May

May

“21 வது அரசியலமைப்பு உருவாக்கப்பட்டாலும், எந்த மாற்றமும் ஏற்படாது.”- ரணில் விக்ரமசிங்க

21வது அரசியலமைப்பு சீர்திருத்தம் உருவாக்கப்பட்டாலும், நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் இன்று கொழும்பில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்தின் போதே முன்னாள் பிரதமர் ரணில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் வேலையை இழந்துள்ளனர். டொலர் தட்டுப்பாடு மற்றும் மோசமான நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக அரசாங்கம் ஸ்திரமற்ற நிலைக்குச் சென்றுள்ளதாகவும், இதனால் மக்களின் அன்றாட வாழ்வில் எரிவாயு, உணவு, எரிபொருள் மற்றும் மின்சாரம் போன்றவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கூற்றுப்படி, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு பதிலாக 21 வது அரசியலமைப்பு உருவாக்கப்பட்டாலும், எந்த மாற்றமும் ஏற்படாது. 20ஆவது திருத்தச் சட்டத்தில் தமக்கு விருப்பம் இல்லை.  21ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதால் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவது கடினம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“அனைத்து தலைவர்களும் பதவி விலக வேண்டும்.”- முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அனைத்து தலைவர்களும் பதவி விலகி தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கு மக்களுக்கு இடமளிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இன்று (01) இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

தனது ஆட்சிக் காலத்தில் நாட்டில் இதுபோன்று எவ்விதமான சூழ்நிலையும் இருக்கவில்லை எனவும் தனது ஆட்சியின் பின்னர் மிகவும் நல்லதொரு நாட்டை ராஜபக்ஷர்கள் கைப்பற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் புதிய அரசாங்கத்தை அமைப்பதே தமது நம்பிக்கை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

‘உங்களை புரிந்துகொள்கின்றோம் எங்களை புரிந்துகொள்ளுங்கள்’ – சிங்கள மக்களிடம் தமிழர் தரப்பு கோரிக்கை !

தென்னிலங்கை சிங்கள மக்களிற்கான செய்தியாக ‘உங்களை புரிந்துகொள்கின்றோம் எங்களை புரிந்துகொள்ளுங்கள்’ எனும் தமிழ் மக்களின் அபிலாசைகளை ஒருமித்த குரலாக கொண்டு சேர்க்கும் வேலைத்திட்டங்களை முன்கொண்டு செல்வதற்கு தமிழர் தரப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வட, கிழக்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து யாழ். இலங்கை வேந்தன் மண்டபத்தில் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பிற்கான ஒருங்கிணைப்புக் குழுவை அங்குரார்ப்பணம் செய்து, தற்போதைய இலங்கைத் தீவின் நெருக்கடியில் தமிழரின் வகிபாகம் தொடர்பாக ஆராய்ந்தனர்.
இதன்போது, வடக்கு கிழக்கு சார்ந்த சைவ ஆதீன முதல்வர்கள், கத்தோலிக்க குரு முதல்வர்கள், சமய, சமூக, தொழிற்சங்க பிரதிநிதிகள் பல்கலைக்கழகம் சார் பேராசிரியர்கள், மாணவ பிரதிநிதிகள், மருத்துவர்கள், பொறியியலாளர், வங்கியாளர்கள், ஊடகவியலாளர், கல்விப்புலம் சார்ந்தோர் என பல்துறை ஆளுமை சார் செயற்பாட்டாளர்கள் தமது கருத்துக்களை பரிமாறினர்
தமிழ் தேசியம் சார்ந்து பொருளாதார நெருக்கடியை எவ்வாறு அணுகுவது, சிங்கள மக்களிற்கும் சர்வதேசத்திற்கும் இந்த தருணத்தில் தமிழ் மக்கள் ஓர் திரட்சியாக எவ்வாறு தமிழரின் அடிப்படை அரசியல் பிரச்சினைகளை கொண்டு சேர்ப்பது, பொருளாதார பிரச்சினைக்கு மூலவேர்க் காரணமான தமிழ் மக்களின் மீதான அடக்கு முறைகளிற்கான தீர்வை பெற்றுக்கொள்ள சிங்கள மக்களிடையே மன மாற்றத்தை தூண்டல், சுயசார்பு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல் என பல கோணங்களில் இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இறுதியில், வடகிழக்கு தழுவிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஒருங்கிணைப்புக் குழு தெரிவு செய்யப்பட்டது.
தொடர் கலந்துரையாடல்கள் வாயிலாக தென்னிலங்கை சிங்கள மக்களிற்கான செய்தியான உங்களை புரிந்து கொள்கின்றோம் எங்களை புரிந்து கொள்ளுங்கள் எனும் தமிழ் மக்களின் அபிலாசைகளை ஒருமித்த குரலாக கொண்டு சேர்க்கும் வேலைத்திட்டங்களை பல தளங்களில் தொடர்ச்சியான கருத்தாடல்களுடன் முன்கொண்டு செல்வதாக தீர்மானிக்கப்பட்டு கூட்டம் நிறைவு பெற்றது.

பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு – கிளிநொச்சியில் 130 கிலோ கஞ்சா மீட்பு !

130 கிலோ கேரள கஞ்சா கிளிநொச்சியில் மீட்கப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலிற்கமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கஞ்சா பொதிகள் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு வெளி இடங்களிற்கு அனுப்பும் நோக்குடன் பூநகரி வேரவில் பிரதேசத்தில் உள்ள பற்றைக்குள் மறைக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. சுற்றிவளைப்பில் மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளின் பெறுமதி இலங்கை மதிப்பில் 2.5 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பொதிகள் ஜெயபுரம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

“அனைத்து அரசியல்வாதிகளும் நிராகரிக்கப்படுவார்கள்.” – எச்சரிக்கை விடுத்துள்ள மகாசங்கம் !

இடைக்கால அரசாங்கத்திற்கு வழிவகுத்து பிரதமர் பதவி விலகாவிட்டால் மகாசங்க பிரகடனத்தின் கீழ் அனைத்து அரசியல்வாதிகளும் நிராகரிக்கப்படுவார்கள் என மகாசங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற மகாசங்கத்தின் நிகழ்வில் உரையாற்றிய ரஜரட்டை பேராசிரியர் ஒலங்கவத்தை சந்திரசிறி தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார அரசியல் நெருக்கடிகளிற்கு அரசாங்கம் தீர்வை காணவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.உரிய துறைகளில் நிபுணர்களிடம் ஆலோசனைகளை பெறவேண்டும் என தெரிவித்துள்ள அவர் மக்களின் வாழ்க்கைக்கு ஸ்திரதன்மையை ஏற்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசமைப்பில் உரிய மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் நிறைவேற்று அதிகாரத்தின் அதிகாரங்களை குறைத்து நாடாளுமன்றத்தை வலுப்படுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்,

பௌத்தமகாசங்க பீடாதிபதிகள் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஜனாதிபதி இடைக்கால அரசாங்கத்தை நியமிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவி விலகவேண்டும் பிரதமர் பதவி விலகாவிட்டால் அனைத்து அரசியல்வாதிகளையும் நிராகரிக்கும் பிரகடனத்தை பௌத்த மகாசங்கம் பிரகடனம் செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்

லண்டன் நாடாளுமன்றத்திற்கருகிலும் கோட்டா கோ கம !

இலங்கையின் கொழும்பு காலிமுகத் திடலில் கோட்டா கோ கம (கோட்டா வெளியேறு கிராமம்) கிராமம் என்று பெயரிட்டு, போராட்டகாரர்கள் போராட்டம் களம் ஒன்றை அமைந்துள்ளனர்.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த 22 நாட்களாக காலிமுகத திடலில் இளைஞர்,யுவதிகள் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்திற்கு ஆதரவாக இலங்கையில் பல இடங்களில் கோட்டா கோ கம கிளைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் தற்போது வெளிநாடான இங்கிலாந்திலும் இலங்கையர்கள் கோட்டா கோ கம என்ற கிளையை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கையர்கள் லண்டனிலும் கோட்டா கோ கம கிளை ஒன்றை ஸ்தாபித்துள்ளனர். லண்டனில் உள்ள பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு பின்புறம் அதன் சுற்று வட்ட பகுதியில் அவர்கள் இந்த கோட்டா கோ  கம கிராமத்தின் கிளையை ஏற்படுத்தியுள்ளனர்.

அலரி மாளிகையின் முன்னால் மக்கள் போராட்டம் !

அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியின் நடுவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அலரிமாளிகைக்கு அருகில் வீதியோர போராட்டக் கூடாரங்களை பொலிஸார் அகற்றியதையடுத்து அவர்கள் இவ்வாறு நடுவீதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அரச தலைவர், பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி அலரி மாளிகைக்கு முன்பாக மைனாகோகமவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 7 ஆவது நாளாகவும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

றவூப் ஹக்கீமை பகிரங்க விவாதத்துக்கு அழைத்துள்ள ஹாபிஸ் நஸீர் அஹமட் !

