March

March

“புத்தரின் பெயரால் இனியும் சிங்கள மக்களை ராஜபக்ஷக்கள் ஏமாற்ற முடியாது.” – எம்.ஏ.சுமந்திரன்

இனியும் இனவாதத்தை தூண்டும் முகமாக இந்த அரசானது வடக்கில் புத்தர் சிலைகளை வைக்கின்றோம். பௌத்த தூபிகளை நிர்மாணிக்கிறோம் என்று கூறி சிங்கள மக்களை ஏமாற்ற முடியாதெனவும் அந்த காலம் முடிந்துவிட்டது எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழில் உள்ள பௌத்த விகாரைகளுக்கு விஜயம் மேற்கொள்வது தொடர்பில் ஊடகங்கள் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவிருப்பதாக செய்தி வெளியாகியிருந்தது. மக்கள் சொல்வதை ஜனாதிபதி கேட்காத காரணத்தினால் ஜனாதிபதி சொல்வதை மக்கள் கேட்கக்கூடாது எனக்கூறி ஜனாதிபதியின் உரையின் போது தொலைக்காட்சிப் பெட்டியை மூடி வைத்துவிடுங்கள் என்று சொன்னார்கள். நானும் ஜனாதிபதியின் உரையை கேட்கவில்லை. வெளியான செய்திகளை அடிப்படையாக வைத்து விசேடமாக எந்த விடயங்களையும் கூறவில்லை என்றே விளங்குகிறது.

இன்னும் இரண்டு வருடங்கள் தயவு செய்து தாருங்கள் என்று மக்களிடம் கேட்பதாகவே தென்படுகின்றது.ஆகவே நாட்டை பாதுகாப்போம் நாட்டை மீட்போம் என்ற மீட்பர்கள் ஒரு வருடம் தாருங்கள் இரண்டு வருடங்கள் தாருங்கள் என்ற கெஞ்சிக் கொண்டு உள்ளனர்.

தற்போது மக்கள் பசிக்கு உணவு இல்லாத நிலையில் இனியும் இனவாதத்தை தூண்டும் முகமாக இந்த அரசானது வடக்கில் புத்தர் சிலைகளை வைக்கின்றோம் பௌத்த தூபிகளை நிர்மாணிக்கிறோம் என்று கூறி சிங்கள மக்களை ஏமாற்ற முடியாது அந்த காலம் முடிந்துவிட்டது என்றார்.

பேஸ்புக் தொடர்பால் முல்லைத்தீவு சிறுமிகளுக்கு ஏற்பட்ட அபத்தம் – விசாரணையில் வெளியான தகவல்களால் அதிர்ச்சி !

முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் இருந்து இரண்டு பதின் அகவை சிறுமிகள் கடந்த 16 ஆம் திகதி அன்று காணாமல் போன நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கையில் பெற்றோர்கள், கிராமத்தினர்கள் மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ள நிலையில் நேற்று மாலை புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் இருவரும் மீட்கப்பட்டுள்ளார்கள்.

இரண்டு சிறுமிகளையும் காணவில்லை என பெற்றோரால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் 16 ஆம் திகதி அன்று மாலை முறையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டு சிறுமிகளும் நேற்று புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வைத்து பொலிஸாரால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிறுமிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த சிறுமிகளில் ஒருவர் பேஸ்புக் ஊடாக மட்டக்களப்பு செங்கலடிப்பகுதி இளைஞர் ஒருவருடன் தொடர்பினை ஏற்படுத்தி கதைத்து பேசியுள்ளார்கள்.

செங்கலடி இளைஞன் சிறுமியினை அங்கு வருமாறு அழைத்துள்ளதை தொடர்ந்து சிறுமி தனது நண்பியுடன் வீட்டிற்கு தெரியாமல் மிதிவண்டியில் மாலைநேர கல்விக்கு செல்வதாக சொல்லிவிட்டு மிதிவண்டியினை பற்றைக்காட்டிற்குள் போட்டுவிட்டு பேருந்தில் ஏறி மட்டக்களப்பு செங்கலடிக்கு சென்றுள்ளார்கள்.

