14

14

ராஜபக்ஷக்களுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி !

அரசுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய இரத்தினபுரி சிறிபாகம-குட்டிகல காவல் நிலைய அதிகாரியை  காவல் விசேட விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக இரத்தினபுரி சிறிபாகம-குட்டிகல காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல் உத்தியோகத்தர் ஒருவர் இணைந்துகொண்டார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், நாளை நான் இந்த பதவியில் இருக்கமாட்டேன், இன்று நான் இங்கு வந்துள்ளேன். என்னைப் போல முதுகெழும்பு உள்ள நாட்டின் நெருக்கடி நிலைமையை புரிந்துகொண்ட காவல் அதிகாரிகள் இங்கு வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், குறித்த அதிகாரியை தற்போது பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, போராட்டத்தில் கலந்து கொண்ட காவல் அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக சிறிலங்கா காவல்துறை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

“ஐ.பி.எல் போட்டிகளை கைவிட்டுவிட்டு இளைஞர்களுடன் இணைந்து போராடுங்கள்.” – அர்ஜுன ரணதுங்க கோரிக்கை !

ஐபிஎல் போட்டியில் விளையாடும் அனைத்து இலங்கை வீரர்களும் தங்களது நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடியை முன்னிட்டு தாயகம் திரும்பி ஆதரவு அளிக்குமாறு அர்ஜுன ரணதுங்க வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை முன்னிட்டு ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் நாடு திரும்ப அர்ஜுன ரணதுங்க அழைப்பு விடுத்துள்ளார்.
“அதிகளவு தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இலங்கை வீரர்கள் சிலர் தங்கள் நாட்டில் நிலவும் பிரச்சனைகள் குறித்து தைரியமாக பேசவில்லை. அவர்கள் யாரென்றால்லாம் எனக்கு தெரியாது. துரதிர்ஷ்டவசமாக அரசுக்கு எதிராக பேசுவதற்கு இந்த கிரிக்கெட் வீரர்கள் பயப்படுகிறார்கள். மேலும் அமைச்சகத்தின் கீழ் உள்ள கிரிக்கெட் வாரியத்திலும் இந்த கிரிக்கெட் வீரர்கள் பணிபுரிவதால் தங்களது வேலையை பாதுகாத்துகொள்ளவே முயற்சிக்கின்றனர்.
எனினும் சில இளம் கிரிக்கெட் வீரர்கள்இ தானாக முன் வந்து போராட்டத்திற்கு ஆதரவாக அறிக்கைகள் வழங்கியுள்ளனர். ஏதாவது தவறு நடந்தால் உங்கள் வேலையைப் பற்றி மட்டும் சிந்திக்காமல் அதை எதிர்த்துப் பேச அவர்களுக்கு தைரியம் இருக்க வேண்டும். மக்கள் என்னிடம் ஏன் போராட்டத்தில் நீங்கள் பங்குகொள்வது இல்லை என்று கேட்கிறார்கள்.
நான் கடந்த 19 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். மேலும் இது ஒரு அரசியல் பிரச்சினை அல்ல. இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் போராட்டங்களில் ஈடுபடவில்லை. அதனாலேயே நானும் போராட்டங்களில் பங்கேற்கவில்லை. அதுவே இந்த நாட்டு மக்களின் மிகப்பெரிய பலமாக இருக்கிறது.

ஐ.பி.எல்லில் விளையாடும் வீரர்கள் யார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும் என்று நான் நம்புகிறேன். நான் யார் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் அந்த வீரர்கள் ஒரு வாரத்திற்கு தங்களது ஐபிஎல் போட்டிகளை விட்டுவிட்டு போராட்டங்களுக்கு ஆதரவாக நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

“எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம்” என சில சுயலாப அரசியல்வாதிகள் செயற்படுகிறார்கள்.”- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் கவலை !

“தற்போதைய நெருக்கடிகள் தீரும். எரிபொருளுக்காகவும் எரிவாயுவிற்காகவும் பல மணிநேரங்கள் வரிசையில் காத்திருக்கும் காலம் விரைவில் மாறும்.” என பிறக்கும் தமிழ், சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

தேசிய நல்லிணக்கத்தின் பண்டிகையாக தமிழ் சிங்கள மக்களால் கொண்டாடப்படும் சித்திரைப் பண்டிகையின் கொண்டாட்டமானது எதிர்பாராத பொருளாதார நெருக்கடிகளோடும், பொருள் தட்டுப்பாடுகளுடனும் கொண்டாட வேண்டியதொரு சூழலில் எமது நாட்டின் தற்போதைய நிலைமை உள்ளது.

கொரோனா தொற்று, அந்நிய செலவாணியை இழப்பு எனப் பல காரணங்கள் இருந்தாலும் இந்த நெருக்கடியிலிருந்து நாம் மீண்டெழுவோம் என்ற நம்பிக்கை கொள்ளவேண்டும். மக்களின் பிரச்சனைகளில் குளிர் காயவும் அவற்றை தீராப்பிரச்சனைகளாக கையாளவும் சில சுயலாப அரசியல்வாதிகள் முயற்சிப்பார்கள். அவர்களின் நோக்கமானது “எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம்” என்பதாகவே இருக்கமுடியும்.

