29

29

“உயர் கல்வியில் அதிக முக்கியம் பெறும் ஆங்கிலத்தால் சுதேசிய மொழிகளுக்கு அச்சுறுத்தல்.” – அமைச்சர் வாசுதேவ

பல உயர் கல்வி பாடநெறிகள் மற்றும் விசேட பட்டப்படிப்புகள் முழுமையாக தற்காலத்தில் ஆங்கிலத்தில் மாத்திரமே இருப்பது இலங்கையின் உரிமையையும் நாட்டின் அடையாளத்தை பாதுகாக்கும் தேசிய மொழிகளுக்கும் அச்சுறுத்தல் என தெரிவித்துள்ள அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இதனால், உயர் கல்வியை ஆங்கில மொழியில் மாத்திரம் வரையறுக்கப்பட கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.

கலாநிதி ஈ.எம்.ரத்னபால எழுதிய நூலை வெளியிட்டு வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். அங்கு மேலம் பேசிய அவர்,

சர்வதேச நுழைவுகளுக்கு ஆங்கில மொழி அவசியம் என்பதை ஏற்றுக்கொண்டாலும் அனைத்து விடயங்கள் காரணமாக எமது மொழிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உயிர் மொழியாக எமது மொழிகளை பாதுகாக்க வேண்டும். எமது மொழிகளான சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளை புறந்தள்ளி விட்டு, மற்றுமொரு மொழியை அடிப்படையாக கொண்டு மாத்திரம் செயற்படுவதன் மூலம் எமது மொழிகள் அழிவுக்கு உள்ளாகும்.

ஆபிரிக்காவில் சில பிரதான மொழிகளுக்கு ஏற்பட்ட தலைவிதியை சிங்கள மொழியும் அனுபவிக்க நேரிடும். உலகில் பல நாடுகள் உயர் கல்வியை வழங்கும் போது தமது மொழியின் அடையாளங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்படுவது போல் இலங்கையும் உயர் கல்வியை வடிவமைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

ஹோண்டுராஸின் முதல் பெண் ஜனாதிபதியாக பதவியேற்கிறார் சியோமாரா காஸ்ட்ரோ !

லத்தீன் அமெரிக்க நாடான ஹோண்டுராஸின், முதல் பெண் ஜனாதிபதியாக சியோமாரா காஸ்ட்ரோ பதவியேற்றுள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பதவியேற்பு விழாவில், அமெரிக்க துணை ஜனாதிபதி ; கமலா ஹாரிஸ் பங்கேற்றார்.

ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் உரையாற்றிய காஸ்ட்ரோ, நாட்டின் கடன் சுமையை சரிசெய்வதாக உறுதிமொழி அளித்தார். அத்துடன், சமூக நீதி மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பின்பற்றுவதாக உறுதியளித்தார்.

62 வயதான காஸ்ட்ரோ, சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சமாளித்து, கடுமையான கருக்கலைப்புச் சட்டங்களை தாராளமாக்குவதாக உறுதியளித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளின் படி, சியோமாரா காஸ்ட்ரோ 53 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றிப்பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டெகுசிகல்பா மேயர் நஸ்ரி அஸ்ஃபுரா, 34 சதவீத வாக்குகளைப் பெற்றார்.

இதன் மூலம் 12 ஆண்டுகளுக்கு பின்னர் ஹோண்டுராஸில் இடது சாரி கட்சி ஆட்சியை பிடித்தது. மேலும் இந்த வெற்றியின் மூலம் ஹோண்டுராஸின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையையும் சியோமாரா காஸ்ட்ரோ பெற்றுள்ளார்.

சியோமாரா காஸ்ட்ரோ, முன்னாள் ஜனாதிபதி மானுவல் ஜெலயாவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

காஸ்ட்ரோவின் கணவர மானுவல் ஜெலயா, 2006 முதல் 2009 வரை நாட்டை ஆட்சி செய்தார்,. அவர் சதிப்புரட்சி மூலம் வெளியேற்றப்பட்டார். கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பு, அவர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு முறை பதவிக்கு போட்டியிட்டார்.

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு தயாராகும் ரணில் தரப்பு !

சிறிலங்கா சுதந்திரக் கட்சி உட்பட ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராக உள்ளது என அக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

கண்டி மல்வத்தை மகா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கும், தேசிய கொள்கையொன்றை தயாரிப்பதற்கும் ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருகிறது. இதனால் ஏனைய கட்சிகளுடன் பரந்த அடிப்படையிலான பேச்சுவார்த்தையை நடத்த நாம் தயாராக உள்ளோம்.

நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்கும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சி தனது கொள்கை அறிக்கையை தயாரிப்பதில் கவனம் செலுத்தும். இது குறித்து ஏனைய கட்சிகளினதும் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும், ஏனெனில் ஆளும் தரப்பினர் தமது பங்காளிக் கட்சியை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்” என அவர் மேலும் கூறினார்.

இலங்கையில் 3, 1/2 கோடி பேருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளது !

இதுவரை இலங்கையில் 35,634,497 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதன்படி சைனோபார்ம் – 23,029,353 பேருக்கும், ஃபைசர் – 7,798,598 பேருக்கும், மொடர்னா – 1,592,162 பேருக்கும், அஸ்ட்ரா செனிகா 2,899,460 பேருக்கும், ஸ்புட்னிக் V – 314,924 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி ஏற்றும் பணி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்க இங்கிலாந்து தீர்மானம் !

நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்க்கக்கூடாது என்கிற ரஷ்யாவின் கோரிக்கையை மேற்கத்திய நாடுகள் நிராகரித்ததை தொடர்ந்து தனது உக்ரைன் நாட்டுடனான எல்லையில் ரஷ்யா பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்களை குவித்துள்ளது. இதனால்  ஐரோப்பிய பகுதியில் போர் பதற்றம் நீடிக்கிறது.அடுத்த மாதம் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்படும் சூழல் காணப்படுகிறது. இந்நிலையில் போர் மூலம் இரத்தம் சிந்துவதை தவிர்க்குமாறு ரஷ்யாவை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளதாவது:
வரும் நாட்களில் ஜோன்சன் இப்பகுதிக்கு விஜயம் செய்ய உள்ளார்.  இந்த வாரம் ரஷ்ய அதிபர் புடினுடன் பேச போரிஸ் ஜோன்சன் திட்டமிட்டுள்ளார். அப்போது ரஷ்யா பின்வாங்கி இராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துவார். ஐரோப்பாவில் இரத்தக்களரியைத் தவிர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கையில் அவர் உறுதியாக இருக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம், அந்நாட்டு பாராளுமன்றத்தில்  அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனது குடியுரிமையை பறிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன – சம்பிக்க ரணவக்க

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தனது குடியுரிமையை பறிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என குற்றம்சாட்டியுள்ளார். விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் தன்னை அழைப்பதன் மூலம் தனது குடியுரிமையை பறிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல்பழிவாங்கல் தொடர்பான ஆணைக்குழுவின் முன்னிலையில் நான் ஆஜராகியுள்ளேன் என தெரிவித்துள்ள அவர் முன்னைய ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காகவே இந்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது எங்களை தண்டித்து எங்களது குடியுரிமைகளை பறிப்பதற்கான நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 95 சதவீதமானவர்கள் ஒமிக்ரோன் !

இலங்கையில் தற்போது பதிவாகும் கொவிட் தொற்றாளர்களில் 95 சதவீதமானவர்கள் ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் பட்டுவந்துட்டாவ இதனை தெரிவித்துள்ளார்.

ஆய்வகங்களில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனைகளில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“அமெரிக்காவில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் எனக்கு அநீதி இழைக்கப்பட்டது.” – புஷ்பிகா டி சில்வா குற்றச்சாட்டு !

அமெரிக்காவில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக அதில் கலந்து கொண்ட புஷ்பிகா டி சில்வா தெரிவித்துள்ளார். அந்த அநீதிகள் இல்லாமல் இருந்திருந்தால் போட்டியில் வென்றிருப்பேன் என்கிறார்.

இதனைக் குறிப்பிட்டு தனது சமூக வலைத்தளக் கணக்கில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.

மனிதர்களாகிய நம் அனைவருக்கும் மேலாக கடவுளும் இயற்கையும் எம்மைச் சோதிக்கும் நேரம் இது. கொரோனா போன்றவற்றின் மூலம் அமைதி, தியாகம், ஒருவருக்கு ஒருவர் உதவுதல் போன்ற நல்ல பண்புகளை வளர்க்க வேண்டும் என்பதை மக்களுக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்ட வேண்டிய தருணம் இது.

அண்மையில் அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடந்த உலக திருமண அழகி போட்டியில் கலந்து கொண்டேன். அங்கு நான் இறுதிச் சுற்று வரை வெற்றிகரமாகப் போட்டியிட்டேன். மேலும் சில தரப்பிலிருந்து அநீதி இழைக்கப்பட்டது. வழக்கம் போல் எனக்கு கிடைக்க வேண்டிய அந்த வெற்றியைப் பறித்த மக்களை மன்னித்து விட்டேன்.

ஆனால் கடவுளின் முடிவை மாற்ற முயற்சித்த ஒரு மனிதனுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இன்று இயற்கை தன் தீர்ப்பை சம்பந்தப்பட்டவர்களுக்குக் கொடுக்க ஆரம்பித்துவிட்டது. நான் கடவுள் பக்தி உள்ளவள். நான் இயற்கைக்கு விசுவாசமானவள். நான் எப்போதும் என் நம்பிக்கைகளில் பாதுகாக்கப்படுகிறேன் என்று நினைக்கிறேன். அது அப்படியே நடக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

 

 

இந்தியாவில் விடுதலைப் புலிகளை மீளுருவாக்க பணம் திரட்டிய குற்றச்சாட்டில் 50 வயது பெண் உட்பட ஐவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் !

விடுதலைப் புலிகளை மீளுருவாக்க பணம் திரட்டியதாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த ஐவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான 50 வயதுடைய லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா என்ற பெண்ணை சென்னையிலும் மற்றொருவரை மதுரையிலும் தமிழ்நாடு ‘கியூ’ பிரிவு பொலிஸார் கைது செய்தனர்.

