07

07

“2009ல் எங்கள் குழந்தைகள் கொல்லப்பட்ட போது பால் சோறு வழங்கி கொண்டாடியவர்கள் ராஜபக்ஷக்கள்.”- நாடாளும்னறில் சிறீதரன் !

வாருங்கள் சிங்கள சகோதர சகோதரிகளே ஒன்றாக சேர்ந்து நாட்டை மீட்போம். உங்கள் போராட்டத்தை நாங்கள் மதிக்கின்றோம்.” என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

உங்களை போன்ற இளைஞர்கள் இப்போதும் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளாக உள்ளனர். அவர்களையும் சிந்தியுங்கள். நாம் அன்று அழிக்கப்பட்ட போதும் கூட சிங்கள மாணவர்கள், மக்கள் எங்களுக்காக போராடவில்லை. இன்று தான் நீங்கள் எல்லாவற்றையும் புரிந்துகொண்டீர்கள். வாருங்கள் ஒன்றாக போராடுவோம்.

அன்று 2009 ஆம் ஆண்டு, எங்கள் குழந்தைகள் கொல்லப்பட்ட போது, இங்கே பால் சோறு வழங்கி தேசியக் கொடி வழங்கி மகிழ்ந்தவர் ராஜபக்ச குடும்பத்தினர். இன்று அதே தேசியக் கோடியை ஏந்திக்கொண்டு மக்கள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். பல ஆயிரக் கணக்கான குழந்தைகளை மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினரிடமே ஒப்படைந்தோம்.” எனவும் அவர் தெரிவித்தார்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தலைமுடியைக்கூட யாராலும் தொட முடியாது – விடுக்கப்பட்டுள்ள சவால் !

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தலைமுடியைக்கூட யாரையும் தொடுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என குருநாகல் மேயர் சவால் விடுத்துள்ளார்.
குருநாகலில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, குருநாகல் மேயர் அமைச்சருக்கு ஆதரவாக கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தார்.
இதன்போதே, ஜோன்ஸ்டன் தலைமுடியைகூட யாரையும் தொடுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என சவால் விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினைச் சேர்ந்த அல்லது யாரேனும் குருநாகலில் உள்ள ஜோன்ஸ்டனின் அலுவலகத்திற்கு வருமாறு தாங்கள் சவால் விடுவதாகவும் மேயர் கூறியுள்ளார்.
இதே நேரம் நேற்று நள்ளிரவு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் வீடு போராட்டக்காரர்களால் சுற்றி வளைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றம் வந்த ஜனாதிபதியை நோக்கி கூச்சலிட்ட எதிர்க்கட்சியினர் – வெளியேறிய கோட்டாபய !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்ற அமர்வுகளை பார்வையிடுவதற்காக சபைக்கு இன்று (வியாழக்கிழமை) வருகை தந்தார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்த நேற்றும் இன்றும் விவாதங்கள் இடம்பெறும் நிலையில் அதனை பார்வையிடுவதற்காக நாடாளுமன்றத்திற்கு இன்று வருகை தந்திருந்தார்.

நாடாளுமன்றம் வந்த சிறிது நேரத்திலேயே சபையை விட்டு வெளியேறினார் ஜனாதிபதி கோட்டா!

தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பான இரண்டாம் நாள் நாடாளுமன்ற விவாதம் தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் நாடளுமன்றத்திற்கு வந்த ஜனாதிபதியை அரசாங்கத்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றிருந்தனர்.

இதேவேளை ஜனாதிபதியின் வருகையின்போது எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டு தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற விவாதங்களை அவதானிப்பதற்காக நாடாளுமன்றம் வருகைதந்திருந்த ஜனாதிபதி சிறிது நேரம் கழித்து சபையை விட்டு வெளியேறினார்.

ஒரே நாளில் 119.08 பில்லியன் ரூபாயை அச்சடித்த மத்திய வங்கி !

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (05) 308.49 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 298.10 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, இலங்கையில் அனுமதி பெற்ற பல வர்த்தக வங்கிகள் இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலையை 320 ரூபாவாக அறிவித்துள்ளன.

