17

17

“சீனா பச்சைக்கொடி – கடன் நிவாரண வேலைத்திட்டத்தை விரைவாக முன்னெடுக்க முடியும்.”- சர்வதேச நாணய நிதியம்

கடன் மறுசீரமைப்புக்கு சீனா ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இலங்கை போன்ற நாடுகளுக்கான கடன் நிவாரண வேலைத்திட்டத்தை விரைவாக முன்னெடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கையாள்வதற்கான வாய்ப்புகள் குறித்து கடந்த வாரம் சீனாவுடன் அவர் பேச்சு நடத்தியிருந்தார்.

ஆகவே குறித்த நாடுகள் எதிர்கொள்ளும் கடன் பிரச்சினைகளை கையாளமுடியும் என்றும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

இருப்பினும் ஜி20 கட்டமைப்பின் கீழ் நிவாரணம் வழங்குவதில், சீனாவின் வகிபாகம் குறித்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகள் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பயிரிடப்படாத அனைத்து விவசாய நிலங்களும் 2023 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் – விவசாய அமைச்சர்

இலங்கையில் பயிரிடப்படாத அனைத்து விவசாய நிலங்களும் 2023 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஐந்து வருட காலத்திற்குள் காணி சுவீகரிக்கப்படும் என அமைச்சர் அமரவீர தெரிவித்தார். அந்தந்த பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு விவசாயம் செய்ய நிலம் வழங்கப்படவுள்ளது.

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு திருத்தப்படும் என்றார்.

அடுத்த அறுவடைக் காலத்தில், விளைச்சலை அதிகரிப்பதற்காக குறுகிய காலத்திற்கு இளைஞர்களுக்கு கையளிப்பதற்காக பயிர் செய்யப்படாத நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்த முடியும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

சுமார் 100,000 ஏக்கரில் நெற்செய்கைகள் தற்போது மேற்கொள்ளப்படவில்லை எனவும், நெல் பயிரிடப்படாவிட்டால் ஏனைய பயிர்களை பயிரிட முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையை வந்தடைந்தது வியட்நாமில் தற்கொலை செய்துகொண்ட சாவகச்சேரி இளைஞனின் சடலம் !

வியட்நாமில் தற்கொலை செய்துகொண்ட, சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் சற்று முன்னர் விமானம் மூலமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

கனடா ஆசையால் வியட்நாமில் உயிரிழந்த யாழ் இளைஞன்!! – வவுனியா நெற்

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வைத்தியசாலையில் உறவினர்கள் கூடியுள்ள நிலையில், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், கப்பல் மூலமாக கனடா செல்ல முற்பட்டிருந்த நிலையில் வியட்நாம் கடற்பரப்பில் 300க்கும் மேற்பட்ட இலங்கையர்களுடன் சென்ற மீன்பிடி கப்பல் சேதமடைந்து, தத்தளித்துக்கொண்டிருந்துள்ளது.

அதனையடுத்து அவர்களை ஜப்பானிய கப்பல் அதிகாரிகள் மீட்டு வியட்நாமில் கரை சேர்த்தனர். அங்கு முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்.  அவர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை வியட்நாம் அதிகாரிகள் மேற்கொண்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு இலங்கையர்கள் தற்கொலைக்கு முயற்சித்திருந்தனர்.

அதனையடுத்து உடனடியாக அவர்கள் இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் ஆபத்தான கட்டத்தில் இருந்ததையடுத்து அவர் உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவரின் சடலத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, நீண்டநாட்களிக் பின்னர் இன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

2022 ல் இதுவரை போதைப்பொருள் தொடர்பான சோதனைகளில் 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது !

இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 1,441 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, 45,801 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும்,11,881 கிலோ கஞ்சாவுடன் 34,062 சந்தேக நபர்களும் மற்றும்109 கிலோ ICE போதைப்பொருளுடன் 10,532 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை போதைப்பொருள் தொடர்பான சோதனைகளில் 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“பலவருட பிரச்சினையை வெறும் இரண்டு மாதத்திற்குள் முடிப்பது என்பது ஒரு பொய்யான காரியம்.”- அங்கஜன் இராமநாதன்

பலவருட பிரச்சினையை வெறும் இரண்டு மாதத்திற்குள் முடிப்பது என்பது ஒரு பொய்யான காரியம் என அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

ஆனால் அத்தினத்திற்குள் வரக்கூடிய இணக்கப்பாடு ஒரு நல்ல தீர்வுத்திட்டத்தை கொண்டுவருவதற்கு வாய்ப்புள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் அராலியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அந்த இணக்கப்பாட்டில் மக்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நல்லிணக்கத்தின் ஊடாக கிடைக்கப்பெறும் இந்த தீர்வு திட்டத்தினுள் பொருளாதார, அபிவிருத்தி இடைவெளியை நிரப்புவதற்கு, ஏனைய மாகாணங்களில் இருக்கும் வாய்ப்புகள் எம்மவர்களுக்கும் கிடைப்பதற்கும் வழிவகை செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இராணுவம், கடற்படை, வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் பிடியில் இருக்கின்ற மக்களின் நிலங்களை மீண்டும் கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அங்கஜன் இராமநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

13 நாட்கள் மட்டுமே நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாத கூட்டங்களின் போது 20 கோடி ரூபாய் செலவு !

வரவு செலவுத் திட்ட விவாதங்களின் போது நாடாளுமன்றக் கூட்டங்களுக்காக கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், விருந்தினர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு உணவு மற்றும் பானங்கள், எரிபொருள், மின்சாரம், நீர், சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்குவதற்காக இவை செலவிடப்பட்டுள்ளது.

பட்ஜெட் விவாதம் நடைபெற்ற மொத்த நாட்கள் 20 ஆகும்., வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதன் பின்னர், வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு நவம்பர் 15ஆம் திகதி ஆரம்பமாகி, 22ஆம் திகதி வரை ஏழு நாட்கள் நடைபெற்றது. பட்ஜெட் குழு விவாதம் நவம்பர் 23ம் திகதி தொடங்கி கடந்த 8ம் திகதி வரை 13 நாட்கள் விவாதம் நடந்தது.

இதேவேளை, கடந்த 13ஆம் திகதி கேள்விகளுக்குப் பதிலளிக்கும் கூட்டம் இடம்பெற்ற போது கேள்விகளைக் கேட்ட எம்.பி.க்கள் பலரும், கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய அமைச்சர்கள் பலரும் அன்றைய தினம் சபைக்கு சமூகமளிக்கவில்லை.

அந்தச் சந்திப்பிற்காக கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

“எந்த முடிவுகளை எடுப்பதானாலும் மக்களுடைய அனுமதிக்காக  பொதுஜன வாக்ககெடுப்பிற்கு விடப்பட வேண்டும்.”- எம்.கே.சிவாஜிலிங்கம்

தமிழர் தாயகத்தில் மிகப்பெரிய இனப்படுகொலை நடைபெற்றுள்ள நிலையில் எந்த முடிவுகளை எடுப்பதானாலும் மக்களுடைய அனுமதிக்காக  பொதுஜன வாக்ககெடுப்பிற்கு விடப்பட வேண்டும் என தமிழ்த்தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தள்ளார்.

நேற்றைய தினம் வல்வெட்டித்துறையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“தமிழருக்கான தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தையின் போது இந்தியா அமெரிக்க போன்ற நாடுகள் இருக்க வேண்டும். இவை தான் எமது கோரிக்கையும். இவ்வாறான நிலையில் மிகப்பெரிய இனப்படுகொலை இ்ம்பெற்றுள்ள நிலையில் மக்களுக்கு என்ன தேவை என்பதை நாம் யாரும் தீர்மானிக்க கூடாது, மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

மேலும் இந்தியாவின் மத்தியஸ்தம் வேண்டும் என்று நாம் கேட்டால் பெரும்பான்மையினர் குழம்பிவிடுவார்கள் என்றால் எதற்கு? தமிழர் அடிமை வாழ்க்கை வாழ்வதா?  ஆகவே பொதுஜன வாக்கெடுப்பின்றி எதாவது ஒரு தீர்மானத்தை தமிழ்த்தரப்பு ஏற்றுக்கொள்ளுமானால் அது தமிழருக்கான அடிமை சாசனம்.