கடந்த வருடம் கைது செய்யப்பட்ட பிரான்சிஸ்கா ஒக்டோபர் மாதம் சென்னை குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதன்போது, மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் அவர் விடுதலைப் புலிகளின் முன்னாள் செயற்பாட்டாளர்களுடன் தொடர்பில் இருந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, கெனிஸ்டன் பெர்னாண்டோ, கே. பாஸ்கரன், ஜோன்சன் சாமுவேல் மற்றும் எல். செல்லமுத்து ஆகிய நால்வர் இந்திய தேசிய புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டம் 1967, கடவுசீட்டு சட்டம் 1967 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 10 மாதங்களில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பாக  இந்திய தேசிய புலனாய்வு பிரிவு பதிவு செய்த இரண்டாவது வழக்கு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தீப்பொறியாக வெளியேறினது மூவர் பரந்தன் ராஜனின் பின்னால் 300 பேர்! உமாவின் தலைமைக்கு சவால்!!! : பாகம் 26

பாகம் 26: தீப்பொறியாக வெளியேறினது மூவர் பரந்தன் ராஜனின் பின்னால் 300 பேர்! உமாவின் தலைமைக்கு சவால்!!!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 26 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 12.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 26

தேசம்: பின்தள மாநாடு பற்றி கதைத்துக் கொண்டிருக்கிறோம். அதில நீங்கள் பரந்தன் ராஜன் பி.எல்.ஓ பயிற்சி முடித்துவிட்டு இங்க வரேக்க, காக்கா சிவனேஸ்வரன் கொலை செய்யப்படுகிறார். அந்த முரண்பாட்டில் அவர் வெளியேறுகிறார். அவர் வெளியேறும் போது 300 – 350 போராளிகளும் சேர்ந்து வெளியேறுகிறார்கள் என்று சொல்லுறீங்க. என்னுடைய கேள்வி என்னவென்றால், இதுவரைக்கும் கதைக்கப்பட்ட விடயங்களை பார்க்கும் போது, பரந்தன் ராஜன் ஒரு முற்போக்கான பாத்திரம் வகித்ததாக எங்கேயும் சொல்ல வில்லை. அப்படி அவருக்கு பாத்திரம் இருக்கா? முற்போக்குப் பாத்திரம் வகித்ததாக சொல்லப்படுவது அல்லது இடதுசாரி சிந்தனை அரசியலில் சொல்லப்பட்ட தீப்பொறி குழு ஆட்கள் வெளியேறும்போது அவர்கள் மூன்று பேர்தான் போகிறார்கள். அது எப்படி சாத்தியமானது? ராஜனுக்கு பின்னாடி எப்படி இவ்வளவு 300 – 350 போராளிகள் சேர்ந்து பிரிகிறார்கள் என்றால் அவர் ஒரு சக்தியாக இருந்திருக்கிறார் தானே? அது எவ்வாறு?

அசோக்: ஒருவரை நம்பி நாம் செல்வதற்கு அடிப்படைக் காரணம் ஒரு நம்பிக்கைதான். நீங்கள் ஒரு நெருக்கடியான உயிர் பயமுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்ற ஒரு நிலையில், யார் உங்களுக்கு உயிருக்கு உத்தரவாதம் தருகிறார்களோ, உங்கள் மீதான அக்கறையை கொடுக்கிறார்களோ அவர்களுக்கு பின்னால்தான் போவீர்கள். இங்க வந்து முற்போக்கு கருத்துக்களும், மாக்சிஸ ஐடியோலொஜிகளும் துணை புரியாது. மாக்சிஸ ஐடியோலொஜி உள்ளவர்கள், தோழர்களை காப்பாற்ற கூடிய வல்லமை இருந்தால் அவர்களுக்கு பின்னால போவார்கள். அது ஒரு ஆரோக்கியமான அரசியலை முன்எடுப்பதற்கான சாத்தியத்தை வழங்கக் கூடும். ஆனால் உயிர் ஆபத்துக்கள் இருக்கின்ற சூழ்நிலையில் தங்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதம் போன்ற விடயங்களைத்தான் தோழர்கள் முதல் கவனத்தில கொள்வாங்க.

இங்க கோட்பாடு அரசியல் என்பது இரண்டாம்பட்சமாகி விடும். தோழர் ரகுமான் ஜான் ஆட்கள் வெளியேறின பிற்பாடு அவர்களுக்கு பின்னால போகாதது ஏனென்று கேட்டால் அவர்கள் மீது நம்பிக்கை இருக்கேல. அவர்கள் கருத்தியல் ரீதியாக வளர்ந்தவர்களேயொழிய இவர்கள் ஒரு ஸ்தாபனத்தை கொண்டு நடத்துவார்கள் என்றோ தோழர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள் என்றோ வழி காட்டுவார்கள் என்றோ எந்த நம்பிக்கையும் தோழர்களுக்கு வரவில்லை.

