December

December

வவுனியாவில் இரட்டை கொலைவழக்கு – எதிராளிக்கு மரண தண்டனை – நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்ட நகைகளை களவாடிய அதிகாரி !

வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கடந்த 2012.01.19 ஆம் திகதி கணவன் மனைவி இருவரையும் வெட்டிக்கொலை செய்த வழக்கில் வவுனியா மகாறம்பைக்குளத்தைச் சேர்ந்த எதிரிக்கு இரட்டை மரண தண்டனையும் கொல்லப்பட்டவர்களின் நகைகளைக் கொள்ளையடித்தமைக்கு 20 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் தங்க ஆபரணங்களைக் கொள்ளையடித்த குற்றத்திற்கு எதிரிக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. முதலாம் எதிரியின் சகோதரராகிய இரண்டாம் எதிரி விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்தத் தீர்ப்பு வவுனியா மேல் நீதிமன்றத்தில் வியாழனன்று வழங்கப்பட்டது.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் எதிரிகள் கைது செய்யப்பட்டு முதலாம் எதிரியின் உடைமையில் இருந்து, கொலை செய்யப்பட்டவர்களின் தங்க ஆபரணங்கள் மற்றும் தொலைபேசிகள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன.

முதலாம் எதிரி கொலையுண்டவர்களின் வீட்டில் வேலை செய்து வந்தவராவார். இறந்துபோன கணவருடன் இறுதியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட ஓரிடத்திற்கு வருமாறு எதிரி அழைத்ததை அடுத்து, அங்கு சென்றபோதே கணவன் கொலை செய்யப்பட்டுள்ளார். அதன் பின்னர் வீட்டில் வைத்து அவரது மனைவி கொலை செய்யப்பட்டார்.

கொல்லப்பட்டவர்களின் கைவிரல்கள் துண்டிக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. துண்டாடப்பட்ட விரல்கள் சடலங்களின் அருகில் கண்டுபிடிக்கப்பட்டன. கொலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட கோடரி கிணற்றில் இருந்து பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது. கத்தி சடலத்தின் அருகில் இருந்து எடுக்கப்பட்டது.

கொலையுண்ட கணவனுடன் எதிரி இறுதியாகத் தொலைபேசியில் கதைத்தது தொடர்பில் வவுனியா நீதவான் நீதிமன்ற நீதவானின் விசேட கட்டளையின்பேரில் டயலொக் நிறுவன அறிக்கை பெறப்பட்டு அதன் மூலம் அந்த அழைப்பை ஓமந்தை தொலைதொடர்பு கோபுரப் பிரதேசத்தில் முதலாம் எதிரியே ஏற்படுத்தினார் என்பதும் பொலிஸ் புலன் விசாரணையில் கண்டறியப்பட்டு இந்தக் கொலைகள் தொடர்பான தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்ததாக ஓமந்தை பொலிஸ் நிலையப் புலனாய்வு பொறுப்பதிகாரி நீதிமன்றில் சாட்சியமளிக்கையில் தெரிவித்தார்.

இறந்தவர்களின் மகள், எதிரியின் உடைமையில் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்கள் தனது தாய்தந்தையரின் நகைகள் என பொலிஸ் நிலையத்தில் வைத்து அடையாளம் காட்டி சாட்சியளித்ததாகவும், வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட அந்த நகைகள் பின்னர் நீதிமன்ற களஞ்சியப் பொறுப்பாளரினால் களவாடப்பட்டு அவர் தற்சமயம் தலைமறைவாகி இருப்பதாகவும் வவுனியா நீதிமன்றப் பதிவாளர் மன்றில் சாட்சியமளித்தார்.

இறந்தவர்களின் உடல்களில் கொடூரமான வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாகவும், இரு சடலங்களிலும் விரல்கள் துண்டிக்கப்பட்டிருந்ததாகவும், மொட்டையான ஆயுதத்தினால் தலையில் தாக்கப்பட்ட நிலையில் இருவரும் மரணமடைந்ததாகவும் மருத்துவப் பிரசோதனை செய்த வைத்திய நிபுணர் வைத்தியரத்ன அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.

இந்த விடயங்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இரட்டைக் கொலை மற்றும் நகைகளைக் கொள்ளையடித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்கு முதலாம் எதிரியே குற்றவாளி என அறிவித்தார்.

