12

12

ஒற்றுமையாக செயற்படுவதாக தமிழ் தலைமைகள் எழுதிக் கொடுத்ததை அடுத்து கைவிடப்பட்டது சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்!

தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் அனைத்து கட்சிகளையும், அமைப்புகளையும் , தனிநபர்களையும் ஓரணியில் திரள வலியுறுத்தி, முல்லைத்தீவு,புதுக்குடியிருப்பில் முன்னாள் போராளியொருவரால் கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்றுவந்த சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் அரசியல் கட்சி தலைவர்களின் எழுத்துமூல உறுதிமொழியை அடுத்து இன்று (வியாழக்கிழமை) கைவிடப்பட்டுள்ளது.

கடந்த ஒன்பதாம் திகதி காலை முதல் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றுவந்த நிலையில் இன்றையதினம் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம் இடம்பெறும் இடத்தில ஒன்றுகூடியிருந்ததோடு தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.

 

தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் அனைத்து கட்சிகளும் தமக்கிடையிலான ஆசன பங்கீட்டு பிரச்சினைகளை கைவிட்டு, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை வென்றெடுப்பதற்காக ஓரணியில் திரள வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டத்தை இவர் ஆரம்பித்து முன்னெடுத்துவந்தார்.

புதுக்குடியிருப்பு சந்தியில், இலங்கை வங்கி கட்டிடத்திற்கு அண்மையில் மேற்படி உண்ணாவிரத போராட்டத்தை முன்னாள் போராளியான  வேலுப்பிள்ளை மாதவமேஜர் நீராகாரம் எதுவுமின்றி சாகும்வரையான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து முன்னெடுத்து வந்தார்.

இந்த நிலையில் இன்றையதினம் உண்ணாவிரத போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு வருகைதந்த தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமனற உறுப்பினர் சி வி விக்னேஸ்வரன் , மற்றும் டெலோ கட்சியின் தலைவர் நாடாளுமனற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ,ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் மற்றும் புளொட் அமைப்பின் உறுப்பினரும் முன்னாள் மாகாணசபை அமைச்சருமான கந்தையா சிவநேசன் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியை சேர்ந்த அங்கத்தவர் ஒருவர் ஆகியோர் எழுத்துமூல ஆவணத்தில் தாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டாக செற்படுவோம் மேற்படி உண்ணாவிரதம் இருக்கும் நபரின் கோரிக்கையை வலுப்படுத்த ஒன்றிணைவோம் என்ற உறுதிமொழியை வழங்கி கையொப்பமிட்ட பின்னர் உண்ணாவிரதம் மேற்கொண்ட நபருக்கு நீராகாரம் வழங்கி உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டிருந்தது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டிருந்த போதிலும் மேற்படி ஆவணத்தில் அவர் கையொப்பமிடவில்லை அத்தோடு நேற்றையதினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமனற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனும் இந்த போராட்டத்துக்கு ஆதரவை வெளிப்படுத்தி கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தாய் தவிடுக்கு அலைய பிள்ளை பணியாரம் கேட்ட கதையாய் – இலங்கையின் சுதந்திர தினத்துக்கு 200 மில்லியன் ரூபாவை ஒதுக்கிய அரசாங்கம்!

கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறவுள்ள 75 ஆவது சுதந்திர தின விழாவிற்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன உறுதிப்படுத்தினார்.

இந்த விழாவுக்குத் தேவையான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளை திறைசேரி ஏற்கனவே செய்துள்ளதாகவும், எனினும் மேற்படி நிகழ்வை ஒழுங்கமைப்பதற்கான செலவினங்களைக் குறைக்க அமைச்சு தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதே நேரம் இலங்கையின் உணவு பாதுகாப்பு தொடர்பில் உலக உணவுத் திட்டம் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் ” சுமார் 37 சதவீதமான மக்கள் உணவு நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் – 3.4 மில்லியன் மக்கள் மோசமான உணவு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே நேரம் அரசு ஊழியர்களுக்கு கொடுப்பதற்கு கூட அரசாங்கத்திடம் பணம் இல்லாமல் உரத்தை விற்றே அரச ஊழியர்களுக்கான மாத சம்பளம் கொடுத்ததாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார்.