அடுத்தது பொறுப்புக்கூறல் அவங்களுக்கு இல்லை. நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அவங்கள் வெளியேற முதல் யோசித்திருக்க வேண்டும் தங்களால் வந்த தோழர்கள் சந்தேகப்பட்டு பாதிக்கப்படுவார்கள் என்ற எண்ணமே அவர்களுக்கு இருக்கேல. அப்போ அடிப்படைப் பிரச்சனை என்னவென்று கேட்டால் பொறுப்புக்கூறல் அவங்களுக்கு இருக்கேல. உண்மையிலேயே அவர்கள் பைட் பண்ணியிருக்க வேண்டும்.

அனைத்து முகாம்களுக்கும் போய் வருபவர் தோழர் ரகுமான் ஜான். நிறைய தோழர்களுடைய அன்பும் ஆதரவும் கிடைத்திருக்கும். குறைந்தபட்சம் அவர்களுக்காகவாவது உள்ளுக்க இருந்து ஃபைட் பண்ணி இருக்க வேண்டும். இனி புளொட்டில் இருப்பது பிரயோசனம் இல்லை என தோழர்களுக்கும் தெரியப்படுத்திவிட்டு வெளியேறி இருந்தால் தோழர்கள் மத்தியில் பிரச்சனை உருவாகி அவர்களும் இவங்களோட வெளியேறி இருப்பாங்க. முகுந்தனால் எதுவும்செய்ய முடியாமல் போய் இருக்கும்.

ராஜனைப் பொறுத்தவரை இதுதான் நடந்தது. ராஜனோடு தோழர்களும் நிறைய வெளியேறிவிட்டதினால் முகுந்தனினால் எதுவும் செய்ய முடியாமல் போய் விட்டது. ராஜனை பொறுத்தவரையில் ராஜனுக்கு முற்போக்குப் பாத்திரம் இல்லை. விமர்சனங்கள் இருக்கு. ஆனால் ராஜனிடம் மனிதாபிமானம் இருந்தது. வெளியேறிய தோழர்களை காப்பாற்ற வேண்டும் அவர்களுக்கு பொறுப்பு கூறல் வேண்டும் என்ற உணர்வு இருந்தது.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் ராஜன் தொடர்பாய் என்ன விமர்சனங்கள் இருந்தன…

அசோக்: உளவுத் துறை தொடர்பான குற்றச்சாட்டுக்களில் ராஜன் தொடர்பாக விமர்சனம் இருந்ததாக நான் அறியவில்லை. ஆனால் ராஜன் பி கேம்ப் போட்டது தொடர்பாக விமா்சனம் இருந்தது.

தேசம்: அது என்ன மாதிரியான விமர்சனம்…

அசோக்: அதுல தான் டோச்சர் நடந்தது.

தேசம்: ராஜன்ட கேம்பிலையோ?

அசோக்: பீ கேம்ப் (basic camp – b camp) என்பது ஆரம்ப பயிற்சிநிலை கொண்ட முகாம். அது பேசிக் காம்பாக இருந்தமையால் பீ கேம் என்று சொல்லப்பட்டது. ராஜன் தான் பேசிக் கேம்ப் போட்டது. அங்க தோழர்கள் மீதான சித்திரவதைகள் நடந்த படியால், ராஜன் மீது அந்த குற்றங்கள் வந்து விட்டதென நினைக்கிறன். ராஜன் தொடங்கிய நோக்கம் பேசிக் கேம்ப். ஆரம்ப பயிற்சிக்காக தொடங்கப்பட்டது. அங்கதான் டோச்ஜர் நடந்தது.

தேசம்: அதுக்கு ராஜன் பொறுப்பாக இருக்கேல?

அசோக்: இல்லை இல்லை அந்த காலகட்டத்தில் ராஜன் பீ.எல்.ஓ பயிற்சிக்காக போய் விட்டார் என நினைக்கிறன்.

தேசம்: ராஜன்ட முரண்பாட்டுக்கு அதுவும் காரணமாக இருக்கலாமா? தான் தொடங்கின முகாமில் …

அசோக்: அது தெரியல. பீஎல்ஓ ரெயினிங் முடித்து வந்த பின் முகுந்தனுக்கும் ராஜனுக்கும் பிரச்சனை தொடங்கிவிட்டது. நிறைய கேள்விகள் கேட்டிருக்கிறார். உள்ளுக்குள்ள நடந்த கொலைகள் தொடர்பாக. அவர் கலந்துகொண்ட சென்றல் கமிட்டி மீட்டிங் பிறகுதான் நடந்தது. தனிப்பட்ட சந்திப்புகள் நடக்கும் தானே அதுல முரண்பட்டுதான் கேள்விகள் கேட்கிறார்.

தேசம்: ராஜனுக்கும் தோழர் ரகுமான் ஜான் போன்றவர்களுக்கும் இடையில் தொடர்புகள்…

அசோக்: தொடர்புகள் ஒன்றுமில்லை.

தேசம்: அது எப்படி ஒரே அமைப்பின் மத்திய குழுவில் இருந்தவர்களுக்கு இடையில் தோழமை உரையாடல் இல்லாமல் இருந்தது?

