08

08

நாளைய போராட்டத்துக்கு மக்கள் வராவிட்டால் நாமும் வெளியேறுவோம் – தம்ம சுஜாத தேரர்

நாளை (09) காலி முகத்திடல் போராட்டத்திற்கு மக்கள் வராவிட்டால் தானும் ஏனைய மக்களும் அந்த இடத்தை விட்டு வெளியேறுவோம் என போராட்ட களத்தில் தங்கியுள்ள வணக்கத்திற்குரிய தம்ம சுஜாத தேரர் தெரிவிக்கின்றார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், முதலில் இந்த போராட்ட களத்தில் கூட்டம் இருந்த கூட்டத்தையும் இன்று எத்தனை பேர் இருக்கிறார்கள் என்றும் அவதானிக்குமாறு தெரிவித்துள்ளார்.

நாளை ஆகஸ்ட் 9 ஆம் திகதி, இந்த மண்ணில் இதுவரை நடத்திய போராட்டத்திற்கு பலன் கிடைக்காவிட்டால் நாளை இதை நிறுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரராக பிரபாத் ஜெயசூரிய !

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான பிரபாத் ஜெயசூரிய சர்வதேச மைதானத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும், பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் பிரபாத் ஜெயசூரிய இந்த விருதை வென்றார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இன்னிங்சில் 118 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜெயசூரிய, இரண்டாவது இன்னிங்சில் 59 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, அப் போட்டியில் இலங்கையை இன்னிங்ஸ் மற்றும் 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என இலங்கை அணி வெற்றி கொண்டது.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் பிரபாத் ஜெயசூரிய முதல் இன்னிங்சில் 82 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 135 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

காலியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில் 80 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜெயசூர்ய, இரண்டாவது இன்னிங்சில் 117 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கையை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

அந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் இலங்கை 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

30 வயதாகும் ஜெயசூர்ய தனக்கு கிடைத்த விருது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்,

“ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதை வெல்வதற்கு எனக்கு வாக்களித்த ரசிகர்களுக்கு நன்றி. மேலும் இந்த அறிவிப்பால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த பயணத்தில் எனக்கு உதவிய எனது ரசிகர்கள், அணியினர், பயிற்சியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் மற்றும் எனது நண்பர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கால் பதிக்கிறது சீனாவின் மிகப்பெரிய பெற்றோலிய உற்பத்தி நிறுவனம் !

சீனாவின் மிகப்பெரிய பெற்றோலிய உற்பத்தி நிறுவனம் இலங்கையின் எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் உள்ளூர் சந்தையில் எரிபொருளை இறக்குமதி, விநியோகம் மற்றும் விற்பனை செய்வதற்கான முன்மொழிவுகளை தாங்கள் சமர்ப்பித்துள்ளதாக டுவிட்டர் பதிவு ஒன்றில் சினோபெக் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எரிபொருள் இலங்கையில் சந்தை திறக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஜூன் மாதம் தெரிவித்தார்.

“எரிபொருள் வரிசைகளை நெருங்கும் போது மரண பயம் ஏற்படுகிறது.”- மைத்திரிபால

QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், எரிபொருள் வரிசைகளுக்கு பஞ்சமில்லை. வரிசைகளுக்கு அருகில் செல்லும்போது எனக்கு மரண பயம் ஏற்படுகிறது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் இந்நிலையை தவிர்க்க நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மலைச்சிறுத்தையின் உயிரிழப்பு – வனவிலங்கு அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை !

மலைச்சிறுத்தையின் உயிரிழப்புக்கு காரணமான நல்லதன்னிய வனவிலங்கு அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையிலான குழு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வனவிலங்கு அதிகாரிகள் மரத்தை வெட்டும் போடும் போது அது சிறுத்தையின் மீது விழுந்து சிறுத்தை உயிரிழந்தமை விசாரணையின் போது நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹற்றன் அருகே டிக்கோயா வனராஜா தோட்டத்தில் மரக்கிளையில் சிக்கிய சிறுத்தையை காப்பாற்றும் முயற்சியில் வனவிலங்கு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி காட்சிகள் தெரிவிக்கின்றன.