சமகால மற்றும் கடந்தகால விவகாரங்கள் தொடர்பில் சமூகத்துக்கு தௌிவு வழங்க ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் றவூப் ஹக்கீமை, பிரபலமான தொலைக்காட்சி ஒன்றில் தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருப்பதாவது,

நடந்தவற்றை உரியவாறு சமூகத்திடம் ஒப்புவிக்கும் பொறுப்பிலிருந்து நாமிருவரும் நழுவிவிட முடியாது. இதில், யார் குற்றவாளி அல்லது சுத்தவாளி என்பதையும் எவரது பொறுப்புக்கள் சமூகக் கடமைகளிலிருந்து நழுவியது என்பதையும் சமூகமே தீர்மானிக்க வேண்டும். இதற்காக ஒரு பகிரங்க விவாதம் நமக்குள் தேவைப்படுகிறது.

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்துக்கு நான் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீஸ், பைசல் காசிம், தௌபீக் ஆகியோர் ஆதரவளித்த பின்னணியுள்ள பின்புலம், நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் அவை இடம்பெற்ற இடங்கள் இன்னும் எழுமாந்தமான கதைகளாகவே உள்ளன. இதன் உண்மைத்தன்மையை சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை உங்களுக்கும் எனக்கும் இருக்கும் என நம்புகிறேன். அதுமட்டுமின்றி ஆதாரபூர்வமாகவும் முழு ஆவணங்களுடனும் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கடப்பாடு நமக்கு இருக்கிறது.

எனவே, இவ்வாறான விடயங்கள் நடப்பதற்கு ஏதுவான காரணிகள் ஏன் ஏற்பட்டது? என்பதை புலப்படுத்துவதும் நமது இருவரது பொறுப்புக்களில் உள்ளன. ஆகவே, தன்னுடன் பகிரங்கமானதும், வௌிப்படையானதுமான விவாதத்துக்கு வருமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீமுக்கு அழைப்பு விடுக்கிறேன். இந்த அழைப்பை நிராகரிப்பதற்கான எந்த நியாயங்களும் அவரிடம் இருக்காது என, தான் நம்புவதாகவும் ஹாபிஸ் நஸீர் தெரிவித்துள்ளார்

“அனுமான் எப்படி சஞ்சீவ மலையை சுமந்தாரோ, அதுபோலவே இலங்கையை சுமப்பதற்கு நரேந்திர மோடியும் தயாராகவுள்ளார்.” – மலையகத்தில் அண்ணாமலை புகழ்ச்சி !

“அனுமான் எப்படி சஞ்சீவ மலையை சுமந்தாரோ, அதுபோலவே இலங்கையை சுமப்பதற்கு நரேந்திர மோடியும் தயாராகவுள்ளார்.” என இந்தியாவின் ஆளுங்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக தலைவரான அண்ணாமலை தெரிவித்தார்.

இலங்கையில் தொழிலாளர் தின விழாவில் பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்புஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தின நிகழ்வு இன்று (01) கொட்டகலை சி.எல்.எவ்.வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதீதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பது சாதாரணக் கட்சி கிடையாது. ஆரம்பிக்கப்பட்ட அடையாளத்தை இன்னும் அக்கட்சி மறக்கவில்லை. தொழிலாளர்களை மையப்படுத்தியே அது பயணிக்கின்றது. சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா, இலங்கையர்களுக்கு மட்டும் அல்ல, தமிழ்நாட்டில் இருந்த தமிழர்களுக்கும் வழிகாட்டியாக இருந்துள்ளார். குரல் அற்றவர்களின் குரலாக ஓங்கி ஒலித்துள்ளார்.

1947 இல் நடைபெற்ற தேர்தலில் 8 மலையக பிரதிநிதிகள் நாடாளுமன்றம் சென்றனர். அதன்பின்னர் குடியுரிமை மற்றும் ஏனைய உரிமைகள் பறிக்கப்பட்டன. அவற்றை மீட்டெடுப்பதற்கு தொண்டமான் பாடுபட்டார். வெற்றியும் கண்டார். தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தார். அமரர் ஆறுமுகன் தொண்டமானும் மக்களுக்காகவே அரசியல் செய்துள்ளார். தனது மக்களின் நில உரிமைக்காக போராடியுள்ளார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின்கீழ் முழு உலகமும் இந்தியாவை திருப்பி பார்க்கின்றது. இந்தியா என்பது வல்லரசு நாடாக மாறியுள்ளது. உலகில் 5ஆவது மிகப்பெரிய பொருளாதார பலமுடைய நாடாக மாறியுள்ளது. ரஷ்யா, உக்ரைனுக்கிடையில் மோதல் ஏற்பட்டபோதுகூட, உக்ரைனில் வாழ்ந்த இந்தியர்களை சிறு காயமின்றி மீட்டெடுத்தார்.