அசோக்: இவங்களைப் பொறுத்தவரை ஆரம்ப காலத்தில் ராஜனை முகுந்தனுடைய ஆளாகத்தான் இவங்கள் பார்த்திருக்கிறார்கள். அப்படித்தான் ஆரம்ப காலகட்டத்தில் ராஜன் முகுந்தனுடைய ஆதரவு நிலைப்பாட்டோடுதான் இருந்திருக்கிறார். ராஜன் மாத்திரம் அல்ல ஆரம்ப காலகட்டத்தில் தோழர் ரகுமான் ஜான், கேசவன் நான் உட்பட எல்லோரும் முகுந்தன் விசுவாசிகள்தான். முகுந்தன் விசுவாசம் இல்லாவிட்டால் கட்டுப்பாட்டுக்குழுவில் தோழர் ரகுமான் ஜான், சலீம் எப்படி இடம் பெறமுடியும். காலப்போக்கில் முரண்பாடு ஏற்பாட்டு விட்டதே தவிர ஆரம்ப காலங்களில் எல்லோரும் ஒன்றுதான். விசுவாசம் வேண்டுமென்றால் ஆளுக்கால் கூடிக் குறையலாம் …

தேசம்: இதெல்லாம் ஒரு கற்பனை மாதிரி தெரியவில்லையா. கிட்டத்தட்ட ஒரு கற்பனாவாதம் தான். ஒருவருக்கொருவர் தோழமை இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்தாமல் உரையாடல் நடத்தாமல் என்னென்று நீங்கள் எலலோரும் மத்தியகுழுவில் இருந்தீங்க.

அசோக்: இப்ப யோசிக்கேக்க அது பிழையாகத் தான் தெரியுது. அந்தக் காலகட்டத்தில் நான் நினைக்கிறேன் ஒரு சந்தேகம் பயம் இருந்திருக்கலாம்.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் சந்தேகங்கள் பயம்கள் உருவாகுவதற்கான சாத்தியங்கள் இல்லையே. குறிப்பிட்ட காலத்துக்குள் தானே இது எல்லாம் நடக்குது. ஒன்றில் நீங்கள் அதீத எப்படி சொல்வது, தெனாலியில் கமலஹாசன் சொல்வது மாதிரி அதைக் கண்டால் பயம், இதைக் கண்டால் பயம், அப்படி பயம் என்று சொல்லுறது மாதிரியான பயத்தை நாங்கள் இப்ப கட்டமைக்க இயலாது. மற்றது அந்த காலகட்டத்தில் தான் நீங்கள் புலிகளிடமிருந்து வந்து இதை ஆரம்பிக்கிறீர்கள். ஒரு வருஷத்துக்குள்ள அவ்வளவு ஒரு கொலை கூட்டமாக மாறுவது வாய்ப்பில்லை…

அசோக்: உண்மையிலேயே இப்ப திரும்பி பார்க்கும் போது எங்கள் மீது நிறைய விமர்சனங்கள் வருகிறது. இயக்கம், போராட்டம் விடுதலை என்பதக்கு அப்பால், எங்களிடம் எங்களின்ற தனிப்பட்ட இருத்தலுக்காக அடையாளத்திற்காக முயற்சித்தோமே தவிர எந்த இயக்க நலன்சார்ந்த உரையாடல்கள், விட்டுக்கொடுப்புக்கள், பரஸ்பர நம்பிக்கைகளுக்கு ஊடாக எதையுமே நாங்க முயற்சிக்கல்ல போல தெரிகிறது. முகுந்தனும் உளவுத்துறையும் தான் மிக மிக முக்கியமான பிரச்சினை என்றால் முகுந்தன் மீது நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியங்கள் இருந்திருக்கு.

தேசம்: முகுந்தன் பாவித்த அத்தனை பேருமே சுழிபுரத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் எல்லாருமே சந்ததியாரால் புளொட்டிக்கு கொண்டு வரப்பட்டவர்கள். படைத்துறைச் செயலாளர் கண்ணன் இந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

அசோக்: யாழ்ப்பாணம், எந்த பிரதேசம் என்று தெரியவில்லை.

தேசம்: அவரும் ஒரு இடதுசாரி…

அசோக்: இடதுசாரி பாரம்பரியத்தில் இருந்து வந்தவர்.

தேசம்: பரந்தன் ராஜன் வெளியேறும்போது… நீங்கள் சொல்கிறீர்கள் பரந்தன் ராஜன் ஒரு தனிக் குழுவாக செயற்பட்டார் என்று.

அசோக்: தனிக் குழுவாக இல்லை. ராஜன் வெளியேறின பிற்பாடு முகாம்களுக்குள் அதிருப்தி அடைந்து வெளியேறின தோழர்கள் அனைவரும் ராஜனிட்ட பாதுகாப்புத்தேடி போயிட்டாங்க.

தேசம்: இந்தத் தோழர்கள் யாரும் தீப்பொறி குழுவோட போகல…

அசோக்: யாரும் போகவில்லை. முதலில் நம்பிக்கை வேண்டுமே. அவங்களோடு மிக நெருக்கமான நாங்களே அவங்களோடு போகவில்லை. தோழர்கள் எப்படி நம்பி போவார்கள். முதலில் தோழர்களுக்கு நம்பிக்கை ஊட்டவேண்டும். ராஜன் ஆட்கள் அந்த நம்பிக்கையை கொடுத்தாங்க. அந்தக் காலகட்டத்தில் தான் நாங்களும் பின்தள மாநாட்டுக்கு போறோம்.