மக்களை நேசிக்கும் எமது நோக்கமோ, நடைமுறை யதார்த்தத்தின் வழி நின்று நாட்டையும் மக்களையும் பாதுகாத்து ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி வழி நடத்தும் பணியானது எத்தகைய கடினமானதாக இருந்தாலும் பிரச்சனைகளை தீர்க்கும் எமது அரசியல் கையாளுகையை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்பதேயாகும்.

பொறுமையும் நம்பிக்கையும் அவசியமான பொழுதொன்றில் புலரும் தமிழ், சிங்கள புத்தாண்டு அனைவரின் இடர்களையும, துயர்களையும் போக்குகின்ற ஆண்டாக அமைய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

தற்போதைய நெருக்கடிகள் தீரும். எரிபொருளுக்காகவும் எரிவாயுவிற்காகவும் பல மணிநேரங்கள் வரிசையில் காத்திருக்கும் காலம் விரைவில் மாறும் – இலங்கை மக்களின் வாழ்வு வளம்பெறும் என்ற நம்பிக்கையுடன் எமது அரசின் முயற்சிகள் அமைந்துள்ளது என்பதை இந்நன்நாளில் உங்களுக்கு கூறிவைக்க விரும்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி – ஆசியக்கிண்ண போட்டிகளை நடாத்துவதில் சிக்கல் !

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. கடைசியாக 2018-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை (ஒரு நாள் போட்டி) ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தது. இதில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றது.
இதுவரை 14 ஆசிய கோப்பை போட்டி நடைபெற்றுள்ளது. இதில் இந்தியா 7 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. இலங்கை 5 தடவையும், பாகிஸ்தான் 2 முறையும் ஆசிய கோப்பையை வென்றுள்ளன.
15-வது ஆசிய கோப்பை 20 ஓவர் போட்டியாக இலங்கையில் நடத்தப்படுவது இந்த போட்டி ஆகஸ்ட் 17-ந் திகதி முதல் செப்டம்பர் 11-ந் திகதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்த நிலையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி இருப்பதால் ஆசய கோப்பை போட்டி நடைபெற வாய்ப்பு இல்லை என்று இலங்கை கிரிக்கெட் அணியின்  முன்னாள் தலைவர் அர்ஜூன ரனதுங்கா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் ஆசிய கோப்பை போட்டி நடைபெறுமா? என்பது உறுதி இல்லை . மற்ற நாடுகளை நம்பி இருக்க வேண்டி உள்ளது. மக்களின் போராட்டம் இலங்கை அரசுக்கு எதிராக இருக்கிறது. கிரிக்கெட்டுக்கு எதிராக அவர்களது மனநிலை இல்லை. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலே இலங்கையில் இருந்து இந்த போட்டியை மாற்ற முடிவு செய்யலாம்.” என தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டி ஜே.வி.பி பாதயாத்திரை !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியால் பாதயாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளது,

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 17ஆம் திகதி காலை 9 மணிக்கு களுத்துறை, பேருவளை நகரில் ஆரம்பமாகும் பாதயாத்திரை, 19 ஆம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது.

இது மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான போராட்டம் என்பதால் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்று பேரம்பேசும் பசில் ராஜபக்ஷ தரப்பு !

“சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் உறுப்பினர்களை வளைத்துபோடும் சில்லறைத்தனமான அரசியலை தனது சகாக்கள் ஊடாக பஸில் ராஜபக்ச மேற்கொண்டுள்ளார்..” என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மேலும் உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியாது எனவும் ரெிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் உறுப்பினர்களை வளைத்துபோடும் சில்லறைத்தனமான அரசியலை தனது சகாக்கள் ஊடாக பஸில் ராஜபக்ச மேற்கொண்டுள்ளார். எமது உறுப்பினர்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்று பேரம் பேசுகின்றனர். இவ்வாறான நிலையில் ஜனாதிபதியுடன் எப்படி பேச்சு நடத்துவது?

உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியாது. அதற்கு இளைஞர்கள் இடமளிக்கமாட்டார்கள். தக்க பாடம் புகட்டுவார்கள். எனவே, சாந்த பண்டாரவிடமிருந்து அமைச்சு பதவியை ஜனாதிபதி உடன் பறித்து, அவரை அரசியல் ரீதியில் அநாதையாக்க வேண்டும்.

அவ்வாறு செய்தால் மட்டும்தான் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் பேச்சுக்கு தயாரில்லை. எமது பலத்தை நாம் காட்டுவோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

“யுத்த குற்றத்துக்கு பொறுப்பேற்று கோத்தாபய ராஜபக்ஷ பதவி விலகவேண்டும்.”- எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தல் !