அத்துடன் இரண்டு கொலைகளுக்கும் முதலாம் எதிரிக்கு இரட்டை மரண தண்டனையும் கொல்லப்பட்டவர்களுக்குக் காயங்களை ஏற்படுத்தி நகைகளைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டிற்கு தலா 20 ஆண்டுகள் வீதம் 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் குற்றவாளிக்குத் தண்டனை விதித்தபோது மன்றில் அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு மரண தண்டனைத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

“பொருத்தமான தருணம் வந்தால் நாட்டுக்கு சேவையாற்ற தயாராகவுள்ளேன்.“ – அஜித் கப்ரால்

“எனது அரசியல் மற்றும் தொழில்துறை வாழ்க்கை இன்னமும் முடிவிற்கு வரவில்லை.” என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் கப்ரால்  குறிப்பிட்டுள்ளார்.

தகுந்த வாய்ப்பு கிடைத்தால் நாட்டிற்கு மீண்டும் சேவையாற்ற தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவருடைய அரசியல் பயணத்திலும் வெற்றிகள் தோல்விகள் கண்டிப்பாக இருக்கும். ஏனையவர்கள் தன்னை சந்தேகிக்க தொடங்கியவேளை நான் என்னை நம்ப ஆரம்பித்துள்ளேன்.

எனது அரசியல் தொழில்துறை வாழ்க்கை முடிவிற்கு வந்துவிட்டது என நான் கருதவில்லை. இதன் காரணமாக பொருத்தமான தருணம் வந்தால் சேவையாற்ற தயாராகவுள்ளேன். இல்லாவிட்டால் எனக்கு ஆர்வமுள்ள பல விடயங்களில் கவனத்தை செலுத்தும் வாழ்க்கையை வாழ்வேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

“இலங்கையில் 3600 எய்ட்ஸ் நோயாளிகள். வவுனியாவில் அதிகமாக பரவும் எய்ட்ஸ்.” – கலாநிதி பா. அருள்மொழி

உலகில் 38.4 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1.5 மில்லியன் மக்கள் புதிய நோயாளர்கள் என வவுனியா போது வைத்தியசாலையின் பாலியல் நோய் சிகிச்சை பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி பா. அருள்மொழி தெரிவித்தார்.

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு இன்று பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இவ்வாறு நோய் தாக்கத்திற்குள்ளானவர்கள் 6.5 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் எய்ட்ஸ் காரணமாக ஏற்பட்ட நோய்களினால் இறந்துள்ளனர். இலங்கையை பொறுத்தவரை இதுவரை கணக்கெடுப்பின் பிரகாரம் 3600 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 85 வீதமானவர்களே சிகிச்சை பெறுகின்றனர். 2021 ஆம் ஆண்டு 411 பேர் எய்ட்ஸ் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் 2003 ஆம் ஆண்டு சிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 30 எச்.ஐ.வி நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 17 ஆண்களும் 13 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் சிகிச்சைக்கு பிந்திய நிலையில் வந்தவர்கள் மற்றும் சீராக சிகிச்சை பெறாத 7 ஆண்களும் 5 பெண்களுமாக 12 பேர் இறந்துள்ளனர்.

2021 ஆம் ஆண்டு இலங்கையின் தரவு அடிப்படையில் 15 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட இளம் வயதினர் எச். ஐ. வி தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது 14 வீதமாக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இவர்களில் இளம் ஆண்களே கூடுதலாக உள்ளனர்.

இதற்கு ஆண் ஆணுடன் உறவு கொள்ளலும்  போதைவஸ்து பாவனையும் காரணம் என இனம்காணப்பட்டுள்ளது. எச். ஐ. வி நோய் அடையாளம் காணப்பட்டு உரிய சிகிச்சையை பெற்றால் சாதாரண மக்கள் போல் வாழ்நாள் முழுவதும் சுகதேகியாக வாழலாம்.

இலங்கையில் ஆணுக்கும் ஆணுக்குமிடையிலான உறவுள்ளவர்களுக்கு அதிகளவில் இந்த நோய் அதிகரித்து வருவதுடன் அடுத்து திருநங்கைகளுக்கும் 1.4 வீதம் என்ற அடிப்படையில் இந்த நோய் அதிகமாக பரவி வருகின்றது. விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களுக்கும் இந்நோய் பரவி வருகின்றது.

