25

25

மே 31 உடன் இலங்கையின் விமான நிலையங்களும் மூடப்படுகிறது ?

இம்மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்குக் காரணம் ஜெட் எரிபொருள் குறைவதாகும்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை மட்டுமே விமான எரிபொருள் இருப்பதாக விமான நிலைய மற்றும் விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் தரையிறக்கப்பட்ட பல விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக ஏற்கனவே சென்னை திரும்பியுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரச ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான தடை நீக்கம் !

அரச சேவையில் தற்போது பணிபுரியும் ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான தடைகளை நீக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் இன்று (25) இடம்பெற்ற ஒரு கலந்துரையாடலின் போது இது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட தொழிலாளர் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, ஊழியர்களது தொழிலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்தார்.

இதேவேளை, பொருளாதார வீழ்ச்சிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், அந்நிய செலாவணி மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

“எந்த ஆதனமும் இல்லாமல் ரணிலின் சகாக்களுக்கு 54பில்லியன் ரூபா கடன்கள் வழங்கியுள்ள மக்கள் வங்கி.”- இரா.சாணக்கியன் காட்டம் !

“பிள்ளையானுக்கும் கொள்கையில்லை,ரணிலுக்கும் கொள்கையில்லை.இருவரும் ஒன்றாக பயணிக்கமுடியும்.” என  மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நாட்டில் மக்கள் எழுச்சிமூலம் மாற்றம் ஒன்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தபோதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் எதிரான மிகப்பெரும் துரோகச்செயலை செய்து பிரதமர் பதவியினை ஏற்று ஜனாதிபதி ராஜபக்ஸக்களை பாதுகாப்பதற்கான முழு முயற்சியையும் முன்னெடுத்துள்ளார்.

புதிதாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னரும் எரிபொருட்கள் உட்பட பல்வேறு பொருட்கள் விலைகள் அதிகரித்துள்ளன. இந்தவிலையேற்றம் தொடர்பாக அமைச்சர் காஞ்சன விஜயசேகர பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். 180ரூபாவாகயிருந்த அமெரிக்க டொலரின் பெறுமதி 365ரூபாவுக்கு வந்துள்ளது.பொருளாதாரத்தினை சரியாக முகாமைசெய்யாத காரணத்தினாலேயே இந்த நிலைமையேற்பட்டது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ எடுத்த பிழையான தீர்மானங்களே நாடு இந்த நிலைக்கு செல்வதற்கு காரணமாகவுள்ளன. எரிபொருள் அதிகரிததால் அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும். இன்று மக்கள் இந்த பொருளாதார நிலைமைக்கு ஈடுகொடுக்கமுடியாத நிலையுள்ளது.

இந்த பிரச்சினைக்கு தீர்வாக என்ன செய்யவேண்டும் என இலங்கைக்கு உதவும் பல்வேறு அமைப்புகளும் ஸ்திரமான அரசியல் சூழ்நிலை ஏற்படுத்தப்படவேண்டும் என்று கூறிவிட்டது. இலங்கையானது பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளியேவருவதாகயிருந்தால் இந்த அரசியல் ஸ்த்திரத்தன்மை ஏற்படுத்தப்படவேண்டும். அதற்காக மக்கள் நம்பிக்கை வைக்ககூடிய ஜனாதிபதி,மக்கள் நம்பிக்கை வைக்ககூடிய பிரதமர்,மக்கள் நம்பிக்கைவைக்ககூடிய பாராளுமன்றம்,மக்களின் நம்பிக்கையினை வென்றெடுக்ககூடிய அமைச்சரவை இருப்பதுதான் அரசியல் ஸ்திரத்தன்மையாகும்.இன்று சர்வதேசம் மறைமுகமாக சொல்வது கோத்தாபாய ராஜபக்ஸ வீட்டுக்கு செல்லவேண்டும்.

கோத்தா கோ ஹோம் என்ற அலை அனைத்து பகுதிளிலும் ஒலிக்கும் நிலையில் ஜனாதிபதி அவரது அதிகாரத்தினை குறைக்கும் சட்டம் என்ற போர்வையில் 21வது திருத்த சட்டத்தினை கொண்டுவந்து மக்களை ஏமாற்றும் நாடகத்தினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துள்ளார்.

