December

December

“ஒருவேளை உணவை கூட பெற்றுக் கொள்ள முடியாத அவல நிலைக்கு  மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.” – திஸ்ஸ விதாரண

ஒருவேளை உணவை கூட பெற்றுக் கொள்ள முடியாத அவல நிலைக்கு  மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். எனவும் குளிர் அறையில் இருந்துக் கொண்டு எடுக்கும் தீர்மானங்கள் அனைத்தும் நடைமுறைக்கு பொருத்தமானதாக அமையாது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் தாக்கத்தினாலும், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினாலும் பொது மக்கள் பெரும் பாதிப்பினை எதிர்க்கொண்டுள்ளார்கள். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அமையவில்லை.  செல்வந்த தரப்பினரிடமிருந்து வரி அறவிடலை அதிகரித்து அதனூடாக நடுத்தர மக்களுக்கு  கூப்பன் முறையின் பிரகாரம் நிவாரணம் வழங்குமாறு நிதியமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தோம். எமது ஆலோசனைகளுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கப்படவில்லை.

பொருளாதார பாதிப்பை எதிர்க்கொண்டுள்ள பொது மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் உரிய திட்டங்களை இதுவரை முன்னெடுக்காமலிருப்பது கவலைக்குரியது. பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் பெரும்பாலானோர் ஒரு வேளை உணவை கூட பெற்றுக் கொள்ள முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

ஆடம்பரமான உட்கட்டமைப்பு அபிவிருத்தி பணிகளை சற்று தாமதப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பிரதமரிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளேன். இருப்பினும் எமது யோசனைகள் செயற்படுத்தப்படவில்லை.

அத்தியாவசிய உணவு பொருட்களை பெற்றுக் கொள்வதில் மக்கள் பெரும் நெருக்கடிகளை தற்போது எதிர்க்கொள்கிறார்கள். பிள்ளைகளுக்கு சத்துணவு கிடைக்கப் பெறுவதில்லை. 5 பிள்ளைகளில் ஒரு பிள்ளை போசாக்கு குறைப்பாட்டினால் பாதிப்படைந்துள்ளது. இக்காலப்பகுதியில் மாத்திரம் போசாக்கு குறைப்பாட்டு 18 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குளிர் அறையில் இருந்துக் கொண்டு முன்னெடுக்கப்படும் தீர்மானங்கள் அனைத்தும் நடைமுறைக்கு சாத்தியமற்றதாக அமையும். அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டதன் விளைவை நடுத்தர மக்கள் தற்போது எதிர்க்கொண்டுள்ளார்கள் என்றார்.

வாழ்வதற்கான உரிமைக்குள் ஒளிந்திருப்பது சாவதற்கான உரிமையே!! இந்த வாரம் பார்சல் டெலிவரி மோசடி 500,000 ஆக அதிகரிப்பு!!!

கிறிஸ்மஸ் மற்றும் நியூஇயர் காலக் கொண்டாட்டங்கள் பிரித்தானியாவில் நடைபெறும் பார்சல் தொடர்பான மோசடிகளின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பை கொண்டுள்ளன. இவ்வாராம் பார்சல் டெலிவரிகளின் மிக உச்சமான காலமாகையால் மோசடிகளின் எண்ணிக்கையும் எகிறியுள்ளது. ஸ்கொட்லன்ட் யாட் இன் மோசடிதடுப்புப் பிரிவின் கணிப்பின்படி இவ்வாரம் மட்டும் 500,000 மோசடிகள் நடைபெறும் என மதிப்பிட்டுள்ளது.

எனக்கு ஹேர்மிஸ் டெலிவரி நிறுவனத்தின் பெயரில் ஒரு கைத்தொலைபேசி இலக்கத்தில் இருந்து டிசம்பர் 21இல் அனுப்பி வைக்கப்பட்ட குறும்தகவலில் தாங்கள் டெலிவரி செய்ய முயற்சித்த போது நாங்கள் வீட்டில் இல்லாததால் நான் மேலதிகமாக 1.45 செலுத்த வேண்டும் என்று சொல்லி அதற்கான இணைப்பை வழங்கி இருந்தனர். இந்த இணைப்பைக் க்கிளிக் செய்தால் அது எங்களின் மிக முக்கியமான தகவல்களைப் பெற்று அதிலிருந்து எம்மி;டம் இருந்து பணத்தைக் கறக்கின்றனர். நான் பொதுவாகவே ஒன்லைனில் எதுவும் ஓடர் செய்வதில்லை என்பதால் எனக்கு அதன் நம்பகத்தன்மையில் ஒரு சந்தேகம் ஏற்பட்டு இருந்தது. இன்று பிபிசி செய்தியில் இவ்வாறான மோசடிகள் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தன.

மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன் இலங்கையில் இருந்து புத்தகப் பார்சல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. டிபிடி குறித்த திகதியில் பார்சலை டெலிவரி செய்யவில்லை. அவர்கள் டெலிவரி செய்ய முயற்சித்த தினத்தில் நான் வீட்டில் இல்லை. அவர்கள் அருகில் உள்ள அவர்களின் கலக்சன் பொயின்ற்றில் பார்சலை விட்டுச் செல்ல வேண்டும். ஆனால் ஏதோ காரணத்தால் அவர்கள் அதனைச் செய்யவில்லை.அவர்களுடைய டெப்போவுக்கு போன் பண்ணி அதனை பெற்றுக்கொள்ள முயன்றால் கொரோனா காரணமாக நாங்கள் டெப்போ பக்கமே வர இயலாது என்றார்கள். போனில் இருந்த பெண்ணும் பிரச்சினையை தீர்க்க முயற்சிக்கவில்லை. எனக்கும் இரத்தக் கொதிப்பாகியது. மனேஜரை கூப்பிடச் சொன்னால் மனேஜரும் அரை மணிநேரத்திற்குள் போன் எடுப்பதாகச் சொன்னார்கள். ஆனால் போன் எடுக்கவேயில்லை. திருப்பியும் இன்னொரு சுற்று அதே பதில் அதே விளைவு. இன்று ஒரு மாதம் கடந்தும் அந்த பார்சலுக்கு என்ன நடந்தது என்பதே தெரியாது.

இதற்கிடையே பார்சலை அனுப்பியவர் தான் இன்னுமொரு பார்சல் அனுப்பி உள்ளதாகவும் அது புதிய முகவரிக்கு வரும் என்றும் சொன்னார். அதுவும் குறித்த டெலிவரியில் வரவில்லை. அதன் பின் அமெக்ஸ் டெலிவரி நிலையத்தில் இருந்து ஒரு குறும் தகவல் வந்தது 11:25க்கும் – 12:25க்கும் இடையே பார்சல் வரும் என்று. அன்று பார்சல் வரவில்லை.

அதன் பின் மறுநாள் மாலை 18:40க்கும் – 19:40க்கும் இடையே பார்சல் வரும் என்று டிஎச்எல் இல் இருந்து ஒரு குறும்தகவல் வந்தது. ஆனால் பார்சல் வரவில்லை. குறும்தகவல் வந்தது. உங்களுடைய பார்சல் டெலிவரி செய்யப்பட்டதாகவும் நான் – ஜெயபாலன் பார்சலை பெற்றுக்கொண்டதாகவும்.

ஆனால் பார்சல் அதன் பின் 48 மணிநேரங்களிற்குப் பின்னரே என் கைக்கு வந்தது. புத்தகம் என்பதால் யாரும் அதனை களவாடியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் பெறுமதியான பொருட்கள் என்றால் சில வேளை இந்தப் பார்சல் எனக்கு கிடைத்தே இருக்காது.

ஒரு பார்சலை டெலிவரி செய்வதற்கு ஏன் இத்தனை நிறுவனங்கள். இந்நிறுவனங்கள் எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையவையே. தங்களுடைய பொறுப்புக்களை தட்டிக்கழிப்பதற்காக வெவ்வேறு பெயர்களில் இயங்கி மக்களை ஏமாற்றுகின்றனர். நீங்கள் பொருளை அனுப்புவதற்கான பணத்தைக் கட்டும்வரை தான் அவர்களுக்கு கஸ்டமர். அதற்குப் பின் நீங்கள் யாரோ அவர்கள் யாரோ. அவர்களுக்கு பணத்தையும் கட்டி அவர்களுக்கு போன் பண்ணி அவர்களுக்காக காத்திருந்து நேரத்தையும் வீணடித்து அமசோன் நிறுவன உரிமையாளர் ஜெப் பெஸோஸ் போன்றவர்களை அதீத செல்வந்தராக்கி கொண்டிருக்கிறோம். எமது நுகர்வோர் கலாச்சாரமே அவர்களது அதீத செல்வத்தின் பின்னணி. எமக்கு என்ன வேண்டும் என்பதை இன்று இவர்களே தீர்மானிக்கின்றனர்.

