August

August

தொடரும் கைதுகள் – ஜோசப் ஸ்டாலின் கைது !

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கொள்ளுப்பிட்டியவில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மத்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மே மாதம் 28 ஆம் திகதி, கொழும்பு ஜனாதிபதி மாவத்தையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, பிக்குகள் முன்னணியின் ஊடக செயலாளர் கொஸ்வத்தே மகாநாம தேரர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பாகவே கிருலப்பனை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

“கூட்டமைப்பிலிருந்து எனக்கு சிலர் வாக்களித்தனர்.”- கூட்டமைப்பினருடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில் !

ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே, சர்வ கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதா..?இல்லையா..? என்பதனை தீர்மானிக்க முடியும் என கூட்டமைப்பினர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று(புதன்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சர்வ கட்சி அரசாங்கத்தினை அமைக்கும் முயற்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழ் மக்களின் நலன்சார்ந்த 10 முக்கிய விடயங்களை நிறைவேற்றுமாறு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட சிறிதரன், ஜனாதிபதி தெரிவின் போது கூட்டமைப்பினர் டலஸ் அழகப்பெருவிற்கு வாக்களித்திருந்தமையினை சுட்டிக்காட்டியிருந்தார்.

எனினும் இதனை பொருட்படுத்தாமல் தங்களது கோரிக்கையினை நிறைவேற்றவுள்ளமையினை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனை எம்.ஏ சுமந்திரன் மொழி பெயர்த்திருந்தார்.

இதன்போது பதில் வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக வாக்களித்திருந்ததாக குறிப்பிட்டார்.

அத்துடன், ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே, சர்வ கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதா..?இல்லையா..? என்பதனை தீர்மானிக்க முடியும் என கூட்டமைப்பினர் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டிருந்தனர்.

கூட்டமைப்பினர் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள் வருமாறு,

  • நீண்டகாலமாக சிறையிலுள்ள தமிழ் அரசியல்கைதிகளில் ஒருதொகுதியினரை மூன்று மாத காலத்திற்குள் முதற்கட்டமாக விடுதலை செய்வது.
  • அம்பாறை மாவட்டம், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை 1991ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமான அறிவித்தலின் பிரகாரம் பிரதேச செயலகமாக தரமுயர்த்துவதுடன் கணக்காளர் ஒருவரையும் நியமித்தல்.
  • வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் தனிப்பட்ட காணிகளிலும், பொதுப்பயன்பாட்டுக்குரிய அரச காணிகளிலும் அடாத்தாக முகாமிட்டிருக்கும் இராணுவத்தினருக்கு அக்காணிகளை நிரந்தரமாக வழங்கும் முகமாக, நில அளவைத் திணக்களத்தினால் மேற்கொள்ளப்படும் அளவீட்டுப் பணிகளை உடனடியாக நிறுத்துதல்.
  • தொல்பொருள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், கனியவளத் திணைக்களம் உள்ளிட்டவற்றால், வடக்கு, கிழக்கு தமிழர் நிலங்களில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்துதல்.
  • பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்குதல் மற்றும் அதற்கான நல்லெண்ண சமிக்ஞைகளை முதலில் வெளிப்படுத்தல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் செயலகத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த உதவுதல்.
  • வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை நிலைநிறுத்தவும், உண்மையைக் கண்டறிவதற்கும் உடனடி நடவடிக்கை எடுத்தல்.
  • வடக்கு, கிழக்கிலுள்ள தனியார் காணிகளிலிருந்து படையினரை வெளியேற்றி, தமது சொந்த நாட்டில் இன்னும் அகதிகளாக உள்ள எமது மக்கள் தமது பூர்வீக நிலங்களில் குடியேற வழிவகை செய்தல்.
  • கடந்த எண்பது வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள தமிழர்களின் உரிமைக்கான அரசியல் தீர்வுக்காக, காலதாமதமற்ற உடனடிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தல்.      “உள்ளிட்டவற்றினையே முன்வைத்திருந்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்புக்கு எதிர்க்கட்சி தலைவர் பச்சைக்கொடி !

சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கத்தினை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துள்ளார். இதுதொடர்பில் ஆளும் தரப்பிலுள்ள கட்சிகளுடன் ஜனாதிபதி பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார்.

