09

09

கொழும்பில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு பின்னால் மகிந்தவின் சூழ்ச்சி – அம்பலப்படுத்தினார் தயாசிறி ஜயசேகர !

மகிந்த ராஜபக்ச, தெரிவு செய்யப்பட்ட சில முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களை அலரிமாளிகைக்கு வரவழைத்து போராட்டம் நடத்த கூறியதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளார் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகுவதற்கு முன்னர் இன்று உத்தேச அறிக்கை வெளியிடுவார் என்ற கருத்துத் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக, பதவி விலக வேண்டாம் என்று கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் தம்மை பதவி விலகவேண்டாம என்று கூறும்போது, தாம் எவ்வாறு பதவி விலகமுடியும் என்பதை சுட்டிக்காட்டவே மகிந்த இந்த போராட்டத்தை நடத்துமாறு கூறியுள்ளதாகவும் தயாசிறி தெரிவித்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் நிறுத்தம் !

யாழ் போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்தார்.

யாழ் போதனா வைத்தியசாலையின் தற்போதைய நிலை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

யாழ் போதனா வைத்தியசாலை யினை பொறுத்தவரை நோயாளர்களின் சிகிச்சைக்குரிய மருந்து மற்றும் சத்திர சிகிச்சைக்கு தேவையான உபகரணங்களுக்கான மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்பொழுது யாழ் போதனா வைத்தியசாலையில் அத்தியாவசியமாக தேவையான சத்திரசிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுகின்றது

ஏனைய சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது அத்துடன் விசர்நாய் கடிக்கான மருந்து தட்டுப்பாடாக இருக்கிறது எனவே பொதுமக்கள் கவனமாக மிருகங்களிடம் கடிபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

ஏனெனில் விசர் நாய்க்கடி மருந்து என்பது ஒரு விலை உயர்ந்த மருந்து தாகும் எனவே அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் அத்துடன் விபத்துக்கள் மற்றும் தேவையற்ற பிரச்சனைகள் மூலம்வைத்தியசாலைக்கு வருவதை தவிர்க்குமாறும் கோருகின்றோம்

போதுமான அளவு சேவையினை வழங்க முடியாதுள்ளது என்பதை மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்

சுகாதார கட்டமைப்புகள் சீர்குலைந்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம் எனவே பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் எனவும் தெரிவித்தார்…

விலங்கு விசர் நோய்த் தடுப்பூசி மருந்துகள் வடக்கில் இல்லை; நாய்க்கடிக்குள்ளாகுவோருக்கு ஆபத்து

விலங்கு விசர் நோய்த் தடுப்பூசி மருந்துகளான ஏஆர்வி மற்றும் ஏஆர்எஸ் என்பவை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

“நாய்களைக் கண்டால் விலகிச் செலலுங்கள். நாய்க்கடிக்கு உள்ளாகினால் விலங்கு விசர் நோய் தடுப்பூசி மருந்து தட்டுப்பாட்டினால் உயிர்களைக் காப்பாற்ற முடியாது” என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாய்க்கடிக்கு உள்ளாகியவர்களுக்கு ஏஆர்பி மற்றும் ஏஆர்எஸ் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படாவிடின் நீர்வெறுப்பு நோய்க்கு உள்ளாகி உயிரிழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

“வன்முறை வன்முறையைத் தூண்டும்.” – பிரதமர் மஹிந்த ட்வீட் !

பொது மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “இலங்கையில் உணர்ச்சிகள் அதிகமாக இயங்கிக்கொண்டிருக்கும் வேளையில், நமது பொது மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வன்முறை வன்முறையைத் தூண்டும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். நாம் இருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு பொருளாதார தீர்வு தேவை, அதை தீர்க்க இந்த நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது” என பதிவிட்டுள்ளார்.

“பிரச்சினைகளை வன்முறை தீர்க்காது.”- கோட்டாபய ராஜபக்ச ட்வீட் !