இப்படியான இலங்கையின் சுதந்திர தினத்துக்காக மட்டுமே ரூபாய் 200 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“பெற்றுக்கொண்ட வெளிநாட்டுக்கடன்களுக்காக இலங்கையின் இயற்கை வளங்களை கைப்பற்ற முயற்சிக்கும் வெளிநாட்டு சக்திகள் – இயற்கை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சர்வதேச ரீதியில் இலங்கை பெற்றுள்ள கடனுக்கான இழப்பீடாக இலங்கையின் இயற்கை வளங்களை கையகப்படுத்துவதற்கு உலக வங்கியும் சில சக்திவாய்ந்த நாடுகளும் செயற்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘இயற்கைக்கான கடன்’ என்ற வேலைத்திட்டம் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் என நாட்டின் சுற்றாடல் அதிகாரிகளும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர் என அதன் தேசிய அமைப்பாளர் சுற்றாடல் ஆர்வலர் ரவீந்திர காரியவசம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அது இந்த நாட்டுக்கு சாதகமான நிலை அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக வங்கியும் நேபாளமும் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி இவ்வாறான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் ரவீந்திர காரியவசம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடாவின் ராஜபக்சக்கள் மீதான தடை குறித்து அமைச்சர் அலிசப்ரி விசனம் !

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் மீதான தடைக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கனடா பொருளாதார தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக இராஜதந்திர ஆட்சேபனை வெளியிடுவதற்காக, கனடா உயர்ஸ்தானிகர், இன்று(வியாழக்கிழமை) வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இதன்போது, நிலுவையில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து நல்லிணக்கத்தை அடையும் பொருட்டு, ஆழமாக வேரூன்றிய பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களில் இலங்கை ஈடுபட்டுள்ளது.

இந்த முக்கியமான தருணத்தில் முன்னாள் ஜனாதிபதிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது பயனற்றது என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 400 போதை மாத்திரைகளுடன் 18வயது ஆணும் – 25 வயது பெண்ணும் கைது !

போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 400 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன என்றும் 18 வயதுடைய ஆணும் 25 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

என்றும் காங்கேசந்துறை விசேட குற்றத்தடுப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காங்கேசந்துறை விசேட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அச்சுவேலி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர்தெரிவித்தனர்.

சீனாவும் – இந்தியாவும் சம்மதிக்கும் வரை IMFன் எந்த பணத்தையும் எதிர்பார்க்க முடியாது !

சீனாவும் இந்தியாவும் தங்களின் கடன்களை மறுசீரமைக்க உடன்படவேண்டும் என்று இலங்கை மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் பில்லியன் கணக்கான டொலர் கடனை குறைக்க சீனாவும் இந்தியாவும் ஒப்புக் கொள்ளும் வரை சர்வதேச நாணய நிதியம் பணத்தை வழங்காது. எனவே அனைத்துத் தரப்பினரும் விரைவாகச் செயல்படுவது சிறந்தது என்று மத்திய வங்கியின் ஆளுநர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்

அனைத்துத் தரப்பினரின் நலன் கருதி சீனாவும் இந்தியாவும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பது அனைவருக்கும் நல்லது எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நாடுகளின் கடன்களை இலங்கை திருப்பிச் செலுத்த உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
கடமைகளை நிறைவேற்றாமல், நீண்ட காலத்திற்கு இவ்வாறான நிலையில் இருக்க இலங்கையும் விரும்பவில்லை. அது நாட்டுக்கும் மக்களுக்கு நல்லதல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கைக்கு வரும் முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கு நல்லதல்ல என்று மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.