இந்த கடும் பெருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்த பண புழக்கத்திற்கு மத்தியில் மத்திய வங்கி நேற்று (புதன்கிழமை) 119.08 பில்லியன் ரூபாயை அச்சடித்துள்ளது. இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 432.76 பில்லியன் ரூபாய் பணம் இலங்கை மத்திய வங்கியினால் அச்சிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் இந்த நடவடிக்கைகள் பணவீக்கத்தை மேலும் துரிதப்படுத்தும் என பொருளியலாளர்கள் எச்சரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண பல்கலைகழகத்துடன் உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டுள்ள நோர்வே நாட்டின் இரண்டு பல்கலைகழகங்கள் !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும், மேற்கு நோர்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் நோர்வேயின் பேர்கன் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கிடையில் உயர்பட்ட ஆய்வு நடவடிக்கைகளுக்கான முக்கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (6) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

HRNCET 2.0 என்று பெயரிடப்பட்டுள்ள புதிய நிகழ்ச்சித் திட்டத்திற்கான முக்கூட்டு உடன்படிக்கையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவும், மேற்கு நோர்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் அதன் துணைப் பீடாதிபதி க்றோ அனிற்றா பெணஸ் ப்ளற்றன் மற்றும் பேர்கன் பல்கலைக்கழகத்தின் சார்பில் அதன் துணை முதல்வர் ஒய்விண்ட் ப்றட்டே ஆகியோரும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான நோர்வேஜியத் தூதுவர் ட்ரீனே ஜோரன்லி எஸ்கெடாலும் நிகழ்நிலையில் கலந்து கொண்டார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சார்பில் செயற்றிட்ட இணைப்பாளர் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜனும், மேற்கு நோர்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் செயற்றிட்ட இணைப்பாளர் தயாளன் வேலாயுதபிள்ளை ஆகியோரும் இதன்போது உடனிருந்தனர்.

இந்த நிகழ்வின் போது நோர்வேயில் இருந்து வருகை தந்த இரு பல்கலைக்கழகங்களினதும் விரிவுரையாளர்கள், ஆய்வு மாணவர்கள் மற்றும் இலங்கைக்கான நோர்வே தூதரகத்தின் அதிகாரிகள் மற்றும் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஆய்வு மாணவர்கள், பணியாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

இவ் உடன்படிக்கையின் மூலம் தூய சக்தி தொழில்நுட்பங்களில் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காகப் பல்கலைக்கழகங்களுக்கிடையில் இணைந்த முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் திட்டங்களில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

மேலதிக வரி சட்டமூலம் திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேறியது !

ஒரு தடவை மாத்திரம் அறிவிடப்படும் மேலதிக வரி சட்டமூலம் நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் இன்று (வியாழக்கிழமை) வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

2000 மில்லியன் ரூபாய்க்கு அதிகமாக வரி அறவிடக்கூடிய வருமானத்தை ஈட்டும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு 25 சதவீத மேலதிக வரியை அறவிட அரசாங்கம் தீர்மானித்தது. அதன்படி ஒரு தடவை மாத்திரம் அறிவிடப்படும் 25 சதவீத மேலதிக வரி தொடர்பான குறித்த சட்டமூலத்திற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியிருந்தது.

இதனை அடுத்து குறித்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது என உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சிகள் உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தன.

இருப்பினும் மேலதிக வரிச் சட்டமூலத்தில் EPF, ETF உட்பட 13 நிதியங்கள் உள்ளடக்கப்படாத வகையில் திருத்தம் செய்யப்படும் என சட்டமா அதிபர் உறுதியளித்திருந்தார்.

இதனை அடுத்து மேலதிக வரிச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் கடந்த மாத இறுதியில் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகவும் பலவீனமான நாணயமாக மாறியது இலங்கை ரூபா !