இந்த நாடு மிக பாரதூரமான நெருக்கடிகளை கொண்டுள்ள நிலையில் பெரும்பாலானவர்கள் வாழ்வாதாரத்தினை இழந்துள்ள நிலையில் கடந்த ஐந்த வருடத்தில் மக்கள் வங்கியின் ஊடாக ஆக கூடுதலான கடன்களைப்பெற்றவர்கள் இதுவரையில் ஒரு ரூபா கூட செலுத்தாதவர்கள் உள்ளனர். இதில் முன்னாள் அமைச்சர் தயாகமகே என்னும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர் 2019ஆம்ஆண்டு தொடக்கம் 2022ஆம்ஆண்டு வரையில் 5000மில்லியனுக்கும் அதிகமான தொகையினை கடனாக பெற்றுள்ளார். அதிகமான கடனைப்பெற்று இதுவரையில் ஒரு ரூபா கூட மீள செலுத்தாதவர்களில் முதல் பத்துப்பேரில் ஆறாவது இடத்தில் அவர் உள்ளார்.

இது ராஜபக்ஸ குடும்பத்தின் காசும் அல்ல தனியாரின் காசும் அல்ல.மக்களின் காசு.இது தொடர்பில் பாராளுமன்றத்தில் நான் பேசியதற்காக இன்று காலை மக்கள் வங்கியின் தலைவரினால் எனக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. குறித்த கடன்களை மீளப்பெறுவதற்கான சட்ட ஆலோசனை செய்வதாக கூறப்பட்டுள்ளது. மூன்று பில்லியன் பணம் ஒரு தனி நபருக்கு வழங்கப்பட்டுள்ளது.ஆனால் நான்கு வருடத்திற்கு பின்னர் என்ன நடவடிக்கையெடுக்கலாம் என ஆராய்வதாக தெரிவிக்கின்றனர்.

லீசிங் கட்டமுடியாத சாதாரண மக்களின் வாகனங்களை பறித்துச்செல்கின்றீர்கள்,சிறு வர்த்தகளின் கடன்கள் கட்டாவிட்டால் வர்த்தக நிலையத்தினை ஏலத்தில் விடுகின்றீர்கள். தனிநபர் 3000இதுவரை கட்டவில்லையென்றதுடன் எனக்கு கடிதம் அனுப்புகின்றார்கள்.ஏனென்னால் அவர் ரணிலின் சகா என்பதனாலாகும்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிதாக நிதியமைச்சர் பதவியையேற்றதன் பின்னர் அந்த அமைச்சின் கீழ் வரும் மக்கள் வங்கி ஊடாக முதல்வேலையாக எனக்கு கடிதம் அனுப்பும் வேலையைதான் செய்துள்ளார்.

இனங்காணப்பட்ட முதல் பத்து பேருக்கு கடந்த ஐந்த வருடத்தில் 54பில்லியன் ரூபா கடன்கள் மக்கள் வங்கி ஊடாக வழங்கப்படடுள்ளது. இது கோப் குழுவினால் பெறப்பட்ட தகவல்.இதனை நான் பகிரங்கப்படுத்தியதற்காக என்னை இடைநிறுத்தினாலும் நான் கவலைப்படப்போவதில்லை.கடன்பெறப்போகும்  வங்கிகளில் ஏதாவது அடமானம் வைத்தே பணம் வழங்கப்படுகின்றதே. ஆனால் இவ்வளவு பெரிய நிதியானது எந்தவித ஆதனமும் இன்றி வழங்கப்பட்டுள்ளது.

இன்று மட்டக்களப்பில் மக்கள் தினமும் பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் இன்று வேட்டிய மடிச்சு கட்டுவது குறித்து பேசுகின்றனர். ஆரையம்பதியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பெற்றோலுக்கும் எரிவாயுவுக்கும் தினமும் கஸ்டப்படுகின்றனர். அதனை வீதிக்கு சென்று மக்களின் நிலைமையினை பார்த்து அதனை தீர்த்துவைக்க முயற்சி செய்யுங்கள். மேலதிகமாக 2000எரிவாயு சிலிண்டர்களை மட்டக்களப்புக்கு கொண்டுவரமுடியாத வக்கற்ற தலைவராகவே உங்கள் தலைவர் இருக்கின்றார். வேட்டியை மடித்துக்கட்டதேவையில்லை,மக்களுக்கு ஏதாவது செய்ய சொல்லுங்கள் இல்லாது விட்டால் பதவி விலகிவிட்டு வீட்டுக்கு செல்ல சொல்லுங்கள்.

