11

11

புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளுக்கு காய் நகர்த்தும் ரணில் விக்கிரமசிங்க – உஷார் என்கிறார் கஜேந்திரகுமார் !

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலகத்திலிருந்து எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி தலைவர்களின் கூட்டம் ஒன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறுந்தகவல் ஊடாக விடுக்கப்பட்டுள்ள இந்த அழைப்பில் இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுவார்த்தை தொடர்பில் எந்தத் தகவலும் குறிப்பிடப்படவில்லை.

இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று(11) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை பெற்றுக்கொள்ளவேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. இதனை தமிழ் அரசியல் தலைமைகள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

“எமது அரசாங்கத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும்.”- சஜித் பிரேமதாச

“ஒற்றையாட்சிக்குள் அனைத்து இன மக்களும் ஒன்றாக வாழக்கூடிய அதிகார பகிர்வை ஏற்படுத்துவோம்.”  என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டாவது  கட்சி சம்மேளனம் கொழும்பு – கெம்பல் மைதானத்தில் இன்று 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கோட்டா கோஹோம், பசில் கோஹோம் என்கிற பெரிய புரட்சியை ஐக்கிய மக்கள் சக்தி செய்தது. குறுகிய காலத்துக்குள் பதிவு செய்யப்பட்டுக் கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு பாரிய வெற்றி கிடைத்தது.

இவ்வாறான நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியை அழிக்க கோழைகள் சதி செய்கிறார்கள். ரணசிங்க பிரேமதாஸவின் மகனான சஜித் பிரேமதாஸ இருக்கும் வரையில் ஐக்கிய மக்கள் சக்தி மீது கைவைக்க எவருக்கும் இடமளிக்கமாட்டேன்.  எங்களை அழிக்க நினைப்பவர்கள் மக்களோடு இணைந்து எங்களை அழித்து தோற்கடித்துக்காட்டுங்கள்.

அரசாங்கத்துக்குள்ள தீர்வு மின், நீர் கட்டணங்களை அதிகரிப்பதல்ல. நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கத்திடம் எந்தவிதமான தீர்வுகளும் இல்லை. நட்டமடையும் அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பது உண்மை.

அதற்காக அரச நிறுவனங்களின் ஊழியர்களைக் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ள முடியாது. அவர்களின் தொழில் உரிமை பாதுகாக்கப்படவேண்டும் . அரச, ,  தனியார் கூட்டுமுயற்சிகளின் ஊடாக நட்டமடையும் அரச நிறுவனங்களை இலாபமடையச் செய்யலாம் .

மேலும் இனப் பிரச்சினைக்கு தீர்வாக ஒற்றையாட்சிக்குள் பிளவுபடாத இலங்கைக்குள்,  அதிகாரங்களைப் பகிர நடவடிக்கை எடுப்போம். அதேபோல் இளைஞர்கள், பெண்கள், சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசியலமைப்பில் அடைப்படை உரிமைக்குள் சேர்ப்போம்.  மக்களுக்கு எதிரான தீர்மானங்களுக்காக மக்களோடு ஒன்றிணைந்து வீதிக்கு இறங்குவதற்கு இந்த அரசாங்கத்திடம் ஒருபோதும் அனுமதி கேட்டுக்கொண்டிருக்கப்போவதில்லை.

மேலும் எமது அரசாங்கத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு தேசியப் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடியப் புதியச் சட்டம் கொண்டுவருவோம். லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னெலிகொடவை தாராளவாதிகள் மறந்துவிட்டனர். ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அவர்களுக்கு நீதி கிடைக்கும்.

நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணங்களை மீள நாட்டுக்குக் கொண்டுவருவேன். அத்துடன் சட்டம் ஒழுங்கை ஏற்படுத்தவும் ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்கவும்  பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா தலைமையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

போராட்டத்தால் கைதுசெய்யப்பட்ட போராட்டக்காரர்கள் பக்கமாக ஐக்கிய மக்கள் சக்தி நிற்பது மாத்திரமன்றி, போராட்டக்காரர்களால் முன்னெடுத்தப் புரட்சியை கையில் எடுத்து எதிர்காலத்தை நோக்கி பயணிப்போம்

எனவே வங்குரோத்து அடைந்துள்ள நாட்டை கட்டியெழுப்ப முடியுமான நாட்டுக்கு உள்ள ஒரே தீர்வு, ஒரே மாற்றம் ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமாகும். அதனால் புதிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும். அதற்காக அரசாங்கம் ஆரம்பமாக உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

அடுத்த ஆண்டு முதல் G.C.E (O.L.) மாணவர்களுக்கு கட்டாய பாடமாக தகவல் தொழில்நுட்பம் !