வேட்டையாடுபவர்கள் போட்ட கயிற்றில் சிக்கிய சிறுத்தை, கயிற்றை உடைத்து மரத்தின் மீது ஏறி, முட்கம்பியில் சிக்கியுள்ளது.

“பொய் பேசுகிறார் இலங்கை நாட்டின் ஜனாதிபதி ரணில் .”- எம்.சுமந்திரன்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் ஜனாதிபதியை தெரிவுக்கான வாக்களிப்பு தொடர்பில் தெரிவித்த கருத்து பொய்யானது என தமிழ் தேசிய கூட்டமைப்பு கருத்து வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு வாக்களித்ததாக தெரிவித்திருந்தார். அது பொய்யான கூற்று என கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி பொய் சொல்கிறார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற வகையில் நாங்கள் ஒருமனதாக டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்கத் தீர்மானித்தோம். ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிப்பதாக நாங்கள் யாரும் கூறவில்லை” என்று அவர் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் ஜனாதிபதியைச் சந்தித்தபோது இந்த விஷயத்தையும் இதேபோன்ற பல யோசனைகளையும் நாங்கள் முன்வைத்தோம். அதற்கு அவர் ஒப்புக்கொண்டார். அவர் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுகிறாரா என்பதைப் பொறுத்திருந்துதான் என சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

“பொருளாதார நெருக்கடிக்கு சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என கூறுவோர் முட்டாள்கள் – வாசுதேவ விசனம் !

எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது கட்சிகளோ சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டால் நெருக்கடிக்கு அவர்களே தீர்வுகளை வழங்கவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தில் கடன் பெற வேண்டும் என எவரேனும் கூறினால் அவர்கள் முட்டாள்கள் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

1978ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நாட்டின் பொருளாதாரத்தை திரும்பிப் பார்க்கும் போது சர்வதேச நாணய நிதியத்தினால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள சேதம் தெளிவாகத் தெரிகின்றது.

தாய்லாந்து, தைவான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் அடிப்படை நோக்கத்தை புரிந்து கொண்டதால் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய அறிவுறுத்தல்களை நிராகரித்ததாகவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகளுக்கு இணங்கும் அரசியல்வாதிகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை சமநிலைப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

தேசிய ரீதியிலான பளுதூக்கல் போட்டி – சாதித்துக்காட்டிய யாழ்.இளைஞன் புசாந்தன் !

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார்.

தேசிய ரீதியில் கடந்த 06ஆம் திகதி பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 44க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து ஒரே ஒருவராக யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த சற்குணராசா புசாந்தன் கலந்து கொண்டு மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் மூன்றிலும் வென்று , மூன்று தங்க பதக்கங்களை சுவீகரித்துள்ளார்.

120 கிலோவிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்ட இவர், squat பிரிவில் 330 கிலோ கிராமையும் , benchpress பிரிவில் 175 கிலோ கிராமையும், deadlift பிரிவில் 261 கிலோ கிராமையும் தூக்கி வெற்றி பெற்றுள்ளார். இதில் squat மற்றும் deadlift பிரிவில் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

அத்துடன் குறித்த போட்டியில் மொத்தமாக 766 கிலோ கிராமை தூக்கி புதிய சாதனையையும் படைத்துள்ளார். தேசிய ரீதியில் நடைபெற்ற பளு தூக்கல் போட்டியில் தேசிய ரீதியில் மூன்று சாதனைகளை படைத்து மூன்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளதை அடுத்து அவருக்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

“ஒரே நாடு ஒரே சட்டம்“ செத்த பாம்புக்கு புத்துயிர் கொடுக்க முயல்வது போன்றது – அதாவுல்லா

