December

December

ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன சாம் கர்ரன் !

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று நடைபெறுகிறது.

இதில், இங்கிலாந்தின் இளம் வீரர் சாம் கர்ரனை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நடைபெற்றது. இடையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளும் போட்டி போட்டு ஏலம் கேட்டன. இறுதியாக, சாம் கர்ரனை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதேபோல் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை வாங்கவும் கடும் போட்டி இருந்தது. இறுதியில் அவரை ரூ.17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. சாம் கர்ரன் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் இதுவரை நடந்த ஐபிஎல் ஏலத்திலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர்.

சாம் கர்ரன் – ரூ.18.50 (பஞ்சாப் கிங்ஸ்) கேமரூன் கிரீன் – ரூ.17.50 (மும்பை இந்தியன்ஸ்) பென் ஸ்டோக்ஸ் – ரூ.16.25 (சென்னை சூப்பர் கிங்ஸ்) ஹாரி புரூக்- ரூ.13.25 (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) ஜேசன் ஹோல்டர் – ரூ.5.75 (ராஜஸ்தான் ராயல்ஸ்)

அரசியல் கைதிகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் – எம்.ஏ சுமந்திரன்

வடக்கின் காணிகள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் தமிழ் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் நேற்று (21) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொது இணக்கப்பாட்டுக்கு வரும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 14 ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டை கூட்டியிருந்தார்.

ஜனாதிபதிக்கும் தமிழ் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையிலான மற்றுமொரு கலந்துரையாடல் நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

திட்டமிட்டு சதிவேலை செய்த எம்.ஏ.சுமந்திரன் – க.வி.விக்னேஸ்வரன் அதிருப்தி !

ரணில் விக்ரமசிங்கவிற்கும் சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே இந்த சந்திப்பிற்கு அரச தரப்பில் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய தலைவர்களிற்கு முன்கூட்டியே தகவல் வழங்காமல், திடீர் அழைப்பு விடுக்கப்பட்டு, முறையற்ற ஏற்பாட்டுடன் நடத்தப்பட்ட இந்த கலந்துரையாடலுக்கு ஏனைய தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டு, ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

தம்மால் வர முடியாதென தெரிந்தும் சுமந்திரன் திடீர் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார். செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன் ஆகியோர் சார்பிலும் தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஜனாதிபதி செயலாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன்.

அத்துடன், எரிக் சொல்ஹெய்மை இந்த பேச்சில் இணைக்கும் நோக்கத்துடன் இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டால், இந்திய தரப்பிலிருந்து ஒரு பிரதிநிதியை தாம் அழைத்து வருவோம்.

இவ்வாறான நிலையில், ஏனைய தமிழ் கட்சிகளின் எதிர்ப்பையடுத்து, எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி பேச்சை நடத்த ரணில் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பல்கலைகழகங்களில் பெண்கள் கல்வி கற்க தடை – தலிபான்கள் உத்தரவு !

ஆப்கானிஸ்தானில் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆட்சி செய்துவரும் தலிபான்கள் அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக, அந்த நாட்டின் பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஆறாம் வகுப்பு மேல் கல்வி கற்க தடை, ஆண்கள் துணையின்றி விமானங்களில் பயணிக்க தடை, பொது இடங்களில் ஆடை கட்டுப்பாடு, பொழுதுபோக்கு பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் செல்ல தடை என பெண்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்துள்ளனர். அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த உத்தரவு செல்லும். அடுத்த உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

காணாமலாக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை கண்டுபிடிக்கும் பொறுப்பை இராணுவத்தினரிடம் ஒப்படைத்து நீதிமன்றம் ஆணை – சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேல்

விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைபொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட இறுதிக்கட்டபோரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோரை முன்னிலைப்படுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை வவுனியா மேல் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