இந்தப் பெரும் நிறுவனங்களும் லாப நோக்கில் டெலிவரி ரைவர்களை மிகவும் கசக்கி புளிகின்றனர். ப்றிலன்ஸாக தங்கள் வாகனத்தை பயன்படுத்தும் இவர்களுக்கு சிறுநீர் கழிக்க நேரம் இல்லாத அளவுக்கு டெலிவரி செடுயூல் போடப்பட்டு இருக்கும். அவர்கள் வானில் உள்ள போத்தலிலேயே சிறுநீர் கழிக்கின்றனர். வாகனத்தை ஓட்டிக் கொண்டே உணவருந்துகின்றனர். எல்லாத் தவறுகளும் எல்லா பொறுப்புகளும் அவர்கள் தலையிலேயே கட்டப்படுகின்றன. சம்பளம் பெறும் நவீன கூலி அடிமைகளாக்கப்பட்டு உள்ளனர். கொன்சவேடிவ் அரசின் சிரோ அவர் கொன்ராக் இந்த மல்டிநஷனல் நிறுவனங்கள் லாபத்தை குவிக்கவே உதவுகின்றது. தொழிலாளர்களின் நலன்பற்றியோ மக்களின் நலன்பற்றியோ எவ்வித கரிசனையும் கிடையாது.

திறந்த சந்தைப் பொருளாதாரம் உங்களுக்கு தேர்வு செய்வதற்காக உரிமையை வழங்குவதாக மார்தட்டி பீற்றிக்கொள்கின்றது. அந்த தேர்வு என்ன? ரைட் செடுயூலில் சிறுநீரை போத்தலில் களித்து வேலையைச் செய்ய வேண்டும். இல்லையேல் வேலையில்லாமல் பிச்சைப் பணத்திற்கு கையேந்த வேண்டும். இந்த மேற்கு நாடுகளின் வாழ்வதற்கான உரிமை என்பதற்குள் ஒளிந்திருப்பது சாவதற்கான உரிமையும் தான். அதனை கோவி;ட் அம்மணமாக நிரூபித்துள்ளது. கோவிட்இல் வறுமைகோட்டில் வாழ்வோரே பெரும்பாலும் உயிரிழந்தனர். உயிர் இழந்துகொண்டிருக்கின்றனர். உயிரிழப்பர். 2000க்கும் மேற்பட்ட அதீத செல்வந்தர்களின் லாபம் கோவிட் காலத்தில் ரொக்கட் வேகத்தில் அதிகரித்துள்ளது.

லண்டனில் எனது இன்றைய அனுபவம்!!!

இன்று காலை எனக்கு தொலைபேசியில் ஒரு குறும் தகவல் Hey dad this is my new number you can delete my old number. இரண்டாவது மகன் பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டிருக்கிறான். ஆனால் இப்ப விடுமுறையில் வந்துவிட்டான். இதற்கு முன்னரும் இவன் இப்படி போன் நம்பரை மாற்றி இருக்கிறான். நான் பஞ்சிப்பட்டு மாற்றாமல் குழம்பி சத்தம் போட்டும் இருக்கிறேன். அந்த போன் நம்பருக்கு போன் செய்தேன் போன் கரகரத்தது. இப்படி அனுபவங்கள் முன்னரும் நடந்தது. மீண்டும் ஒரு மசேஜ். தன்னுடைய போன் உடைந்துவிட்டதாகவும் கதைக்க முடியாது என்றும் மசேஜ் வந்தது. சரி போன் வாங்கி இப்ப ஒரு ஆறு மாதம் தான் வொறன்ரியில் மாற்றுவோம் என்றன். முன்னம் விட்ட தவறை திரும்பவும் விடக்கூடாது. அப்பனுக்கு மகன் அட்வைஸ பண்ண விடக்கூடாது என்று என்பதுக்காக உடனேயே நம்பரை மாற்றி புதிய நம்பரை சேவ் பண்ணிக்கொண்டேன்.