செங்கலடி இளைஞன் இருவரையும் காரில் ஏற்றிசென்று தான் பேசிய சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளதை தொடர்ந்து அவர்களை வீடுசெல்ல அழைத்துக்கொண்டுவந்து யாழ்ப்பாணத்திற்கு செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டுள்ளார். இரண்டு சிறுமிகளும் யாழ்ப்பாணம் சென்று யாழ் நகரப்பகுதியில் சுற்றிதிரிந்த வேளையில் கடை ஒன்றில் பொருட்களை வாங்கியவேளை நள்ளிரவாகியுள்ளது.

இந்நிலையில் இரண்டு சிறமிகளுக்கும் உதவிசெய்வதாக கூறி இரண்டு இளைஞர்கள் சிறுமிகளை அழைத்துக்கொண்டுசென்று வீடு ஒன்றில் தங்கவைத்து பின்னர் மற்றைய சிறுமியுடன் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு பேருந்தில் இரண்டு சிறுமிகளும் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளதுடன் இரண்டு சிறுமிகளும் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வந்திறங்கியுள்ளார்கள்.

இரண்டு சிறுமிகளின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு இருவரும் கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இருவரிடத்திலும் மேற்கொள்ளப்பட்ட வாக்குமூலத்தினை தொடர்ந்து இரண்டு சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

சிறுமிகள் இருவருடனும் பாலியல் துஸ்பிரயோகத்தினை மேற்கொண்டவர்கள் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

திரை மறைவில் இன்னுமொரு ராஜபக்ஷ குடும்ப உறுப்பினரை ஆட்சிக்கு கொண்டு வர விமல் தரப்பு முயற்சி !

விமல்வவீரவன்ச உதயகம்மன்பில வாசுதேவ நாணயக்கார ஆகியோரின் நடவடிக்கைகளின் பின்னால் இரகசிய நோக்கங்கள் உள்ளன என ஹிருணிகா தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவித்த அவர் ராஜபக்ச குடும்பத்தின் இன்னொரு உறுப்பினர் ஆட்சிக்கு வருவதை உறுதி செய்ய முயல்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மூவரினதும் கடந்தகாலங்களை ஆராயும்போது அவர்கள் மக்கள் தங்களிற்கு வழங்கிய ஆணையை காப்பாற்ற முயல்கின்றனர் நிதியமைச்சருக்கு எதிரான இன்னொரு உறுப்பினருக்கு உதவ முயல்கின்றனர் என்பது தெளிவாகின்றது என ஹிருணிகா தெரிவித்துள்ளார்.

“வடக்கு மாகாண மக்களை பாதுகாத்து இந்த மாகாணத்தை அபிவிருத்தி செய்கிறோம்.” – நயினாதீவு ரஜமஹா விகாரையை புனித பூமியாக்கும் நிகழ்வில் பிரதமர் !

அன்றும் வடக்கு மக்களை பாதுகாத்த நாம், அந்த மக்களை பாதுகாத்து இந்த மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் என்ற வகையில் இன்றும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ரஜமஹா விகாரையை புனித பூமியாக பிரகடனப்படுத்தி சன்னஸ் பத்திரம் வழங்கும் வகையில் யாழ்ப்பாணம் நயினாதீவு ரஜமஹா விகாரையில் இன்று (19) இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

யாத்ரீகர்களுக்குத் தேவையான தங்குமிட வசதிகளை விரிவுப்படுத்தி நயினாதீவு ஆலயத்தை மேலும் அபிவிருத்தி செய்ய எதிர்பார்ப்பதாக பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நயினாதீவு ரஜமஹா விகாரைக்கு விஜயம் செய்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , முதலில் அமரபுர மஹா சங்க சபையின் தலைவர் வணக்கத்திற்குரிய கங்துனே அஸ்ஸஜி மகா நாயக்க தேரர் மற்றும் நயினாதீவு பீடாதிபதி வணக்கத்திற்குரிய நவதகல பதுமகித்தி திஸ்ஸ தேரரை சந்தித்தார்.

புனித பூமி பணிப்பாளர் ருச்சிர விதான அவர்கள் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவிடம் சன்னஸ் பத்திரத்தை வழங்கி வைத்தார், அதன் பின்னர் செயலாளர் சன்னஸ் பத்திரத்தை வாசித்தார்.

