19

19

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப் பாவனைக்கு அடிமையாகியிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை மரணம்!

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியான ஹெரோயின் போதைப் பாவனைக்கு அடிமையாகியிருந்த ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம், வரணி இயற்றாலையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை ராஜ்குமார் (வயது-37) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார். இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார்.

போதைப் பொருள் குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட இவர் , கடந்த 10ஆம் திகதி வயிற்று வலி காரணமாக யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

எனினும் சிகிச்சை பயனின்றி இவர் நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார் என மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறப்பு விசாரணைகளை யாழ். போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார். தொடர்ச்சியான ஹெரோயின் பாவனையே இவரது உயிரிழப்புக்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடந்த வாரம் வவுனியாவிலும் போதைக்கு அடிமையாகியிருந்த நபர் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லீம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சமூக நீதி ஆணைக்குழுவுடன் கைகோர்க்குமாறு ஜனாதிபதி ரணில் அழைப்பு!

முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சமூக நீதி ஆணைக்குழுவுடன் கைகோர்க்குமாறு முஸ்லிம் சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாடு தனது 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் அனைத்து சமூகங்களும் உண்மையான இலங்கையர்களாக ஒன்றிணைய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் (ACJU) 100 ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி, எந்தவொரு மதமும் அந்தந்த சமூகத்தை நவீனத்துவத்திற்கு வழிநடத்த வேண்டும் மற்றும் நவீன உலகத்திற்கு மாற்றியமைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பல்வேறு மதங்கள் பல்வேறு நம்பிக்கைகளை கொண்டிருந்தாலும், எந்த மதமும் வெறுப்பை வளர்க்கவில்லை என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

ACJU இன் 100ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு முத்திரையொன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.

கடந்த 75 வருடங்கள் பல்வேறு சமூகங்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டன என்றும், நாடு தனது 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் அனைத்து இலங்கையர்களும் அனைத்து பேதங்களையும் விடுத்து ஒரே இலங்கையின் பிரஜைகளாக ஒன்றிணையுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆதிவாசிகளின் பிரச்சினைகளை தீர்க்க புதிய சட்டமூலம் – அமைச்சர் விதுர விக்ரமநாயக்க

நாட்டின் ஏனைய சமூகத்தினர் அனுபவிக்கும் அனைத்து உரிமைகள் மற்றும் சலுகைகளை ஆதிவாசிகளும் பெற்றுக் கொள்ளும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (19) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆதிவாசிகளின் உரிமை தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் அனைத்து அரசாங்கங்களும் ஆதிவாசிகளினது பிரச்சினைகளுக்கு தீர்வு காண தவறிவிட்டது என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம்.  அந்த வகையில் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்னோடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேவேளை அவர்களை ஆதிவாசிகள் என்று கூறுவதிலும் பிரச்சினை உள்ளது. அவர்களும் இந்த நாட்டின் ஒரு சமூகம், எமது சகோதரர்கள் மூதாதையர்கள். அவர்களுக்கான அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

அதேபோன்று நாட்டில் பல அடிப்படை உரிமை இல்லாது போயுள்ள நிலையில்,
அவர்கள் அனைவரதும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். ஆதிவாசிகளின் சமூக பொருளாதார அரசியல் தேவைகளை பாதுகாப்பதற்கான சட்டம் மூலம் கொண்டுவரப்படும். அல்லது தற்போதுள்ள சட்டமூலத்தில் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

அதனை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது எமது எதிர்பார்ப்பு. அதே போன்று எமது நாட்டில் பல்வேறு சிறு குழுக்கள் காணப்படுகின்றன அந்த குழுக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அவற்றுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கு எமது அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றார்.

“கண்களை மூடிவிட்டு கழுத்தை வெட்டினேன்.” – பல்கலைக்கழக மாணவியின் கொலை தொடர்பில் காதலன் வாக்குமூலம் !