தேசம்: நாங்கள் என்னதான் தலைமைத்துவம் இடதுசாரி, அரசியல் இதெல்லாம் கதைத்தாலும் சரியான தலைமையை அந்த போராளிகளுக்கு கொடுக்க தவறி விட்டோம்.

அசோக்: எங்களிடம் நிறைய தவறுகள் இருந்திருக்கின்றன. புளொட்டின் ஆரம்ப உருவாக்கமே தனிநபர் விருவாசம், குழுவாதம் போன்றவற்றோடு தொடங்கியதுதான் எல்லா வீழ்ச்சிக்கும் காரணம். உங்கட இந்த விமர்சனம் எங்கள் எல்லோருக்கும் உரியது. நாங்கள் சரியான தலைமையை கொடுத்திருந்தால் அந்தத் தோழர்கள் எங்களை நம்பி வந்திருப்பார்கள். நாங்கள் சரியான தலைமையையும் கொடுக்கல்ல. தனி நபர்களாக கூட தோழர்கள் மத்தியில் எங்கள் மீது நம்பிக்கைகளை ஏற்படுத்த தவறிட்டம். இதுதான் ரகுமான் ஜான் தோழர் ஆட்களுக்கு நடந்தது. பிறகு பின்தளம் சென்ற பிறகு நாங்கள் என்ன செய்கிறோம் என்றால் டேவிட் ஐயாவை சந்திக்கிறோம். சரோஜினிதேவி, சண்முகலிங்கம், ஜூலி..

தேசம்: ஜூலி பற்றி சொல்லுங்கள் முதல் சொல்லப்படவில்லை என்று நினைக்கிறேன்…

அசோக்: ஜூலி வந்து காந்தியத்தில் வேலை செய்த ஒரு துணிச்சலான கருத்தியல் ரீதியில் வளர்ந்த தோழர். முதன் முதல் காந்தீயம் வவுனியாவில் நடாத்திய சத்தியா கிரக போராட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பெண்களில் முக்கியமானவர். பொலிசாரின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டவர். மாதகல் பிரதேசத்தை சேர்ந்தவர்.

தேசம்: இப்ப எங்க இருக்கிறா…

அசோக்: இப்ப திருமணம் செய்து. நான் நினைக்கிறேன் அவர்களுடைய சொந்த வாழ்க்கைக்கு போயிட்டாங்க. அப்போ முகுந்தன் மீது அதிருப்தி கொண்ட ஆட்கள் எல்லாரும் அங்க சந்திக்கிறோம். பின் தளத்திலிருந்த மத்திய குழு ஆட்களையும் சந்திக்கிறோம் நாங்கள். ராஜனை சந்திக்கிறோம். பாபுஜி, செந்தில், ஆதவன், சீசர், சேகர் அதாவது முகுந்தனோடு அதிருப்தியாகி மத்திய குழுவில் இருந்து இவங்களும் வெளியேறிட்டாங்க. முகுந்தனோடு இருந்தது கண்ணன், வாசுதேவா, கந்தசாமி, மாணிக்கதாசன், ஆனந்தி. 5 பேர் தான் முகுந்தனோடு இருந்தது. மிச்ச பேர் வெளியில் தான் இருக்கிறார்கள். தளமத்திய குழு நாங்க நாலு பேர் மற்ற முன்னரே வெளியேறி இருந்த சரோஜினி தேவி உட்பட முகுந்தனுக்கு எதிராக மொத்தம் 11 பேர் வெளியில் இருக்கிறம்.

தேசம்: செந்தில், சீசர், ஆதவன் எல்லாம் எங்க…

அசோக்: அவங்க அந்த நேரம் பின்தளத்தில் இருந்தவர்கள்.

அப்போ, வெளியேறின சென்ட்ரல் கமிட்டி உறுப்பினர்களை எல்லாம் சந்திக்கிறோம். அவங்க சொல்லுறாங்க நாங்கள் ஒரு சென்றல் கமிட்டி மீட்டிங்கை முதல் கூட்டவேண்டும் என்று. சென்றல் கமிட்டி மீட்டிங் போட்டு பின்தள மாநாடு நடத்துவது தொடர்பாக முகுந்தன் ஆட்களோடு கதைக்க வேண்டும் என்று. அதற்கிடையில் தளக்கமிட்டி முகுந்தனுடனும் வெளியில் பேச்சுவார்த்தை நடத்தி விட்டார்கள். ஓரளவு மாநாடு நடத்துவதற்கு முகுந்தன் ஒத்துக்கொண்டு, வெளியில் மாநாட்டை தடுப்பதற்கான எல்லா வேலைகளிலும் ஈடுபட்டு கொண்டிருந்தார். சின்ன சின்ன பயமுறுத்தல்கள் எங்களை தனி வீட்டில் தங்க வைத்து வெளித் தொடர்பில்லாமல் வைத்திருப்பது. இப்படி தொடர்ந்தது.

