26

26

“தமிழ் அல்லது முஸ்லிம் மக்களின் ஆதரவில்லாமலேயே வெற்றி பெறலாம் என்பதை சிங்களமக்கள் உணர்த்தியுள்ளனர்.” – இலங்கையின் அரச தலைவர்

‘ஜனாதிபதித் தேர்தலின் போது தனக்கு சிங்கள மக்கள் மட்டும் வாக்களித்துள்ளனர் என்றும் தமிழ் அல்லது முஸ்லிம் வாக்கில்லாமல் வெற்றிபெற முடியாது என்பதை இவர்கள் மாற்றியுள்ளனர்.” என என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர்,

கடந்த அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வையற்ற தீர்மானங்களே தற்போது எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணம்.  தனது தவறு காரணமாகவோ அல்லது தற்போதைய அரசாங்கத்தின் நிதி முகாமைத்துவம் இன்மை காரணமாகவோ பிரச்சினைகள் எழவில்லை.

தற்போதுள்ள சூழ்நிலையில் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம், எதிர்க்கட்சி மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

ஆகவே இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் பொறுப்பற்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.  2015 ஆம் ஆண்டு தவறாக வழிநடத்தப்பட்டதன் விளைவுகளை பொதுமக்கள் மறந்துவிடக் கூடாது.

இதேவேளை ஜனாதிபதித் தேர்தலின் போது தனக்கு சிங்கள மக்கள் மட்டும் வாக்களித்துள்ளனர். தமிழ் அல்லது முஸ்லிம் வாக்கில்லாமல் வெற்றிபெற முடியாது என்பதை இவர்கள் மாற்றியுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலின் போது பெரும்பான்மையான சிங்களப் பிரஜைகள் தமக்கு வாக்களித்தனர் என்பது அனைவரும் அறிந்ததே என ஜனாதிபதி தெரிவித்தார்.

“பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் வரையில் எமது போராட்டத்தைக் கொண்டு செல்வோம்.” – சுமந்திரன் திட்டவட்டம் !

“பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் வரையில் எமது போராட்டத்தைக் கொண்டு செல்வோம்.” என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

 

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ச்சியாக முன்வைத்து நாடு பூராகவும் அதற்கான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

ஆரம்பத்தில் இருந்தே தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட இந்தச் சட்டமானது இன்று நாட்டில் சகல மக்களுக்கும் எதிராகப் பயன்படுத்தப்படும் நிலைமையே உருவாகியுள்ளது. ஆகவே, இன, மத, பேதம் இன்றி பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையைச் சகலரும் முன்வைத்து வருகின்றனர்.

ஏற்கனவே முன்னைய ஆட்சியில் இந்தச் சட்டத்தை நீக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு அதற்குப் பொது இணக்கம் காணப்பட்ட போதலும் 2018ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற அரசியல் குழப்பங்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவங்களுக்குப் பின்னர் நாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.

எனினும், இன்று நிலைமைகள் சுமுகமாக உள்ள காரணத்தால் இதனை நாம் வலியுறுத்த வேண்டியுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சர்வதேச நாடுகளும், அமைப்புகளும் தொடர்ச்சியாக வலியுறுத்திக்கொண்டுள்ளன. இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையிலும் இந்த விடயங்கள் வலியுறுத்தப்படும். இப்போது நாம் முன்னெடுத்துள்ள போராட்டமும் இறுதி வரையில் கொண்டுசெல்லப்படும். பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் வரையில் எமது போராட்டத்தைக் கொண்டு செல்வோம்” – என்றார்

“ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கும் அளவிற்கு நாங்கள் பொருளாதாரத்தில் பலமானவர்களில்லை.” – இலங்கை அரசாங்கம் அறிவிப்பு !

உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடர்பான தரவுகளை இலங்கை தற்போது ஆராய்ந்து வருவதாகவும் எந்தவொரு நாட்டின் சார்பாகவும் கருத்து தெரிவிக்க முடியாது எனவும் வெளிவிவகார செயலாளர் பேராசிரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அளவுக்கு பலமான பொருளாதாரம் இலங்கையிடம் இல்லை என்று கூறிய அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கடியை இலங்கை இன்னும் கவனித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இலங்கையால் எந்தவொரு நாட்டிற்காகவும் பேச முடியாது எனவும், ஒவ்வொரு நாட்டுக்கும் தமது நடவடிக்கைகளுக்கு ஒரு காரணம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு நாடாக பிரச்சினைகளை பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும், போரினால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என இலங்கை நம்புவதாகவும் அவர் கூறினார். தற்போது உக்ரைனில் தங்கியுள்ள மக்களையும் மாணவர்களையும் அழைத்து வர துருக்கித் தூதரகம் மூலம் உக்ரைனுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.

இந்தக் குழுவுக்கு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பு உக்ரைனுக்கு இருப்பதாகவும், உக்ரைனில் இருந்து இலங்கைக்கு திரும்ப விரும்பும் இலங்கையர்களை திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எனினும், இந்த நெருக்கடியானது உக்ரேனுக்கான இலங்கையின் தேயிலை ஏற்று மதிக்கு இடையூறு விளைவிக்கும் என்றும், ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்க்கு அதிக கட்டணம் செலுத்த நேரிடும் என்றும், உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறையும் என்றும் அவர் கூறினார்.

ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடை – இலங்கையை நேரடியாக பாதிக்கும் அபாயம் !

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் ரஷ்யா மீது விதித்துள்ள தடைகளால் இலங்கை நேரடியாக பாதிக்கப்படும் என நிதி ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இலங்கையின் முன்னணி தேயிலை இறக்குமதி யாளர்களில் ஒன்றான ரஷ்யாவுடனான ஒப்பந்தங்களில் இது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதனால் தேயிலை ஏற்றுமதிக்கு பணம் கிடைப் பதில் சிக்கல் ஏற்படும் என்றும், ஐரோப் பிய நாடுகள் ரஷ்ய வங்கி அமைப்புடன் தனித்தனி யாக கொடுக்கல் வாங்கல் செய்தால் இலங்கைக்கு எதிர்மறையான அணுகுமுறையே ஏற்படும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

மேலும், அண்மைக் காலமாக இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யா, உக்ரைன் மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து வந்துள்ளனர். அந்தத் தொகை அண்ணளவாக 30% ஆகும். யுத்த சூழ்நிலையால் எண்ணிக்கை குறைவது தவிர்க்க முடியாததாகி விடும்.

தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர் அரசியல் கைதிகள் !

யாழ்ப்பாண சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துவந்த அரசியல் கைதிகள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

குறித்த அரசியல் கைதிகளை இன்று சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டதன் பின்னர் அவர்களது உறவினர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்த அரசியல் கைதிகளின் உறவினர்களை நேற்று பிற்பகல் ஆளுநர் சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது போராட்டத்தை முன்னெடுத்திருந்த அரசியல் கைதிகளுடன் கதைப்பதற்கு சந்தர்ப்பம் பெற்றுத்தருவதாக ஆளுநர் தெரிவித்துள்ளதாக அரசியல் கைதிகளின் உறவினர்கள் தெரிவித்தனர்.

அதற்கமைவாக இன்று காலை சிலைச்சாலைக்கு சென்ற அரசியல் கைதிகளின் உறவினர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்த அரசியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.