பல்கலைகழக மாணவியின் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள நபர் சம்பவம் இடம்பெற்ற விதம் குறித்த அதிர்ச்சி தகவல்களை பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட மாணவியுடன்  கல்விகற்ற மாணவன் பசிது சதுரங்க என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.  அவர் பின்வரும் தகவல்களை தெரிவித்தார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஆச்சரியமளிப்பதாக தெரிவித்துவிட்டு கண்ணை கட்டி கொலை குதிரைப்பந்தய திடலில் கொலை செய்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு முக்கிய விடயம் குறித்து  கதைக்கவேண்டும் என தெரிவித்து நான் அவரை குதிரைபந்தய திடலிற்கு அழைத்து வந்தேன். அதன் பின்னர் நான் அவருக்கு ஆச்சரியமளிக்க போவதாக தெரிவித்து விட்டு கண்ணை மூடிவிட்டு கழுத்தை வெட்டினேன் என அவர் தெரிவித்துள்ளார்.

சூட்டி நான் மனநோயாளி என எப்போதும் என்னை ஏசுவார். இது என்னை வேதனையில் ஆழ்த்தியது. சில அவசரமான விடயங்கள் கதைக்கவேண்டும் வா;  என தெரிவித்து அவரை கொழும்பு குதிரைபந்தய திடலிற்கு அழைத்து வந்தேன் ஒருமாதகாலமாக நான் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அவர் இன்னொருவரை காதலிப்பதை விரும்பாததால் இவ்வாறு செய்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2019 முதல் நான் உளநலபாதிப்பிற்காக  சிகிச்சை பெற்றுவந்துள்ளேன். 2020லேயே நான் அவரை  காதலிக்க ஆரம்பித்தேன். நான் கிசிச்சைபெறுவதை நான் அவருக்கு தெரிவிக்கவில்லை.  நான்கைந்து மாதங்களிற்கு முன்னர் அவருக்கு அது தெரிய வந்தது.  அவர் என்னுடனான உறவை நிறுத்த விரும்பினார்.  நிறுத்தினார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் அவர் முற்றாக மாறிவிட்டார். என்னை பைத்தியம் என அழைத்தார்: அவர் வேறு ஒரு உறவினால் அவ்வாறு மாறிவிட்டாரா..?  என நான் ஆராய்ந்தேன். ஆனால் அவருக்கு அவ்வாறான உறவு இருக்கவில்லை. நான் அவரை சந்தேகித்தேன் அவர் என்னை பைத்தியம் என அழைத்ததால் எனக்கு கடும் வேதனையேற்பட்டது.

பின்னர் வேறு ஒருவரையும் அவர் காதலிப்பதை விரும்பாததால் நான் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். வெல்லம்பிட்டி சந்தியில் வைத்து கத்தியை வாங்கினேன். கத்தியை மறைத்து வைத்தவாறு நான் வீட்டிலிருந்து சென்றேன். முதலாவது விரிவுரைக்கு பின்னர் விசேடமாக ஒரு விடயத்தை தெரிவிக்க வேண்டும் என்பதால் நான் சூட்டியை குதிரை பந்தய திடலிற்கு அழைத்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலில் அவர் மறுத்தார்.  பின்பு நான் வற்புறுத்தியதால் அவர் இணங்கினார். நாங்கள் அங்கு சென்று அங்குள்ள தடாகத்திற்கு அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். நான் அவருடன் கடும் கோபத்திலிருந்தேன்.  உனக்கு ஒரு ஆச்சரியம் என தெரிவித்துவிட்டு குதிரை பந்தய திடல் ஸ்கோர்போர்ட்டிற்கு அருகில் அவரை கொண்டு சென்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் உனக்கு ஒரு ஆச்சரியம் என தெரிவித்துவிட்டு அவரது கண்களை மூடினேன்..அவர் என்ன ஆச்சரியம் என கேட்டார்..?  நான் பின்னர் அவரின் கழுத்தை வெட்டினேன், அவர் கதறினார். தனது கழுத்தை மூடியிருந்த ஸ்கார்வை கழற்றிவிட்டு காப்பாற்றுமாறு கதறினார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளர்ர்.