அரசியல் சார்புகளைப் பொருட்படுத்தாமல், தூண்டிவிட்டு பங்கேற்பவர்களால் நடைபெறும் வன்முறைச் செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போதைய பிரச்சினைகளை வன்முறை தீர்க்காது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆகையால், அனைத்து குடிமக்களும் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நெருக்கடியை தீர்க்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அமைதியான போராட்டத்தை வன்முறையாக்கிய ராஜபக்சக்களின் குண்டர்கள் !

பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் இன்று கொழும்பில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார கண்டனம் தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் ஆதரவாளர்கள் அலரிமாளிகைக்கு முன்னால் இருந்த மைனா கோ கமா மற்றும் காலி முகத்திடலில் உள்ள கோட்டாகோகம ஆகிய இரண்டு போராட்ட தளங்களையும் அடித்து நொறுக்கி தீயிட்டனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து, டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள குமார் சங்கக்கார, அமைதியான போராட்டக்காரர்கள் அரசாங்கத்தின் குண்டர்களால் தாக்கப்பட்டனர் என கடுமையாக சாடியுள்ளார்.

நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொது மக்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு கண்டனம் வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார்

 

கலவர பூமியாக மாறிய கொழும்பு – மேல் மாகாணத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைக்கு வந்தது ஊரடங்கு !

அலரி மாளிகைக்கு அருகில் பதற்றமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அலரி மாளிகைக்கு முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதேவேளை, இன்று முற்பகல் அலரி மாளிகை முன்பாக ஒன்றுகூடியிருந்த பிரதமரின் ஆதரவாளர்களுக்கும் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.

தொடர்ந்து பிரதமருக்கு ஆதரவாக அணி திரண்ட மக்கள் காலி முகத்திலுக்குள் நுழைந்தததை அடுத்து பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. அங்கு அமைக்கப்பட்டுள்ள கூடரங்களை உடைக்கும் காட்சிகளை காணக்கூடியதாக உள்ளது.

இந்நிலையில் கலகக்காரர்களை அடக்கும் முகமாக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இதே நேரம், காலி முகத்திடலுக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சகிதம் வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீது குழுவொன்றினால் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் உடனடியாக வாகனத்தில் ஏற்றப்பட்டு அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதேநேரம் போராட்டங்களில் ஏற்பட்ட மோதலில் இதுவரையில் 23 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து மேல் மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பின் சில பகுதிகளில் அமுல்படுதப்பட்ட ஊரடங்கு சட்டம் தற்போது மேல் மாகாணம் முழுவதும் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் காலிமுகத்திடலில் தற்போது இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டுத்தேவைகளுக்கு எரிவாயு வழங்கப்படமாட்டாது – வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு !

விநியோகிப்பதற்கு தேவையான சமையல் எரிவாயு கையிருப்பில் இல்லை என லிட்ரோ நிறுவனம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

விநியோகத்திற்கு தேவையான எரிவாயு கையிருப்பில் இல்லை என்பதுடன், அத்தியாவசிய சேவைக்காக மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

நேற்றைய தினம் விடுமுறை என்ற போதிலும் முத்துராஜவல லிட்ரோ எரிவாயு முனையத்திலிருந்து கணிசமான எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பதவி விலகாதீர்கள் – பிரதமர் மகிந்தவுக்கு ஆதரவாக போராட்டம் !

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டாம் என வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் குழுவொன்று அலரிமாளிகைக்கு வெளியே ஒன்று கூடியுள்ளனர்.

பிரதமர் பதவியை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கைக்கு தாங்கள் எதிரானவர்கள் என ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பதவி விலகுகிறாரா மகிந்த..?

அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ச  தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு இணக்கம் தெரிவித்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (மே 08) ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் பேசிய கலாநிதி கொடஹேவா, நாட்டை காப்பாற்ற வேண்டும் என்பதில் அரச தலைவரும் பிரதமரும் ஒரே கருத்தில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

சனிக்கிழமை (மே 07), அரச தலைவரும் மாளிகையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது, பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.