டிசம்பர் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்த ஆட்கொணர்வு மனு வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் போது காணாமல் ஆக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை கண்டுபிடிக்கும் பொறுப்பை இராணுவத்தினரிடம் ஒப்படைத்து நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனை முற்படுத்தவேண்டும் அல்லது அவருக்கு என்ன நடந்தது என்பதைத் தெரிவிக்கவேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு தொடர்பில் தாங்கள் எதையும் அறியவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நீதிமன்ற உத்தரவு தொடர்பில் ஊடகங்கள் கேள்வியெழுப்பிய போது, அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

“நான் தற்போது முன்னாள் அதிபர், அதேவேளை, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலர். ஆகவே எழிலன் தொடர்பான நீதிமன்ற உத்தரவு தொடர்பான தங்கள் கேள்விக்கு பதிலளிக்கக்கூடிய நிலைமையில் நான் தற்போது இல்லை.

அதுமட்டுமன்றி, நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தொடர்பில் நான் இன்னமும் அறியவில்லை. எனவே, அறியாத விடயத்துக்குப் பதிலளிக்க நான் விரும்பவில்லை” என்று கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதேபோன்றே சரத் பொன்சேகாவும், இந்த உத்தரவு தொடர்பில் இன்னமும் தான் அறியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

1,600 கோடி ரூபா நட்டம் – கோட்டாபாய ராஜபக்சவிடம் விசாரணை !

சீனி தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த வரியை 50 ரூபாவிலிருந்து 25 சதமாக குறைத்து இலங்கை அரசுக்கு கிடைக்க வேண்டிய 1,600 கோடி ரூபாவிற்கும் அதிகமான வரி வருமானத்தை இழக்கச் செய்து பாரிய நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி நள்ளிரவு முதல் ஒரு கிலோ கிராம் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த 50 ரூபா விசேட பண்ட வரி 25 சதமாக குறைக்கப்பட்டது.

இந்த வரிக்குறைப்பிற்கு 2007ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க விசேட பண்ட வரி சட்டத்தின் விதிவிதானங்கள் பிரகாரம் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இது குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு நிதி அமைச்சின்  அதிகாரிகளிடம் விசாரணை நடாத்திய போது, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபயவின் ஆலோசனைக்கமைய வரிக் குறைப்பு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிடம் விசாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குறித்த வரிக் குறைப்பு அப்போதைய வர்த்தகத்துறை அமைச்சரான தனக்கே தெரியாமல் செய்யப்பட்டது எனவும், அரச அதிகாரிகள் சிலர் அது தொடர்பில் அப்போதைய ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றில் குரிப்பிட்டிருந்தார்.

இந் நிலையில், குறித்த வரி மோசடி தொடர்பில் விடயங்களை தெரிந்தோரின் வாக்கு மூலங்களை பதிவு செய்யும் நடவடிக்கையில் ஓர் அங்கமாக  கடந்த 19ஆம் திகதி திங்களன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவில் ஆஜராக அமைச்சர் பந்துலவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும்  அன்றைய தினம் ஆஜராகாத அவர் பிரிதொரு திகதியை கோரியுள்ளார்.

இதேவேளை, கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி நடந்த அரசாங்க கணக்குகள் தொடர்பான குழு (கோபா) கூட்டத்தின் பின்னர் அரசின் உத்தரவிற்கமைய,  நிதி,பொருளாதார ஸ்திரம் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன செய்த முறைப்பாட்டை மையப்படுத்தி,  பாரிய அளவில் வரி குறைப்பின் ஊடாக கிடைக்கப்பெற்ற  பிரதிபலன் நுகர்வோரை சென்றடையாது வேறு தரப்பொன்று கொள்ளை இலாபம் ஈட்டியுள்ளதா என்பது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதிக்குற்ற விசாரணை பிரிவு முதலாம் இலக்க விசாரணை அறை ஊடாகவும் விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

போதைப்பொருள் பாவனைக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 5000 !

போதைப்பொருள் பாவனைக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரமாக அதிகரித்துள்ளது.

சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்தன ஏகநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு பாடசாலைக்கு செல்லாத சுமார் 600 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது 2021 இல் 190 ஆகக் குறைந்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2015ல் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 2,000 ஆக இருந்ததுடன் 2021 ஆம் ஆண்டு ஆகும் போது 5000 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன், 2020ஆம் ஆண்டு 22 பட்டதாரிகள் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனவும் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் பதிவை இரத்து செய்ய நடவடிக்கை..?

நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் பதிவை இரத்து செய்யுமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் விடுத்த கோரிக்கையை இலங்கை மருத்துவ சபை நிராகரித்துள்ளது.

நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் பதிவை இரத்து செய்யுமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் மருத்துவ சபைக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

இது தொடர்பில் கவனம் செலுத்திய இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பேராசிரியர் வஜிர திஸாநாயக்க, சுகாதார செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, சட்டத்திற்கு அமைவாக இலங்கை மருத்துவ சபை உரிய நடைமுறைகளை பின்பற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், வெளிநாடுகளுக்குச் செல்லும் வைத்தியர்கள் கடமையை சரிவ செய்யவில்லை என்பதனை உணர்ந்தால், வைத்தியர்களின் ஒழுக்கத்தை கையாள்வதற்காக வெளியிடப்பட்ட 1990 ஆம் ஆண்டு 757/7 அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையை பின்பற்றுமாறும் இலங்கை மருத்துவ சபை சுகாதார செயலாளருக்கு அறிவித்துள்ளது.

அரச அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்யும் போது இழுபறியில் ஈடுபட வேண்டாம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

அரச அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்யும் போது இழுபறியில் ஈடுபடாமல் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தம்மிடம் முன்வைக்கப்படும் மக்களின் 50 வீதமான பிரச்சினைகளை அரச அதிகாரிகளால் தீர்க்க முடியும் எனவும் குறிப்பிட்ட சில பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதியோ அல்லது அமைச்சரோ கொழும்பில் இருந்து வரவேண்டிய அவசியமில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்கள் சிறந்த பொதுச் சேவையை சிறந்த ஒருங்கிணைப்புடன் வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதிக்கு முன்னர் நுவரெலியாவில் காணிப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அனைத்து அரச நிறுவனங்களையும் இணைத்து கூட்டறிக்கையை உருவாக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, அந்த அறிக்கை உரிய காலத்தில் சமர்ப்பிக்கப்படாவிட்டால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதுடன், உலக முடிவுப் பகுதிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்காக பட்டிப்பளைக்கும் பொரலந்தவிற்கும் இடையில் கேபிள் கார் திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்தியாவில் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுத வர்த்தகம் – 09 இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர வேலைத்திட்டம் !

இலங்கை மற்றும் இந்தியாவில் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுத வர்த்தகம் தொடர்பில், தமிழகம், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் கைது செய்யப்பட்ட 9 இலங்கையர்களையும் நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இதன்படி, தமிழ்நாட்டிற்கு சென்று அவர்கள் குறித்த எதிர்கால சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு விசேட குழுவொன்றை பெயரிடவுள்ளதாகவும் அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

விரைவில் குறித்த குழுவை இந்தியாவுக்கு அனுப்பி அது தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை மற்றும் இந்தியாவில் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுத வர்த்தகம் தொடர்பில், தமிழகம், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் இருந்து ஒன்பது இலங்கையர்களை இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு, கடந்த திங்கட்கிழமை மீண்டும் கைது செய்தது.<

பிரேம் குமார் எனப்படும் குணா என்ற சி.குணசேகரன், பூக்குட்டி கண்ணா என்ற புஷ்பராஜா, மொஹமட் அஸ்மின், அழகப்பெரும சுனில் காமினி பொன்சேகா, ஸ்டான்லி கென்னடி பெர்னாண்டோ, லடியா, தனுக்க ரொஷான், வெல்ல சுரங்க என்ற கமகே சுரங்க பிரதீப், திலீபன் ஆகியோரே கைது செய்யப்பட்டிருந்தனர்