பொருளாதார பின்னடைவு, யுத்தகுற்றம் மற்றும் ஊழலுக்கு பொறுப்பேற்று ஐனாதிபதி பதவி விலகவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“ராஜபக்ஷ இருட்டு அகன்று போக வேண்டும். இனமதமொழி வேறுபாடின்றி ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென மக்கள் கோருகின்றனர். அந்தவகையில் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுவரும் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவை வழங்குகிறோம். போராட்டத்தில் அரசியல் கலப்பு வேண்டாமென போராட்டாரர்கள் விரும்புகிறார்கள்.

வடக்கு கிழக்கில் பலர் கலந்து கொள்ள வேண்டுமென விரும்புகின்றனர். புத்தாண்டு மலரும் வேளையில் போராட்டம் வெற்றி பெற வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிரான குற்றப்பிரேரணை, நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைக்கு எதிரான சட்டத்திருத்தம் நிறைவேறினால் நாட்டில் மறுமலர்ச்சி ஏற்படும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

பெரும் அராஜக நிலைக்குள் இலங்கை – வாழ்த்துக்கூட சொல்ல முடியவில்லை என்கிறார் முன்னாள் ஜனாதிபதி !

நாடு முன்னொரு போதும் இல்லாத பெரும் அராஜக நிலைக்குள் தள்ளப்பட்டுள்ள சூழ்நிலையில் என்னால் எப்படி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது முகநூலில் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுதந்திரத்திற்கு பின்னர் நாட்டின் அனைத்து குடிமக்களும் அனைத்து வேறுபாடுகளையும் புறக்கணித்து மழையையும் பொருட்படுத்தாமல் நாட்டின் முன்னேற்றத்திற்காக அமைதியான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்-என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த போர் முழுவதும் வன்முறைக்கு பதில் அமைதியையும் வெறுப்புக்கு பதில் அன்பையும் காண்போம் இந்தபோக்கின் மூலம் நாடு வெற்றியை பெற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் எதிர்காலத்திற்காகத் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த குடிமக்கள் அனைவருக்கும், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும், வளமும், ஆரோக்கியமும் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, உங்கள் அனைவருக்கும் வளமும், வளமும் மிக்க புத்தாண்டாக அமையட்டும்.

இந்த நெருக்கடியை சமாளித்து அமைதி, சகவாழ்வு மற்றும் ஜனநாயகம் கொண்ட நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் தீர்வுக்காக பேரம்பேச சரியான தருணம் இதுவே – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் !

பொது வாக்கெடுப்பு அல்லது தமிழர்களின் சுதந்திர ஆட்சிக்கான பேரம் பேசலை முன்னெடுக்கவேண்டிய தருணம் ஏற்ப்பட்டுள்ளதாக வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று 1881 ஆவது நாளாகவும் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் போராட்டத்தில் ஈடுபடும் நிலையில் வருடப்பிறப்பினை ஒட்டி ஏற்பாடு செய்திருந்த கவனயீர்ப்பு போராட்டத்தின்போதே இவ்வாறு தெரிவித்தனர்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,
கொழும்பில் உள்ள தமிழ் இளைஞர்கள், சிங்கள இளைஞர்களின் புரட்சியின் மீது கொண்ட காதல், தமிழர்களுக்கு எந்த விடிவையும் கொண்டு வராது. அது தமிழர்களின் துன்பங்களை ஒழிக்காது, ஒற்றையாட்சியை மேலும் வலுப்படுத்தும்.
“கொழும்பில் ஒற்றுமை” என்ற பெயரில், இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றங்களில் இருந்து விடுபடுவதற்கு சிங்கள சிந்தனைக் குழுவின் உத்தியாக கூட இது இருக்கலாம்.  வடக்கு கிழக்கில் எந்தவொரு தமிழர்களும் அரசாங்கத்திற்கு எதிராக பொருளாதார ஆர்ப்பாட்டம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை இன்று பலவீனமாக உள்ளது, உணவு இல்லை, பணம் இல்லை, பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. இது மற்ற நாடுகளுக்கு சந்தைப்பங்கை இழக்கிறது. இலங்கையால் வெளிநாட்டு கடனை செலுத்த முடியவில்லை. இலங்கையின் எதிர்காலம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற பணக்கார நாடுகளில் தங்கியுள்ளது.
எனவே தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனுடன் பொது வாக்கெடுப்பு அல்லது சுதந்திர ஆட்சிக்கான பேரம் பேசலை முன்னெடுக்கவேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி இந்த நாடுகளிடம் கேட்க வேண்டும். தமிழர்களுக்கான நிரந்தரத்தீர்வை எட்டுவதற்கு, இந்த நாடுகள் இலங்கையுடன் பேரம்பேச இதுவே சிறந்த தருணம் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

அல்லது அவர்களின் எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்வதற்கான கிளர்ச்சியை முன்னெடுத்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவுடன் தமிழர்கள் சார்பில் வாதாடக்கூடிய சில புதிய துணிச்சலான இளைஞர்களை கொண்டுவர வேண்டும்