சன்னாஸ் பத்திரம் பேராசிரியர் கபில குணவர்தனவினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

பின்னர் பிரதமர் ஸ்ரீலங்கா அமரபுர மகா நிகாயாவின் அம்பகஹபிட்டிய பிரிவின் பிரதம சங்க தலைவர் நயினாதீவு ரஜமஹா விகாரை விகாராதிபதி வண. நவதகல பதுமகித்தி திஸ்ஸ நாயக்க தேரருக்கு வழங்கினார்.அமரபுர மகா சங்கசபையின் தலைவர் கந்துனே அஸ்ஸஜி மகாநாயக்க தேரர் சிறப்புரையாற்றினார்.

நயினாதீவு விகாரையை புனித பூமியாக பிரகடனப்படுத்துவதற்கு அரச அனுசரணை வழங்கியமைக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன ஆகியோருக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வடக்கில் பாழடைந்த வனவிலங்கு தளங்களை பாதுகாத்து அபிவிருத்தி செய்வதற்கு அமரபுர நிகாயாவின் பிக்குகள் விசேட அர்ப்பணிப்பை மேற்கொண்டுள்ளனர். நான் முதன்முதலில் யாழ்ப்பாணத்திற்கு 1970 இல் வந்தேன். ஆனால் அப்போது ஏற்பட்ட கலவரத்தால் நயினாதீவிற்கு வரமுடியவில்லை. பின்னர் இந்த வாய்ப்பு வந்தது.

நாட்டில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அன்றைய பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முப்படைகளின் தளபதிகளினால் யாழ் குடாநாட்டிற்கு இன்று எவருக்கும் விஜயம் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது.

அதனால்தான் மகா சங்கத்தினர் உங்களுக்கு நற்பெயரை வழங்கினர். கடந்த கால மன்னர்கள் பௌத்தத்தைக் காக்க நடவடிக்கை எடுத்தது போல், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பௌத்தத்தைக் காக்க நடவடிக்கை எடுத்ததால் ‘ராஜவங்ஷ பூஷண’ என்றும், தர்மத்தீவு பிளவுபடாமல் பாதுகாத்ததால் ‘தர்மத்வீப சக்கரவர்த்தி’ என்றும் அழைக்கப்பட்டீர்கள். அந்தப் பெயர் என்னால் உருவாக்கப்பட்டது.

நயினாதீவை தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்பும் இடமாக எமது நவதகல தேரர் உருவாக்கியுள்ளார். அதற்குக் காரணம் அவர் சரளமாகத் தமிழ் பேசக்கூடியவர். இப்பிரதேசங்களுக்கு தமிழ் மொழி தெரிந்த பிக்குகளை அதிகளவில் வரவழைப்பதன் மூலம் இப்பிரதேசங்களில் சிறந்த தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என மகாநாயக்க தேரர் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் உரை ஆற்றிய பிரதமர் மகிந்த,

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ரஜமஹா விகாரை என்பது புத்தரின் வருகையால் புனிதமடைந்த இடமாகும். சூலோதர மஹோதர மாமாவுக்கும் மருமகனுக்கும் இடையே எழுந்த இரத்தினக்கல் கதிரைக்காகக நடந்த போரை நிறுத்துவதற்காக புத்தபெருமான் இந்த புனித இடத்திற்கு வந்ததாக சாசன வரலாறு கூறுகிறது.

அப்போது அனைவருக்கும் தர்மம் உபதேசம் செய்யப்பட்டதால், ஏற்படவிருந்த பெரும் பேரிடரை தடுத்து நிறுத்த முடியும். அன்றிலிருந்து இந்த பெறுமதி வாய்ந்த இடம் சிங்கள பௌத்தர்கள் மட்டுமன்றி பௌத்த தத்துவத்தில் பற்று கொண்ட அனைத்து தேசிய இன மக்களும் வழிபடும் இடமாக மாறியுள்ளது.