அப்ப நாங்க சொல்றம் மத்திய குழுவைக் கூட்ட வேண்டும் என்று. அப்போ முகுந்தன் ஒத்துக்கொள்கிறார். அப்போ மத்திய குழுக் கூட்டம் நடக்குது. அதுதான் கடைசியாக நடந்த மத்திய குழுக் கூட்டம் அதில் எல்லாரும் கலந்து கொள்கிறார்கள்.

அதுல நாங்கள் தளத்திலிருந்து போனவர்கள் 3 பேர். மற்றவர்கள் ராஜன், பாபுஜி, செந்தில், ஆதவன், சீசர், முகுந்தன், கண்ணன், கந்தசாமி, வாசுதேவா, மாணிக்கதாசன், ஆனந்தி அது ஒரு மிகப் பதட்டமான சூழலில் நடக்குது. நாங்கள் முதலில் முடிவெடுத்து விட்டோம் என்னவென்றால், இந்த சென்ற கமிட்டிக்கான பாதுகாப்பை தள செயற்குழு தளக் கமிட்டி இருக்குதானே அவங்களுடைய மேற்பார்வையில் இந்த மத்திய குழுக் கூட்டம் நடக்க வேண்டும் என்று. யாருமே ஆயுதம் கொண்டு வர இயலாது.

தளக் கமிட்டி இவங்கதான் மத்திய குழுக் கூட்டம் நடக்குற மண்டபத்தில் வெளியில் நிற்பார்கள். இவங்கதான் செக் பண்ணி விடுவார்கள் என்று சொல்லி. எங்களுக்கு ஒரு பயம் இருக்கும் தானே முகுந்தன் எங்களை மாநாட்டுக்கு கூப்பிட்டு ஏதாவது செய்யலாம் என்று.

தேசம்: அது யார் முகுந்தனோடு கதைத்து உடன்பட வைத்தது?

அசோக்: அது தள கமிட்டி. தள கமிட்டிதான் போய் சொன்னது சென்ட்ரல் கமிட்டியை கூட்ட வேண்டும் என்று. நாங்களும் ஒரு கடிதம் அனுப்பினோம் சென்றல் கமிட்டியை கூட்ட வேண்டும் என்று. அப்போ முகுந்தன் ஏற்றுக் கொண்டு சென்றல் கமிட்டியை கூட்டுவதற்கு சம்மதிக்கிறார். அதிலதான் பல்வேறு விவாதங்கள் நடக்குது. நாங்கள் பின் தள மாநாட்டை நடத்துவதற்கான அனுமதியை முகுந்தன் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறம்.

ஏனென்றால் பின்தள மாநாடு நடத்துவதற்கான எந்த சாத்தியத்தையும் முகுந்தன் தரவில்லை. அப்போ அதிலே நாங்கள் ஃபைட் பண்ணுவதற்குத் தான் போறோம். அங்க அந்த மத்திய குழுக் கூட்டத்தில் மிகப் கடுமையான விவாதம் நடந்தது. தள மாநாட்டையே முகுந்தன் ஏற்றுக் கொள்ளாத வகையில் தான் கதைக்கிறார். திட்டமிட்டு புளொட்டை தளத்தில் உடைத்ததாகவும், அதே போல் பின் தளத்தில் உடைக்க நாங்க முயலுவதாகவும் எங்கள் மீது குற்றம் சுமத்தினார்.

பிறகு சொன்னார் பின்தள மாநாட்டை நடத்துவதற்கான எல்லாத்தையும் தாங்கள் செய்கிறோம் என்று. நாங்கள் சொன்னோம் அதை நீங்கள் செய்ய இயலாது. மத்திய குழுவைச் சேர்ந்த எவரும் அதில் அங்கம் பெற முடியாது; தீர்மானிக்கவும் முடியாது. அதை தளக்கமிட்டீயும் முகாம்களில் இருக்கிற தோழர்கள் தான் தீர்மானிக்க வேண்டுமேயொழிய நீங்கள் தீர்மானிக்க இயலாது. குற்றம் சாட்டப்பட்ட உளவுத் துறை சார்ந்தவர்களும் தீர்மானிக்க இயலாது என்று. முகுந்தன் ஏற்றுக் கொள்ளவே இல்லை. பின்தள மாநாட்டை நடாத்தும் எண்ணமே முகுந்தனுக்கு இல்லை. அதற்கிடையில் சந்ததியார் படுகொலை, செல்வன் அகிலன் படுகொலை பற்றி எல்லாம் பிரச்சனை தொடங்கிவிட்டது.

தேசம்: இப்பிரச்சனைகளை யார் கேட்டது?