அதேவேளை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் சர்வதேசத்தை சமாளிக்கக்கூடியதுமான மிகப்பெரிய உத்தியாகவே அடுத்த சுதந்திர தினத்திற்குள் தீர்வு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அடுத்த சுதந்திர தினத்திற்கு முன்னர் தீர்வு கிடைக்காது என்ற சந்தர்ப்பத்தில் தமிழ்க் கட்சிகள் அடுத்து என்ன செய்யப் போகின்றன? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

எவ்வாறாயினும் சிவாஜிலிங்கம் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் அதிபருடனான சந்திப்பில் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தனியார் – அரச பேரூந்து சாரதிகளுக்கிடையான முட்டாள்தனமான போட்டியால் விபத்து !

வவுனியாவில் இரு பேரூந்துகள் போட்டிக்கு ஓடியதில் அவற்றில் ஓர் பேரூந்து வீதியை விட்டு கீழிறங்கி விபத்துக்குள்ளானது.

வவுனியா – மன்னார் பிரதான வீதியில் சாம்பல்தோட்டம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகே இன்று (17) காலை இடம்பெற்ற இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து பூவரசங்குளம் வீதியூடாக செட்டிக்குளம் செல்லும் தனியார் பேரூந்தும் வவுனியாவிலிருந்து மன்னார் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரு பேரூந்துகளும் குறிப்பிட்ட இடத்திலிருந்து போட்டிக்கு சென்றுள்ளன. இதன் போது குறித்த தனியார் பேரூந்து சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியினை விட்டு கீழிறங்கி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் பயணிகளுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்பதுடன் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

“உலகின் வல்லரசுகள் பக்கம் நிற்காது அணிசேரா நிலைப்பாட்டிலிருந்தே செயற்படுகிறது.”- ஜனாதிபதி ரணில்

உலகின் வல்லரசுகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை எந்தவொரு அணியுடனும் ஒத்திசைந்து செயற்படவில்லை. மாறாக சுயாதீனமான அணிசேரா நிலைப்பாட்டிலிருந்தே செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தியத்தலாவை இராணுவ பயிற்சி முகாமில் பயிற்சிகளை நிறைவு செய்த இராணுவ சிப்பாய்களுக்கு பதக்கமளிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிடுகையில்,

இராணுவத்தில் தலைவர்கள் என்ற ரீதியில் ஏனைய இராணுவ வீரர்களையும் அதே போன்று நாட்டையும் பாதுகாக்கும் பொறுப்பு உங்களுக்கு காணப்படுகிறது. நாட்டுக்காக நாட்டின் தலைவராக நான் உங்களுக்கு அந்த பொறுப்கை வழங்கியுள்ளேன். எனவே நாட்டை பாதுகாப்பது உங்களது பொறுப்பாகும்.

நாட்டைப் போன்றே நாட்டின் அரசியலமைப்பையும் பாதுகாக்க வேண்டும். அதன் மூலமே நாட்டை பாதுகாக்க முடியும். நாட்டை அந்நியர்களிடமிருந்தும் பாதுகாக்க வேண்டும். இவ்விரு காரணிகளுமே உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதனை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்றுவீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் உங்களுக்கு பயிற்றுவித்த நிறுவனத்தின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டும். அந்த நற்பெயரை மேலும் மேம்படுத்துங்கள். அதே போன்று நீங்கள் இணையும் இராணுவத்தின் கௌரவத்தையும் நற்பெயரையும் பாதுகாக்க வேண்டும் என்றும் உங்களுக்கு நினைவுபடுத்துகின்றேன்.

இந்து சமுத்திரத்தில் எமது நாடு ஒரு சிறிய தீவாகும். நாம் உலக சக்திகளுடன் ஒவ்வொரு குழுவில் இணையவில்லை. எந்தவொரு குழுவுடனும் , உலக சக்திகளுடன் ஒப்பந்தங்களை செய்து கொள்ளப் போவதில்லை. உலகில் தனி நாடாகக் காணப்படுகின்றோம். எம்மைப் போன்று சிறிய தனித்துள்ள நாடுகள் பல உள்ளன. இவ்வாறிருக்கும் போது ஏனைய நாடுகளுடனான நட்புறவை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு காணப்படுகிறது.