துடுகெமுனு மன்னன், சத்தாதிஸ்ஸ மன்னன் போன்ற மாபெரும் ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சிக்காலத்தில் இந்த இடத்தை பாதுகாத்ததாக வரலாறு கூறுகிறது. வடக்கிலும் தெற்கிலும் பழங்காலத்திலிருந்தே மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்துள்ளனர் என்பதை இது நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

1983 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த நாட்டில் ஏற்பட்ட பாதகமான நிகழ்வுகளால் 30 வருடங்களுக்கு மேலாக இந்த இடம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது என்று கூறுவது சரியானது. தென்னிலங்கை மக்கள் வடபகுதிக்கு வருவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அன்றைய காலப்பகுதியில் இலங்கை கடற்படையினர் இந்த ஆலயத்தை பராமரித்து பாதுகாத்து வந்ததோடு பிக்குகளுக்கு அன்னதானம் வழங்கியதையும் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

வடக்கு மாகாணத்தை மையமாகக் கொண்ட யுத்தம் இந்தப் பிரதேசத்தின் அபிவிருத்தியையும் மக்களையும் அழித்தது.இவ்விகாரையை பராமரிக்க அப்பகுதியில் வாழும் ஏராளமான தமிழர்களும் ஒன்று திரண்டு வந்ததை மரியாதையுடன் நினைவு கூர்கிறேன்.

அவர்கள் மற்றும் கடற்படையினரின் உதவியோடு இவ்விகாரை தற்போதைய விகாராதிபதியினால் அபிவிருத்தி செய்யப்பட்டது.எமது வணக்கத்திற்குரிய நவதகல பதுமகித்தி நாயக்க தேரர் அவர் என்னுடன் மிகவும் நட்புடன் பழகும் தேரர். மேலும், அவர் சொல்ல வேண்டியதை பயப்படாமல் சொல்வதும் அவரிடமிருந்து நான் கண்ட பண்புகளில் ஒன்று. மேலும் இந்த பகுதி மீதும் விகாரையின் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர்.அவர் இந்த மக்களையும் விகாரையையும் விட்டு வெளியே வரவே இல்லை. எனக்கும் அரசாங்கத்துக்கும் மிகவும் விசுவாசமாக இருந்தார்.

புத்தர் பீடத்தை சீர்செய்தல், பக்கச்சுவர் அமைத்தல், விகாரை மற்றும் தேவ மந்திராவை புனரமைத்தல் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சமூகங்களுக்கு தேவையான சுகாதார வசதிகளை விரிவுபடுத்துதல் போன்றவற்றை எம்மால் செய்ய முடிந்தது. மேலும், நயினாதீவில் உள்ள நயினாதீவு விகாரைக்கு செல்லும் பாதையை அமைக்கவும், மருத்துவமனையை சீரமைக்கவும் முடிந்தது.

நயினாதீவு மற்றும் ஏனைய தீவுகளுக்கு செல்லக்கூடிய குறிகட்டுவான் ஜெட்டியை புனரமைத்து, நயினாதீவு விகாரைக்கு வருகை தரும் பக்தர்களுக்கான தங்குமிட வசதிகளை மேலும் மேம்படுத்தவும் நாம் எதிர்பார்க்கிறோம்.
இந்த ஆலயம் புனிதமான இடமாக மாற்றப்பட்டதன் காரணமாகவே இவை அனைத்தும் சாத்தியமானது என்றே கூறவேண்டும்.

30 ஆண்டு கால பயங்கர போருக்குப் பின்னர் இந்த விகாரையை பெரிய அளவில் மேம்படுத்தி பக்தர்கள் வழிபடும் இடமாக மாற்ற நினைத்தோம். எனவேதான் கடந்த வருட அரச வெசாக் விழாவை வடமாகாணத்தில் இந்த ஆலயத்தை மையப்படுத்தி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.துரதிர்ஷ்டவசமாக, உலகம் முழுவதையும் மூழ்கடித்த கொவிட் 19 தொற்றினால் அதனை செய்ய முடியாது போனது.