நான் அவரை மீண்டும் குத்தினேன். அங்கு சில யுவதிகள் காணப்பட்டார்கள் அவர்கள் அந்த இடத்திற்கு வரக்கூடும் என அஞ்சி நான் அங்கிருந்து தப்பியோடினேன் பின்னர் பேருந்தில் ஏறி வெல்லம்பிட்டிக்கு சென்றேன் – அங்கு புகையிரத்தின் முன்னால் பாய்வதற்கு திட்டமிட்டேன் ஆனால் புகையிரதம் வரவில்லை பின்னர் வீட்டிற்கு சென்று பொருட்களை வைத்துவிட்டு வந்து இரண்டு தடவைகள் களனி ஆற்றில் குதித்தேன் தற்கொலை செய்ய நினைத்தேன் ஆனால் அது நடக்கவில்லை இதன் பின்னரே நான் கைதுசெய்யப்பட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட காதல் ஜோடிகள் எனப்பட்ட இரண்டு சிறுவர்கள் !

கலேவெல பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து பாடசாலை மாணவி மற்றும் இளைஞன் ஒருவனின் சடலங்களை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

14 வயதுடைய பாடசாலை மாணவி மற்றும் 17 வயதான இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவி கலேவெல அம்பன்பொல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் இருவருக்கும் இடையே காதல் தொடர்பு இருந்ததாகவும், இதற்கு முன் வீட்டை விட்டு ஓடி வந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணையின் போது இருவரும் கண்டுபிடிக்கப்பட்டதுடன், குறித்த பாடசாலை மாணவியை அவரது தாயாரின் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பின்னர் அண்மையில் மீண்டும் இருவரும் வீட்டை விட்டு ஓடி, அந்த இளைஞனின் கிராமப் பகுதியான ஆண்தாவளயில் உள்ள ஒரு கைவிடப்பட்ட வீட்டில் தங்கியுள்ளனர்.

இதனை அறிந்த வீட்டார் அவர்களை தேடிச் சென்ற சந்தர்ப்பத்தில் அவர்கள் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக வழக்குத்தாக்கல்!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் கடற்றொழில் சார் அமைப்புக்கள் இரண்டின் பிரதிநிதிகளினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் கடல் வளத்திற்கும் கடற்றொழிலாளர்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும், இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு போதுமான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றச்சாட்டியுள்ள வழக்கு தொடுநர் தரப்பு, சம்மந்தப்பட்ட சட்டங்களை முழுமையாக பயன்படுத்தி இந்தச் சட்ட விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான எழுத்தாணையை வழங்குமாறு மேல் முறையீட்டு நிதிமன்றிடம் கோரியுள்ளனர்.

இந்த எழுத்தாணை கோரும் வழக்கின் முதலாவது பிரதிவாதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் இந்து இரத்நாயக்கா, கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர எக்கநாயக்க ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இருவருக்கு மரண அச்சுறுத்தல் !

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இன்று (19) பாராளுமன்றத்தில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று இரவே ஆரம்பித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சராக ஜீவன் தொண்டமான் பதவிப்பிரமாணம் – உள்ளூராட்சி தேர்தலில் ஐ.தே.கவுடன் இணைகிறது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் !

பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான் மற்றும் பவித்ரா வன்னியாரச்சி ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஜனாதிபதி முன்னிலையில் அவர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பவித்ரா வன்னியாரச்சி, வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சராகவும், ஜீவன் தொண்டமான் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பதவியில் இருந்த போதும் ஜீவன் தொண்டமான் அமைச்சுப் பதவியை வகித்திருந்தார். குறிப்பாக மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் மாத சம்பளத்தை பெற்றுத் தருவதாக குறித்த பாராளுமன்ற தேர்தலில் ஜீவன் தொண்டமான் வாக்குறுதி அளித்திருந்தார். எனினும் இன்று வரை அந்த ஆயிரம் ரூபாய் சம்பளம் தொடர்பான பிரச்சனைகளுக்கான எந்த தீர்வையும் ஜீவன் தொண்டமானாலும் – அவர் சார்ந்திருந்த அரசாங்கங்களாலும் வழங்க முடியவில்லை.

