February

February

“மீனவர் பிரச்சினையில் அவன் செத்தாலும் இவன் செத்தாலும் தமிழர்கள் என்ற நிலமை தான் இருக்கிறது.” – எம்.கே.சிவாஜிலிங்கம்

எல்லை தாண்டும் இந்திய மீனவர்களால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வு காண்பதற்கு தமிழ்நாடு வருமாறு தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் பொது செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நேற்று சுப்பர்மடம் பகுதியில் மீனவரகள் போராட்டத்தில் கலந்து கொண்டபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

அண்மைக் காலமாக வட பகுதி கடலிலே எங்களுடைய கடற்றொழிலாளர்கள் தங்களுடைய இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான கடற்றொழில் உபகரணங்களை மாத்திரமல்ல தங்களுடைய இன்னுயிர்களையும் திறக்கின்ற நிலமை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்தியாவிலிருந்து எல்லை தாண்டி வருகின்ற ரோளர் பாரிய இழுவை மடி படகுகள் மோதி பாரிய சேதம் ஏற்பட்டுருக்கிறது.

இதே போல இலங்கை கடற்படையினரது படகுகளாலும் வேண்டுமென்றும் விபத்தினாலும் கொல்லப்பட்டு கரை ஒதுங்குகின்ற கடற்றொழிலாளர்களது சடலங்களால் ஒரு பதட்டமான சூழல் அதிகரித்திருக்கிறது.

வடமராட்சி மருதங்கேணி வத்திராயன் பகுதியில் இரண்டு கடற்றொழிலாளர்களது உடல்கள் கரை ஒதுங்கியிருக்கின்றன. இதே போன்று பருத்தித்துறை பொன்னாலை வீதியிலே சுப்பர்மடம் பகுதியிலே வீதியை மறித்து நேற்று முன்தினம் காலை 8:00 மணியிலிருந்து அவர்கள் மறியல் போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கின்றனர்.

பொலிகண்டி வரை வீதி போக்குவரத்து முடக்கப்பட்டிருக்கிறது. இலங்கை அரசாங்கம் இதை பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கை இந்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈழ மீனவர்களும், தமிழக மீனவர்களும், நடுக்கடலிலே மோதுவதை இல்லாமல் செய்ய வேண்டும்.

தமிழக அரசும் வட மாகாணத்திலே இருக்கக் கூடிய சங்கங்கள், உட்பட மக்கள் பிரதிநிதிகளும் பேச வேண்டும். இப்பொழுது கூட இரண்டு தினங்களுக்கு முன்னர் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உடனடியாக பேச்சுவார்த்தை நடாத்தி இந்தமாதிரியான பதட்டங்களை குறைக்க முன்வருமாறு கேட்டிருப்பதாக எனக்கு செய்தி அனுப்பியிருக்கிறார்கள்.

இப்பொழுது கூட அவரது உதவியாளர் வழக்கறிஞர் ராதா கிருஷ்ணன் அவர்கள் இன்றிரவு தமிழக முதலமைச்சருடன் பேசிவிட்டு செய்தி தருவதாக சொல்லியிருக்கிறார்.  உடனடியாக ஒரு போர் நிறுத்தம் போல அந்த எல்லையில் இருப்பவர்கள் எல்லை தாண்டக் கூடாது. இல்லாவிட்டால் எங்களுடைய மக்கள் பட்டிணியாலும் பசியாலும் தான் பாதிக்கப்படுவார்கள். மீதி விடயங்களை பேசி ஒரு இணக்கத்தின் அடிப்படையில் தீர்வு காணப்ட வேண்டும். இலங்கை அரசு இதில் அக்கறை காட்டும் என நாங்கள் எதிர்பார்க்க முடியாது. இந்திய மத்திய அரசுக்கும் ஏனோ தானோ நிலவரம்தான். இதிலே அவன் செத்தாலும் இவன் செத்தாலும் தமிழர்கள் என்ற நிலமை இருக்கிறது.

அவர்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் இருக்கிறார்கள். பொருளாதாரத்தில் பலமாக இருக்கிறார்கள். தற்போது விலை வாசி அதிகரித்திருக்கும் நிலையில் பனையால் விழுந்தவனை யானை மிரிப்பதாக உள்ளதாகவும் உடனடியாக இந்த பிரச்சினை தீர்க்க வேண்டும். அதற்க்கான முழு முயற்சிகளை உடனடியாக எடுப்போம் என்றார்

“தமிழ் பேசும் மக்களின் சார்பாக தலையிடுவதற்கு இந்தியாவுக்கு சட்டரீதியான உரிமை உண்டு.” – சி.வி. விக்கினேஸ்வரன்

“வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் சார்பாக தலையிடுவதற்கு இந்தியாவுக்கு சட்டரீதியான உரிமையும் தார்மீகக் கடப்பாடும் உள்ளது.” வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் யாழ் மாவட்ட எம். பி யுமான சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார் .