இதனை நிறைவேற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் புத்தசாசன அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது.இந்த நிகழ்வை பிரமாண்டமாக நடத்துவதற்கு அரசு அமைப்புகள், பாதுகாப்புப் படையினர் உட்பட இந்தப் பகுதி மக்கள் திட்டமிட்டனர். எனினும், சுகாதாரத் துறையின் ஆலோசனையின் பேரில், நிகழ்ச்சியை ரத்து செய்தோம். இந்த விகாரையின் மீதும், இந்த மாகாணத்தின் மீதும், அங்கு வாழும் மக்கள் மீதும் கொண்ட பக்தியின் காரணமாகவே இந்த விழாக்களில் இணைந்தோம் என்றே கூற வேண்டும்.

அப்போதும் நாங்கள் வடக்கு மக்களை பாதுகாத்தோம். அதிமேதகு ஜனாதிபதி அவர்களும் எமது அரசாங்கமும் இன்று அந்த மக்களைப் பாதுகாத்து இந்த மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்விகாரைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. இப்பணிகளை முன்னெடுப்பதில் புத்தசாசன அமைச்சு உட்பட அரச நிறுவனங்களும், இலங்கை கடற்படை மற்றும் இராணுவமும் கணிசமான பங்காற்றியுள்ளன.

இந்தப் புனித பூமியைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் அரசாங்கம் தன்னால் இயன்ற அனைத்தையும் தொடர்ந்து செய்யும் என்று உறுதியளிக்கிறேன். ‘என்று கௌரவ பிரதமர் கூறினார்.

நிகழ்வின் நிறைவில் நயினாதீவில் உள்ள ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவிலிலும் கௌரவ பிரதமர் வழிபாட்டில் ஈடுபட்டார்.

குறித்த நிகழ்வில் கௌரவ இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

கண்டியில் மண்ணெண்ணை வாங்க வரிசையில் நின்றவர் மரணம் !

கண்டியில் மண்ணெண்ணையை பெறுவதற்காக நீண்டநேரம் வரிசையில் காத்திருந்த 71 வயது நபர் மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது அவர் உயிரிழந்திருந்ததாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

வத்தேகம – உடதலவின்ன பகுதியை சேர்ந்த 71 வயதுடையவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றன

வெளியானது உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் – இலங்கைக்கு எத்தனையாவது இடம்.?

ஐக்கிய நாடுகள் சபையின் 2022ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி நாடுகள் அறிக்கையில் இலங்கை 127ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

இப்பட்டியலில் பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு உலக மகிழ்ச்சி அறிக்கையில் 149 நாடுகளில் இலங்கை 129வது இடத்தில் இருந்தது. இப்பட்டியலில் ஆப்கானிஸ்தான் மகிழ்ச்சியற்ற நாடாக இறுதி இடத்தை பெற்றுள்ளது. பொருளாதாரச் சரிவை எதிர்கொண்டுள்ள லெபனான் கடைசிக்கு முன்னரான இடத்தை பெற்றுள்ளது.

பட்டியலில் 121வது இடத்தில் பாகிஸ்தானும், இந்தியா 136வது இடத்திலும், நேபாளம் 84வது இடத்திலும், வங்கதேசம் 94வது இடத்திலும் உள்ளன.

முதல் 20 இடங்களில் ஆசிய நாடுகள் எவையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபையின் இப்பட்டியல் மக்களின் சொந்த கருத்துக்களின் மதிப்பீட்டின் அடிப்படையிலும், பொருளாதார மற்றும் சமூகத் தரவுகளின் அடிப்படையிலும் அமைந்துள்ளது.

“இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் டொலர் கடன் – நிபந்தனைகள் ஒன்றுமேயில்லை.” – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ

இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் டொலர் கடனை மூன்று வருடங்களின் பின்னர் தவணை முறையில் திருப்பிச் செலுத்த வேண்டுமே தவிர எவ்வித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் நேற்று நாடு திரும்பியதை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையின் அண்டை நாடான இந்தியா இந்த நடவடிக்கையின் மூலம் இலங்கைக்கு துணை நிற்கிறது என்பதை நிரூபித்துள்ளது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இயற்கை விவசாயம் மற்றும் அதில் ஜனாதிபதி காட்டிய அக்கறை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்ததாகவும், இந்தியாவில் நானோ உரத் தட்டுப்பாடு நிலவினாலும், இலங்கைக்கு தேவையான அளவு வழங்க ஒப்புக்கொண்டதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வணிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தற்போதைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்.

