“திருடர்கள் இலங்கையைப் பிடித்து வைத்துள்ளார்கள். நாட்டை ஆட்சி செய்கின்றார்கள்.” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறுமா என்ற ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், ரணில் தேர்தலை ஒத்திப்போடுவதற்கே முயற்சி செய்கின்றார்.
அரசமைப்பில் அதற்கு இடமில்லை. இதனால் தேர்தல் நடத்தப்படவே வேண்டும். தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்தின் தேவைக்கு ஏற்பவே செயற்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆணை இல்லை. 2019 ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்குக் கிடைத்த 69 இலட்சம் வாக்குகளும் ரணிலுக்கு எதிரான வாக்குகள். அப்படியாயின் ரணிலால் எப்படி ஜனாதிபதியாக இருக்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சோமாலிய நாட்டு கடற்கொள்ளையர்கள் கப்பலைப் பிடித்து வைத்திருப்பது போல் இங்கு திருடர்கள் இலங்கையைப் பிடித்து வைத்துள்ளார்கள். நாட்டை ஆட்சி செய்கின்றார்கள். இவர்களுக்கு மக்கள் ஆணை இல்லை.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தினால் அவர்களின் நிலை என்னவென்று தெரியவரும். அவர்கள் படுதோல்வியடைவார்கள் என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் ஆணை இல்லாத இந்த அரசால் ஆட்சி செய்ய முடியாது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இந்த அரசு தோல்வியடைந்தால் மக்கள் நாடாளுமன்றத் தேர்தலைக் கேட்பார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டி வரும். அப்போது அதிலும் இந்த அரசு தோல்வியும். அப்போது ஆட்சி கலையும். ஜனாதிபதி இல்லாமல் போவார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் அரசின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். அதனாலேயே அரச தரப்பினர் இந்தத் தேர்தலுக்கு அஞ்சுகின்றார்கள் எனவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.