பிறகு இன்னுமொரு மசேஜ் தனது பாங்க் எக்கவுண்டை ப்றீஸ் பண்ணி வச்சிருக்கிறதாகவும் தனக்கு பில்லைக் கட்டிவிடவும் கேட்டான். சரி என்ன பல்கலைக்கழகத்தில் படிப்பவனுக்கு ஒரு ஐம்பது நூறு பவுண் தானே பெத்ததுக்கு அதுவும் செய்யாவிட்டால் மரியாதையில்லை தானே. ‘நோ புரம்பளம்’ என்றும் தகவல் அனுப்பிவிட்டு எவ்வளவு கட்ட வேண்டும் என்றேன். £1800 பவுண் என்று தகவல் வந்தது. எனக்கு தூக்கிவாரிப் போட்டது. நான் ஒரு பிச்சைக்கார வாத்தி என்றது நம்மட கொன்ஸ் தோழரின் புண்ணியத்தில உலகத்துக்கே தெரியும். என்ர பாங்கில எந்தக் காலத்தில £1800 பவுண் இருந்தது. நாங்கள் எல்லாம் முன்னாள் கவுன்சிலர் போல் சத்தியநேசன் மாதிரி £50 பவுண் தாளையே கண்டிராத ஆட்கள்.

ஆனால் பாவம் மகனுக்கு பல்கலைக்கழகத்தில் ரூம் வாடகை குவாட்டருக்கு (இது அந்தக் கூவாட்டர் இல்ல. காலாண்டு) அவ்வளவு வரும் அது தான். அதுவா கட்ட வேணும் என்று மசேஜ் அனுப்பிவிட்டு இன்னுமொரு மசேஜ்ம் போட்டேன். எனக்கு சம்பளம் இன்னும் வரவில்லை. அண்ணாவிடம் வாங்கிக் கட்டு அண்ணாவுக்கு நான் பிறகு குடுக்கிறேன் என்று. என்னிடம் காசு இல்லாமல் அண்ணாவிட்ட கேள் என்று சொன்னது கொஞ்சம் வெட்கமாக இருந்தாலும் வேறு வழியில்லை. அவனுக்கு ஏற்கனவே ஒரு £1000 குடுக்கக்கிடக்கு. (இந்தத் தகவல் தோழர் கொன்ஸ்க்கு அல்வா கொடுக்க.) திரும்பி மசேஜ் வந்தது நீங்கள் அண்ணாவிடம் சொல்லுங்கள் என்று. இப்ப எனக்கு உதைக்கத் துவங்கியது. எற்கனவே டாட் என்று அழைத்ததே எனக்கு இடித்தது.

என்னுடைய பிள்ளைகள் யாரும் என்னை ஒரு போதும் டாட் என்றோ டாடி என்றோ அழைப்பதில்லை. அப்பா என்றே அழைப்பார்கள். ஆங்கிலத்தில் மசேஜ் வந்தாலும் Appa என்றே எழுதுவார்கள். கொஞ்சம் அன்பு கூடினால் டோய் அப்பா அப்பா லூசா என நான் அவர்களை அழைப்பது போலே அழைப்பார்கள். டாட் டாடி எல்லாம் கொஞ்சம் ரூமச் மாதிரித்தான் தெரிந்தது. ஆனால் யூனிவர் சிற்றியில குவாட்டர் இறங்கிச்சுதோ தெரியேல்ல. அத்தோடு அண்ணாவிட்ட கேள் என்றால் அவன் நேர அண்ணனின் கழுத்தைப் பிடித்து காசை மாற்றியிருப்பான். அண்ணன் தான் அலறி அடித்து எனக்கு அடித்திருப்பான். சரி என்று மூத்தவனுக்கு அடித்தேன். அவன் போனைத் தூக்வில்லை. அண்ணவோடு கதைத்துவிட்டு சொல்கிறேன் என்றுஒரு மசேஜ் போட்டுவிட்டு இருக்க மூத்தவன் அடித்தான்.