வவுனியா மாவட்டம் எல்லோரும் கூடும் மத்திய இடமாக காணப்படுவதனால் பலர் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இராணுவவீரர்களும் பாதுகாப்பு படையினரும் பிரயாணம் செய்யும்போது வவுனியா கேந்திர நிலையமாக காணப்படுவதால் இங்கு விபச்சாரம் சற்று அதிகமாகவே காணப்படுகின்றது.

எனினும் நிரந்தரவாசிகள் இந்த தொழிலில் ஈடுபடுவது குறைவாகவுள்ளது. வேறு மாவட்டத்தவர்களை இதில் ஈடுபடுகின்றனர். எனவே அவர்களுக்கு இந்த நோய் உள்ளதா என்பதை பரிசோதிக்கமுடியாதுள்ளது.

இதனால் வவுனியாவில் இந் நோய் பரவிவருகிறது. பொலிஸாரால் கைது செய்யப்படும் விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களை பரிசோதித்தபோது அவர்களுக்கு இந்நோய் உள்ளது அவதானிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தின் சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் முதல் நிலை மாவட்டமாக கிளிநொச்சி – மாவட்ட அரசாங்க அதிபர் வாழ்த்து !

கல்விச் சாதனை கொண்டாட்டங்களுடன் நிற்காது, தக்கவைக்கவும், முன்னேறவும் பாடுபடுங்கள் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் வாழ்த்தியுள்ளர்.

வெளியான 2021ஆம் ஆண்டு சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் மகிழ்ச்சி தெரிவித்த அவர், அனைத்து தரப்புக்கும் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்தார்.

அண்மையில் வெளியான பெறுபேறு மகிழ்ச்சியளிக்கின்றது. வடக்கு மாகாணத்தில் கரைச்சி வடக்கு கல்வி வலயம் முதல் இடத்திலும், கரைச்சி தெற்கு கல்வி வலயம் இரண்டாம் இடத்திலும் உள்ளமை மாவட்டத்துக்கு பெருமையளிக்கின்றது.

கிளிநொச்சி கல்வி வலயம் இரண்டாக பிரிக்கப்பட்ட பின்னர் அதித வளர்ச்சியடைந்துள்ளது. அதற்காக பாடுபட்ட அனைவரையும் பாராட்டுவதுடன் வாழ்த்துகிறேன்.

கிளிநொச்சி மாவட்டம் கல்வியில் முன்னேற்றத்தை கண்டு வந்தாலும் தரப்படுத்தலில் பின்னால் இருந்தது. ஆனால், இம்முறை மாகாணத்தில் முதல் நிலையிலும், தேசிய ரீதியில் 9ம் நிலையிலும் உள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது.

அதற்காக பாடுபட்ட அனைவரையும் பாராட்டி வாழ்த்துகிறேன். மாணவர்கள் அனைவரையும் மனமுவந்து வாழ்த்துகிறேன்.

இந்த வெற்றி கொண்டாட்டங்களுடன் நிறுத்திவிடாது, இந்த நிலையை தக்கவைக்கவும், மேலும் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கவும் வேண்டும். அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க தான் தயாராக உள்ளதாகவும் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள், மாணவர் போராட்டங்களால் கலைக்கப்பட்ட சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி சட்டபூர்வமானது என்கிறார் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க !

சைட்டம்" தனியார் மருத்துவ கல்லூரியை இலங்கை அரசு ஏற்பதில் இழுபறி - BBC News  தமிழ்

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி ஆரம்பிக்கப்பட்டால் இலங்கையின் இலவச மருத்துவம் தரமிழந்து போக வாய்ப்புள்ளது என கடந்தகாலங்களில் பல போராட்டங்கள் மக்களாலும் – பல்கலைகழக மாணவர் ஒன்றியங்களாலும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சைட்டம் தனியார் மருத்துவக்கல்லூரி அமைப்பு நிறுத்தப்பட்டடிருந்தது.

இந்த நிலையில், சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி சட்டபூர்வமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் தேவைப்பட்டால் மீண்டும் அதனைத் திறக்க முடியும் எனவும் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாடசாலைக் கல்வி மற்றும் உயர்கல்வி குறித்து நாடாளுமன்றத்தில் பல விவாதங்கள் இன்று நடந்தன. இதன் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பிடித்திருந்தால் மீண்டும் சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை திறக்க முடியும்.