ஏழு தமிழ் கட்சிகளின் கடிதம் ஸ்ரீ மோடிக்கு அனுப்பப்பட்டதற்கும் உத்தேச புதிய அரசியலமைப்புக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதாவென அவரிடம் எழுப்பப்பட்டிருந்த கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் இதனை தெரிவித்திருக்கும் அவர், இது தொடர்பில்  மேலும் கூறியிருப்பதாவது,

அநேகமாக ஆம். வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் பேசும் மக்கள்தொடர்பாக புதிய அரசியலமைப்பில் பயனுள்ள மாற்றங்களை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. 1972 மற்றும் 1978 இன்இரண்டு முன்னைய அரசியலமைப்புகள் மீதான விவாதத்தை தமிழ் பாராளு மன்ற உறுப்பினர்களால் உத்தியோகபூர்வமாக எதிர்க்கவும் புறக்கணிக்கவும் மட்டுமே முடிந்தது. வடக்கு ,கிழக்கு தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காத அரசியலமைப்பை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதிலிருந்து தடுக்கக்கூடியதாக எதுவும் சாத்தியமற்றதாகவிருந்தது.

இம்முறையும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கம் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காமல் அவர்களின் நலன்களுக்கு விரோதமான அரசியலமைப்பை கொண்டுவரும். 1978 ஒற்றையாட்சிஅரசியலமைப்பு இன்று தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கும் ஒரேயொரு வலுக் குறைந்த நன்மை பதின்மூன்றாவது திருத்தமாகும்.

1987 ஆம் ஆண்டு மாகாண சபை முறையை அறிமுகப்படுத்தி வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் நன்மைகளை வழங்குவதற்கு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்ற போதிலும், அதனை அமுல்படுத்தும் போது ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா நாடளாவிய ரீதியில் மாகாணசபை முறைமையை பிரயோகிப்பதை தேர்ந்தெடுத்தார். இப்போது அவர்கள் மாகாண சபைகளை வெள்ளை யானை என்று குறிப்பிடுகிறார்கள். சிங்களவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அவ்வாறு இருக்ககூடும்.

ஆனால் இலங்கை பூராகவும் உள்ள வடக்கு, கிழக்கு தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் பார்வையில் அவர்களின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் மாகாணசபை மட்டுமே உறுதியான சட்டரீதியான நிறுவனமாக உள்ளது.

வடக்கு – கிழக்கு தமிழர்களின் பார்வையில் மாகாணசபை முறைமை எடுத்துவிட்டால் இந்த நாட்டில் நாம் மற்றொரு சிறுபான்மை இனமாக மாறிவிடுவோம். உண்மையில் வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையாக உள்ளனர். ஏழு மாகாணங்களிலுமுள்ள பெரும்பான்மையினர் இரண்டு மாகாணங்களிலுமுள்ள பெரும்பான்மையினரை முழு தீவு முழுவதும் சிறுபான்மையினராக மாற்ற முடிந்தது.

தமிழர்கள் 3000 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளனர். ஒரு பழமையான மொழியைப் பேசுகிறார்கள், தீர்க்கமான தாயகங்களைக் கொண்டுள்ளனர், பெரும்பான்மையான சிங்களவர்களிடமிருந்து வேறுபட்ட மதங்களையும் கலாசாரங்களையும் பின்பற்றுகிறார்கள். சர்வதேச உடன்படிக்கைகளின் அடிப்படையில் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு முழுமையான அதிகாரப்பகிர்வை வழங்காமல், ஒற்றையாட்சி அரசியலமைப்பிலிருந்து பதின்மூன்றாவது திருத்தத்தை நீக்கினால், எங்களுடையது என்று அழைக்கக்கூடிய எந்த வொரு உறுதியான சட்டரீதியான நிறுவனமும் இல்லாமல் நாங்கள்நிராதரவாகிவிடுவோம் .