மகிந்த ராஜபக்ஸ பிரதமராகயிருந்ததற்கு பதிலாக ரணில் (ராஜபக்ஸ) பிரதமராக தற்போதுள்ளார்.பிள்ளையான் மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்குவதுபோன்று ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஆதரவு அவர் வழங்கலாம். இதில் புதியதொரு வித்தியாசம் இல்லை.தற்போதும் பசில் ராஜபக்ஸதான் பாராளுமன்றத்தினை இயக்குகின்றார்.பிள்ளையானுக்கும் கொள்கையில்லை,ரணிலுக்கும் கொள்கையில்லை.இருவரும் ஒன்றாக பயணிக்கமுடியும்.”என அவர் தெரிவித்துள்ளார்.

ரணிலும் நிதியமைச்சரானார் !

இலங்கையின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்ற நிலையில் இன்று வரை நிதியமைச்சு தொடர்பான சரியான ஒரு அமைச்சரை அரசு நியமிக்கத்தவறிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது.

நிதியமைச்சர்கள் அடிக்கடி மாற்றப்பட்டதால் தெளிவான – தொடர்ச்சியான கொள்கைகளை நிதியமைச்சால் முன்னெடுக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் புதிய நிதியமைச்சராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றுள்ளார்.

 

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார்.

இன்று (புதன்கிழமை) காலை கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

“நிறைவேற்று ஜனாதிபதி முறை சிறுபான்மை மக்களுக்கு நல்லது.”- கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்

“நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையானது சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என சிறுபான்மை தலைவர்களே கூறியிருந்தனர்.” என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற கட்சியின் வட்டார அமைப்பாளர்களின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்க கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கச்சதீவினை குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக உத்தியோகபூர்வ தகவல்கள் ஏதும் வழங்கப்படவில்லை. அவ்விடயம் அரசியலிற்காக பேசப்பட்ட விடயமோ தெரியாது, ஆனால் இது தொடர்பாக ஏதும் கலந்துரையாடலும் நடைபெற்றதாக தெரியவில்லை. அவ்வாறு கச்சதீவினை இந்தியாவிற்கு வழங்கக்கூடிய சூழ்நிலை ஏற்படாது.

21வது சீர்திருத்தமானது நாட்டினுடைய பாராளுமன்றத்திற்கும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கும் இடையிலான அதிகாரங்களை பற்றியதாகும். அந்தவகையில் 13வது சீர்திருத்தமும் 21வது சீர்திருத்தமும் சம்மந்தப்பட்டதல்ல.

ஒரு காலகட்டத்தில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையினை தமிழ் தேசிய தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம், அல்லது மலையக மக்களுடைய தேசிய தலைவர் தொண்டமான், முஸ்லீம் மக்களுடைய அஷ்ரப் ஆகியோர் இருந்த காலகட்டத்தில் இதனை வலியுறுத்தி வந்தனர். அதாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையானது சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என கூறியிருந்தனர்.

மேலும் மீனவர்களுடைய பிரச்சனை இயன்றளவு தீர்ப்பதற்கான முயற்சிகள்,  எடுக்கப்படும். மேலும்   வடமாகாண  மீனவர்களிற்கு இந்திய மீனவர்களின் இழுவை படகுகளினுடைய அத்துமீறிய மீன்பிடிப்பு மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் காரணமாக வளங்கள் அழிக்கப்படுதல். போன்றவை பாரிய பிரச்சனைகளாக காணப்படுகின்றது. அத்தோடு கடற்றொழிலாளர்களுடைய தொழில் உபகரணங்கள் அழிக்கப்படுகின்றது.

இவ்வாறான பிரச்சனைக்கு ஒரளவு தீர்வு கண்டு வருகின்றோம். அதேபோன்று எரிபொருள் பிரச்சனைக்கு தீர்வும் எட்டப்படவுள்ளதாக தெரிவித்தார்.