உங்களின் பொறுப்பு நாட்டை பாதுகாப்பதாகும். உள்ளக மற்றும் வெளிக்கள சவால்களுக்கும் முகங்கொடுக்க வேண்டும். ஐ.நா. இராணுவம் உள்ளிட்ட ஏனைய தரப்பினருடனும் இணைந்து சேவையாற்ற வேண்டியுள்ளது. நீங்கள் இணையும் இராணுவம் யுத்த அனுபவம் கொண்டதாகும். இரு தசாப்தங்களுக்கும் அதிக காலம் யுத்தத்தில் ஈடுபட்டு , ஒழுக்கமும் அனுபவமும் பெற்ற இராணுவமாகும்.

இன்று ஐ.நா.விற்காக மாலி நாட்டின் இராணுவத்துடன் இணைந்து சேவையாற்றும் இராணுவமாகும். இவ்வாறானதொரு இராணுவத்திலேயே நீங்கள் இணைகின்றீர்கள். இவ்வாறான இராணுவத்தில் தலைமைத்துவத்தை ஏற்பதற்கு நீங்கள் பலம் மிக்கவர்களாக இருக்க வேண்டும். பலமற்றவர்களாக இருந்தால் இராணுவத்துடன் இணைந்து செயற்படுவது கடினமாகும்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சவால்கள் ஏற்படும் பட்சத்தில் அவற்றை ஏற்று புத்தி கூர்மையுடன் செயற்பட வேண்டும். அச்சமின்றி முன்னோக்கிச் செல்வதற்கான சக்தி காணப்பட வேண்டும். நாடு உங்களிடம் கொண்டுள்ள எதிர்பார்ப்பினை நிறைவேற்றுங்கள் என்றார்.

மூன்று இலட்சம் அரச ஊழியர்களை நீக்கினால் பொதுச் சேவை மிக எளிதாகப் பராமரிக்கப்படும் – எம்.எம்.பி.கே. மாயாதுன்ன

ஏறக்குறைய பதினைந்து லட்சம் அரசு ஊழியர்களை பன்னிரண்டு லட்சமாகக் குறைத்தால், பொதுச் சேவை மிக எளிதாகப் பராமரிக்கப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்ன தெரிவித்தார்.

இதுவரை காலமும் அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு, வெற்றிடங்கள் இருக்கும் போது அல்ல மாறாக அரசாங்கத்தின் பல்வேறு கொள்கைத் தீர்மானங்களினூடாகவே மேற்கொள்ளப்பட்டன என்றும் செயலாளர் வலியுறுத்தினார்.

மேலும், ஒவ்வோர் ஆண்டும் சுமார் இருபதாயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதுடன், இதே எண்ணிக்கையை மீண்டும் அரசுப் பணியில் அமர்த்தும் திட்டமும் சில காலமாக நடைமுறையில் உள்ளது.

ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் கீழ், பொதுச் செலவினங்களைக் குறைக்கும் வேலைத்திட்டத்தின் ஊடாக அரச சேவைக்கான புதிய ஆட்சேர்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, ஓராண்டில் சுமார் இருபதாயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றாலும், இவ்வளவு தொகை மீண்டும் அரசுப் பணியில் சேர்க்கப்படாது.

இந்த வேலைத்திட்டத்தின் மூலம் அடுத்த சில வருடங்களில் அரச சேவையை படிப்படியாக குறைக்க முடியும் எனவும் செயலாளர் கூறுகிறார்.

மேலும், ஐந்து வருட காலத்துக்கு அரச உத்தியோகத்தர்களை வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்புவதன் மூலம் அரச சேவையை திட்டமிட்ட வகையில் குறைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், இந்த வேலைத்திட்டத்தின் மூலம் எந்தவொரு அரச உத்தியோகத்தருக்கும் அநீதி இழைக்கப்பட மாட்டாது எனவும் செயலாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஓய்வு பெறும் வயதை அறுபது ஆண்டுகளாகக் குறைப்பதன் மூலம், இந்த ஆண்டு இறுதியில் சுமார் இருபத்தைந்தாயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற உள்ளனர்.

அனைத்து அரச உத்தியோகத்தர்களும் அறுபது வயதை அடையும் போது ஓய்வு பெற வேண்டும் என்ற வர்த்தமானி கடந்த 5ஆம் திகதி பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டது.