இலங்கையை அருகிலுள்ள நாடு, எமது சொந்தங்கள் வாழும் நாடு என இரு கோணத்தில் இந்தியா பார்க்கின்றது. அதனால்தான் நெருக்கடியான கட்டங்களில் உதவிகள் வழங்கப்படுகின்றன. உயிர் காப்பு மருந்து தேவை என்று சொன்னபோது, 107 வகையான 760 கிலோ மருந்துகளை அனுப்பி வைத்துள்ளோம். எதிர்காலத்திலும் உதவுவோம். மலையக மக்களுக்கான உதவிகளும் தொடரும். நாம் வளரும் அதேவேளை, எமது தொப்புள்கொடி உறவுகளையும் வளர வைப்போம். மலையகம் கல்வியால் உயர வேண்டும். அதற்கான உதவிகளும் தொடரும்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, நீண்டகாலத்துக்கானது அல்ல. விரைவில் நிலைமை மாற வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன். இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு இந்தியாவும் போராடிக்கொண்டிருக்கின்றது. அன்று அனுமான் எப்படி சஞ்சீவ மலையை சுமந்தாரோ, அதுபோலவே இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமப்பதற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடியும் தயாராகவே இருக்கின்றார் என்றார்.

“மக்களுக்காகவே  ராஜபக்ஷ அரசுடனான உறவை முறித்துக்கொண்டோம்.” – ஜீவன் தொண்டமான்

“மக்களுக்காகவே  ராஜபக்ஷ அரசுடனான உறவை முறித்துக்கொண்டோம்.” என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம் கொட்டகலை சி.எல்.எப். வளாகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் மக்கள் பக்கம் நின்றே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முடிவெடுத்தது. ஆனால் எமது சமூகத்தை காட்டிக்கொடுக்கும் விதத்தில் ஒரு சிலர் செயற்படுவதால் தலைகுனிந்து நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆயிரம் ரூபாய் என்பது எமது இலக்கல்ல என்பதை தேர்தல் காலத்திலேயே அறிவித்துவிட்டோம். கல்வியும் காணி உரிமையும்தான் பிரதான இலக்கு. அதனை அடைவதற்கே தீவிர முயற்சியில் இறங்கியுள்ளோம். எண்ணம்போல்தான் செயல் என்பார்கள். மலையகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது கனவும்கூட.

நான் பதவிக்காக அரசியல் செய்பவன் அல்லன். மக்களுக்கானதே எனது அரசியல் பயணம். அதனால்தான் ராஜபக்ஷ அரசுடனான உறவை முறித்துக்கொண்டு, இன்று மக்கள் பக்கம் நிற்கின்றோம். அப்படி இருந்தும் வரலாறு தெரியாத சிலர் காங்கிரஸை விமர்சித்து வருகின்றனர்.

மக்களின் தன்னெழுச்சி போராட்டத்தில் இ.தொ.கா. பட்டி அணிவிக்கப்பட்டிருந்தது குறித்தும் விமர்சிக்கின்றனர். இ.தொ.கா என்பது மக்கள் இயக்கம். மக்களை பாதுகாத்த அரசியல் இயக்கம். மக்களுக்கு உரிமைகளை வென்றுக்கொடுத்த அரசியல் கட்சி. எனவே, அதை அணிவதில் சிக்கல் கிடையாது. இதற்கு ஏன் பதிலளிக்கவில்லை என சிலர் கேட்கின்றனர்.நாய்கள் குரைக்கும்போது சிங்கங்கள் அஞ்சுவது கிடையாது.

எமது மக்களுக்கு நில உரிமை வேண்டும். 150 வருடங்களாக நிலமற்றவர்களாக வாழ்கின்றோம். இதனை பெற்றுக்கொடுப்பதற்கு இந்தியாவின் உதவியும் அவசியம். அதற்கான உறவு பாலமாக அண்ணாமலை இருப்பார் என நம்புகின்றேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.