நாங்கள் அறிமுகப்படுத்த முயற்சித்திருந்த பிரயோசனமான பொருளாதாரத் திட்டங்களை அரசாங்கம் அதனது தரப்பில் தடுத்து ஊறுவிளைவித்தபோதும் வடமாகாண முதலமைச்சர் என்ற ரீதியில் வடக்கில் மாசுபடுத்தும் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு விரும்பத்தகாத சக்திகள் மேற்கொண்ட முயற்சிகளை என்னால் தடுக்க முடிந்தது.

வடக்கு, கிழக்கு மக்களைப் பொறுத்த வரையில் மாகாணசபை வலுக்குறைந்ததாகவும் வினைத்திறனற்றதாகவும் இருந்த போதிலும், ஏனைய இடங்களில் பெரும்பான்மை சிங்களம் பேசும் இடங்கள் என்பதற்கு மாறாக தமிழ் பேசுபவர்கள் என்ற சட்டரீதியான அங்கீகாரத்தை வடக்கு கிழக்கு மக்களுக்குஇப்போதும் வழங்குகின்றது. மாகாணசபையை அகற்றினால் வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்களை இலகுவில் சிறுபான்மையினராக முழு நாட்டிலும் கட்டுப்படுத்த முடியும். ஒரு நாடு ஒரே சட்டம் என்ற கருத்தீடானது புதிய அரசியலமைப்பில் மாகாண சபைகளை கைவிடுவதை கற்பனைசெய்து பார்க்கக்கூடியதொரு முன்னோடியாக இருக்கின்றது.

மாகாண சபை முறைமையை நீக்குவதை புதிய அரசியலமைப்பு வரைபின் உள்ளடக்கம்கொண்டிருக்கின்றது என்று சிங்கள பத்திரிகையில் வெளிவந்திருந்ததை அமைச்சர்கள் இப்போது மறுத்து வருகின்ற போதிலும், நாங்கள் ஸ்ரீ மோடிக்கு எமது கடிதத்தை அனுப்பிய போது இதனை முன்னரேயே எதிர்வுகூறியிருந்தோம்.  புதிய அரசியலமைப்பின் முழு நோக்கமும் பதின்மூன்றாவது திருத்தத்தை நீக்கி, இலங்கை விவகாரங்களில் இந்தியா குரல் கொடுப்பதைத் தடுப்பதாகும். இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் போது இந்தியா இலங்கைக்கு உதவவில்லை என்றால், கொழும்பில் அரசுக்கு பாதகமான எதுவும் நடந்திருக்கும்.

அந்த நேரத்தில் இலங்கைக்கு இந்தியாவிடம் உதவி கேட்பதைத் தவிர வேறு வழியில்லை (இப்போது சீனாவின் நோக்கத்தைப் புரிந்து கொண்டது போல). இந்தியா தனது பங்கிற்கு தமிழர்கள் சார்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தமிழர்களின் பிரதிநிதிகளோ அல்லது புலிகளின் தலைவர்களோ இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. எனவே, இலங்கை அரசாங்கம் நாடளாவிய ரீதியில் சிங்கள பௌத்த பெரும்பான்மை அரசாங்கத்தை உருவாக்க முயற்சிக்கும் போது வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் சார்பாக தலையிடுவதற்கு இந்தியாவுக்கு சட்டரீதியான உரிமையும் தார்மீகக் கடப்பாடும் உள்ளது.

பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு கோரியமை , அது தமிழர்களாகிய எமக்கு போதுமான அதிகாரங்களை வழங்கியதற்காக அல்ல, மாறாக அது அகற்றப்பட்டால் நாம் முற்றிலும் சக்தியற்றவர்களாகிவிடுவோம் என்பதற்காகவே . வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு பாதகமாக இடம்பெறும் எந்தவொரு விடயத்தையும் கேள்விக்குட்படுத்தும் வகையில் மாகாண சபை முறைமையை அறிமுகப்படுத்திய பூர்வாங்க கலந்துரையாடல்களில்பங்கேற்றவராக இப்போதுஇந்தியாவை நாம் கொண்டிருக்கிறோம். வடக்கு , கிழக்கைப் பொறுத்த வரையில் இலங்கை அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக மாகாண சபைகளை நீக்க முடியாது. பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு கோருவதன் மூலம் எமது இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை நாங்கள் தேடவில்லை. நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை மாகாண சபைகளை வைத்திருக்க முயல்கிறோம். நாங்கள் கருதும் நிரந்தரத் தீர்வு கூட்டு சம்மேளனமேதவிர , குறைவானத்து அல்ல.

இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சர்வதேச சமூகத்திற்கும் தார்மீகக் கடமை உள்ளது. இலங்கையின் பழங்குடி மக்கள் அடக்குமுறைக்குட்படுத்தப் படுத்தப்படும்போதும், பாரபட்சம் காட்டப்படும்போதும் அலட்சியமாக இருக்க முடியாது. பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்திருப்பது அரசாங்கத்தின் திட்டங்களை குறிக்கின்றது.

இத்தகைய சூழ்நிலையில், ஒரே நாடு ஒரே சட்டம் என்ற முழக்கத்தின் கீழ் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்றதான சிங்கள பௌத்த அரசாங்கத்தை அமைப்பதற்காக புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கான இலங்கை அரசாங்கத்தின் இரகசிய நோக்கங்களை சுட்டிக்காட்டும் வகையில் ஸ்ரீ மோடிக்கு கடிதம் அனுப்பத் தீர்மானித்தோம்.” என அவர் பதிலளித்துள்ளார்.

இறுதியுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட கள்ளச்சந்தை டொலர் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு !

கள்ளச்சந்தையில் பெறப்பட்ட டொலரை பயன்படுத்தி இலங்கை அரசாங்கம் வடகொரியாவிலிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்தது என வெளியான தகவல்களை இலங்கை வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.

நாங்கள் கள்ளச்சந்தையில் பெறப்பட்ட டொலரை பயன்படுத்தி வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை பெற்றோம் – பசில் என்ற தலைப்பில் செய்தி இணையத்தளமொன்றில் வெளியான தகவல் குறித்து தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நிதியமைச்சருடன் இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்- நிதியமைச்சர் தான் தெரிவித்ததாக வெளியான கருத்துக்களை முற்றாக நிராகரித்துள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 27 பேர் விரைவில் விடுதலை – அலி சப்ரி !

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 27 பேர் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் தமிழ் பத்திரிகைகளின் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் என்று சட்டத்தின் அடிப்படையில் எவரும் இல்லையெனவும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களே உள்ளதாகவும் நீதி அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிணை வழங்குவது மற்றும் விடுதலை செய்வது தொடர்பாக ஜனாதிபதிக்கு பரிந்துரை வழங்குவது குறித்து ஆலோசனைக் குழுவொன்றை முன்னாள் பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா தலைமையில் அமைத்துள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் குறித்த குழுவிற்கு 44 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விண்ணப்பங்கள் ஆராயப்பட்டதன் பின்னர் 27 பேரை விடுவிப்பதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புலிகளுடனான போரை முடிக்க கள்ளச்சந்தை டொலரை பயன்படுத்தி வடகொரியாவிடமிருந்து ஆயுதங்கள் கொள்வனவு – பஷில்ராஜபக்ஷவின் கருத்தால் பரபரப்பு !

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் தீவிரமாக இடம்பெற்ற காலப்பகுதியில் கள்ளச்சந்தை மூலம் பெறப்பட்ட பணத்தை பயன்படுத்தி இலங்கை வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்தது என நிதியமைச்சர் பஷில்ராஜபக்ஷ தெரிவித்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சண்டே திவயினவிற்கு வழங்கிய பேட்டியில் நிதியமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

கள்ளச்சந்தையில் பெறப்பட்ட பணத்தை பயன்படுத்தி இலங்கை வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை பெற்றது. அக்காலப்பகுதியில் எரிபொருள் கொள்வனவிற்கு செலுத்துவதற்காக கள்ளச்சந்தையில் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் பெற்றது.

யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை எரிபொருள் கப்பல்களிற்கு செலுத்துவதற்கு இலங்கைக்கு டொலர் தேவைப்பட்டது.  அக்காலப்பகுதியில் நானும் அதிகாரிகளும் புறக்கோட்டைக்கு சென்று கள்ளச்சந்தையில் டொலரை பெறுவதற்காக அங்குள்ள வர்த்தகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

நாங்கள் புறக்கோட்டை வர்த்தகர்களை சந்திப்போம் அவ்வாறே நாங்கள் எரிபொருள்களிற்கு கட்டணத்தை செலுத்தினோம்.