‘தம்பி நிக்கிறானா?’. ‘ஓம்’ என்றான். கொடுத்தான். ‘ஏன் ரூம் ரென்ற் கட்டவில்லையா’ என்றேன். ‘ஏன் காசு கேட்ட நீ’ என்றேன். அப்பதான் நித்திரையால் எழும்பியவன், ‘உங்களுக்கு என்ன லூசா?’ என்றான். அப்ப தான் ஓடி வெளித்தது. பிச்சைக்காரனாய் இருந்தால் எங்களிட்ட இருந்து காசு பிடுங்குவது கொஞ்சம் கஸ்டம் என்று.

உடனே நான் மசேஜ் போட்டேன் ‘நீ தந்த எக்கவுண்டுக்கு 1500 பவுண் போட்டிருக்கிறேன்’ என்று அதுக்குப் பிறகு அவரை இழுத்தடித்து சம்பாசணையில் இருந்து கொண்டே அக்சன் புரொடில் போய் கொம்பிளெயின் பண்ணிவிட்டு அவன் தந்த எக்கவுண்டுக்கு 1.50 மாற்றிவிட்டு வங்கிக்கு போன் பண்ணிச் சொல்லி உள்ளேன்.

பெரும்பாலும் நாங்கள் ஊகங்களின் அடிப்படையிலேயே செயற்படுகிறோம். அதனால் தவறான முடிவுகளுக்கு தள்ளப்பட்டு பொருளாதார நஸ்டத்தையும் சந்திக்கின்றோம். இன்று எனது வங்கியில் பணம் இருந்திருந்தால் சில வேளை நான் அந்தத்தொகையை இழந்திருப்பேன். ஏதோ எனக்குத் தட்டிய சிறுபொறி என்னைக் காப்பாற்றியது. மிகக் கவனம். சிறிய கவனக் குறைவுகள் பெரும் இழப்புகளுக்கு எம்மைக் கொண்டு செல்லும். பொருளாதார இழப்புகள் மட்டுமல்ல அதனிலும் மோசமான உறவு முறிவுகள்இ உயிரிழப்புகள் என அவை பாரதூரமானவையாகவும் அமைந்துவிடும்.

முன்கூட்டிய முடிவுகளை வைத்துக்கொண்டு தான் நாம் பலவற்றைச் செய்கின்றோம். முதல் குறும் தகவலில் நான் ‘நீ யார்? என்று கேட்காமல் அந்தச் தகவல் என்னுடைய பிள்ளைகளிடம் இருந்துதான் வந்தது என்று முடிவுக்கு வந்துவிட்டேன். அவன் காசு கேட்ட போது நானாக அது வாடகைக் காசாகத்தான் இருக்கும் என்று முடிவுக்கு வந்துவிட்டேன். இந்த முன் கூட்டிய முடிவுகள் என்னை தவறான முடிவுகளை எடுக்க வைத்தது. அதனால் எதனையும் தீர ஆராய்ந்து இயலுமான தகவல்களை திரட்டிய பின்னரேயே முடிவெடுக்க வேண்டும்.

இன்னும் சில நாட்களில் £250,000 பவுண்களை பறிகொடுத்த லண்டன் தமிழர்களின் கதை தேசம்நெற்றில். பறிகொடுத்தவர்களும் தமிழர்கள் பறித்தவர்களும் தமிழர்கள்.

மியன்மாரில் சுரங்கத்தில் நிலச்சரிவு – 70க்கும் அதிகமானோர் மாயம் !

மியன்மார் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கச்சின் மாகாணம் ஹபகந்த் என்ற இடத்தில் பச்சை மாணிக்க கற்கள் வெட்டி எடுக்கும் சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதி சீனா எல்லை அருகே அமைந்துள்ளது. சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் மாணிக்க கற்களை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று அதிகாலை சுரங்கத்தில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. அவர்கள் மீது மண் சரிந்து அமுக்கியது.
இந்த நிலச்சரிவில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். பெருமளவில் மணல் சரிந்ததால் அவர்களால் வெளியே வர முடியவில்லை. நிலச்சரிவு குறித்து அறிந்ததும் மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். 200-க்கும் மேற்பட்டவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சரிந்து விழுந்த மணலை அப்புறப்படுத்தி தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். இதில் 25 தொழிலாளர்களை காயங்களுடன் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார்.
நிலச்சரிவில் 70 முதல் 100 பேர் வரை சிக்கி உள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். அவர்களது கதி என்ன? என்பது தெரிய வில்லை. அதிகளவில் மண் சரிந்து நிலச்சரிவு ஏற்பட்டு இருப்பதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் விரைவாக நடந்து வருகிறது.