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று (06) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி, சில வர்த்தக வங்கிகள் டொலரின் விற்பனை விலையை 320 ரூபாவாகக் குறிப்பிட்டுள்ளதாக நிதிச் சந்தை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, உலகின் மிகவும் பலவீனமான நாணயமாக இலங்கை ரூபா மாறியுள்ளதாக Financial Times of India செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் அரசாங்கம் கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைக் கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றினைந்து ஜனாதிபதி, பிரதமர் வீடுகளின் முன்பாக போராட வாருங்கள்.” – நாடாளுமன்றில் சாணக்கியன் !

ராஜபக்சக்கள் தவறாக எனது தலைமுறையுடன் வம்பிழுத்து உள்ளார்கள் என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில்  நேற்று (06) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள வெறுப்பினை நாடாளுமன்றத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு ஆளும் தரப்பின் பிரதம கொறோடா உட்பட ஆளும் தரப்பினர்கள் செயற்படுகிறார்கள். கோ ஹோம் கோடா என்பதை 225 உறுப்பினர்களும் செல்ல வேண்டும் என மாற்றிவிடுவது இலகுவானது.

நாடாளுமன்றம் ஒழுங்கு முறைக்கமைய செயற்படுவதில்லை. 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் விரட்டியடிக்க வேண்டும் என்பதை நாட்டு மக்களுக்கு காண்பிக்கும் வகையில் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. தவறான தலைமுறையினரிடம் மோதியுள்ளீர்கள் என குறிப்பிட்டு இளம் தலைமுறையினர் போராட்டத்தில் ஈடுப்பிடுகிறார்கள்.

நாடாளுமன்றம் தொடர்பில் மக்கள் மத்தியில் காணப்படும் அதிருப்தி எமக்கும் உண்டு. பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களை எடுத்துக்கொண்டால் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடுபவர்கள், மோசடியாளர்கள், கொலைகாரர்கள், கடத்தல்காரர்களுக்கு வேட்பு மனு வழங்கப்பட்டு அவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைத்துள்ளார்கள்.

225 உறுப்பினர்களில் பெரும்பாலானோர் திருடர்களாகவும், மோசடியாளர்களாகவும் இருக்கும் போது நாட்டு மக்கள் 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் விமர்சிப்பது சாதாரணமானது. ஜனாதிபதி கோட்டாபா ராஜபக்ஷவையும், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வீட்டுக்கு அனுப்பி நாட்டு மக்கள் எதனை எதிர்பார்க்கிறார்கள். நாடாளுமன்ற முறைமை பலப்படுத்தப்பட வேண்டும்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் ஊடாக நாடாளுமன்ற அதிகாரத்தை முழுமையாக இல்லாதொழித்து விட்டு இன்று 42 பேர் சுயாதீனமாக செயற்படுகிறார்களாம். நாடாளுமன்ற அதிகாரத்தை முழுமையாக ஜனாதிபதிக்கு வழங்கி விட்டு இன்று சிறுபிள்ளை போல் இங்கு வந்து அழுகிறார்கள். பிரச்சினையை தீவிரப்படுத்தி கொண்டு செல்ல அரசாங்கம் முயற்சிக்கிறது.

நாடாளுமன்ற அமர்வு ஆரம்பிக்கும் போது தற்போதைய பிரச்சினைக்கு நாடாளுமன்ற மட்டத்தில் ஏதாவது தீர்வு கிடைக்கப்பெறும் என மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒழுங்கு முறைக்கு அப்பாற்பட்ட வகையில் முன்னெடுக்கப்படுகிறது. நாடாளுமன்றமும் வேண்டாம் என மக்கள் கருதும் நிலைப்பாட்டை தோற்றுவிக்கவே ஆளும் தரப்பு முயற்சிக்கிறது.

நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் ஆளும் தரப்பினருக்கு சார்பானவர்கள். மக்கள் ஜனாதிபதிக்கு எதிராக மாத்திரம் போராடவில்லை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும் போராடுகிறார்கள் என்பதை காண்பிக்கவே ஆளும் தரப்பினர் முயற்சிக்கிறார்கள். சித்திரை புத்தாண்டு விடுமுறை காலத்தில் மக்கள் சோர்வடைந்து போராட்டங்களை மறந்து வழமையான சூழ்நிலைக்கு திரும்புவார்கள் என அரசாங்கம் கருதுகிறது.