அத்துடன், எதிர்கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

“ஜனாதிபதி ரணில் வழங்கியுள்ள வாய்ப்பையும் நழுவ விடாதீர்கள்.”- தமிழ் கட்சிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை !

மக்களின் எதிர்ப்பார்ப்புக்களுக்கான தீர்வுகளையும் முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்புக்களை தமிழ் தரப்புக்கள் ஜனாதிபதிக்கு வழங்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் இன்று ஆற்றிய சிம்மாசன உரை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

 

“தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளும் ஜனாதிபதியின் சிம்மாசன உரையில் பிரதிபலித்திருக்கின்றமையை வரவேற்பதாகவும், குறித்த விடயங்கள் படிப்படியாக முன்னுரைிமை அடிப்படையில் நிறைவேற்றப்படுவதற்கு, பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும்.

குறித்த உரையில், ஈ.பி.டி.பி. கட்சியினால் அண்மையில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் முன்வைக்கப்பட்டிருந்த, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கான தீர்வு மற்றும் காணிப் பிரச்சினைகள், யுத்தப் பாதிப்புகளை நிவர்த்தி செய்தல் உட்பட்ட விடயங்கள் தீர்க்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் ஜனாதிபதியினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனை எமது தேசிய நல்லிணக்க முயற்சிகளுக்கும் அரசியல் அணுகுமுறைகளுக்குமான வெற்றியாகவே கருதுகின்றோம்.

இவ்வாறான சூழல்களை ஏனைய தமிழ் தரப்புக்களும் எமது மக்களின் அபிலாசைகளை முன்னகர்த்துவதற்கான சந்தர்ப்பங்களாக பயன்படுத்த வேண்டும்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தினையும் அதற்கு பின்னர் கிடைத்த சந்தர்ப்பங்களையும் தமிழ் தலைமைகள் பயன்படுத்திக் கொள்ள தவறியமையினால் எமது மக்கள் பேரவலங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், தற்போது கிடைத்துள்ள வாய்ப்பினை தமிழ் தலைமைகள் காத்திரமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக ஜனாதிபதியினால் உருவாக்க முயற்சிக்கப்படுகின்ற அனைத்துக் கட்சி அரசாங்கத்தினை தமிழ் மக்களின் அபிலாசைகளை முன்னகர்த்துவதற்கான ஆரோக்கியமான தளமாக அனைத்து தமிழ் தரப்புக்களும் பயன்படுத்த வேண்டும்.” எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும்.”- சிம்மாசன உரையில் ஜனாதிபதி ரணில் !

வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

9ஆவது நாடாளுமன்றின் மூன்றாவது கூட்டத்தொடரில் தனது கொள்கை உரையை நிகழ்த்தும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இருளுக்கு சாபமிடுவதைவிட, ஒரு விளக்கையாவது ஏற்றுவது , நாட்டுக்காக நான் ஆற்றும் கடமை என நினைத்தேன், அதனால்தான் சவாலை ஏற்றேன். நாட்டை மீட்டெடுக்க ஒன்றிணைவோம். ஆகையால், சர்வக்கட்சி அரசியல் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.

இளைஞர்களின் ஆதரவோடு இணைந்து செயல்படவுள்ளேன்.  அத்துடன், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி, இதற்கான மாற்றத்தை கொண்டு வர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இலஞ்சத்தை சமூகத்திலிருந்து முற்றாக ஒழிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தன்னுடைய பதவி காலத்திற்குள் இது போன்ற அனைத்து அரசியல் மாற்றங்களையும் கொண்டு வர வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அனைவரையும் இணைத்து அரசியலில் மாற்றங்களை கொண்டு வரவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்படுவதுடன், அரசாங்க வீடுகளில் வாழ்பவர்களுக்கு வீட்டிற்கான உறுதிப்பத்திரம் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் இருந்த கோடி ரூபாய் பணம் – கோட்டாபாயவிடம் விசாரணை !

கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகையின் 4 ஆம் இலக்க அறையிலிருந்து போராட்டக்காரர்களால் கண்டெடுக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு கோடியே 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்துக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை என பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

குறித்த பணத் தொகையை நீதிமன்றில் கையளிக்கும் போது கொழும்பு மத்திய வலய குற்ற விசாரணை பணியக அதிகாரிகள் இதனை அறிவித்துள்ளனர்.

இந் நிலையில் குறித்த பணத் தொகை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்கு மூலம் பெற வேண்டி இருக்கும் நிலையில், அவரை தொடர்புகொள்ள முடியாத நிலை காணப்படுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

ஒரு கோடியே 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் , போராட்டக்காரர்களால், கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் எண்ணி ஒப்படைக்கும் வீடியோ காணொளியை மையப்படுத்தி, அக்காணொளியில் இருந்த நால்வர், கொழும்பு மத்திய வலய குற்ற விசாரணை பணியக அதிகாரிகளால், கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் கடந்த ஜூலை 28 நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போதே, அவர்களுக்காக மன்றில் ஆஜரான சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்னவின் வாதங்களை அடுத்து கோட்டை நீதிவான் இந்த பணத்தொகையை மன்றில் ஒப்படைக்க உத்தரவைப் பிறப்பித்தார். அத்துடன் அந் நால்வருக்கும் பிணையளித்திருந்தார்.

இதனையடுத்தே கடந்த ஜூலை 29 அப்பணம் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டது.

இதன்போது மன்றில், சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தலைமையில், சட்டத்தரணிகளான நுவன் போப்பகே, ரஜித்த லக்மால், ஜயந்த தெஹிஅத்தகே, ரிவிஹார பின்னதுவ, நளின் பெர்ணான்டோ , தரிந்து எல் வன்னி ஆர்ச்சி ஆகியோர் ஆஜராகினர்.

இதன்போது நீதிமன்றுக்கு விடயங்களை முன்வைத்த சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், கடந்த ஜூலை 9 ஆம் திகதி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பணம், ஜூலை 29 வரை நீதிமன்றில் ஒப்படைக்கப்படாமை பாரிய சந்தேகத்துக்கு உரியது என சுட்டிக்காட்டினார்.

‘ இந்த பணம் தொடர்பில் விசாரணை வேண்டும். அது எவ்வாறு சம்பாதிக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை வேண்டும். முழுமையான விசாரணைகளையே நாம் எதிர்ப்பார்க்கின்றோம் ‘ என சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் குறிப்பிட்டார்.

இந் நிலையில் விடயங்களை ஆராய்ந்த நீதிவான் திலின கமகே, முறையான, விரைவான விசாரணைகளை முன்னெடுக்க கொழும்பு மத்தி வலய குற்ற விசாரணை பணியகத்துக்கு உத்தரவிட்டதுடன், இப்பணத்தை நீதிமன்றில் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்திய கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சாகர லியனகேவுக்கு எதிராக சிறப்பு விசாரணை ஒன்றினை நடாத்துமாறு எஸ். ஐ.யூ. எனப்படும் பொலிஸ் சிறப்பு விசாரணை பிரிவின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டார். அதற்கான தேவையான வசதிகளை செய்துகொடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கும் நீதிவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோட்டா கோ கம போராட்டத்திற்கு ஆதரவு – சுற்றுலா வந்த பெண் பிரஜைக்கு நேர்ந்த கதி !

காலி முகத்திடல் கோட்டா கோ கம போராட்டத்திற்கு ஆதரவளித்த வெளிநாட்டு பெண் பிரஜை ஒருவரின் கடவுச்சீட்டை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

விசா நிபந்தனைகளை மீறியதற்காகவே அவரது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஸ்கொட்லாந்து நாட்டைச்சேர்ந்த kayleigh fraser என்பரின் கடவுச்சீட்டே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 07 நாட்களுக்குள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் விசாரணைக்கு முறைப்பாடளிக்குமாறு அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் கோட்டா கோ கம தொடர்பில் நாளாந்தம் நடைபெறும் விடயங்களை காணொலியாக வெளியிட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுநலவாய விளையாட்டுப் போட்டி – இலங்கை வீராங்கனை கயந்திகா அபேரத்ன புதிய சாதனை !

இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெறும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த வீராங்கனை கயந்திகா அபேரத்ன புதிய இலங்கை சாதனையை ஒன்றை படைத்துள்ளார்.

இன்று நடைபெற்ற 800 மீற்றர் ஓட்டப் போட்டியின் முதல் சுற்றில் தனது தனிப்பட்ட சிறந்த நேரத்தை பதிவு செய்து அவர் புதிய இலங்கை சாதனையை படைத்துள்ளார்.

அவர் குறித்த 800 மீற்றர் தூரத்தை நிறைவு செய்ய 2 நிமிடங்கள் 1.20 வினாடிகளை எடுத்துக்கொண்டார்.

கயந்திகா அபேரத்னவின் முந்தைய சிறந்த நேரமாக 2 நிமிடங்கள் 1.40 வினாடிகள் அமைந்திருந்தது.

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் அவர் இன்று 5வது இடம் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

“புலிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய ரணில் “கோட்டா கோ கம“ போராட்டக்காரர்களுடன் பேச மறுப்பது ஏன்..? – முஜிபுர் ரகுமான் கேள்வி !

விடுதலைப் புலிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய ரணிலால் ஏன் ஆர்ப்பாட்டம் செய்யும் இளைஞர்களிடம் பேசமுடியவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“அன்று 2001 ஆம் ஆண்டு இந்த நாட்டில் ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா பண்டாநாயக்க தலைமையின் கீழ் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி ஏற்று அரசாங்கத்தை உருவாக்கியதன் பின்னர் இந்த நாட்டில் போராடிய விடுதலைப் புலிகளுடன் அவர்கள் சமாதான ஒப்பந்தம் செய்தனர்.

சமாதான ஒப்பந்தம் மட்டுமல்ல, அவசரகால சட்டத்தையும் அவர்கள் எடுத்தனர். அப்படியென்றால் அன்று அவர்களால் விடுதலைப்புலிகளுடன் சமாதான பேச்சுவார்த்தையை மேற்கொள்ள முடியும் என்றால், போராட்டக்காரர்கள்  அவர்களை விட மிக மோசமாக இருக்கின்றனரா? இன்று நாட்டில் இருக்கக்கூடிய இந்த இளைஞர்களுடைய ஜனநாய போராட்டம் என நாங்கள் இந்த அரசாங்கத்திடம் கேட்க விரும்புகின்றோம்.

முன்னாள் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் நாட்டில் ஏற்பட்ட பல பொருளாதார பிரச்சினைகளுக்கு எதிராக நாட்டில் இருந்த இளைஞர்கள் மக்கள் அனைவரினது போராட்டம் காரணமாக தான் அவர்கள் இருவரும் பதவி விலக வேண்டிய நிலை நாட்டில் உருவானது.

எனவே அதன் பின்னர் தான் நாடாளுமன்றில் இருக்கக்கூடிய உறுப்பினர்களால் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எனவே இன்று இந்த நாட்டில் நடக்கக்கூடிய இந்த அநியாயங்களுக்கு எதிராக, அவசரகால சட்டத்திற்கு எதிராக இந்த நாட்டில் இருக்கக்கூடிய இயக்கங்கள் பல கட்சிகள் பல தொழிற்சங்கள் செய்யக்கூடிய இந்த போராட்டத்திற்கு நாங்களும் ஆதரவு வழங்குகின்றோம்” எனத் தெரிவித்தார்.

கோட்டா கோ கம போராட்டக்காரர்களுக்கு நட்சத்திர ஹோட்டலிருந்து உணவு விநியோகம் – விசாரணைகள் தீவிரம் !

கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்று, காலி முகத்திடல் போராட்டக்காரர்களுக்கு ஆரம்பம் முதலே உணவு வழங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஹோட்டலில் இருந்து நாளொன்றுக்கு 500 முதல் 600 வரையான உணவுப் பொட்டலங்களை போராட்டக்காரர்கள் பெற்றுள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போராட்டம் ஆரம்பித்ததில் இருந்து அண்மைக்காலம் வரை உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த உணவுப் பொட்டலங்கள் இலவசமாக வழங்கப்பட்டதா அல்லது ஏதேனும் அமைப்பினால் முன்பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இது தெரியவந்துள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.