சிங்கள மயமாகவுள்ள வடக்கு – எச்சரிக்கிறார் சி.வி.விக்கினேஸ்வரன் !

மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறாமல் இன்றைய நிலை தொடர்ந்தால் வடமாகாணம் மிக விரைவில் மத்தியின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு சிங்கள மயமாகிவிடும் என சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாராந்த கேள்வி பதிலில் இந்த விடயத்தை தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவித்த போது ,

மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறாமல் இன்றைய நிலை தொடர்ந்தால் வடமாகாணம் மிக விரைவில் மத்தியின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு சிங்கள மயமாகிவிடும். இந்தநிலை ஏற்பட்டால் சமஷ்டிக்கோ, கூட்டுச் சமஷ்டிக்கோ, சுய நிர்ணய உரிமைக்கோ போராடுவது அர்த்தமற்றதாகப் போய்விடும்.

மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறாததால் ஒட்டுமொத்த சிறுபான்மையினரும் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தினாலேயே மலையக மற்றும் முஸ்லீம் தலைவர்களும் நம்மோடு இணைந்துள்ளனர்.

இன்றைய நிலையில் சட்ட ரீதியாகத் தமிழ்ப் பேசும் மக்களுக்கு இருக்கும் ஒரே பிடிமானம் போதிய அதிகாரமற்ற 13வது திருத்தச் சட்டம் ஒன்றே. அதை நீக்கினால் மத்திய அரசாங்கம் துணிந்து வடக்கு கிழக்கை ஆக்கிரமித்துவிடும்.

ஒற்றையாட்சியின் கீழ் எமது அரசியல் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்காது என குறிப்பிட்ட விக்னேஸ்வரன், சில முக்கிய நடைமுறைப் பிரச்சனைகளை பதின்மூன்றாம் திருத்தச்சட்ட அமுலாக்கத்தின் ஊடாக நாம் கையாளலாம் என கூறினார்.

முருத்தெட்டுவே தேரரை புறக்கணித்த பல்கலைகழக மாணவர்கள் – பல்கலைகழகம் வெளியிட்டுள்ள அறிக்கை !

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு, முருத்தெட்டுவே தேரரை நியமித்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சில விரிவுரையாளர்களும் மாணவர்களும் நிகழ்வை புறக்கணித்திருந்தனர். இந்த நிலையில் , 2019ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு நிகழ்வை தொடர்ந்து பல்கலைக்கழகம், இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறி்க்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி ,

உலகளாவிய அளவில் சிறந்த பிரஜைகளை உருவாக்கிய பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கான தவறான புரிதல் தொடர்பில் பல்கலைக்கழகம் வருத்தம் தெரிவித்துள்ளது.

அத்துடன் பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறையினரிடையேயும் ஒழுக்கமான நடத்தை மற்றும் அணுகுமுறைகளை நிலைநிறுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை கொழும்பு பல்கலைக்கழகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை இத்தகைய முக்கியமான சந்தர்ப்பத்திற்குத் தேவையான கண்ணியத்தையும் அலங்காரத்தையும் பராமரிக்க உதவிய வேந்தர், பல்கலைக்கழக பணியாளர்கள், இளம் பட்டதாரிகள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு, பல்கலைக்கழகம் நன்றியையும் தெரிவித்துள்ளது. .

“புலம்பெயர் மக்களுடன் இலங்கை அரசாங்கம் புரிந்துணர்வுடன் செயற்படுகிறது.” – அவுஸ்திரேலிய அமைச்சரிடம் ஜனாதிபதி கோத்தாபாய தெரிவிப்பு !