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் எரிபொருள் கிடைப்பதால் நெருக்கடி சற்று தணியும் ஆனால் அது நிரந்தர தீர்வாக அமையாது. மேல்மாகாண மக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். கிராமத்தில் உள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு சோர்வடைந்து விட்டார்கள். இல்லாவிடின் பேரூந்துகளில் வந்து கொழும்பை முற்றுகையிடுவார்கள். களுத்துறை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட மக்கள் போராட்டத்தை கைவிட கூடாது.

மக்கள் தன்னிச்சையாக போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள், எதிர்தரப்பினர் போராட்டத்தில் ஒன்றினைந்தால் ஆளும் தரப்பினர் எவரும் வீடு செல்ல முடியாது. வீதியில் நின்று போராட்டத்தில் ஈடுப்படும் தாய் அடிப்படைவாதியா, மேல்மாகாண மக்கள் போராட்டத்தை கைவிட கூடாது. போராடத்திற்கு தீர்வு காணாமல் அதனை முன்னெடுத்து செல்லவும் அல்லது நாட்டில் பிரச்சினையை தீவிரப்படுத்தி இராணுவ ஆட்சியை முன்னெடுப்பது ஜனாதிபதியின் நோக்கமாக உள்ளது.

நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றினைந்து ஜனாதிபதி, பிரதமர் வீடுகளில் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட வேண்டும். எத்தனை இலட்ச மக்களை விரட்டியடிக்க முடியும். அமைச்சு பதவிகளை துறந்து விட்டதாக குறிப்பிடுகிறார்கள் ஆனால் தொடர்ந்து அரச வாகனங்களை பயன்படுத்திக்கொண்டுள்ளார்கள்.

பிள்ளையான் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் வாகனத்தில் வருகை தந்துள்ளார். பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் வரை நாட்டு மக்கள் போராட்டத்தை தொடர வேண்டும். இதுவே சிறந்த வாய்ப்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.

“கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவதே ஒரே தீர்வு.”- நாடாளுமன்றில் அனுரகுமார திசாநாயக்க !

ஜனாதிபதி வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்றே இந்நாட்டு மக்கள் விரும்புகின்றனர் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்த இன்றும் இடம்பெறும் விவாதத்தின் போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி ஆசனத்தில் இருந்துகொண்டு கோட்டாபய ராஜபக்ஷ வழங்கும் எந்தவொரு தீர்வையும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஜனாதிபதி பதவி விலகினால் மாத்திரமே தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண தமது கட்சி ஆதரவளிக்கும். இன்னொருபக்கம் மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளவும் விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை ஊடகவியலாளர்கள் தமது கடமைகளை தடையின்றி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்

இலங்கை மக்கள் எதிர் நோக்கவுள்ள கடுமையான உணவுப் பற்றாக்குறை !

எரிபொருள், சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மின் துண்டிப்பு ஆகியவற்றிலும் பார்க்க கடுமையான உணவுப் பற்றாக்குறை நிலை ஏற்படக்கூடும் என்பதை யூகிக்கக்கூடியதாகயிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்ற அலுவல்கள் ​நேற்று (06) காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது. இதன்போது விசேட உரையொன்றை நிகழ்த்தி பாநாயகர் இதனைத் குறிப்பிட்டார்.

அரசியல் நோக்கத்தை புறம்தள்ளி இந்த நெருக்கடியில் இருந்து மீழ்வதற்கு அரசியல் யாப்பு மற்றும் ஜனநாயகத்துக்கு உட்பட்ட வகையில் பொது வேலைத்திட்டம் ஒன்றை வகுத்து அதனை செயற்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார்.

கடந்த சில நாட்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள் பல அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் சிறப்புரிமைகளை பாதுகாப்பவர் என்ற வகையில் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.