அதன் போது, பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை ஆரம்பிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன மற்றும் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோரும் நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க விருப்பம் தெரிவித்தனர்.

மேலும் கல்வி என்பது அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், தனியார் பல்கலைக்கழகங்களை ஆரம்பித்து, அங்கு பயிலும் வறுமையான மாணவர்களுக்கு அரசாங்கம் நிதியுதவிகளை மேற்கொள்ள முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் குறிப்பிட்டார்.

எனவே அனைத்து தரப்பினரும் இணைந்து இது தொடர்பில் கலந்துரையாட முடியும் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சீனாவில் மக்கள் போரைாட்டத்தை அடுத்து தளர்த்தப்பட்டது கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் !

உலக நாடுகளில் இரண்டரை ஆண்டுகளாக தீவிர அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா பெருந்தொற்று முதன்முறையாக சீனாவில் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலக நாடுகளில் பல்வேறு அலைகளாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. எனினும், கடுமையான ஊரடங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் பிற நாடுகளை விட, பரவலை முன்பே சீனா கட்டுப்படுத்தி இருந்தது.

இந்நிலையில், மீண்டும் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்படி, சீனாவில் புதிதாக ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியது. கொரோனா அதிகரிப்பை முன்னிட்டு பல்வேறு மாகாணங்களில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்தது. அரசின் இந்த ஊரடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வியாழ கிழமையன்று ஜின்ஜியாங் மாகாண தலைநகரான உரும்கி நகரில் குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதில் 10 பேர் உயிரிழந்தனர். ஊரடங்கு கட்டுப்பாடுகளால் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு வந்து சேருவதில் காலதாமதம் ஏற்படுத்தியது என இதுபற்றி ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்படுத்தியது. அரசின் பூஜ்ய கொரோனா கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜனாதிபதி ஜி ஜின்பிங் பதவி விலக கோரியும் மக்கள் போராட்டம் வெடித்தது. தொடர்ந்து, பொதுமக்கள் வீதிகளில் இறங்கி மெழுகுவர்த்திகளை ஏந்தியபடியும், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இவர்களில் குவாங்ஜவ் மாகாணத்தில் தெருக்களில் போராட்டம் நடத்தியவர்கள் மீது பெப்பர் ஸ்பிரே (மிளகு தூள்) தூவி அவர்களை கலைந்து போக செய்ய ஷாங்காய் போலீசார் முயற்சி செய்தனர். ஒரு தசாப்தத்திற்கு முன் ஜின்பிங் பதவியேற்றதில் இருந்து, இதுவரை இல்லாத வகையிலான அரசுக்கு எதிரான மக்களின் இந்த போராட்டம், மக்களின் மிக பெரிய கீழ்படியாமை தன்மை என அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சீனாவில் தொடர்ந்து, புதிதாக கொரோனா பாதிப்புகள் உச்சம் அடைந்து வரும் சூழலில், மக்கள் போராட்டம் எதிரொலியாக மாவட்ட அளவிலான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தி வருகிறது. பல இடங்களில் போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், 7 மாவட்டங்களில் தற்காலிக ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.

இதனால், கிழக்கு பீஜிங் நகரில், லேசான அறிகுறிகள் ஏற்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தும் மையங்களுக்கு பதிலாக, வீட்டிலேயே தங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அந்த மாடியிலேயே உள்ள அண்டை வீட்டுக்காரர்கள் மற்றும் அந்த தளத்தில் இருந்து மேலே மற்றும் கீழே என 3 மாடியில் வசிக்கும் மக்களும் வீட்டிலேயே தனிமைப்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனை பெருமளவிலான மக்கள் வரவேற்று உள்ளனர். இதன்படி, மத்திய சீனாவில் சூப்பர் மார்க்கெட்டுகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் உணவு விடுதிகளை மீண்டும் தொடங்குவதற்கான வர்த்தக நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு ஏற்ற வகையில், கொரோனாவுக்கு எதிரான செயல்பாடுகளை கவனித்து வரும் துணை பிரதமர் சன் சுன்லான் கூறும்போது, கொரோனாவின் தொற்று நோய் ஏற்படுத்தும் வீரியம் குறைந்து வருகிறது என கூறியுள்ளார். ஒரு புது சூழலை நாடு எதிர்கொண்டு வருகிறது. தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான புதிய பணிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது. ஒமைக்ரான் பலவீனமடைந்து வருகிறது. அதிகளவில் மக்கள் தடுப்பூசி போட்டு கொண்டு, வைரசின் பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது என்று சன் கூறியுள்ளார். எனினும் மக்கள், பரிசோதனைகள், சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தி உள்ளார்.

