06

06

இலங்கையின் சிறைகளில் கல்வியறிவில்லாதோர் 2.2 % பேர் – பட்டதாரிகள் 300 பேர் – O/L சித்தியடைந்தோர் 22 % பேர் இருக்கிறார்கள்!

கடந்த 2021 ஆம் ஆண்டில் மாத்திரம் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக 14,547 குற்றவாளிகளும், 62,426 சந்தேக நபர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 300இற்கும் மேற்பட்டோர் பட்டதாரிகள் என்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்ட அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகளின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

மொத்தமாக 349 பட்டதாரிகளும் (0.5%), உயர்தரம் சித்திபெற்ற 5,395 பேரும் (7%), சாதாரண தரத்தில் சித்திபெற்ற 17,616 பேரும் (22.9%) சிறையிலடைக்கப்பட்டிருப்பதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறையில் அடைக்கப்பட்டவர்களில் 2.2% பேர் பாடசாலைக்கு செல்லாதவர்கள் என்று புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இதனிடையே, சிறைச்சாலை தகவல்களின்படி அவர்களை வயது அடிப்படையில் வகைப்படுத்தும் பட்சத்தில், கடந்த ஆண்டு 16 வயதுக்குட்பட்ட 87 பேரும், 16 முதல் 22 வயதுக்குட்பட்ட 5,983 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 22-30 வயதுக்குட்பட்ட 18,377 பேரும், 30-40 வயதுக்குட்பட்ட 26,134 பேரும் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறே சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் பெரும்பாலனோர் 30-40 வயதுக்குட்பட்டவர்களாவர். குறித்த வயது பிரிவுக்குட்பட்ட 26134 பேர் (34.0%) சிறையில் உள்ளனர்.

அதேவேளை, 70 வயதுக்கு மேற்பட்ட 436 கைதிகளும் சிறையில் உள்ளதாக சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நிதியில் புகையிலை தொடர்பான நோய்களுக்கான சுகாதாரச் செலவு மட்டும் 15.3 பில்லியன் ரூபாய் – நாட்டுக்கு பெருந்தொல்லையாய் மாறியுள்ள குடிகாரர்கள் !

எந்தவொரு மதுபானத்தையும் உட்கொள்வது புற்றுநோயை ஏற்படுத்தும் என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் சமாதி ராஜபக்ஷ, எச்சரித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை தேசிய அபாயகர மருந்துகள் கட்டுப்பாட்டு சபையால் பெறப்பட்ட போதைப்பொருள் தொடர்பான ஆய்வுகள் 2022க்கான சர்வதேச கருத்தரங்கில் அவர் இந்த எச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

‘கேட்வே மருந்துகள்’ என்ற சொல், மது மற்றும் சிகரெட் போன்ற எளிதில் கிடைக்கக்கூடிய சில மருந்துகளின் பயன்பாடு ஏனைய மருந்துகளின் பயன்பாடு மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதில் அதிக ஆபத்துக்கு வழிவகுக்கும் என்ற கோட்பாட்டை விளக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

ஆரம்பகாலத்தில் புகையிலை பொருட்கள் அல்லது மதுபானங்களை பயன்படுத்தத் தொடங்கும் நபர்கள் மரிஜுவானா, கொக்கெய்ன், ஹெரோயின், ஐஸ் போன்ற பிற பொருட்களைப் பயன்படுத்துவதற்கான விருப்பத்தை அடிக்கடி வளர்த்துக் கொள்வார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன என பேராசிரியர் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் 2021 இல் இலங்கையின் மக்கள் தொகையில் 28% ஆனோர் மது அருந்தினர்.

உயர் இரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம், கல்லீரல் நோய்கள், செரிமான பிரச்சினைகள், புற்றுநோய்கள் (மார்பகம், வாய், தொண்டை, உணவுக்குழாய்) போன்ற மது அருந்துவதால் ஏற்படும் நோய்களால் இலங்கையில் நாளொன்றுக்கு 55 பேர் உயிரிழப்பதாக பேராசிரியர் ராஜபக்சே விளக்கம் அளித்துள்ளார். ,

குரல்வளை, கல்லீரல், பெருங்குடல், மலக்குடல் போன்றவை) மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. அற்ககோல் குடும்பம் மற்றும் வேலை தொடர்பான உறுதியற்ற தன்மை உள்ளிட்ட சமூக பிரச்சனைகளையும் உருவாக்குகிறது.

புகையிலை அதன் பாவனையாளர்களில் பாதிப்பேரைக் கொல்வதாகவும், புகையிலை தொடர்பான நோய்களால் ஒவ்வொரு நாளும் சுமார் 60 இலங்கைப் பிரஜைகள் மரணமடைவதாகவும் தெரியவந்துள்ளது.

புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள் புற்றுநோய், இதய நோய், பக்கவாதம், நுரையீரல் நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் மற்றும் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவை பயனர்களின் குடும்ப நல்வாழ்வையும் எதிர்மறையாகப் பாதிக்கின்றன.

