04

04

“போராட்டக்காரர்களால் தான் ஆட்சியை பிடித்தார் ரணில்.”- எம்.ஏ சுமந்திரன்

மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களால் ஆட்சிப்பீடமேறிய புதிய அரசாங்கம், அந்தப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர்களை வேட்டையாடும் செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று(4) நடைபெற்ற எதிரணிகளின் கூட்டு செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“புதிய அரசு மக்கள் மீது தொடர்ச்சியாக அடக்குமுறையைப் பிரயோகித்துக் கொண்டிருக்கின்றது. மக்கள் எழுச்சிப் போராட்டங்களால் நாட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த மாற்றங்களினாலேயே இந்த அரசு ஆட்சியைக் கைப்பற்றியது.

போராட்டக்காரர்களின் முதுகில் ஏறி ஆட்சியைக் கைப்பற்றியவர்கள், தற்போது அந்தப் போராட்டக்காரர்களையே வேட்டையாடத் தொடங்கியுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய கொள்கை விளக்க உரையில், ஆரம்பத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் வன்முறையற்றவையாகவும், அமைதியானவையாகவும் காணப்பட்டன என்று சான்றிதழ் வழங்கியிருந்தார்.

ஆனால்,இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஆரம்பத்திலிருந்தே தலைமை தாங்கியவர்களைத் தற்போது அரசு கைதுசெய்து வருகின்றது. நேற்றுக் கைதுசெய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிரபல தொழிற்சங்கவாதியாவார்.

அவரைக் கைதுசெய்ததை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இவ்வாறான கைதுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஏற்கனவே கைதுசெய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். போராடும் உரிமையை எவரும் தடுக்க முடியாது.“ எனத் தெரிவித்துள்ளார்.

கைவிடப்படுகிறது கோட்டா கோ கம போராட்டம் – அகற்றப்படும் கூடாரங்கள் !

நாளை (5) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு முன்னதாக காலிமுகத்திடல் போராட்ட தளத்தில் தங்கியிருந்த போராட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு பொலிஸார் அறிவித்ததன் பிரகாரம் போராட்டக்காரர்கள் சில கூடாரங்களை அகற்றியுள்ளனர்.

இந்த கூடாரங்களை அகற்றும் பணி நேற்று இரவும் இன்றும் மேற்கொள்ளப்பட்டதுடன், இன்று பிற்பகல் சில கூடாரங்களை அகற்றும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, இது வரை போராட்ட பகுதியில் தங்கி முதலுதவி அளித்து வந்த புனித ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்களும் இன்று பிற்பகல் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இதேவேளை போராட்டக்காரர்களை வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதை தடுக்குமாறு கோரி காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மூன்று ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

 

ஞானசார தேரரின் ஒரே நாடு – ஒரே சட்டம் அறிக்கையை குப்பையில் போடுங்கள் – ரவூப் ஹக்கீம்

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு – ஒரே சட்டம் தொடர்பான செயலணி அறிக்கையை குப்பை கூடையில் போடுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) நடைபெற்ற எதிரணிகளின் கூட்டு செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், அதற்கான நடவடிக்கையை ஜனாதிபதி எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விளக்கமறியலில் இருந்த போது கையடக்கத் தொலைபேசி பாவனை – தானிஷ் அலிக்கு சிறை !

காலி முகத்திடல் போராட்டத்தில் செயற்பாட்டாளராக பணியாற்றிய தானிஷ் அலிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 13 ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டத்தாபனத்தினுள் அத்துமீறி நுழைந்து ஔிபரப்பை சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தானிஸ் அலி என்ற நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது நீதிமன்றம்.

விளக்கமறியலில் இருக்கும் போது கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்திய குற்றச்சாட்டிற்காக அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி முன்னிலையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

அதன்படி அவருக்கு 14 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளரின் (கட்டுப்பாடு, புனர்வாழ்வு) ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

மலையகத்தில் அடை மழை – விவசாயிகளை கண்டுகொள்ளாது இருக்கும் விவசாய திணைக்களம் !

மலையகத்தில் மூன்று நாட்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் குடும்ப வருமானத்திற்காக விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த அதிகமானோர் மழை காரணமாகவும், வெள்ளம் காரணமாக தனது தோட்டங்களில் பயிரிடப்பட்ட மரக்கறி வகைகள் அனைத்தும் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டதால் விவசாயிகள் பாரிய நட்டத்துடன் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைகின்றனர்.

 

கொட்டகலை, பத்தனை கிறேக்கிலி தோட்டம் போன்ற பகுதிகளில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெவோன் நீர்வீழ்ச்சிக்கு நீரை ஏந்தும் கிளை ஆறான பத்தனை ஆறு பெருக்கெடுத்ததால் மரக்கறி தோட்டங்களில் வெள்ளம் பாய்ந்தோடியதால் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகமான விவசாயிகள் விவசாய நடவடிக்கையை மேற்கொள்வதற்கு வங்கிகளில் மற்றும் தங்க நகைகளையும் அடகு வைத்தும், கடன் வழங்கும் நிறுவனங்களில் அதிகமான கடன் தொகையை பெற்று விவசாய நடவடிக்கையை மேற்கொண்டதாகவும், வெள்ளப்பெருக்கினால் செலவு செய்யப்பட்ட தொகையை கூட மீட்க முடியாத அளவிற்கு பாரிய பொருளாதார பிரச்சினைகளை சந்திப்பதாக விவசாயத்தை நம்பி இருக்கும் விவசாய குடும்பங்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் இதேபோன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நுவரெலியா மாவட்ட விவசாய திணைக்களம் எவ்வித நிவாரண உதவிகளையும் தரவில்லை என இவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மீண்டும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் உதவிகளை வழங்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாகும்.

22ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டி – இலங்கைக்கு முதலாவது பதக்கம் !

22ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு முதல் வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

100 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில், இலங்கை வீரரான யுபுன் அபேகோன், வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

WATCH : Yupun wins bronze at 100 meters in CW Games 2022 - NewsWire

அவர் தனது தூரத்தை ஓட எடுத்த நேரம் 10.14 வினாடிகளாக பதிவாகியுள்ளது.

இதன்மூலம், பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை யுபுன் அபேகோன் ஏற்படுத்தியுள்ளார்.

இதேவேளை, பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான எஃப்42-44/61-64 தட்டெறிதல் பரா போட்டியில் இலங்கையின் பாலித ஹல்கஹவெல கெதர வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வேகமெடுக்கும் ஒமிக்ரோன் பரவல் !

நாட்டில் ஒமிக்ரொன் திரிபுடன் அடையாளம் காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக, மரண வீதமும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மக்கள் வெளியில் செல்லும் போதும், பொதுப்போக்குவரத்தினை பயன்படுத்தும் போதும் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.