அனைத்து மாணவர்களும், உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் வேலைச் சந்தையின் தற்போதைய தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் அடுத்த ஆண்டு முதல் G.C.E (O.L.) மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பாடம் கட்டாக்கப்படவுள்ளது . இதற்காக பாடத்திட்டம் விரைவில் திருத்தம் செய்யப்படும்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 1,000 அரச பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்படும். அடுத்த வருடத்திற்கு சுமார் 1,000 மில்லியன் ரூபா இந்த நோக்கத்திற்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்

தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பாடங்களில் திறமையான 15,000 ஆசிரியர்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொலைதூரப் பாடசாலைகளின் சேவைக்காக நியமிக்கப்படுவார்கள் இதேவேளை சுமார் 9,500 மூத்த ஆசிரியர்கள் அடுத்த ஆண்டுக்குள் ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்..

தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கு உள்நாட்டிலும் உலக அளவிலும் பெரும் தேவை இருப்பதாக தெரிவித்த அமைச்சர் பாடசாலைகளை விட்டு வெளியேறும் 75,000 பேருக்கு அடுத்த ஆண்டு பயிற்சி அளிக்க ரூ. 700 மில்லியன் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டை பாதித்த குளிர் காலநிலை – இரண்டு சிறு குழந்தைகள் பலி !

நாட்டை பாதித்துள்ள குளிர் காலநிலை காரணமாக கந்தளாய் பிரதேசத்தில் இரண்டு சிறு குழந்தைகள் உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

கந்தளாய் ராஜா அல பிரதேசத்தை சேர்ந்த இரண்டரை மாத குழந்தையும் கந்தளாய் பேராறு பகுதியை சேர்ந்த மூன்று வயது சிறுவனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரண்டு குழந்தைகளும் நேற்று (09) அதிகாலை உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் ஒருவர் நுரையீரல் கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடும் குளிரின் காரணமாக மூச்சு திணறல் காரணமாக மூன்று வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த நாட்களில் நிலவும் கடும் குளிரான காலநிலை காரணமாக சிறு பிள்ளைகளுக்கு சுவாசக் கோளாறுகள் மற்றும் ஏனைய நோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

எனவே, கடும் குளிரில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பெற்றோர்களிடம் சிறப்பு மருத்துவர் கேட்டுக்கொண்டார்.

இனத்துக்காக உழைத்தவர்களை இன்னலின்றி வாழ வைப்போம் எனும் தொனிப்பொருளில் போராளிகள் நலன்புரிச் சங்க அங்குரார்ப்பணம் !

மாற்று சிந்தனையோடு பயணித்த அமைப்புகளின் போராளிகள் நலன்புரிச் சங்கத்தில் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள் என விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த போராளி ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இனத்துக்காக உழைத்தவர்களை இன்னலின்றி வாழ வைப்போம் எனும் தொனிப்பொருளில் போராளிகள் நலன்புரிச் சங்க அங்குரார்ப்பண நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது.

சர்வ மத தலைவர்களின் ஆசியுரையோடு இடம்பெற்ற போராளிகள் நலம்புரிச் சங்க அங்குரார்பண நிகழ்வில் சட்டத்தரணி கே.வி.தவராசா மற்றும் சர்வ மத தலைவர்கள், வர்த்தக பிரதிநிதிகள், முன்னாள் போராளிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களைப் பொறுத்தவரை தேசம் சார்ந்து தேசியத்தோடு பயணித்த போராட்ட அமைப்புகளின் போராளிகள் அதாவது விடுதலைக்காக பிற்பட்ட காலங்களிலே சில போராட்ட அமைப்புக்கள் எமது போராட்ட அமைப்போடு ஒரே கொள்கையில் இணைந்து பயணித்தவர்கள் இதில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள்.

ஆனால் மாற்று சிந்தனையோடு பயணித்தவர்கள் யாரும் இந்த எமது அமைப்பில் இணைத்து பயணிக்கப் போவதில்லை.

நாங்கள் சிந்தித்து செயல்படுகின்ற விடயங்களை தொடர்ந்து பயணிக்காமல் முடியாமல் போய்விடும் எனவே மாற்று சிந்தனையுடையவர்களை இதில் உள்ளடக்க முடியாது என்பது எமது நிலைப்பாடாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் விரும்பினால் நாட்டை மீண்டும் ஆளத்தயாராக உள்ள ராஜபக்ஷக்கள் !

நாட்டு மக்கள் ராஜபக்சவை விரும்பினால், ராஜபக்சவே நாட்டை தொடர்ந்து ஆட்சி செய்வார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வது தொடர்பான கலந்துரையாடல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது, அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அதிக இளைஞர் பிரதிநிதித்துவத்தை முன்வைக்க தாம் நம்புவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மை உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றும் என்றும் அவர் மேலும் கூறினார்.