10

10

இலங்கையுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி – வீணானது தசுன் சானகவின் போராட்டம் !

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று இடம்பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 373 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்ப்பில் விராட் கோலி 113 ஓட்டங்களையும் அணித் தலைவர் ரோஹித் சர்மா 83 ஓட்டங்களையும் சுப்மன் கில் 70 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் கசுன் ராஜித 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 374 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 306 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்ப்பில் இறுதி வரை போராடிய அணித் தலைவர் தசுன் சானக ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸங்க 72 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் உம்ரான் மலிக் 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

அதனடிப்படையில் 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட நால்வருக்கு எதிராக தடை – கனடா அறிவிப்பு !

கனடா முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட நால்வருக்கு எதிராக தடைகளை விதித்துள்ளது.

சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க லெப்கொமாண்டர் சந்தன ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு எதிராகவும் கனடா தடைகளை அறிவித்துள்ளது.

இலங்கையில் 1983 ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு வரை இடம்பெற்ற ஆயுதமோதலின் போது மனித உரிமைகளை பாரியளவில் திட்டமிட்டு மீறியமைக்காக நான்கு இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக சிறப்பு பொருளாதாரநடவடிக்கைகள்  சட்டத்தின் கீழ் கனடா இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதித்துள்ளது என கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மெலானி ஜொய் தெரிவித்துள்ளார்.

சிறப்பு பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகள் பட்டியலிப்பட்ட நபர்களிற்கு பரிவர்த்தன தடையை விதிக்கின்றன,இது கனடாவில் அவர்கள் வைத்திருக்கும் எந்தவொரு சொத்துக்களையும் திறம்பட முடக்கி கனடாவின் குடிவரவு சட்டத்தின் கீழ் அவர்கள் கனடாவிற்குள் நுழைய முடியாதவர்களாக்குகின்றது.

கனடாவும் சர்வதேச சமூகமும் தொடர்ச்சியாக பொறுப்புக்கூறலிற்கான வேண்டுகோளை விடுத்துள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் தனது மனித உரிமை கடப்பாடுகளை நிறைவேற்ற  மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளையே எடுத்துள்ளது, இது பாதிக்கப்பட்ட மக்களிற்கான நீதி கிடைப்பதில் முன்னேற்றத்தை தடுக்கின்றது,அமைதி நல்லிணக்கத்திற்கான வாய்ப்புகளையும் பாதிக்கின்றது.

மிகமோசமான மனித உரிமைமீறல்களால் பாதிக்கப்பட்ட தரப்பினர்களிற்கு நீதி அவசியம் இதன் காரணமாகவே இலங்கை அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறல் நடவடிக்கையை உருவாக்குவது குறித்த தனது உறுதிமொழிகளை நிறைவேற்றவேண்டும் என கனடா வேண்டுகோள் விடுத்துவருகி;ன்றது.

இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களிற்கு தண்டனையின் பிடியிலிருந்த விலக்களிக்கப்படுவதை கனடா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பதற்கான உறுதி செய்தி இது எனவும் கனடாவின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“உடைந்தது தமிழ்தேசிய கூட்டமைப்பு“- கஜேந்திரகுமார் – விக்கி தரப்புடன் இணையும் ரெலோ !

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்து போட்டியிட இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று(செவ்வாய்கிழமை) காலை கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்த கலந்துரையாடலில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், ஹென்ரி மகேந்திரன், எம்.ஏ சுமந்திரன், ஆர்.ராகவன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டமைப்பிற்கு வெளியிலுள்ள தமிழ் கட்சிகளை இணைத்துக் கொண்டு போட்டியிடுவதா என்பன தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலை எதிர்கொண்டதை போல எதிர்கொள்ளலாம் என ரெலோ கூறியுள்ளது.

எனினும், கடந்த முறை தமக்கு உறுதியளிக்கப்பட்ட சபைகள் வழங்கப்படாததால் அது பற்றி மீள பேசப்பட வேண்டுமென புளொட் தெரிவித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், தேர்தல் நெருங்கி விட்டதால், அதைபற்றி பேச அவகாசமில்லையென தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது.

இதே நேரம். தமிழரசுக்கட்சியை தவிர்ந்த ஏனைய கட்சிகள் கூட்டமைப்பாக தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கலந்துரையாடல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக டெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், தமிழ்தேசிய மக்கள் கூட்டணி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து இந்த கூட்டமைப்பு அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்தேசிய மக்கள் முன்னணியையும் இந்த கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ள பேச்சு நடத்தப்படும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

 

இதேநேரம் தமிழ்தேசிய கட்சிகள் யாவும் இணைந்து செயற்பட வேண்டும் என மேற்கொள்ளப்பட்ட வட-கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவினுடை்ய போராட்டம் இன்று நெடுங்கேணியில் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலையின் 49ஆவது நினைவேந்தல் – நினைவேந்தலை கூட இரண்டு அணியாக செய்த தமிழ்த்தலைமைகள் !

