21

21

போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்காக ஜனாதிபதி செயலணி !

போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்காக ஜனாதிபதி செயலணியொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது தெரிய வந்துள்ளது.

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்கான விசேட வேலைத்திட்டம் இச்செயற்குழுவின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

எதிர்கால செயற்பாடுகள் மற்றும் திட்டங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பரவல் பிரச்சினை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. போதைப்பொருள் பரவலைத் தடுக்க எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன் போது ஆலோசிக்கப்பட்டது.

போதைப்பொருள் தடுப்பு, போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்களை அடையாளம் காணுதல், போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குதல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. போதைப்பொருளுக்கு அடிமையாகி தற்போது சிறையில் உள்ள கைதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சிறைகளில் அவர்களுக்கு அளிக்கப்படும் முறையான சிகிச்சைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தன்னார்வ மையங்கள், சமூகம் சார்ந்த புனர்வாழ்வு, நன்னடத்தை சேவைகள் மற்றும் போதைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவதற்கான சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பிலும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்த சிங்கப்பூர் சட்டங்களை உடன் அமுல்படுத்துங்கள் – சஜித் பிரேமதாச

போதைப்பொருள் பரவலை ஒழிப்பதற்கு சிங்கப்பூரில் அமுல்படுத்தப்படும் சட்டங்கள் இலங்கையிலும் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று நாவுலவில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாடும் பாடசாலை முறையும் போதைப்பொருளால் நிரம்பியுள்ளதாகவும், நாட்டின் சட்ட முறைமைகள் திருத்தப்பட்டு நீதித்துறை உடனடியாக பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

டிஜிட்டல் தொழில்நுட்ப முறைகளை நோக்கி கல்வி முறையை மாற்றியமைத்து புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்.

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதற்குப் பதிலாக அதிகாரிகள் பாடசாலை மாணவர்களின் பைகளை சோதனையிடும் அதேவேளை இலங்கை போதைப்பொருள் மையமாக மாறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளுக்குள் இருந்து போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள புகையிலை நிறுவனங்களிடமிருந்து அரசாங்க அதிகாரிகள் பல்வேறு சலுகைகளை பெற்று வருவதாகவும், எனவே சிகரெட்களுக்கு வரி விதிக்காமல் பொதுமக்களுக்கு வரி விதிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“நாட்டை முன்னேற்றுவதே எமது பிரதான இலக்கு.” – ராஜபக்ச தரப்பு !

“நாட்டை முன்னேற்றுவதே எமது பிரதான இலக்கு.” என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இவ்வருடத்தின் இறுதி பகுதியில் அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் ஒருசிலர் பொய்யாக வழக்கு தாக்கல் செய்து இல்லாத பிரச்சினையை தற்போது தோற்றுவித்துள்ளார்கள்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயல்படும் தரப்பினர் தான் தற்போது தேர்தலுக்காக குரல் கொடுப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளார்கள்.

தேர்தலை பிற்போட வேண்டிய பொதுஜன பெரமுனவிற்கு கிடையாது,தேர்தல் எப்போது இடம்பெற்றாலும் சிறந்த முறையில் போட்டியிடுவோம்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் நிச்சயம் தோற்றம் பெறும் என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறோம்.

நாட்டை முன்னேற்றுவது பொதுஜன பெரமுன கட்சியின் பிரதான கொள்கையாக உள்ளது.நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு எந்த தரப்பினருடனும் கூட்டணியமைக்க தயார் என்பதை அறிவித்துள்ளோம்.கொள்கை அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணையலாம் என்றார்.

“தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் உண்மையான நோக்கம் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு கிடையாது.” – சரத்வீரசேகர

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் உண்மையான நோக்கம் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தை புறக்கணித்தமை தொடர்பில் ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதிகார பகிர்வு என்பது சாத்தியமற்றது அதனால் ஜனாதிபதி தலைமையில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

நாட்டை பிளவுபடுத்தும் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வு சாத்தியமற்றது எனவும் சரத் வீரசேகர கூறியுள்ளார். பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாட்டின் ஒருமைப்பாட்டை விட்டுக் கொடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை பிளவுபடுத்த பெரும்பான்மையான மக்கள் இணக்கம் தெரிவிக்கமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சமஷ்டி அடிப்படையில் நாட்டை பிளவுப்படுத்துவது தமிழ் மக்களின் நோக்கமல்ல எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

“ஓ.எம்.பி அலுவலகத்தை உடனடியாக அங்கிருந்து அகற்ற வேண்டும். இல்லாது விடின் நாம் அகற்ற நேரிடும்.”- மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்

ஓ.எம்.பி அலுவலகத்தை உடனடியாக அங்கிருந்து அகற்ற வேண்டும். அகற்றவில்லையெனில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் ஒன்றிணைந்து அகற்ற வேண்டிய நிலை ஏற்படும் எனவ மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

“காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு இழப்பீடு வழங்குவதாக இவ்வளவு காலமும் நீதி அமைச்சர் கூறி வருகிறார்.

எங்களுக்கு இந்த இழப்பீடு வேண்டாம் என்று நாங்கள் கூறி வந்தோம். காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளும், பிள்ளைகளுமே எமக்கு வேண்டும் என பல வருடங்களாக போராடி வருகின்றோம். அரசாங்கத்திடம் பல தடவைகள் கதைத்தும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இழப்பீட்டை வழங்கி எங்களை திசை திருப்ப பார்க்கின்றார்கள்.