இந்தியா ஏற்கனவே 400 மில்லியன் டொலர் கடனும், பெட்ரோல் வாங்க 500 மில்லியன் டொலர் கடனும், ஆசிய கிளியரிங் யூனியன் மூலம் 500 மில்லியன் டொலர்களும் வழங்கியுள்ளது.

அதன்படி, தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இதுவரை மொத்தம் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்கள் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புடினை மனநலம் பாதிக்கப்பட்டவர் என விமர்சித்த மொடல் அழகி சடலமாக மீட்பு – கைதான காதலன் !

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சைக்கோ என விமர்சனம் செய்த ரஷ்ய நாட்டு மொடல் அழகி ஒருவர்  சூட்கேஸில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவை சேர்ந்தவர் கிரேட்டா வெட்லர் (23). இவர் மாடலிங் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை மனநலம் பாதிக்கப்பட்டவர் என தனது சமூகவலைதள பக்கத்தில் விமர்சனம் செய்திருந்தார்.

இதுகுறித்து அவர் தனது போஸ்ட்டில் கூறுகையில் சிறுவயதில் புடின் நிறைய அவமானங்களை சந்தித்துள்ளார். அவரது உடல் வாகினால் அந்த அவமானங்களை அவரால் எதிர்கொள்ள முடியவில்லை.

இதனால் அவர் சட்ட பள்ளியிலிருந்து வெளியேறி தேசிய பாதுகாப்பு முகாமை (கேஜிபி)யில் இணைந்தார். அத்தகைய குழந்தைகள் சிறுவயதிலிருந்தே அச்சம், பயம், சப்தம், அன்னியர்கள், இருட்டுக்கு பயப்படுவார்கள். எனவே எச்சரிக்கை, கட்டுப்பாட்டு மற்றும் தொடர்பு இல்லாமை போன்ற குணநலன்கள் அவர்களிடம் இருக்கும்.

அந்த வகையில் புடினுக்கு மனநோய் காணப்படுவதாக என்னால் யூகிக்க முடிகிறது என பதிவு வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த பதிவு போட்டு ஒரு மாதம் கழித்து ரஷ்ய அழகி கிரேட்டாவை காணவில்லை. இதுகுறித்து அவரது நண்பர் இவ்ஜெனி பாஸ்டர் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீஸார் தேடிய நிலையில்தான் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் கிரெட்டாவின் முன்னாள் காதலர் டிமிட்ரி கொரோவின் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் “நான்தான் கிரெட்டாவை கழுத்தை நெரித்து கொன்றேன். பின்னர் அவளது சடலத்தை பெட்டிக்குள் அடைத்து வைத்தேன்” என ஒப்புக் கொண்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிரேட்டா இறந்தது தெரியக் கூடாது என்பதற்காக அவரது சமூகவலைதள பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்ததாகவும் டிமிட்ரி வாக்கு மூலம் அளித்துள்ளார். டிமிட்ரியை கைது செய்து சிறையில் அடைத்த ரஷ்ய போலீஸார் அவரிடம் அதிரடி விசாரணையை நடத்தி வருகிறார்கள்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் யாழ். விஜயம் – எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் போராட்டம் !

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் யாழ். விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (சனிக்கிழமை) காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு, அரசியல் கைதிகளை விடுதலை செய் என கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிய சர்வதேச விசாரணை வேண்டும், இனப் படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும், கந்தரோடையில் புத்தர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டாதே, நாவற்குழி சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்து போன்ற பல்வேறு கோஷங்களும் எழுப்பப்பட்டது.

இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சுகாஸ் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்

வீட்டில் கஞ்சா வளர்த்த பெண் – சுற்றி வளைத்த பொலிஸ் !

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பால்சேனையில் உள்ள வீடு ஒன்றில் கஞ்சா செடி வளர்த்து வந்த பெண் ஒருவரை நேற்று (18) மாலை கைது செய்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த வீட்டை சம்பவ தினமான நேற்று மாலை பொலிசார் முற்றுகையிட்டனர். இதன் போது வீட்டில் வளர்த்து வந்த 5 அடி உயரமன கஞ்சா செடியை மீட்டதுடன் பெண் ஒருவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.