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49ஆவது நினைவேந்தல் இன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் முற்றவெளில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவாலயத்தில் இரு பிரிவுகளாக இரண்டு தடவைகள் இவ் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நினைவேந்தலில் பொது மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் எவ்விதபேதமுமின்றி கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்த வேண்டுமென நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அழைப்புவிடுத்திருந்த நிலையிலும் இரு பிரிவுகளாக நினைவேந்தல் நடைபெற்றது.

அதாவது இன்று காலை பத்து மணிக்கு இவ் நினைவேந்தல் நடைபெறுமென சிவாஜிலிங்கம் அறிவித்திருந்த நிலையில் காலை 9.30 மணியளவில் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நடாத்தப்பட்டிருந்தது.

இதில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், தமிழரசு மூத்த துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்பினர்களும் கட்சியின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

ஆனாலும் ஏனைய கட்சிகளின் ஒரு சில உறுப்பினர்களும் அதேநேரத்தில் மறவன்புலவு சச்சிதானந்தமும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் காலை பத்து மணியளவில் மற்றுமொரு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

இதில் கூட்டமைப்பின் பங்காளிகள் கட்சிகளின் உறுப்பினர்கள் குறிப்பாக ரெலோ மற்றும் புளொட் அமைப்பின் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் ரெலோ அமைப்பைச் சேர்ந்த கோப்பாய் தவிசாளர் நிரோஷ் மற்றும் புளொட் அமைப்பைச் சேர்ந்த சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் கிசோர் ரெலோ வின் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் சதீஸ் உள்ளிட்டவர்களுடன் சிவாஜிலிங்கத்தின் தமிழ்த் தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக உலக ஹிந்தி மொழி தின நிகழ்வுகள் !

உலக ஹிந்தி மொழி தின நிகழ்வுகள் யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் இடம்பெற்றன.

இன்று காலை 12 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் இந் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது ஹிந்தி மொழிக் கற்கையினை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன. மேலும் ஹிந்தி மொழி சார்ந்த கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

யாழ். இந்திய துணைத் தூதுவர் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தூதரக அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நேர்மையான மற்றும் ஊழலற்றவர்களுக்கு வேட்புமனுக்களை வழங்குங்கள் – மார்ச் 12 இயக்கம் வலியுறுத்தல்!

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நேர்மையான மற்றும் ஊழலற்றவர்களுக்கு வேட்புமனுக்களை வழங்கி சிறந்த நாட்டை உருவாக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும் மார்ச் 12 இயக்கம் இன்று வலியுறுத்தியுள்ளது.

2015 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் திகதி அரசியல் கட்சிகளால் வெளியிடப்பட்ட நிபந்தனைகளை கருத்திற்க் கொண்டு உள்ளுராட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என மார்ச் 12 இயக்கத்தின் அழைப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேட்புமனுவில் கையெழுத்திடும் போது அனைத்து வேட்பாளர்களும் தங்களது சொத்துப் பிரகடனத்தை சமர்ப்பிப்பதையும், அவற்றை வெளியிடுவதையும் அரசியல் கட்சிகள் உறுதி செய்ய வேண்டும்.

இளைஞர்கள் உட்பட சமூகத்தில் சமீபகாலமாக எழுந்துள்ள எழுச்சியானது நாட்டில் அமைப்பு மாற்றத்திற்கு அழைப்பு விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கட்சிகள் எதிர்பார்த்த மாற்றத்தை வழங்கும் வரை மக்கள் ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“அனைத்து அமைச்சுக்களின் செலவுகளும் குறைந்தது ஐந்து வீதத்தால் குறைக்கப்பட வேண்டும்.”- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இந்த வருடத்தில் செலவுகளை ஐந்து வீதத்தால் குறைக்குமாறு அனைத்து அமைச்சரவை அமைச்சுக்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்றைய வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது, ​​2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக மதிப்பிடப்பட்ட ஒதுக்கீட்டில் ஐந்து வீதத்தினால் செலவினங்களைக் குறைக்குமாறு ஜனாதிபதி விக்ரமசிங்க அனைத்து அமைச்சுக்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் ஏற்பட்ட தவறுகள் காரணமாக, அரச துறை ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளை வழங்குவதற்கு கூட நிதியை பெறுவதில் இலங்கை சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதன்படி அனைத்து அமைச்சுக்களின் செலவுகளும் குறைந்தது ஐந்து வீதத்தால் குறைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

“விடுதலைப்புலிகள் மத்திய வங்கியை தாக்கிய பின் 24 மணி நேரத்துக்குள் நாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தேன்.” – சந்திரிக்கா பண்டாரநாயக்க

“விடுதலை புலிகள், மத்திய வங்கியில் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டபின்னரும் நாட்டின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடையவில்லை. 24 மணி நேரத்துக்குள் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தேன்.” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் அமரர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண் டாரநாயக்கவின் 124 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு காலமுகத்திடலில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அவரது உருவச் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை (08) மலரஞ்சலி செலுத்தி,மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்ட வாறு குறிப்பிட்டார்.