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சில பிரிவுகளைத் திருத்தம் செய்வதற்கு புலம்பெயர் மக்களுடன் இலங்கை அரசாங்கம் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கெரன் அன்ட்ரூஸோடு இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

போதைப்பொருள் வியாபாரம், கடற்கொள்ளையர்களின் செயற்பாடுகள் மற்றும் மனித கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்கான வலுவான பொறிமுறையை மேலும் எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்தியப் பெருங்கடலின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான நடவடிக்கைகளுக்கு தமது அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் தெரிவித்தார். மேலும் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் அமைச்சர் ஆண்ட்ரூஸ் தெரிவித்தார்.

இதுவரை புலம்பெயர் அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக எந்தத்தகவலும் வெளியாகியிராத நிலையில் அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரிடம் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் என்னால் படம் பார்க்க முடியவில்லை.” – இரா.சாணக்கியன்

“தமிழ் இளைஞர்கள் எதிர்காலத்தில் ஒன்றுபட்டு செயற்படாவிட்டால் இன்னும் 20வருடத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் இல்லாமல்போகும் நிலையே ஏற்படும்.” என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடு பகுதிக்கு நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) விஜயம் செய்த போதே நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து மேலும் வெளியிட்ட இரா.சாணக்கியன்,

“நாங்கள் நாடாளுமன்ற தேர்தலின்போது எதிர்பார்க்கவில்லை இந்த மொட்டு அரசாங்கம் கிட்டத்தட்ட மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 20ஆசனங்கள் கிடைக்கும், நாங்கள் தீர்மானிக்கும் சக்தியாககூட இருக்கலாம் என்று நம்பிக்கையுடனே நாங்கள் அந்த தேர்தலில் போட்டியிட்டோம்.

நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டனர். நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருவர் அரச தரப்பிலும் இருவர் தமிழ் தேசிய கூட்டமைப்பிலும் உள்ள நிலையில் அதுவே இந்த மாவட்டத்தின் துரதிர்ஸ்டவசமாக மாறியுள்ளது.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலே இந்த மாவட்டத்தில் உள்ள அரசாங்க அதிபரே முதலாவது அரசியல் கைதியாகவுள்ளார். சிறையில் அரசியல் கைதியைவிடவும் அவர் ஒரு அரசியல் கைதியாகவுள்ளார். நாங்கள் சிலவேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்மொழிவுகளைக்கேட்டால் அது அரசாங்கத்துடன் உள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிரச்சினையாகவுள்ளது. அவ்வாறு வழங்ககூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாங்கள் நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களை நாங்கள் பேசவேண்டும். அரசியல் தீர்வுக்கான ஆதரவினை நாங்கள் இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கவேண்டும். தேசிய ரீதியான பொறிமுறையொன்றை நாங்கள் மாகாணசபை ஊடாக உருவாக்கமுடியும்.

இன்று தீர்மானங்கள் கொழும்பிலிருந்தே எடுக்கப்படுகின்றன. எங்களது கைகளில் அதிகாரம் இருக்குமானால் நாங்கள் எதனையும் செய்யமுடியும். இன்று கிழக்கு மாகாணசபைக்கு மத்திய அரசாங்கத்தினால் 10இலட்சம் ரூபாய் நிதிமட்டுமே வழங்கப்படுகின்றது. இதனைவைத்து எதனையும் செய்யமுடியாது.

எனக்கு தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராகயிருக்கவேண்டும் என்று ஆசையில்லை. நான் எனது வயதில் நாடாளுமன்ற உறுப்பினராகயிருப்பதன் காரணமாக பல இழப்புகளை எதிர்கொண்டுள்ளேன். ஒரு படம் பார்க்கமுடியாது நண்பர்களுடன் சுற்றுலா செல்லமுடியாது. அவ்வாறு தெற்கு பக்கம் சென்றால் புகைப்படம் எடுப்பதிலேயே எனது நேரம் செலவாகிறது.

சர்வதேசம் மூலமே எமக்கான தீர்வுக்கான அழுத்தங்களை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கமுடியும். அதற்கான ஆதரவு தளம் இளைஞர் மத்தியில் இருக்கவேண்டும். அபிவிருத்தி என்பது மழைகாலத்தில் ஆட்டுக்குட்டி போடுவதும் கொங்கிரி ரோட் போடுவது மட்டுமல்ல.