அசோக்: சந்ததியார் படுகொலை பற்றி ராஜனும், செல்வன், அகிலன் படுகொலை பற்றி நானும் கேள்வி எழுப்பினோம். இதுபற்றி சென்ற உரையாடலில் சொல்லி இருக்கிறன். எங்க மீது முகுந்தன் ஆட்கள் கடும் குற்றச்சாட்டை வைக்க தொடங்கினாங்க. புளொட்டை தளத்தில் உடைத்தோம். நிறைய குற்றச்சாட்டுகள் நேசன் ஆட்கள் வெளியேறியதை, ரீட்டா பிரச்சனை பற்றி தனக்கு நாங்கள் அறிவிக்கவில்லை என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தள இராணுவப் பொறுப்பாளர் மெண்டீசிக்கு நாங்க ஒத்துழைப்பு கொடுக்கல்ல என்று சொல்லியும் முகுந்தன் எங்கள் மீது குற்றச்சாட்டு. முகுந்தனுக்கும் ராஜனுக்கும் பெரும் வாக்குவாதம். முகுந்தனிடம் இருந்து எந்தக் கேள்விக்கும் ஒழுங்கான பதில் இல்லை. கேள்வி கேட்பவர்களை குற்றம்சாட்டி கூட்டத்தை குழப்புவதிலேயே முகுந்தனும், முகுந்தன் சார்பானவர்களும் குறியாக இருந்தாங்க.

தேசம்: அதுல ஒரு உறுதியான முடிவும் இல்லை…

அசோக்: உறுதியான முடிவு இல்லை. கடும் முரண்பாட்டுடன் அந்த மத்திய குழு முடிந்தது…

தேசம்: தங்கள் மீதான எல்லா குற்றச்சாட்டையும் மறுத்துட்டாங்க…

அசோக்: அவங்க மறுத்துட்டாங்க. பின் தள மாநாடு நடத்தவும் உடன்படவில்லை. பிறகு முரண்பட்டு அதோட மத்திய குழு கூட்டம் முடியுது. அதுதான் புளொட்டினுடைய இறுதி மத்திய குழு கூட்டம். நாங்க கலந்து கொண்ட கூட்டம்.

தேசம்: 86 கடைசியில் நடந்தது…

அசோக்: இது வந்து எண்பத்தி ஆறு ஜூனில் நடக்குது. அப்போ நாங்கள் முரண்பட்டு வந்த பிற்பாடு, தளத்தில் இருந்து போன தளக் கமிட்டியும் அங்குள்ள மத்திய குழு உறுப்பினர்களும் சேர்ந்து ஒரு அறிக்கை ஒன்று வெளியிடுகிறோம். இனிமேல் நாங்கள் தான் புளொட் தொடர்பான உத்தியோகபூர்வமான முடிவுகளை எடுப்போம் என்றும் முகுந்தனுடன் புளொட் தொடர்பான எந்த விடயங்களையும் தவிர்த்துக் கொள்ளுமாறும், தளத்தில் இருந்து வந்த தள கமிட்டியும் பின் தளத்தோழர்களும் இணைந்து பின்தள மாநாட்டை நடத்தி அதற்கு ஊடாக தெரிவு செய்யப்படும் மத்தியகுழுதான், புளொட் அமைப்பின் உத்தியோக உத்தியோகபூர்வ நிர்வாகம் என்றும், எனவே புளொட்டின் பெயரில் யாரும் முகுந்தனுடன் தொடர்பு கொள்ளுவதை தவிர்த்துக் கொள்ளும்படியும் அறிக்கை வெளியிடுறோம்.

பெரிய ஒரு அறிக்கை. நிறைய விஷயங்கள் உள்ளடக்கியிருந்தது. அதுல நாங்கள் சைன் பண்ணுறோம். பிறகு தளத்திலிருந்து போன மத்திய குழு உறுப்பினர்களும் அங்குள்ள மத்திய குழு உறுப்பினர்களும் சேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிடுகிறோம்.

பிறகு நாங்கள் பின்தள மாநாட்டுக்கான ஆயத்த வேலைகளை செய்கிறோம்.

தேசம்: இப்ப புளொட்டில் இருக்கிற யாராவது உறுப்பினர்கள் அதில் இருந்திருக்கிறார்களா? ஆர் ஆர் அல்லது சித்தார்த்தன்.

அசோக்: இல்லை இல்லை ஒருவரும் இல்லை…

தேசம்: இப்ப புளொட்டின் தலைமையில் இருக்கிற ஒருத்தரும் அதுல இருக்கல?

அசோக்: இப்ப புளொட்டின் தலைமையில் யார் யார் இருக்கிறார்கள்?

தேசம்: சித்தார்த்தன் தலைவர். ஆர் ஆர் அதில் முக்கியமான உறுப்பினர் என்று நினைக்கிறேன்.

அசோக்: ஆர் ஆர் முகாமில் முக்கிய பொறுப்பில் இருந்து இருப்பார் என்று நினைக்கிறேன். சித்தார்த்தன் பெருசா தெரியல. சித்தார்த்தன் வெளிநாட்டிலிருந்து தொடர்பாளராக புளொட்டினுடைய மறைமுகமான வேலைகளுக்கு முகுந்தனின் பின்னால் அவர் இயங்கி இருப்பார் என்று நினைக்கிறேன். பணம், ஆம்ஸ் சம்பந்தப்பட்ட விடயங்களை கவனித்திருப்பார். புளொட்டுக்குள் எதுவும் உத்தியோகபூர்வமாக நடக்கவில்லை தானே. தனிநபர் ரீதியாகத்தான். முகுந்தன் சித்தார்த்தனோடையும், சீனிவாசனோடையும், லண்டன் கிருஷ்ணனோடையும் இப்படியான தனிப்பட்ட உறவைத்தான் பேணிக் கொண்டிருந்தார்.