இதே நேரம்நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் கூட்டணியாக போட்டியிடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

 

 

இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் போராடும் குழந்தைகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு !

சுமார் ஆறு வருடங்களில் முதன் முறையாக 2022 இல் இலங்கையில் பல்வேறு வகையான ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் போராடும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரசாங்க அறிக்கை மற்றும் சுகாதார அமைச்சின் தரவு சுட்டிக்காட்டியுள்ளது.

22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கை, 1948 இல் சுதந்திரம் பெற்றதிலிருந்து, மோசமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக, உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்துடனும் போராடி வருவதாக ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஒக்டோபரில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நாட்டின் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 43.4 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஊட்டச்சத்து குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளன. 42.9 சதவீதமானோர் ஏதாவது ஒரு வகையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்படைந்துள்ளன.

2022 ஆம் ஆண்டில் குறைந்த எடை, வளர்ச்சி குன்றிய அல்லது நிறை குறைந்த ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சதவீதம் அதிகரித்துள்ளன.

ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 1.4 மில்லியன் குழந்தைகள் நாட்டின் குடும்பநல சுகாதார அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2021இல் 12.2சதவீதமாக இருந்த எடைக்குறைந்த குழந்தைகளின் வீதம் 2022 இல் 15.3 வீதமாக உயர்ந்துள்ளது.

வளர்ச்சிக்குன்றிய குழந்தைகளின் வீதம் 2021இல் 9.2ஆக இருந்த நிலையில் 2022இல் அது, 10.1 வீதமாக உயர்ந்திருந்தது

நாட்டின் இந்த தீவிரப்போக்கு நகர்ப்புறம், கிராமம் மற்றும் பெருந்தோட்டத்துறையில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்களிடம் இருந்து 38 மில்லியன் ரூபாய் மீட்பு !

வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்களுக்கு எதிராக 2022 இல் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை ஆராய்ந்ததன் பின்னர், பல்வேறு மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்த வேண்டிய 38,087,000 ரூபாவை மீளப்பெறுவதற்கு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு செயற்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைகளை வழங்கும்போது அதிக கட்டணம் வசூலித்தல், பணம் வசூலித்தாலும் வேலை வழங்காமை, வேலைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமை காரணமாக இலங்கைக்குத் திரும்புதல் உள்ளிட்ட முறைப்பாடுகளின் விசாரணையின் பின்னர் வழங்கப்பட்ட உத்தரவுகளின் அடிப்படையில் இந்தப் பணம் முறைப்பாட்டாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி மற்றும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டதாக தெரிவித்த பணியகம், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகமாகும் என்றும் தெரிவித்துள்ளது.

2021 இல் முறைப்பாடுகளைத் தொடர்ந்து முகவர்களிடமிருந்து ரூ.8,945,900 மீட்கப்பட்டதாக பணியகம் தெரிவித்துள்ளது.

சுற்றறிக்கைகள் மூலம் உத்தரவுகள் வழங்கப்பட்ட போதிலும் பணியக சட்டத்தின் விதிகளுக்கு மாறாக செயற்பட்ட 17 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் தொழிலாளர் அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்வதற்கும் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகள் தொடர்பான பரிந்துரைகளின் அடிப்படையில் மேலும் 27 முகவர்களின் உரிமங்களை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில், புலனாய்வுப் பிரிவுக்கு 1,334 புகார்கள் கிடைத்தன, அவற்றில் 744 புகார்கள் பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு எதிரானவை.

922 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதுடன், 214 புகார்களுக்கு நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட்டு உரிய தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு எதிராக மொத்தம் 116 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.