தமிழ் இளைஞர்கள் எதிர்காலத்தில் ஒன்றுபட்டு செயற்படாவிட்டால் இன்னும் 20வருடத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் இல்லாமல்போகும் நிலையே ஏற்படும். கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்தவரையில் 2008 தொடக்கம் 2012ஆம் ஆண்டுவரையிலிருந்தது தமிழ் முதலமைச்சர், 2012 தொடக்கம் 2017வரையிலிருந்தது முஸ்லிம் முதலமைச்சர், இன்று அரசாங்கத்தின் திட்டம் கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் வாழும் என்ற அடிப்படையில் எந்த சமூகத்திலிருந்து முதலமைச்சர் வரவில்லையோ அந்த சமூகத்திலிருந்து முதலமைச்சர் வரவேண்டும் என்ற இலக்குடனேயே செயற்பட்டுவருகின்றது.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் காணாமல் போகும் பிள்ளையார் சிலைகள் !

யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதியில் தொடர்ந்தும் பிள்ளையார் சிலைகள் காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

காங்கேசன்துறை குமார கோவிலில் உள்ள பிள்ளையார் சிலை அண்மையில் காணாமல் போயிருந்தது. குறித்த ஆலயத்தின் வளாகத்தினுள் விகாரை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தெல்லிப்பழை மகாஜனா கல்லூரிக்கு அருகிலுள்ள ஆலயத்தினுள் இருந்த இரண்டு பிள்ளையார் சிலைகள் காணாமல் போயுள்ளன. அதேவேளை பலாலி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் இருந்த பிள்ளையார் சிலையும் காணாமல் போயுள்ளது.

பிள்ளையார் சிலைகள் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

“இலங்கையர்களுக்கு அடுத்த வருடம் இதை விடக்கடினமானதாக இருக்கும்.” – எச்சரிக்கிறார் இராஜாங்க அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க !

ஜோக்கர்களை அமைச்சர்களாக நியமித்துவிட்டு நாட்டை கட்டியெழுப்புவது சாத்தியமில்லை என இராஜாங்க அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் பேசியுள்ள இராஜாங்க அமைச்சர்,

மக்கள் மத்தியில் அரசாங்கம் குறித்து குறிப்பிடத்தக்க அளவிற்கு ஏமாற்றம் காணப்படுகின்றது. ஜோக்கர்களை அமைச்சர்களாக நியமித்துவிட்டு நாட்டை கட்டியெழுப்புவது சாத்தியமில்லை.

இந்த எரிபொருள் விலை அதிகரிப்பு மக்கள் மீது பெருஞ்சுமையை சுமத்தும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். எரிபொருள் மாத்திரம் அல்ல ஏனைய பொருட்களின் விலைகளும் அளவுக்கதிகமான விதத்தில் அதிகரிக்கலாம்.

இதன் பின்னர் பொதுமக்கள் மீது மேலும் சுமைகள் சுமத்தப்படும். இது மிகவும் கடினமான காலம் என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். அடுத்த வருடம் இன்னும் கடினமானதாகயிருக்கலாம். என அவர் தெரிவித்துள்ளார்.

நாடு பாரிய டொலர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள தருணத்தில் சீனாவின் உரக்கப்பலிற்கு பெருமளவு டொலர்களை செலுத்துகின்றனர் இதற்கு எதிராக நீங்கள் ஏன் எதிர்ப்பை வெளிப்படுத்த கூடாது? என கேள்வி எழுப்பப்பட்ட போது ,

இது தவறான விடயம், இது தவறான விடயம் என நாங்கள் தெளிவாக தெரிவிக்கின்றோம், உரக் கப்பலிற்கான கட்டணத்தை அரசாங்கமோ அல்லது மக்களோ செலுத்தவேண்டிய அவசியமில்லை அதற்கான உத்தரவை பிறப்பித்தவர்களே செலுத்தவேண்டும். ஏனென்றால் உரிய கேள்விப்பத்திர நடைமுறைகள் பின்பற்றப்பாடாமையினாலேயே இது நிகழ்ந்தது.நியாயபூர்வ தன்மை என்பது இல்லை, குறிப்பிட்ட உரத்தின் தன்மையை கூட அவர்கள் ஆராயவில்லை,இதன் காரணமாக உரத்தைகொள்வனவு செய்வதற்கான உத்தரவை பிறப்பித்தவர்களிடமிருந்து பணத்தை பெறவேண்டும் என விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.