்பட்ட மோதல் சம்பவத்தில் ஒருவா் உயிாிழந்துள்ளதுள்ள நிலையில், சம்பவத்துடன் தொடா்புடைய இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது,

இளைவாலை – பொியவிளான் பகுதியில் வீதியால் வடை விற்பனை செய்யும் வண்டிலை இளைஞா்கள் சிலா் தள்ளிச் சென்றுள்ளனா்.

இதன்போது அதே பகுதியை சோ்ந்த மற்றொரு இளைஞா் குழு துவிச்சக்கர வண்டியில் அவ்வீதியால் வந்திருக்கின்றது. இதன்போது இரு தரப்பிற்குமிடையே உருவான வாய்த்தா்க்கம் பின்னா் மோதலாக மாறியுள்ளது.

சம்பவத்தில் அதே கிராமத்தை சோ்ந்த புஸ்பராசா நிஷாந்தன் (வயது29) என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

எனினும் தனக்கு எதுவுமில்லை எனவும், தான் வைத்தியசாலையிலிருந்து சுயவிருப்பில் வெளியேறுவதாகவும் எழுதிக் கொடுத்துவிட்டு வீடு திரும்பியவா் வீட்டிற்கு சென்றதும் இரத்தமாக வாந்தி எடுத்துள்ளாா்.

பின்னா் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிாிழந்துள்ளாா். தலையில் பலமாக தாக்கியதாலேயே அவா் உயிாிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவத்துடன் தொடா்புடைய சந்தேகத்தில் 17 வயதான ஒருவரும், 25 வயதான ஒருவரும் இளவாலை பொலிஸாாினால் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இவா்களில் 17 வயதான நபரே மேற்படி தாக்குதல் மற்றும் கொலை சம்பவத்துடன் தொடா்புடைய பிரதான சந்தேகநபா் என பொலிஸாா் கூறியுள்ளனா். சம்பவம் தொடா்பாக மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸாா் மேற்கொண்டுள்ளனா்.

“சகோதரனுக்காக நாட்டின் அரசியலமைப்பையே மாற்றிய உலகின் ஒரே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ .” – உதய கம்மன்பில

“சகோதரனுக்காக நாட்டின் அரசியலமைப்பை மாற்றிய உலகில் ஒரே ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ இடம் பிடித்துள்ளார்.” என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

சுதந்திர மக்கள் கூட்டணியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை வெளியிடும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை பத்தரமுல்ல பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பல்வேறு நோக்கங்களுக்கு மத்தியில் நாட்டு மக்கள் 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினால். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷர்கள் தோல்வியடைவதற்கு குடும்ப ஆட்சி பிரதான காரணமாக அமைந்தது. ஆகவே 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு பாடம் கற்றுக்கொண்டிருப்பார்கள் என எதிர்பார்த்தோம். இருப்பினும் எமது நிலைப்பாடு இறுதியில் தவறானது.

2020 ஆம் ஆண்டுக்கு பின்னர் அமைச்சரவையில் ராஜபக்ஷர்கள் தான் அதிக ஆதிக்கம் கொண்டிருந்தார்கள்.சிரேஷ்ட அமைச்சர்கள் ராஜபக்ஷர்களின் இளவரசரான நாமல் ராஜபக்ஷவிடம் ஆலோசனை பெற வேண்டிய சூழலை கோட்டாபய ராஜபக்ஷ ஏற்படுத்தினார்.

அமைச்சரவையில் பொருளாதார துறைசார் நிபுணர்கள் அங்கம் வகித்த போதும் நிதி நிலைமை தொடர்பில் அடிப்படை தகைமை கூட இல்லாத பஷில் ராஜபக்ஷ நிதியமைச்சராக நியமிக்கப்பட்டதுடன் 55 அரச திணைக்களங்கள் அனைத்தும் அவரது பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது.

ராஜபக்ஷர்கள் அமைச்சரவை முழுமையாக ஆக்கிரமித்தமை தொடர்பில் வாராந்தம் இடம் பெறும் கட்சி தலைவர் கூட்டம் இரத்து செய்யப்பட்டது. அமைச்சரவை கூட்டம் ராஜபக்ஷர்களின் குடும்ப உறுப்பினர்களின் இரவு விருந்து உபசாரத்தின் ஊடாக எடுக்கப்பட்டது.

தவறான பொருளாதார தீர்மானங்கள் முழு நாட்டையும் சீரழிக்கும் என நாங்கள் எடுத்துரைத்ததை தொடர்ந்து நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தனது சகோதரரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் முறையிட்டார். சகோதரரின் தவறான ஆலோசனைகளை கேட்டு கோட்டாபய ராஜபக்ஷ எங்களை பதவி நீக்கினார்.எம்மை பதவி நீக்கி விட்டு மூன்று மாதத்திற்கு பின்னர் நாட்டை விட்டு தப்பிச் செல்லும் நிலை அவருக்கு ஏற்பட்டது.