2016 இல் புகையிலை வரி மூலம் கிடைத்த வருமானம் ரூ. 88.5 பில்லியனாகும் அதேவேளை புகையிலை தொடர்பான நோய்களுக்கான சுகாதாரச் செலவு 15.3 பில்லியனாகும்.

இந்தத் தொகையில், வரி செலுத்துவோர் ரூ.8.3 பில்லியனைச் சுமக்க வேண்டும், தனிநபர்கள் ரூ.5.9 பில்லியனைச் செலுத்தினர் மற்றும் சுகாதார காப்பீடு ரூ. 1.1 பில்லியன் எனவும் அவர் தெரிவித்தார்.

“மக்கள் கஷ்டப்படும் நேரத்தில் என்னால் கேக் சாப்பிட முடியாது.” – முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ!

மக்கள் கஷ்டப்படும் நேரத்தில் என்னால் கேக் சாப்பிட முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக மையத்தின் நான்காம் ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போதே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

ரணில்  ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் எவரும் சுதந்திரமாக அரசியல் செய்யக்கூடிய சூழல் உருவாகியுள்ளதாகவும் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

மக்களின் எதிர்பார்ப்புகளை 100 வீதம் நிறைவேற்ற முடியாமல் போனமை தொடர்பில் வருந்துவதாகவும், குறைபாடுகளை நிவர்த்தி செய்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற பாடுபடுவேன் எனவும் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கான நேரம் வந்துவிட்டதாகவும், எந்தத் தேர்தலுக்கும் தமது கட்சி தயாராக இருப்பதாகவும், தன்னால் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வரமுடியாது போனதில் மகிழ்ச்சியடைவதாகவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

டயானா கமகே பிரித்தானிய பிரஜை – இலங்கை கடவுச்சீட்டை வழங்க முடியாது என குடிவரவு – குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு !

பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே பிரித்தானிய பிரஜை என கண்டறியப்பட்டுள்ளதால் அவருக்கு இலங்கை கடவுச்சீட்டை வழங்க முடியாது என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த கடிதத்தில் திருமதி கமகே 2004 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து குடியுரிமை பெற்றுள்ளார். அவர் 521398876 என்ற இங்கிலாந்து கடவுச்சீட்டை வைத்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

“இருப்பினும், அவர் ஜனவரி 24, 2014 அன்று N 5091388 என்ற இலங்கைக் கடவுச்சீட்டைப் பெற முடிந்தது. அவர் நவம்பர் 5, 2018 அன்று இராஜதந்திர கடவுச்சீட்டையும் பெற்றுள்ளார். அதை நிரூபிக்கும் ஆவணத்தை அவர் சமர்ப்பிக்காததால், புதிய இராஜதந்திர கடவுச்சீட்டை வழங்க முடியாது. அவர் தனது இங்கிலாந்து குடியுரிமையை விட்டுவிட்டார்” என கட்டுப்பாட்டாளர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

திருமதி கமகே அனுப்பிய விசா விண்ணப்பங்களின் ஆவணங்களையும் கட்டுப்பாட்டாளர் இணைத்துள்ளார்.

அப்போது அவையில் இருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எம்.பி கமகேவின் கடவுச்சீட்டு விவகாரத்தை நாடகமாக்க வேண்டாம் என தெரிவித்தார். நீங்கள் பாராளுமன்றத்திற்கு வருவதற்கு கட்சியை வழங்கியவர் திருமதி கமகே. எனவே அவரது கடவுச்சீட்டு விவகாரத்தை பிரச்சினையாக்க வேண்டாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அடிப்படைத் தீர்வுகளுக்கான ஆலோசனைகளை வழங்க மூத்த தலைவர் என்ற வகையில் நான் தயார் – சந்திரிக்கா

இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அடிப்படைத் தீர்வுகளை வழங்குதல் ஆகியவற்றுக்கு நாட்டின் பொறுப்புள்ள மூத்த தலைவர் என்ற வகையில் எனது ஆலோசனையை வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாh பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கட்சி மாறியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர்,

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது :

சந்தர்ப்பவாதத்திற்காகவும் , குறுகிய நோக்கத்திற்காகவும் கட்சியை அப்பட்டமாகக் காட்டிக் கொடுப்பவர்களுக்கு மத்தியில் , தூய பண்டாரநாயக்க கொள்கைகளை பாதுகாக்க எந்த சந்தர்ப்பத்திலும் உறுதியேற்பேன்.

 

நான் ஐக்கிய தேசிய கட்சியுடனும் அல்லது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளதாக வெவ்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை கைவிட்டு , வேறு எந்தவொரு கட்சியிலும் நான் இணையப் போவதில்லை என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நான் பிறந்தது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலாகும். வளர்ந்ததும் சுதந்திர கட்சியிலேயே ஆகும். வெ வ்வேறு தாக்குதல்களுக்கு உள்ளானதும் சுதந்திர கட்சியிலேயே ஆகும்.  இறுதியாக, நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினராகவே இறக்கவும் எதிர்பார்க்கின்றேன்.