இங்கே ஒன்றும் நடக்கவில்லை என்று காட்டும் வகையிலும் ஐ.நாவிற்கு தமது அறிக்கைகளை வழங்க காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்கு இழப்பீடு வழங்க முயற்சிக்கின்றனர்.

நாங்கள் இழப்பீட்டிற்காக இவ்வளவு காலமும் போராடவில்லை. எமது உறவுகளுக்காகவும், அத்தனை உயிர்களுக்காகவுமே நாங்கள் போராடி வருகிறோம். எமது பிள்ளைகளுக்கும், உறவுகளுக்கும் என்ன நடந்தது என்று முதலில் கூறுங்கள். அரசாங்கத்திடம் ஒப்படைத்த பிள்ளைகளையும், உறவுகளையுமே நாங்கள் கேட்கிறோம்.

அவர்களுக்கு என்ன நடந்தது என்றே கடந்த 15 வருடங்களாக கேட்டுக் கொண்டு இருக்கின்றோம். எமது உறவுகளை திருப்பி தாருங்கள் என்று கேட்கின்றோம். ஆனால் அதை பற்றி கதைக்கிறார்கள் இல்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் (ஓ.எம்.பி) பற்றி கதைக்கிறார்கள், நஷ்ட ஈடு பற்றி கதைக்கிறார்கள்.

மரண சான்றிதழ் வழங்குவதாக கூறுகிறார்கள். நாங்கள் எதையும் கேட்கவில்லை. எனது உறவுகளையும் பிள்ளைகளையுமே கேட்கின்றோம். சுமார் 2200 நாட்களாக மழைக்கும் வெயிலுக்கும் இடையில் நின்று போராடி வருகிறோம். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிய 148 பேர் இதுவரை மரணித்துள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று நஷ்ட ஈடு தருவதாக கூறுகிறார்கள்.

நாங்கள் சிறிலங்கா அரசாங்கத்தில் நம்பிக்கை இல்லாத காரணத்தினாலேயே சர்வதேச விசாரணையை கோரி நிற்கின்றோம். எங்களுக்கு நஷ்ட ஈடு தர நீதி அமைச்சருக்கு என்ன அருகதை உள்ளது? நீதியமைச்சர் மன்னார் பக்கம் வராமல் இருப்பது அவருக்கு நல்லது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவது குறித்து இனி நீதி அமைச்சர் எங்கும் கதைக்க கூடாது. கண் துடைப்புக்காக மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள ஓ.எம்.பி அலுவலகத்தை உடனடியாக மன்னாரில் இருந்து அகற்ற வேண்டும்.

அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் ஒன்றிணைந்து அகற்ற வேண்டிய நிலை ஏற்படும். எங்களினால் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள்.

சுமார் 2 ஆயிரம் நாட்களாக போராடுகின்ற எமக்கு அதை செய்ய முடியாது என்று நினைக்கிறீர்களா? எனவே இனி வரும் காலங்களில் நஷ்ட ஈடு வழங்குவதாக கூறுவதை நிறுத்துங்கள்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெரும்போக நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 20,000 ரூபா வரை பண உதவி !

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்க இம்முறை பெரும்போக நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் ஆகக்கூடியது 20,000 ரூபா வரை பண உதவியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இக்கொடுப்பனவு மீள அறவிடப்பட மாட்டாது என்பதுடன் முற்றிலும் நன்கொடையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய ஒரு ஹெக்டயர் அல்லது அதனிலும் குறைவான நிலப்பரப்பில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள சிறிய அளவிலான நெல் விவசாயிகளுக்கு 10,000 ரூபாவும் ஒரு ஹெக்டயரிலும் அதிக நிலப்பரப்பில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நெல் விவசாயிகளுக்கு 20,000 ரூபாவும் வழங்கப்படவிருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மாத்திரமே இப்பண உதவி வழங்கப்படவுள்ளதுடன் இவை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்படும்.

இம்முறை 08 இலட்சம் ஹெக்டயர் வயல் பரப்பில் பெரும்போகப் பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கு அவசியமான MOP உரத்தை கொள்வனவு செய்வதற்காகவே விவசாயிகளுக்க இப்பண உதவி வழங்கப்படுகிறது.

இதற்காக 08 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதுடன், நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் 12 இலட்சம் குடும்பங்களுக்கு இந்நிதி பகிர்ந்தளிக்கப்டுமென்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர வெகு விரைவில் விசேட ஊடக சந்திப்பொன்றை  நடத்தி இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தவுள்ளார்.

இரசாயன கூட்டுத்தாபனத்திற்கான காணியில் 20 ஏக்கர் காணியினை பெற்றுத்தர வேண்டும் என கோரி பரந்தனில் மக்கள் ஆர்ப்பாட்டம் !

கிளிநொச்சி பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனத்திற்கான காணியில் 20 ஏக்கர் காணியினை பெற்றுத்தர வேண்டும் என கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.

இன்று காலை 10 மணியளவில் A9 வீதியில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் குறித்த இரசாயனக் கூட்டுத்தாபனத்தின் காணியில் 20 ஏக்கர் காணியினை தமக்கு பெற்றுத்தர கோரிக்கை விடுத்தனர்.

மேலும் அப்பகுதியில் 153 குடும்பங்கள் வசித்துவரும் நிலையில், தமக்கேன 1/4 ஏக்கர் காணியினை பெற்றுத்தரும்படியும் கேட்டுக்கொண்டனர்.

எந்தவித முன்னறிவித்தலும் இன்று இரவோடு இரவாக இரசாயன கூட்டுத்தாபனத்தினர் வேலி அமைத்துள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்டோர் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.