இலங்கை அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு குறித்த புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியுள்ளது.
இதன் படி, உலகத் தமிழர் பேரவை மற்றும் அதன் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மீதான தடைகளை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது. மேலும், பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் கனடா தமிழ் காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் மீதான தடையையும் இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.
……………………….
செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா அமர்வில் இலங்கை மீதான கடுமையான சில நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என சர்வதேச தரப்பிலிருந்து எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி நேற்றையதினம் தமிழரோ முஸ்லீமோ பிரதமரானால் பெரும்பான்மை மக்கள் ஏற்க பழக வேண்டும் என அமைச்சர் ரமேஷ்பத்திரன தெரிவித்ததது கூட ஐ.நாவை சமாளிப்பதற்கான ரணில் விக்கிரமசிங்கவினுடைய அடுத்த கட்ட நகர்வு என அரசியல்விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆளும் கட்சி உறுப்பினர் டிலான் பெரேரா “ பிரதமர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை தமிழர், முஸ்லிம்கள் இடையே பகிர்ந்துகொள்ள வேண்டும். இதன் மூலம் சர்வதேசத்திற்கு சிறந்த செய்தியொன்றை கூற முடியும்.” என நேற்றைய தினம் தெரிவித்திருந்தார். மேலும் இதுவரையில் அரசியல்கைதிகள் என யாருமே இல்லை என சாதித்து வந்த ஆளுந்தரப்பு சார்பில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக் 46 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இவ்வாறாக சர்வதேசத்தை திருப்பதிப்படுத்தவும் – மீண்டும் டொலர் வருவாயை கூட்டவும் திடீரென நல்ல சாமியார் வேடத்தை போட ஆரம்பித்துள்ளது ரணில் ராஜபக்ச அரசு. பொறுத்திருந்து பார்ப்போம் இன்னும் என்ன என்ன நாடகங்களை நிகழ்த்தப்போகிறார்கள் என !