வெ வ்வேறு தவறான கொள்கைகளை பின்பற்றியமையின் காரணமாக இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மிகவும் பலவீனமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே பண்டாரநாயக்க தத்துவத்தைப் மதிக்கின்ற , தெளிவான பாதையில் நான் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேன். அந்தத் தத்துவத்தை ஏற்று அதற்கேற்ப அரசியலில் ஈடுபடும் எந்த ஒரு அரசியல் குழுவிற்கும் அறிவுரை வழங்க நான் தயங்குவதில்லை.

தற்போது நம் நாடு எதிர்கொள்ளும் இரண்டு தேசிய நெருக்கடிகளான குழந்தைகளின் போசாக்கின்மை நிலைமையைப் போக்குதல் மற்றும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அடிப்படைத் தீர்வுகளை வழங்குதல் ஆகியவற்றுக்கு நாட்டின் பொறுப்புள்ள மூத்த தலைவர் என்ற வகையில் எனது ஆலோசனையை வழங்குகிறேன்.

தற்போதைய சுதந்திரக் கட்சித் தலைவர்கள் தமது சந்தர்ப்பவாதத்திற்காகவும் குறுகிய நன்மைகளுக்காகவும் கட்சிக் கொள்கைகளை அப்பட்டமாக காட்டிக்கொடுக்கும் வேளையில், உண்மையான சுதந்திரக் கட்சிக்காக தூய பண்டாரநாயக்க கொள்கைகளை பாதுகாக்க இன்றும், நாளையும், எதிர்காலத்திலும் உறுதியேற்பேன் என்பதை வலியுறுத்துகிறேன்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“இலங்கை நிலையான அபிவிருத்தியை அடைவதற்கும் ஆக்கபூர்வமான பங்களிப்பைத் தொடரும்.” – சீனா

தற்போதைய சிரமங்களை சமாளிக்க இலங்கைக்கு உதவுவதில் சாதகமான பங்கை ஆற்றுவதற்கு தொடர்புடைய நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் சீனாவுடன் இணைந்து செயற்படும் என சீனா நம்புகிறது.

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான கடன் மறுசீரமைப்பு தொடர்பான விரைவான முன்னேற்றம் தொடர்பில் ஆலோசிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவொன்று இந்த வாரம் சீனாவுக்குச் செல்லவுள்ளதாக வெளியான ஊடகச் செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவித்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

IMF , பிற சர்வதேச பொருளாதார மற்றும் நிதி நிறுவனங்களுடன் சீனா நீண்டகாலமாக நல்ல ஒத்துழைப்பைக் கொண்டுள்ளது என்று மாவோ தெரிவித்தார்.

இலங்கையின் கடன் பிரச்சினை தொடர்பில், இலங்கையின் சிரமங்கள் மற்றும் சவால்களுக்கு சீனா அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக மாவோ குறிப்பிட்டார்.

“பிரச்சினையை சரியான முறையில் தீர்ப்பதற்கு நிதி நிறுவனங்களை இலங்கையுடன் இணைந்து செயற்பட நாங்கள் ஆதரிக்கிறோம்.

தொடர்புடைய நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் சீனாவுடன் இணைந்து செயற்படுவதோடு, இலங்கையின் தற்போதைய சிரமங்களை சமாளிப்பதற்கும். அதன் கடன் சுமையைக் குறைப்பதற்கும், நிலையான அபிவிருத்தியை அடைவதற்கும் ஆக்கபூர்வமான பங்களிப்பைத் தொடரும் என நாங்கள் நம்புகிறோம் என மாவோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மே . 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பான  அறிக்கையை பகிரங்கப்படுத்துங்கள் என விமல் வீரவங்ச கோரிக்கை !

“நாட்டில் கடந்த மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பான  அறிக்கையின் உண்மை தன்மையை தெரிந்துகொள்ளும் உரிமை நாட்டு  மக்களுக்கு உண்டு.” என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் திங்கட்கிழமை (டிச.05) பாராளுமன்ற அமர்வு இடம்பெற்ற போது விசேட கூற்றை முன்வைத்து  உரையாற்றுகையிலேயே  அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து  அறிக்கை சமர்ப்பிக்க  அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவினால் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட தலைமையில் ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது.

தற்போதைய ஜனாதிபதியிடம் குழுவினர் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக அறிய முடிகிறது. இருப்பினும் அறிக்கையின் உள்ளடக்கம் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை. நாட்டு மக்களின் வரிப்பணத்தின் ஊடாக இந்த குழுவின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.  அந்த அறிக்கையின் உண்மை தன்மையை அறிந்துகொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு. ஆகவே பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த, குழுக்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. குழுவினர் ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.

தற்போதைய ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை அறியவில்லை. இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றார்.

இதன்போது மீண்டும் எழுந்து உரையாற்றிய விமல் வீரவன்ச, குழுவினர் இரு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள்.

ஆகவே அறிக்கையை தொடர்ந்து மூடி மறைக்காமல் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க அவதானம் செலுத்த வேண்டியது அவசியம் என்றார்.