ராஜபக்ஷர்களின் குடும்ப ஆதிக்கத்தினால் 69 இலட்ச மக்களின் அரசியல் தீர்மானம் சூன்யமாக்கப்பட்டது.போராட்டத்தின் ஊடாக ராஜபக்ஷர்களை மக்கள் புறக்கணித்தார்கள். ஆனால் ராஜபக்ஷர்களை பாதுகாக்கும் வகையில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.

ராஜபக்ஷர்களின் தவறான பொருளாதார கொள்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பின்பற்றுகிறார்.மக்கள் படும் துயரத்தை அவர் கண்டு கொள்ளவில்லை. ஏனெனில் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர் அல்ல. தேர்தலை நடத்தினால் படுதோல்வி அடைய நேரிடும் என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்கு அறிவார்.  அதனால் தான் தேர்தலை பிற்போட சூழ்ச்சி செய்கிறார்.கௌரவமான முறையில் செயற்பட்டால் இறுதி காலத்தை கௌரவமாக கழிக்கலாம் என்றார்.

“13 வந்தால் தமிழீழம் மலரும். இரத்த ஆறு ஓடும்.” – எச்சரிக்கிறார் விமல் வீரவங்ச

‘தான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற மமதையுடன் ஒவ்வொரு நாளும் வாய்க்கு வந்த மாதிரி கருத்துக்களை வெளியிடுகிறார்.” என உத்தர லங்கா சபாவின் தலைவரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால், நாடு பிளவுபடாது. எனவே இந்தத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படிச் செய்யாமல் இருக்க வேண்டுமானால், யாராவது 22ஆம் திருத்தத்தை கொண்டுவந்து 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்யவேண்டும் என நேற்றுமுன்தினம் நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்தக்கூட்டத்தை புறக்கணித்த விமல் வீரவன்சவிடம் அதிபரின் கருத்து தொடர்பில் செய்தியாளர்கள் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவுபட்டே தீரும். அது தமிழீழம் மலர வழிவகுக்கும். நாடெங்கும் மீண்டும் இரத்த ஆறு ஓடும். இப்படியான நிலைமை ஏற்படக் கூடும் என்று ஜனாதிபதிக்கு தெரியும்.

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இதனை பல தடவைகள் தெரிவித்து விட்டோம்.

தான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற மமதையுடன் ஒவ்வொரு நாளும் வாய்க்கு வந்த மாதிரி கருத்துக்களை வெளியிடுகிறார்.

சிங்கள மக்களையும், தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் ஏமாற்றும் நோக்குடனேயே ஜனாதிபதி செயற்படுகின்றார். ஆனால், சிங்கள மக்கள் விழிப்பாகவே இருக்கின்றார்கள்.

ஜனாதிபதி இவ்வாறு  நடைமுறைச்சாத்தியமற்ற கருத்துக்களைக் கூறி காலத்தை இழுத்தடிப்பார் என்று தெரிந்து தான் நாம் சர்வகட்சி கூட்டத்தை புறக்கணித்தோம்” – என்றார்.

“ஜனாதிபதியின் அதிகாரங்களை பயன்படுத்தி 13ஆம் திருத்தத்தை கொண்டு வருவேன்.” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று முன்தினம் (26) கொழும்பில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் அரசியல் கட்சித் தலைவர்களின் முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகாரம் தன்னிடம் இருப்பதால், நாட்டின் அரசியலமைப்பில் உள்ள 13 ஆம் திருத்தம் உட்பட்ட விடயங்களை தான் நடைமுறைப்படுத்தப் போவதாகவும், அவர் தெரிவித்திருந்தார்.

தனது இந்த நகர்வை எதிர்க்கும் தரப்புகள் முடியுமானால் 22ஆம் திருத்தத்தை கொண்டுவந்து 13ஆம் திருத்தத்தை அரசியல் அமைப்பில் இல்லாமல் செய்யலாம் எனவும் அவர் சீற்றத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள மாகாண சபைகளுக்கு, லண்டன் நகர சபைக்குள்ள அதிகாரங்கள் கூட கிடையாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

13ஆம் திருத்ததை அரசியலமைப்பில் வைத்துக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்தாமல் இருக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகளான ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் இந்தக் கூட்டத்தை புறக்கணித்திருந்த போதிலும் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ் மக்கள் விடுதலை கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

“போதைப்பொருள், கொலை, பாலியல் வல்லுறவு போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை.” – அமைச்சர் டிரான் அலஸ்

போதைப்பொருள், கொலை, பாலியல் வல்லுறவு போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே தனது தனிப் பட்ட கருத்து என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

போதைப்பொருள் பரவல் எந்த வகையிலேனும் கட்டுப் படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், போதைப்பொருள் வியாபாரத்தைக் கைவிடுமாறு போதைப் பொருள் கடத்தல்காரர்களிடம் கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்தார்.

போதைப்பொருள், கொலை, பாலியல் வல்லுறவு போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே தனது கருத்து எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.