இதே நேரம், வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களைபெற்றதை அரசாங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளமை இதுவே முதல்தடவை என சுட்டிக்காட்டியுள்ளஆங்கில செய்தி இணையத்தளமொன்று நிதியமைச்சர் அமெரிக்க அதிகாரிகளினால் விசாரணை செய்யப்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் வடகொரியா பொருளாதார தடைகளில் இருந்துதப்புவதற்காக கிரிப்டோ நாணய மூலம் உதவியதற்காக அமெரிக்க பிரஜையொருவர் விசாரணைகளை எதிர்கொண்டதை ஆங்கில இணையத்தளம்சுட்டிக்காட்டியுள்ளது. அவருக்கு இந்த மாதம்தண்டனை வழங்கப்படவுள்ளது அவருக்கு நீண்டகால சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பெரும் குற்றத்தின் சிறிய பகுதியேஅம்பலமாகியுள்ளது என புலம்பெயர் செயற்பாட்டாளர் ஜன் ஜனநாயகம் தெரிவித்துள்ளார்.  தடைகள் விதிக்கப்பட்ட வடகொரியா ஈரான் போன்ற நாடுகளிடமிருந்து பெறப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தியே தமிழ்மக்கள் மீதான இனப்படுகொலை இடம்பெற்றது என நாங்கள் நீண்டநாட்களாக கருதிவந்துள்ளோம் என டக் எனப்படும் இனப்படுகொலைக்கு எதிரான என அமைப்பின் ஜன் ஜனநாயகம்தெரிவித்துள்ளார்.

இ;வ்வாறு சட்டவிரோதமாக பெறப்பட்ட கொத்துக்குண்டுகள் இரசாயன ஆயுதங்கள் போன்றவை அவற்றின் இலக்காக இருந்த தமிழ்மக்களிற்கு எதிராக ஈவிரக்கமற்ற முறையில் பயன்பட்டன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

200 மில்லியன் ரூபா நிதியில் 5 மில்லியன் நாட்காட்டிகளை அச்சிட்ட வழக்கு – பஷிலுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு .?

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது 200 மில்லியன் ரூபா நிதியைச் செலவிட்டு 5 மில்லியன் நாட்காட்டிகளை அச்சிட்ட சம்பவம் தொடர்பில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து அவர்கள் இருவரும் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்தவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

“ஜனாதிபதிக்கும் அவர் சார்ந்த கூட்டத்துக்கும் அறிவேயில்லை.” – இரா.சாணக்கியன்

“இன்று இந்த நாட்டிலே ஜனாதிபதிக்கும் அறிவில்லை, நிதியமைச்சருக்கும் அறிவில்லை, அவர்களின் பிரதிநிதிகளாக எமது மாவட்டத்தில் இருப்பவர்களுக்கு அறிவில்லை என்ற நிலைமையே இருக்கின்றது.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று இந்த நாட்டிலே ஜனாதிபதிக்கும் அறிவில்லை, நிதியமைச்சருக்கும் அறிவில்லை, அவர்களின் பிரதிநிதிகளாக எமது மாவட்டத்தில் இருப்பவர்களுக்கு அறிவில்லை என்ற நிலைமையே இருக்கின்றது இன்று மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் என்று சொல்லி ஒரு கூட்டம் இங்கு இடம்பெற்றது. மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் எதுவும் இக்கூட்டத்தில் ஆராயப்படவில்லை. அதற்குக் காரணமாக நிதி இல்லை என்று சொல்லப்படுகின்றது.

அண்மையில் கௌரவ நீதியமைச்சர் வடக்கிற்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தார். இதில் காணாமல் போனவர்களின் விடயம் தொடர்பில் ஆராய்ந்துள்ளதாகவும் சொல்லப்படுகின்றது. உண்மையில் இந்த உறவுகள் காணாமல் போனவர்கள் அல்ல அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்பதை அவர் மறந்துவிடக் கூடாது. காணாமல் போனவர்களுக்கு ஒரு லட்சம் ரூபா வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். இந்த ஒரு லட்சம் ரூபாய்க்காக தாய்மார் இன்று வரை வீதியில் போராடவில்லை என்பதையும் அவர் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அத்துடன் நேற்றைய செய்தியில் பார்த்திருந்தேன் கௌரவ நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் தாங்கள் வடகொறியாவில் இருந்து கறுப்பு டொலர்களைப் பயன்படுத்தி யுத்தத்திற்கு ஆயுதங்கள் பெற்றுள்ளதாகத் தெரிவித்திருந்தார். ஒரு நாட்டின் நிதி அமைச்சர் அவர்கள் எவ்வாறு இவ்வாறானதொரு கருத்தைச் சொல்ல முடியும்.

பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ஒருநாட்டில் கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தி ஆயுதம் வாங்கி இந்த யுத்தத்தை நடாத்தியதாகச் சொல்லுகின்றார்கள். இனிவரும் காலங்களில் இன்னும் இன்னும் எத்தனை உண்மைகளை நாங்கள் அறியக் கூடியதாக இருக்குமோ தெரியவில்லை.

நீதி அமைச்சர் சொல்லுகின்றார் காணாமல் போனாருக்கு நட்டஈடு கொடுப்பதாக, அதே நேரத்தில் நிதி அமைச்சர் வடகொறியாவில் இருந்து கறுப்பு டொலர் மூலம் ஆயுதம் வாங்கியதாகச் சொல்லுகின்றார். இந்த கருத்தைக் கொண்டு கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தியமை தொடர்பில் அவரை முதலில் விசாரணை செய்ய வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகள் இதனைக் கவனிக்க வேண்டும்.

தொடர்ந்தும் இந்த அரசாங்கம் இவ்வாறு ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற விடயங்களை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். எமது மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் சொன்னார் பொங்கலுக்குப் பிறகு எமது மாவட்டத்தில் பல மில்லியனர்கள் உருவாகுவார்கள் என்று. ஆனால் இன்று மாவட்டத்தில் உருவான ஒரு மில்லினர் கூட இல்லை. இன்று மாவட்ட விவசாயிகள் எல்லாம் மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இன்று இந்தக் கூட்டத்தில் கூட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதைக் கூட நாங்களே முன்வைக்க வேண்டி இருக்கின்றது.

அதே நேரத்தில் இன்று ஒமிக்கறோன் மட்டக்களப்பில் அதிகமாக இருக்கும் என்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அப்படியான ஒரு நேரத்தில் அவசரமாக இந்தக் கூட்டம் எதற்காக? இன்று முக்கியமானவர்கள் பலரை இந்தக் கூட்டத்திற்கு அழைக்கவும் இல்லை.

வழமையாகப் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் நடைபெற்று அதில் தீர்மானிக்கும் விடயங்களை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கொண்டு வருவதுதான் வழமை. ஆனால் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று நடந்திருக்கின்றது. பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் நாளையும் இனிவரும் காலங்களிலும் நடக்க இருக்கின்றன. இவ்வாறானதொரு குழப்ப நிலை இந்த மாவட்டத்தில் இருக்கின்றது.

கூட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாங்கள் கதைக்க வேண்டும் என்றால் கையை உயர்த்திக் கதைக்க வேண்டுமாம். இது சந்திரகாந்தன் அவர்களின் பிறந்தநாள் விழா அல்ல நாங்கள் கையை உயர்த்திவிட்டுக் கதைப்பதற்கு.

இன்று இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பல விடயங்களுக்குத் தீர்வுகளைத் தருவதாகச் சொல்லியிருந்தார். விசேடமாக ஐ புரொஜக்ட் நிதியினை வைத்திருக்கும் நபரிடமிருந்து அந்த நிதியை மீள எடுத்து அந்தத் திட்டத்திற்கு வழங்குவதற்கான அனுமதியை அவர் வழங்கியிருந்தார். அதேவேளை கெவிலியாமடுவில் இடம்பெறும் சட்டவிரோத குடியேற்றங்களைத் தடுப்பது தொடர்பில் ஆராய்வதற்கு நாங்கள் விலியுறுத்தயிருந்தோம். அம்பிட்டிய சுமணரத்தின தேரர் எமது பண்ணையாளர்களின் மாடுகளை வலுக்கட்டாயமாகப் பறித்தமை தொடர்பிலும் நாங்கள் தெரியப்படுத்தியிருந்தோம். ” எனத்தெரிவித்தார்.

மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை இந்த முறை கடுமையானதாக இருக்குமாம் – கஜேந்திரகுமார் கருத்து !

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை இந்த முறை கடுமையானதாக இருக்கும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்குச் சென்றுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கருடனான நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசிய கட்சிகளின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பிலும் அவருக்கு விளக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அதிக வருமானம் ஈட்டுவோருக்கு மேலதிக வரி – அங்கீகாரம் வழங்கியது அமைச்சரவை !

2000 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் ஈட்டும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு மேலதிக வரி விதிக்கும் சட்டமூலம் ஒன்றினை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க அனுமதி கோரி நிதி அமைச்சரினால் அமைச்சரவை பாத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் இன்று (01) காலை வழங்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் இன்று தெரிவித்தார்.

சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.