ஒரே நாடு ஒரே சட்டம் குறித்து இப்போது பேசுவது அர்த்தம் அற்றது. அது செத்த பாம்புக்கு புத்துயிர் கொடுக்க முயல்வது போன்றது ஆகும் என தேசிய காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. எல். எம். அதாவுல்லா தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

ஒரே நாடு ஒரே சட்டத்துக்கான தேவையோ, அவசியமோ இப்போது கிடையாது. ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தாபய ராஜபக்ஸ விலகியமையை அடுத்து ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியும் கலைந்து போய் விட்டது. ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பாக அவர்களுடன் நேருக்கு நேர் மிக கடுமையாக முரண்பட்டு கொண்டு வெளியேறியவன் நான் என்பதை இத்தருணத்தில் நினைவு படுத்துகின்றேன்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்று நீங்கள் சொல்வது என்ன? என்று பல நூற்று கணக்கானோர் திரண்டிருந்த உயரிய சபையில் வைத்து கோத்தாபய ராஜபக்ஸவை நான் வினவினேன். அவருக்கு அதை பற்றி எதுவுமே தெரியாது என்றும் அதை அவர் அறிந்து கொள்வதற்காகவேதான் செயலணி அமைத்து இருக்கின்றார் என்றும் எனக்கு கோத்தாபய ராஜபக்ஸ பதில் தந்தார்.

எனவேதான் அவர் பதவி விலகியமையுடன் அந்த செயலணியும் இறந்து விட்டது, செயல் இழந்து விட்டது. சிலர் அதை பற்றி இப்போது பேசுவது நகைச்சுவையாக, கோமாளித்தனமாக தெரிகின்றது. ஒரே நாடு ஒரே சட்டம் குறித்து தற்போது பேசுவது அர்த்தம் அற்றது , செத்த பாம்புக்கு புத்துயிர் கொடுக்க முயல்வது போன்றது ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

இலங்கை வரும் சீன ஆய்வுக்கப்பல் – சீனத்தூதரகம் விடுத்துள்ள அவசர கோரிக்கை !

இலங்கை அதிகாரிகளை சந்திப்பதற்கான அவசரவேண்டுகோளை சீன தூதரகம் விடுத்துள்ளது.

சீன கப்பலின் வருகையை பிற்போடுமாறு இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் குறித்த வேண்டுகோளை சீன தூதரகம் முன்வைத்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு யுவான் வாங் 5 கப்பல் செல்வது குறித்து இந்தியா கரிசனை வெளியிட்டுள்ளதை தொடர்ந்து கப்பலின் பயணத்தை பிற்போடுமாறு சீனாவிடம் இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இலங்கையின் முக்கிய அதிகாரிகளை சந்திப்பதற்கான அனுமதியை சீன தூதரகம் இன்று கோரியுள்ளது சுட்டிக்காட்டத்தக்கது.

கப்பல் பயணத்தை தாமதிக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்த வேண்டுகோள் கிடைத்ததும் இலங்கை அதிகாரிகளை சந்திப்பதற்கான அனுமதியை தூதரகம் கோரியுள்ளது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹம்பாந்தோட்டைக்கு எதிர்வரும் 11ஆம் திகதி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள சீனாவின் விண்வெளி கண்காணிப்பு கப்பலின் பயணம் தொடர்பில் இந்திய கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தன.

தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி, இந்தியா, குறித்த சீனக் கப்பல் பயணத்துக்கான உண்மைக் காரணத்தை கோரியதை அடுத்து கப்பலின் பயணத்தை பிற்போடுமாறு இலங்கை கோரியுள்ளதாக நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், சீனாவிடம் குறித்த கோரிக்கைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை எனவும் சீனாவின் அழுத்தத்துக்கு சரணடைந்துள்ள இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சீனாவின் உளவுப் கப்பலின் பயணத்துக்கான அனுமதியை வழங்கியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.