 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அங்கு மேலும் குறிப்பிட்டதாவது,

ஆட்சியிலிருக்கும் போது தவறிழைக்காமல் சிறந்த முறையில் செயல்பட்டால், பதவி விலகிய பின்னரும் மக்களின் ஆதரவு கிடைக்கும். இல்லாவிட்டால் காலி முகத்திடலில் தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும். மக்கள் மத்தியில் செல்வதற்கு எனக்கு எவ்வித அச்சமும் கிடையாது.

தற்போது,நாட்டு மக்கள் மிகமோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். அரசியல் செய்வதை விடுத்து மக்களுக்கு உணவு வழங்கும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டுள்ளேன். இதில் எவ்வித அரசியல் நோக்கமும் கிடையாது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட் சியின் மூத்த உறுப்பினரான அலவி மௌலானா, சுதந்திர கட்சியின் ஸ்தாபகர் பண்டாரநாயக்கவின் பிறந்த தினத்தை விமர்சையாக கொண்டாடுவார். சுதந்திர கட்சியை ராஜபக்சாக்கள் பொறுப்பேற்றதன் பின்னர், ஓரிரு தடவைகள் இந்த நிகழ்வு கொண்டாடப்பட்டது. ஆனால் சுதந்திர கட்சியின் பொறுப்பை மைத்திரிபால பொறுப்பேற்றதன் பின்னர் இந்த நிகழ்வு மறக்கடிக்கப்பட்டது.

எனது ஆட்சியில், தேசிய பாதுகாப்பை நான் பொறுப்பேற்றேன். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என சிறு சந்தேகம் எழும்போது உடனே பாதுகாப்பு சபையை கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தேன். விடுதலை புலிகள், மத்திய வங்கியில் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டபின்னரும் நாட்டின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடையவில்லை. 24 மணி நேரத்துக்குள் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தேன்.

அரச தலைவருக்கு நாட்டின் பாதுகாப்பு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. ஆகவே 2019 ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டும்.தாக்குதல் தொடர்பில் அவர்கள் எனக்கு குறிப்பிடவில்லை. நான் அறியவில்லை என பொறுப்பற்ற வகையில் அவர், குறிப்பிடக் கூடாது என்றார்.

“ இலங்கையில் சிறிய குற்றங்களுக்கு இனிமேல் சிறை இல்லை.” – புதிய வேலைத்திட்டத்தை வகுக்க வேலைத்திட்டத்தை வகுக்க முன்மொழிவு !

இலங்கையின் சிறைச்சாலை அமைப்பு அதன் கொள்ளளவை இரண்டு மடங்கு கைதிகளை கொண்டுள்ள நிலையில், சிறைச்சாலைகள் திணைக்களம் , சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு சிறிய குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைக்கும் வேலைத்திட்டத்தை வகுக்க முன்மொழிந்துள்ளது.

சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏகநாயக்க இது குறித்து தெரிவிக்கையில்: “சிறிய குற்றங்களுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வர்களை வீட்டுக் காவலில் வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், அத்தகைய திட்டத்தை செயல்படுத்த வேண்டுமானால், ஒரு வரைவு தயாரிக்கப்பட்டு ஒரு சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டும்.
இவ்வாறானதொரு வேலைத்திட்டத்தின் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்படும் பாரிய செலவைக் குறைக்க முடியும் அதேவேளை , சிறைச்சாலைகளில் கூட்ட நெரிசலை நிர்வகிப்பதற்கும் முடியும் அமைச்சும் சட்ட வரைவுத் திணைக்களமும் இணைந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவித்தார்.

இதேவேளை, போதைக்கு அடிமையானவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு நன்னடத்தை அதிகாரிகளால் புனர்வாழ்வளிக்கப்படுவார்கள் என நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன ஜனவரி 8ஆம் திகதி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். 65% கைதிகள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்று கூறிய அவர், சிறைகளில் உள்ள அனைவருக்கும் புனர்வாழ்வளிக்க முடியாது என்று கூறியிருந்தார்.

சிறைச்சாலைகள் திணைக்களம் ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் சிறைச்சாலை மறுசீரமைப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக முன்னதாக ஒரு சந்தர்ப்பத்தில் ஏக்கநாயக்க தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் கீழ், சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறிய அவர், மேற்படி திட்டத்தின் கீழ் சிறை நெரிசலைக் குறைக்க வீட்டுக் காவல் முறை உள்ளிட்ட குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட காலத் தீர்வுகள் ஏற்கனவே முன்மொழியப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பல்வேறு குற்றச் சாட்டுகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக 2022 நவம்பரின் பிற்பகுதியில் சிறைச்சாலைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியது. நாட்டின் சிறைச்சாலை அமைப்பில் அதிகபட்சமாக 13,200 கைதிகளை அடைக்க முடியும் என்றாலும், 2022 நவம்பர் வரை சிறைச்சாலைகள் இரண்டு மடங்கு கொள்ளளவைக் கொண்டிருப்பதாகவும், சில சிறைச்சாலைகள் இந்த திறனை 300% தாண்டியதாகவும் ஏக்கநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.