“நெல்சன் மண்டேலாவின் மரணத்தில் உலகத் தலைவர்கள் கலந்து கொண்டது போல ஒரு கௌரவம் மகிந்தவுக்கும் கிடைக்க வேண்டும்.”- அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல

சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்த நாட்டுக்குச் செய்ய வேண்டிய சேவை அனைத்தையும் செய்துவிட்டார். இனி அவர் அரசியலில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“மகிந்தவின் தலைமைத்துவம் இல்லை என்றால் இப்போதும் யுத்தம் நடந்துகொண்டிருக்கும். அவர் 80 வயதை நெருங்குகின்றார். அவர் ஓய்வெடுப்பது நல்லது. யாரும் அவரை அவர்களின் அரசியல் தேவைக்காகப் பயன்படுத்தினால் அதற்கு நான் இணங்கமாட்டேன்.

நெல்சன் மண்டேலாவின் மரணத்தின் போது உலகத் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அப்படியொரு கௌரவம் மகிந்தவுக்குக் கிடைக்க வேண்டும்”  எனவும் தெரிவித்துள்ளார்.

சாதாரணதரத்தில் கணித பாடத்தில் சித்தியடையாத போதிலும் உயர்தரம் கற்க முடியும் – பரீட்சை ஆணையாளர்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், குறைந்தபட்சம் ஐந்து சித்திகளைப் பெற்றவர்கள், கணித பாடத்தில் சித்தியடையாத போதிலும் உயர்தர வகுப்புகளில் சேர முடியும் என பரீட்சை ஆணையாளர் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின்படி, ஐந்து சித்திகளைப் பெற்ற மற்றும் கணிதத்தில் சித்தியடையாத மாணவர் கூட உயர்தர கற்கைகளை தொடரமுடியும் எனவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றிய மாணவர்களில் ஏறக்குறைய 75 வீதமானவர்கள் க.பொ.த உயர்தரத்தைப் பின்பற்றுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

முதல் தடவையாக பரீட்சைக்குத் தோற்றிய 311,321 மாணவர்களில் 231,982 மாணவர்கள் அதாவது 74.5 வீதமானவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் நடைபெற்ற பரீட்சையில் மொத்தம் 518,245 பரீட்சார்த்திகள் மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் தேர்வெழுதினர்.

“இலங்கையில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் – ஆனால் நாடாளுமன்றில் 12 பெண்களே உள்ளனர்” – ஜனாதிபதி ரணில்

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இன்னும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், சனத்தொகையில் பெரும்பான்மையானவர்கள் பெண்களாக இருந்தாலும் தற்போது 12 பெண் உறுப்பினர்கள் மாத்திரமே நாடாளுமன்றத்தில் இருப்பது துரதிஷ்டவசமானது என தெரிவித்துள்ளார்

பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு புதிய சட்டங்களை உருவாக்குமாறு பெண் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவிடம் கோரிக்கை விடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பட்டியல் முறையொன்றை அறிமுகப்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க ?

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளதாக ஜனாதிபதியின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மத்திய வங்கியின் ஆளுநர் தொடர்பில் அவர் அண்மையில் வெளியிட்டதாக கருத்து பொய்யானது எனவும் இவ்விடயம் தொடர்பில் தாம் வருத்தம் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த வாரம் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட ஆஷு மாரசிங்க, அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நந்தலால் வீரசிங்க தயாராகி வருவதாக குற்றம் சுமத்தினார்.

இது தொடர்பில் தேவையான பிரசார நடவடிக்கைகளை கலாநிதி நந்தலால் வீரசிங்க ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் பேராசிரியர் ஆஷு மாரசிங்க மேலும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.